நழுவி விழும் பூரணத்துவம்
பாளம் பாளமாய் வெடித்து வறண்டு
போன நிலத்திற்கு
காத்திருப்பின் வேதனையும்
வலியும்
கூடடைதலின் சுகம் பெரிதாகிறது
பாதை தொலைத்த பறவைகளுக்கு
ஒட்டி இருந்ததன் அணுக்கம்
தேவையாக இருக்கிறது
மரத்தோடு இருந்த பிணக்கு
மறந்து உதிரும் இலைக்கு
நழுவி விழும் பொழுதில் சட்டென
உரு கொள்கிறது
வாயிலிருக்கும் இனிப்பு உருண்டையின்
பூரணத்துவம்
அவ்வளவு கனக்கிறது
கடைசியான ஒரு முறை போய் வருகிறேன்
என்று
சொல்லி விட்டுப் போனவனின்
பிரிவும் மறைவும்
*****
இருப்பை உறுதி செய்தல்
கூகுளில் தன் பெயரைத் தேடிப்
பார்த்தவருக்கு
அதிர்ச்சியாக இருந்தது
அவர் பெயரைச் சூட்டியிருந்த
ஏகப்பட்ட நபர்கள்
வரிசை கட்டி வந்தார்கள்
வரிசை கட்டி வந்த எந்தப்
பெயரிலும்
அவர் பெயர் இல்லாமல் போக
தெரிந்த முகவரிக்கெல்லாம்
மின்னஞ்சல் செய்து விசாரித்தார்
ஆதார் தளத்தில் தேடிப் பார்க்குமாறு
வந்தப் பதிலுக்குப் பிறகு
தனக்கென ஒரு வலைப்பதிவை உருவாக்கிக்
கொண்டவர்
தன்னை அடிக்கடி தேடி தேடி
பார்த்து
தன் பெயரில் இருக்கும்
தன் இருப்பை உறுதி செய்து
கொள்கிறார்
*****
No comments:
Post a Comment