பாரதியாரின் கதைகளைப் பொருண்மையின்
அடிப்படையில் பின்வருமாறு வகைபடுத்திக் கொள்ளலாம்.
1)
தத்துவக் கதைகள்
2)
வேடிக்கைக் கதைகள்
3)
எதார்த்தக் கதைகள்
4)
சுய சரிதத் தோற்றம் தரும் கதைகள்
5)
அறிவுரைக் கதைகள்
6)
கற்பனை மற்றும் பக்தி மீளுருவாக்கக் கதைகள்
7)
பத்தி அல்லது துணுக்குக் கதைகள்
கதைகளின் அளவைப் பொருத்து
அவற்றைக் கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
1)
பெருங்கதைகள்
2)
சில பக்கக் கதைகள்
3)
ஒரு பக்கக் கதைகள்
4)
அரை பக்கக் கதைகள்
5)
சில வரிக் கதைகள்
கதைகளைப் பாரதியார் கைக்கொண்டு
முடித்த வகையில் அவர் கதைகளை
1)
முற்றுப் பெற்ற கதைகள்
2)
முற்றுப் பெறாத கதைகள்
என்றும் வகைப்படுத்தலாம்.
பாரதியாரின் தத்துவக் கதைகள்
பொதுவாக வேதாந்தப் பின்புலம் கொண்டவையாக இருக்கின்றன. தத்துவக் கதைகளில் ஆழ்ந்த தத்துவ
விசாரத்தைச் செய்கிறார். இக்கதைகளில் பிராமணியமும் சத்திரியமும் கலந்த ஓர் எதிர்பார்ப்பை
முன் வைக்கிறார். நால்வர்ண பின்னணியில் அவற்றில் இரண்டான பிராமணியத்தை ஞானத்திற்கான
வாயிலாகவும் சத்திரியத்தை வீரத்திற்கான வாயிலாகவும் அவர் கருதுகிறார். அவர் தனது வாழ்க்கையில்
பிராமணியமும் சத்திரியமும் கலந்த கலவையாக வாழ விரும்பியதன் அடிப்படையில் இக்கதைகளைக்
கட்டமைக்க முயல்கிறார். அவருடைய வாழ்க்கைக்கான தத்துவப் புரிதலை நோக்கிய முயற்சியாகவும்
அக்கதைகளை அணுக முடிகிறது. ஞானரதம், உபசாந்தி லோகம் போன்ற கதைகளில் கதையை விடவும் அவரது
தத்துவ விளக்கத்தையே அதிகம் காண முடிகிறது. இக்கதைகளில் அவர் ஓரு பாத்திரமாக இடம்பெறாமல்
போயிருந்தால் இக்கதைகளை அவரது உரைநடைக்கான தேர்ந்த கட்டுரைகளாகக் கருத நேரிடும்.
வேடிக்கைக் கதைகள் அவரது
நகைச்சுவை உணர்வை அந்தக் கால நடையில் வெளிப்படுத்துகின்றன. ஆனைக்கால் உதை, அந்தரடிச்சான்
சாகிப் கதை போன்ற கதைகள் மூலமாக ஹாசியத்தை நிலைநிறுத்த விரும்புகிறார். ஹாசியத்திலும்
சமூக நிலையின் தவறான கற்பிதங்களை உட்பொருளாகப் பொருத்தி வைத்திருக்கிறார். தவறான கற்பிதங்களால்
ஏற்படும் விளைவுகள் எவ்வளவு நகைப்புக்கு இடமாக இருக்கிறது என்பதை நுட்பமாகக் காட்டுகிறார்.
அன்றைய சமூக எதார்த்தத்தைக்
காட்டும் வகையில் பாரதியாரது எதார்த்த கதைகள் அமைகின்றன. அந்தக் காலத்து மனிதர்களின்
குணாதிசயங்களை வெகு நேர்த்தியாகக் காட்சிப்படுத்துகிறார். அவரது காலத்தில் பிரம்ம சமாஜத்தின்
தாக்கம், பிராமணப் பெண்களுக்கு இருந்த சிரமங்கள், ஏழைப் பிராமணர்கள் பட்ட பொருளாதாரக்
கஷ்டங்கள் போன்றவற்றை அக்கதைகள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. சந்திரிகையின் கதை,
ஆறில் ஒரு பங்கு, ஸ்வர்ண குமாரி போன்ற கதைகளில் இதைக் காண முடிகிறது. கிளிக் கதை, மிளகாய்ப்பழச்
சாமியார் போன்ற கதைகளில் அன்றைய காலத்துச் சாமியார்களையும் அவர்களிடம் மக்கள் காட்டிய
கண்மூடித்தனமான நம்பிக்கையையும் காட்டுகிறார்.
