16 Feb 2026

ஏஐ கற்றாரோடு ஏனை யவர் - உருவாகும் புதுக்குறள்!

ஏஐ சிட்டியாகி விட்ட டெல்லி!

டெல்லி இந்தியாவின் தலைநகரம். இப்போது அது செயற்கை நுண்ணறிவின் தலைநகரமாகவும் மாறியிருக்கிறது. காரணம் அங்கு நடந்து கொண்டிருக்கும் ஏஐ மாநாடு. அது இன்று தொடங்கியிருக்கிறது. இன்றோடு 5 நாட்கள் நடக்க உள்ளது.

டெல்லியில் பிப்ரவரி மாதம் எப்போதும் குளிராக இருக்கும். ஆனால், இந்த ஏஐ மாநாட்டால் அங்கே அறிவு வெப்பம் தகிக்கிறது.

20 நாடுகளின் தலைவர்கள், 50க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், சுந்தர் பிச்சை, சாம் ஆல்ட்மேன் என ஏஐ உலகத்தின் ஹெவிவெயிட்ஸ் சாம்பியன் எல்லாம் ஒரே இடத்தில்.  கூடிவிட்டார்கள்.

செயற்கை நுண்ணறிவு இப்போது இது ஒரு டெக்னாலஜி மட்டுமல்ல, ஒரு வாழ்வாதாரம்.

மேடையில் பிரதமர் மோடி பேசுகையில் சில வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அது மக்கள், பூமி, முன்னேற்றம். சுருக்கமாகச் சொன்னால் அனைவரின் நலனுக்காகவும், அனைவரின் மகிழ்ச்சிக்காகவுமான ஏஐ.

இந்த உச்சி மாநாடு ஏதோ மேலைநாடுகள் மட்டும் பேசிக்கொள்ளும் கிளப் கிடையாது. வளரும் நாடுகளின் குரல். இதற்காக ஏழு சக்கரங்கள் எனும் பணிக்குழுக்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

அவையாவன,

1. மனித வளச் சக்கரம்

இது மெஷின் லேர்னிங் கற்கும் மாணவர்களுக்கு என்ன வழி என்று ஆராயப் போகிறது.

2. சமூக உள்ளடக்கச் சக்கரம்

இது கிராமத்துக் கடைசி மனிதனுக்கும் ஏஐ சென்றடைவது எப்படி என்று யோசிக்க இருக்கிறது.

3. பாதுகாப்புச் சக்கரம்

டீப் பேக் போன்ற ஆபத்துகளை எப்படித் தடுப்பது என்று சிந்திக்க இப்பணிக்குழு.

4. அறிவியல் சக்கரம்

மருந்துவ ஆராய்ச்சி முதல் வானிலை வரை செயற்கை நுண்ணறிவை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைப் புட்டு புட்டு வைக்க இக்குழு.

5. சூழலியல் சக்கரம்

ஏஐ டேட்டா சென்டர்கள் வெளியிடும் கார்பனை எப்படிக் குறைப்பது என்று ஆராய்வதற்கு இக்குழு.

6. ஜனநாயகப்படுத்தும் சக்கரம்

சில நிறுவனங்களின் கையில் மட்டும் ஏஐ சிக்காமல் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுமே. அதற்காக இந்தக் குழு.

7. பொருளாதாரச் சக்கரம்

இந்தியாவின் 8.3 லட்சம் கோடி முதலீட்டு இலக்கை எட்டுவது குறித்து அலச இக்குழு.

அப்புறம் இந்த 5 நாள் திருவிழாவில் 3,500 நிபுணர்கள் உரையாற்றுகிறார்கள். இதில் கவனிக்க வேண்டியது 'AI for ALL' மற்றும் 'AI by HER' போன்ற போட்டிகள். குறிப்பாக பெண்கள் நடத்தும் ஏஐ ஸ்டார்ட் அப்களுக்கு ரூ. 2.50 கோடி பரிசு தர இருக்கிறார்கள்.

இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், 70,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் கண்காட்சி. அங்கே நிஜமான ரோபோக்களும், மனித மூளையை மிஞ்சத் துடிக்கும் அல்காரிதங்களும் ஊர்வலம் போக இருக்கின்றன.

ஆக, இனி நாம் ஏஐ பார்த்துப் பயப்படுவதில் அர்த்தமில்லை. அதற்காக மாநாடே நடக்கிறது.

ஏஐ பயன்படுத்தத் தெரிந்த ஒரு மனிதர், ஏஐ தெரியாத ஒரு மனிதரின் வேலையைப் பறிக்கக்கூடும். ஆகவே இனி எண்ணென்ப ஏனை எழுத்தென்ப … எனும் குறளோடு ஏஐ என்ப என்பதையும் சேர்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

விலங்கோடு மக்கள் அனையர் இலங்குஏஐ

கற்றாரோடு ஏனை யவர்

என்று திருவள்ளுவர் மீண்டும் வந்து புதுக்குறள் எழுதினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. சூழ்நிலை அப்படி மாறி இருக்கிறது.

*****

No comments:

Post a Comment