16 Feb 2026

ஆஃபர் கிடையாது ஆப்புதான்! ஆகவே காத்திருங்கள்!

ஆஃபர் கிடையாது ஆப்புதான்! எனவே காத்திருங்கள்!

இந்த உலகத்தில் எதுவும் இலவசம் கிடையாது. விலையில்லா அரிசி, விலையில்லா உரிமைத்தொகை போன்ற ஒரு சில விதிவிலக்குகள் தனி. மற்றபடி ஒரு சின்ன புன்னகை கூட ஏதோ ஒரு பிரதிபலனை எதிர்பார்த்துதான் இங்கே உதிர்க்கப்படுது.

சுலபமாகக் காரியம் சாதிக்க இங்கே வாய்ப்பில்லை. இங்கே எல்லாவற்றுக்கும் ஒரு லேபிள் உண்டு. அந்த லேபிளில் ஒரு விலை உண்டு. அந்த பிரைஸ் டேக்கைப் பார்த்து விட்டு, பர்ஸைத் திறக்கத் தயாராக இருப்பவர்களுக்கு மட்டும் கதவு திறக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு நோ என்ட்ரிதான்.

வாழ்க்கை என்பது ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட். அங்கே எல்லாமும் உண்டு. கொடுக்கல் வாங்கல்தான் அதன் அடிப்படை விதி. அந்த மெக்கானிசம் புரியவில்லை என்றால் நீங்க அவுட்.

உங்கள் பங்களிப்பு இல்லையென்றால், அங்கே உங்கள் உறவு வெட்டி எறியப்படும். எல்லாவற்றுக்கும் சமாதானம் பேசிக் கொண்டு, காந்தி மாதிரி அஹிம்சை வழி இங்கே கிடையாது.

இது புரியாமல் நீங்கள்அங்கேயே நின்று கொண்டிருந்தால் உலகம் உங்களை ஒரு ஓரமாக தள்ளி வைத்து விடும். இதற்காகச் சில நேரங்களில் நீங்கள் பழிவாங்கவும் படுவீர்கள். எல்லாம் நீங்கள் அங்கே வெறுமனே நின்ற பாவத்திற்காக. இது விசித்திரமாக இருக்கலாம். அந்த விசித்திரம் நடக்கும் போதுதான் உங்களுக்குப் புரியும்.

ஆக உங்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். தயாரிப்பு முடிந்த உடன், உங்கள் சாமர்த்தியத்தை ஊர் முழுக்கத் தம்பட்டம் அடிக்காதீர்கள். அதில் அவ்வளவு நேர்த்தி உடனே கைகூடி வந்து இருக்காது. கொஞ்சம் அதைச் சோதித்துப் பார்த்து பட்டி டிங்கரிங் செய்வதற்கான அனுபவம் தேவைப்படும். அதுவரை உங்களை ஒரு டம்மி பீஸ் மாதிரி வைத்துக் கொண்டு, உங்கள் திறமை எனும் வைரத்தைப் பட்டைத் தீட்டிக் கொள்ளுங்கள்.

உங்கள் திறமை தொடர்பாக உருவாகும் அத்தனைப் பிரச்சனைகள் பற்றியும், அவற்றைச் சமாளிக்கும் முறைகள் பற்றியும் தேவையான அத்தனை அறிவையும் நீங்கள் உங்கள் விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும்.

இதுதான் இந்த உலகில் உங்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொள்வதற்கு நீங்கள் கொடுக்க வேண்டிய விலை.

உங்கள் புத்திசாலித்தனம் உங்களுக்கு ரொம்ப நெருக்கமானவர்களுக்குக் கூடத் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. அதையெல்லாம் புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு, அவர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள் என்று அவர்களை எதிர்பார்க்கக் கூடாது. யாருக்குத் தெரிய வேண்டுமோ அவர்களுக்குத் தெரிந்தால் போதும். அதுவும் எப்போது தெரிய வேண்டுமோ அப்போது தெரிந்தால் போதும். அதற்கு முன்பு அவசரம் காட்டி விடவும் கூடாது. எதையும் பருவத்தே பயில் செய்தால்தான் நன்றாக இருக்கும். மழைக்காலத்தில் உப்பு விளைவிக்க ஆசைபடக் கூடாது.

எனக்கு ஒரு பழைய சம்பவம் ஞாபகம் வருகிறது.

மிஸ்டர் டென்சன் ஒருவர் என் திறமைக்கு உரிய மரியாதையைக் கொடுக்கவில்லை என்று நான் முகத்தைத் திருப்பிக்கிட்டுப் போனேன். ரிசல்ட்? எனக்கு ஒரு டீபுரோமேஷன் இன்ஸ்டன்ட் காபி போல வழங்கப்பட்டது. இதுதான் அவர் என் திறமைக்குக் கொடுத்த மரியாதை. இப்படித் திறமையை டீபுரோமேஷனால் குறைத்துக் கொள்வதுதான் திறமையா?

திறமையைக் காட்டுவதை விடவும், திறமையைப் பல இடங்களில் காட்டாமல் இருப்பதுதான் பெரிய திறமை என்பது புரிய எனக்குக் காலம் தேவைப்பட்டது. உங்களுக்கு அவ்வளவு காலம் வேண்டாம். என் இந்த அனுபவமே போதும். அதை இந்தச் செகண்டே எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் திறமை புரியாதவர்களிடம் உங்கள் திறமைக்கு மரியாதையை எதிர்பார்ப்பது திறமையற்ற செயல்.

இப்போது ஒரு கேள்வி. அவருக்கு ஏன் உங்கள் திறமை புரிய வேண்டும்? உங்கள் திறமையைப் புரிந்தவர் ஒருநாள் உங்கள் கண்ணில் படுவார். உங்களைத் தேடி வரவும் செய்வார். அப்போது மிஸ்டர் டென்ஷனிடம் கூலாக ராஜினாமா லெட்டரைத் தூக்கிக் கடாசி விட்டுக் கிளம்பலாம்.

அதுவரை, அமைதியாக ஒரு வேட்டைக்காரன் மாதிரி காத்திருங்கள். அவசரப்பட்டு உங்கள் திறமையை வெளிப்படுத்த நினைத்தால், அது திறமையாகவே மதிக்கப்பட மாட்டாது.

காத்திருத்தால் என்பது வாழ்க்கை விளையாட்டின் ஒரு பகுதி. உங்கள் திறமை விளையாட்டிற்கு அது ரொம்பவே பொருந்தும். சில நேரங்களில் பணம் இருக்கிறது என்பதற்காக ஒரு பொருளை வாங்க நினைத்தால் அதிக விலை கொடுக்க நேரிடும். அது உங்கள் பர்ஸ்க்குத்தான் ஸ்வாஹா. காத்திருந்தால் அடி மாட்டு விலைக்கே கிடைக்கும். இது உங்கள் திறமைக்கும் பொருந்தும்.

*****

No comments:

Post a Comment