பாரதியாரின் கதைகளில் அவருடைய
கதைகளைப் போலத் தோற்றம் தருபவற்றை சுயசரிதத் தோற்றக் கதைகளாகக் கொள்ளலாம். பாரதியாரின்
வரலாற்றை அறிந்தவர்களுக்கு அந்தக் கதைகள் எவை என்பதை அடையாளம் காண முடியும். அக்கதைகளில்
அவருடைய பெயரைக் காளிதாசன் என்பதாக அனுமானிக்கவும் முடிகிறது. அவருக்குக் காளிதாசன்
மீதிருந்த அபிமானத்தால் தன்னைக் காளிதாசன் என்ற பாத்திரம் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார்
என்று கருதவும் இடம் இருக்கிறது. புதிய கோணங்கி, சும்மா, செய்கை, கடல், பிங்கள வருஷம்,
சின்ன சங்கரன் கதை போன்ற பல கதைகளில் அவர் வாழ்ந்த வாழ்க்கை மற்றும் சூழல்களை அப்படியேயும்
சிறிது மாற்றியும் அல்லது முற்றிலும் மாற்றியும் புனைவாகப் பதிந்திருப்பதைக் காண முடிகிறது.
குறிப்பாக பேய்க்கூட்டம் என்ற கதை அவருடைய ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே’
என்ற பாடலுக்கான சுய பகடி போலத் தோற்றம் தருகிறது.
நாட்டு மக்களுக்கு அறிவுரை
தரும் வகையில் பாரதியார் படைத்துள்ள கதைகளைப் அறிவுரைக் கதைகள் என்ற வகையில் கொண்டு
வரலாம். அவற்றை அறிவு விளக்கம் தரும் வகையில் அனைவருக்கும் புரிய வேண்டும் என்ற மெனக்கெடல்களோடு
எழுதியுள்ளார். கடல், கடற்கரை ஆண்டி போன்ற கதைகளில் இத்தகு தன்மையைக் காண முடிகிறது.
அவருடைய சமூக எதிர்பார்ப்பைப் பல கதைகளிலும் அறிவு விளக்க உரைகளாகவே வெளிப்படுத்த முயல்கிறார்.
பெரும்பாலான கதைகளில் இத்தகைய அறிவு விளக்கத்தை அல்லது அறிவுரைக்காகப் பகடி செய்யும்
தன்மையைத்தான் பாரதியாரின் கதைகளில் காண முடிகிறது.
புராணங்களை அடிப்படையாகக்
கொண்ட கற்பனை மற்றும் பக்தி மீளுருவாக்கங்களைச் செய்யும் கதைகளைக் கற்பனை மற்றும் பக்தி
மீளுருவாக்கக் கதைகள் என வகைபடுத்திக் கொள்ளலாம். குதிரைக்கொம்பு, தேவ விகடம், அர்ச்சுன சந்தேகம் போன்ற
கதைகள் பாரதியாரின் மனதிற்குத் தோன்றுகிற அடிப்படையில் மீளுருவாக்கம் ஆகின்றன. அவரது
நவதந்திரக் கதைகள் பஞ்ச தந்திரக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட மீளுருவாக்கக் கதைகளாக
அமைகின்றன. காக்காய் பார்லிமெண்ட் என்ற கதை அவரது கற்பனையின் மாறுபட்ட கோணத்தைக் காட்டுவதாக
அமைகிறது.
பாரதியாரின் சிறு சிறு கதைகளைப்
பத்திகள் அல்லது துணுக்குக் கதைகள் என்ற வகையில் பார்க்கலாம். கவிராயனும் கொல்லனும்,
அமெரிக்கா போன சீனராஜகுமாரன், ஓர் வியாதிக்கு ஓர் புதிய காரணம் போன்ற கதைகளில் இத்தகைய
பத்திகள் மற்றும் துணுக்குத் தன்மையைக் காண முடிகிறது.
அளவைப் பொருத்த வரையில் பாரதியாரின்
கதைகளில் பெருங்கதைகள் என்றால் ஞானரதம், நவதந்திரக் கதைகள், சந்திரிகையின் கதை, சின்ன
சங்கரன் கதை போன்றவற்றைக் குறிப்பிடலாம். மற்ற கதைகள் சில பக்க அளவிலோ ஒரு பக்க அளவிலோ
முடியக் கூடிய கதைகள். அவரது வேடிக்கைக் கதைகள் சில வரிகளில் முடியக் கூடியவை.
