வாழ்வது எப்படி? ஒரு மினி வழிகாட்டி!
மனம் எப்போதும்
ஒரு சுமை. முதலில் இந்த மனம் என்கிற சமாச்சாரத்தை டிஸ்மேண்டில் பண்ணுங்கள். மனம் என்ற
ஒன்றை உருவாக்கிக் கொண்டால், அப்புறம் அது சொல்கிறபடிதான் நீங்கள் ஆட வேண்டும். என்னைக்
கேட்டால், அது ஒரு எக்ஸ்ட்ரா லக்கேஜ். மனம் இல்லாமல் இருந்தால் லைஃப் ரொம்ப லைட்டா
இருக்கும்.
இப்போது சுற்றிப்
பாருங்கள். சுற்றிலும் ஒயிட் காலர் வில்லன்கள். தனக்கு ஒரு வேலை ஆக வேண்டும் என்றால்,
இவர்களுக்கு மூளை ராக்கெட் வேகத்தில் வேலை செய்யும். நாம் ஒரு வேலை என்று போய் நின்றால்
சமாளிப்பிகேஷனில் இவர்களைத் தட்டிக் கொள்ள முடியாது. வஞ்சகம் என்பது இந்தியாவில் ஒரு
தேசிய விளையாட்டு. பொதுநலத்திற்காக யார் புத்தியை அடகு வைப்பார்கள் சொல்லுங்கள்.
இப்படிப்பட்ட
மனிதர்கள் மத்தியில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமென்றால், அதற்கும் நுட்பங்கள் இருக்கின்றன.
உண்மை என்பது
எப்போதும் ஒரு வெடிகுண்டு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஆகவே அதை பற்ற வைத்து விடாதீர்கள்.
பிறகு பத்த வெச்சுட்டீயே பரட்டை கதையாகி விடும். எல்லாவற்றையும் உள்ளே வைத்துக் கொள்ளுங்கள்.
பொக்கிஷங்கள் உள்ளேதானே இருக்க வேண்டும். உண்மைகள் பொக்கிஷங்கள். மனதில் ஒரு கால்குலேட்டர்
ஓடிக் கொண்டே இருக்கட்டும்.
யாரிடமும்
கோப்படாதீர்கள். அது ப்ளட் பிரஷரைச் சுனாமியாக்கும். யார் உங்களைப் பார்த்தாலும் நீங்கள்
புத்தர் போலக் காட்சி தர வேண்டும். காட்சித்தான் தர வேண்டுமே தவிர, புத்தராகி உண்மையைத்
தேடிக் கானகத்திற்குப் புறப்பட்டு விடக் கூடாது.
யாராவது விளக்கம்
கேட்டால், உண்மையைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். பொய்கள் எதற்கு இருக்கின்றன?
அவிழ்த்து விடுங்கள். உங்கள் கற்பனையாற்றலைக் கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். மூளைக்கு
வேலை கொடுங்கள்.
ஏனென்றால்,
உண்மையை நீங்கள் வெளிப்படுத்தவே வேண்டியதில்லை. அதுவாகவே வெளியாகிக் கொள்ளும். ஆகவே
உண்மைக்குப் பிரசவம் பார்க்கும் மகப்பேறு டாக்டராக வேண்டும் என்றெல்லாம் அடம் பிடிக்காதீர்கள்.
உண்மையை விட
இந்த உலகில் ஆபத்து ஏதுமில்லை. எப்ஸ்டீன் கோப்புகளையே எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றையெல்லாம்
வைத்து நான் சொல்வதெல்லாம் உண்மையா, பொய்யா என்று கேட்டால், அவை பொய்யாகவும் இருக்கலாம்.
பொய்களுக்கு இடையே உண்மையும் இருக்கலாம். ஏனென்றால் இது டார்க் சைக்கலாஜி. இருளுக்குள்
ஓளியை நீங்கள்தான் தேடிக் கொள்ள வேண்டும்.
உண்மை என்பது
லாக்கருக்குள் இருக்கம் வரை அதற்கு இருக்கும் மரியாதையே வேறு. அதை வெளியே போட்டு உடைத்து
விட்டால், திருஷ்டி பூசணிக்காயைத் தெருவில் உடைந்தால் என்ன கிடைக்குமோ, அதுதான் கிடைக்கும்.
பைசா காசு தேறாது.
ஒரு சின்ன
உதாரணம். ஒரு சிபாரிசு கடிதம் கேட்டார்கள். கொடுத்தேன். அதற்குள் ஆயிரம் கேள்விகள்.
யார் கொடுத்தார்? எதற்குக் கொடுத்தார்? எப்படிக் கொடுத்தார்? உள்ளே என்ன இருக்கிறது?
என்ன காரியம் ஆக வேண்டும்?
அதைத் திறந்து
பார்த்தால் எல்லாம் தெரிந்து விடப் போகிறது. ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் திறந்து பார்க்க
மாட்டார்கள்.
திறந்து பார்த்தால்
எதாவது செய்தாக வேண்டும். அதனால் கவரை வாங்க ஒரு நாள். அதை மேசை டிராயருக்குள் வைக்க
ஒரு நாள். டிராயரிலிந்து எடுக்க ஒரு நாள். கவரின் உறையைப் பிரிக்க ஒரு நாள். கடிதத்தின்
மடிப்பை விரிக்க ஒரு நாள். அதில் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் படிக்க ஒவ்வொரு நாள். கடைசியாக
கடிதத்தை மடிக்க ஒரு நாள். அதைக் குப்பையில் போட ஒருநாள். இப்படியே 365 நாட்கள் போய்
அடுத்த 365 நாட்களுக்காக அடுத்த ஆண்டும் வரும்.
ஏதாவது புரிகிறதா?
ஒரு குறிப்பு
தருகிறேன். அந்தச் சிபாரிசு கடித உறைக்குள் கடிதத்திற்குப்பதில் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை
வைத்திருந்தால், எல்லாம் முடிய ஒரு நாள்.
நான் அந்தக்
கடிதத்தைக் கொடுத்து விட்டு, வெளியில் நிற்கும் உங்களிடம் என்ன சொல்ல வேண்டும் என்றால்,
நான் கொடுத்தது சிபாரிசு கடிதம் என்று. உள்ளே உறையில் இருந்தது என்ன? சத்திய சோதனையை
எழுதிய காந்தி புன்னகைக்கும்நோட்டு அல்லவா! இப்போது முதலிலிருந்து படித்துப் பாருங்கள்.
உங்களுக்கு எல்லாம் புரியும்.
ஆகவேதான் மனசு,
மண்ணாங்கட்டி, தெருபுழுதி இத்தியாதிகள் எல்லாம் வேண்டாம் என்கிறேன். அப்படி வைத்துக்
கொண்டால், லஞ்சம், ஊழல், அநியாயம் என்ற கொதித்தெழுந்து அதற்கு வாடகைக் கட்டி மாளாது.
எனவே, இந்த
மனிதர்களை டீல் பண்ண இதுதான் ஒரே வழி. வேறு வழி இருந்தால் எனக்கு கீழே கமெண்ட் பண்ணுங்கள்!
*****

No comments:
Post a Comment