பெரும்பாலான முற்றுப் பெற்ற
கதைகள் மத்தியில் சந்திரிகையின் கதை, நவதந்திரக் கதைகள் போன்றவை முற்றுப் பெறுவதற்கு
முன்பே பாரதி அமரத்துவம் எய்தி விடுகிறார். அக்கதைகளின் முடிவின்மை வாசிப்போரை ஓர்
எதிர்பார்ப்புக்குத் தூண்டுகிறது. கதைகளில் வாசிப்போரை ஆழமாக உள்ளிழுத்துக் கொள்ளும்
ஒரு வசிகரத் தன்மை பாரதியின் கதைகளுக்கு இருக்கிறது.
பாரதியார் ‘கவிதை’ என்ற வடிவில்
தமக்கு முன்பிருந்த இலக்கிய நோக்கிலிருந்து செய்த புதுமைகளும் புரட்சிகளும் ஏராளம்.
கவிதைகளின் உள்ளடக்கம், பாடுபொருள், ஆகியவற்றில் எளிமையாகப் புரிந்து கொள்ளும் தன்மையையும்
இனிமையையும் யாவரும் ஏற்றுக் கொள்ளும் ஜனரஞ்சகத் தன்மையையும் பாரதிதான் தமிழ் கவிதை
வரலாற்றில் வெற்றிக்கரமாகச் செய்ய முடிந்தது. வசன கவிதை எனும் புதுக்கவிதைக்கான தோற்றுவாயினையும்
பாரதியாரால் நிகழ்த்த முடிந்திருக்கிறது.
தமிழ் நடை உரைநடைக்கு மாறிக்
கொண்டிருந்த போது அதனையும் தன்னுடைய கட்டுரைகளில் பாரதியார் வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறார்.
கேலிச்சித்திரம் எனும் வடிவத்தையும் முதன் முதலாகப் பாரதியார் கையாண்டிருக்கிறார்.
சிறுகதையிலும் அவர் ஆழங்கால் படவே முயன்றிருக்கிறார். அவரது கதைகள் கதா ரச மஞ்சரியில்
உள்ள கதைகள் போன்ற வடிவிலிருந்து மாற்றம் பெற்று புதிய சிறுகதைகளுக்கான அமைப்பை நோக்கி
நரகத் துவங்கிய காலக்கட்டத்தில் அவர் இறந்து விடுகிறார்.
சந்திரிகையின் கதையில் முத்தம்மாவுக்கும்
சோமநாத அய்யருக்கும் நடைபெறும் சம்பாஷணைகளை எழுதிச் செல்லும் போது எதார்த்த நடையின்
அத்தனை கூறுகளையும் பாரதியார் வெளிப்படுத்துகிறார். சந்திரிகையின் அத்தையான விசாலாட்சியை
அவர் புதுமைப் பெண்ணாகக் காட்ட முனைந்தாலும் கதையின் பல இடங்களை எதார்த்த பின்புலங்கள்
கொண்டதாகவே கட்டமைக்கிறார். அக்கதையின் முடிவு பெறாத தன்மையும் கூட ஒரு நவீன சிறுகதைக்கான
அவதானிப்பைத் தருகிறது.
ஒரு கதையாசிரியராக நின்று
அக்கதை வாசகருக்குப் புரிய வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் எடுத்துக் கொள்வது பாரதியாரின்
அனைத்துக் கதைகளிலும் காணக் கிடைக்கும் அம்சமாக இருக்கிறது. பல கதைகளில் அவரது குரல்
ஒலிப்பதும் தனித்துத் தெரிகிறது. அந்தக் கதைகளில் பாரதியார் எங்கிருக்கிறார் என்பதையும்
அடையாளம் காண முடிகிறது.
கவலை இல்லாத மனம், உற்சாகமான
சோர்வில்லாச் செயல்தன்மை, எதிர்காலத்தை எண்ணி பயம் கொள்ளாத மனோபாவம் ஆகிய மூன்றையும்
பாரதியாரின் பெரும்பாலான கதைகள் எடுத்தோதுகின்றன. ஆழமான நகைச்சுவை உணர்வும், தத்துவார்த்த
விசாரமும் அவருடைய கதைகளில் காணப்படும் மற்றைய சில பொதுபோக்குகள் எனலாம்.
கதைகளில் பல இடங்களில் அவர்
ஒரு வேதாந்தியாகவும், பிராமண சமூகத்தின் மேல் தன்னுடைய கூரிய விமர்சனங்களை முன்வைப்பவராகவும்
உள்ளார். தேச விடுதலையைக் கவிதைகளில் பேணினார் என்றால் மன விடுதலையைப் பெரும்பாலான
கதைகளின் முன்வைப்பாக எடுத்து வைக்கிறார். அவருக்குப் பழக்கமாக இருந்த முதலியார், அய்யர்,
கோனார், சாமியார்களைப் புனைவுகளாக்கிச் சில இடங்களில் தன்னையும் ஒரு புனைவாக்கியும்
உலவ விடுகிறார்.
மனதில் தோன்றுகிற அனைத்தையும்
கலைத்துப் போட்டு இஷ்டம் போல எழுத கதையே வசதியானது. பாரதி தன் காலத்து கவிதைகளைக் கட்டுடைத்தவர்
என்றாலும் கவிதையில் இன்னதைச் சொல்ல வேண்டும், இன்னதைச் சொல்லக் கூடாது என்ற நியமங்களுடன்
கூடிய மரபார்ந்த பொதுப்போக்குக்கு ஒத்துப் போனவராகவே அவரது கவிதைகளைக் காண முடிகிறது.
கதைகளில் எல்லாவற்றையும் சொல்கிற பாரதியைக் காண முடிகிறது.
ருஷ்யப் புரட்சியைப் பற்றி
உயர்வாகக் கவிதை எழுதிய பாரதி பொதுபோக்கான மனநிலையில் அன்றைய மக்களின் மனதில் என்ன
தோன்றியிருக்கும் அல்லது அவர்கள் அதை எப்படி எடுத்துக் கொண்டிருப்பார்கள் என்பதைக்
கதைகளில் பதிவு செய்கிறார். அப்படி ருஷ்ய புரட்சி பற்றி எழுதும் போது ‘எக்கேடு கேட்டால்
என்ன’ என்று எழுதுகின்ற கட்டுடைப்பைக் கதைகளிலே கையாளுகிறார். கவிதைகளில் ஓர் லட்சியவாதியாய்த்
தோற்றும் தரும் பாரதியை, லெனினுமாயிற்று வெங்காயமாயிற்று என்று சொல்லுமிடத்தில் ஓர்
எதார்த்த மனிதராக லௌகிகத்தின் கட்டுண்ட சலிப்பில் உரைப்பதைக் காண முடிகிறது.
பாரதியின் லட்சியவாதமான சாதி
பேதமற்ற சமூக நோக்கின் பிரதிபலிப்பையும் பிரம்ம சமாஜத்தின் கருத்துகளை மக்களிடம் ஊடுபாவாகக்
கொண்டு சேர்க்கும் ஊடகத் தன்மையையும் அவரது கதைகளில் காண முடிகிறது. பண்டைய இந்தியாவின்
பெருமைகளுக்கு ரிஷிகளின் ஆழ்ந்த ஞானமும் பண்டைய மன்னர்களின் வீரமும் காரணமாக இருந்திருப்பதாக
ஒரு கருத்தாக்கமும் பாரதிக்கு இருந்திருப்பதை அவரது கதைகள் படிகம் போல வெளிப்படுத்துகின்றன.
அதே போழ்தில் பாரதியார் காலத்துச் சமூகப் போக்கையும் பலதரப்பட்ட மக்களது மனப்போக்கையும்
அறிந்து கொள்ளவும் அவரது கதைகள் சாளரமாக துணை புரிகின்றன.
1977 இல் சென்னை, மன்னார்சாமி
கோவில் தெருவில் இருந்த பூம்புகார் பிரசுரத்தால் முதல் பதிப்பாக வெளியிடப்பட்ட ‘பாரதியார்
கதைகள்’ என்ற கணினிக் கோப்பு வடிவம் (பி.டி.எப்.) இணையதளத்தில் கிடைக்கிறது. அக்கோப்பில்
இடம் பெற்றுள்ள கதைகளை வாசித்த அளவில் எனக்குத் தோன்றிய கருத்துகளையே நான் மேலே முன்வைத்துள்ளேன்.
அக்கோப்பில் இடம் பெறாத பாரதியாரின் கதைகளும் இருக்கின்றன என்பதால் இத்தொகுப்பைப் பாரதியார்
கதைகளின் முழுமையான தொகுப்பாகக் கொள்ள இயலாது என்ற புரிதலோடு அக்கதைகளை வாசிக்க விரும்புவோர்
கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கிப் பதிவிறக்கம் செய்து கொண்டு வாசித்துப் பார்க்கலாம்.
*****
No comments:
Post a Comment