2 May 2023

மனிதர்களை வேடிக்கை பார்க்கும் பொருட்கள்

மனிதர்களை வேடிக்கை பார்க்கும் பொருட்கள்

கட்டி அனுப்பப்பட்ட பொருட்களில்

ஒன்று தவறியிருந்தது எண்ணிக்கையில் புலப்பட்டது

எந்தப் பொருள் தவறியிருக்கும்

தரத்தில் குறைந்ததோ தரத்தில் மிகுந்ததோ

விலைப் போகக் கூடியதோ விலை போகாததோ

குறை மிகுந்ததோ யாதுமொரு குறையும் அற்றதோ

கால் தூசி பெறுமோ உலகையே விலை பேசுமோ

ஆயிரமாயிரம் கேள்விகள் கூடிக் கொண்டன

தவறிய பொருள் தன் இருப்பை

பிரமாண்டமாக்கிக் கொண்டு போகப் போக

என் பிரியமான தவறிய பொருளே

எனக் கதறத் தொடங்க

சரியாக வந்து சேர்ந்த பொருட்கள்

எந்த உணர்ச்சியுமின்றி வேடிக்கை பார்க்கத் தொடங்கின

*****

தொகுப்புகள்

முதல் தொகுப்பு வெளிவந்து

சரியாகச் சொல்வதென்றால்

பத்து வருடங்கள் பதினோரு மாதங்கள்

மூன்று வாரங்கள் இரண்டு நாட்கள்

இருபத்து மூன்று மணி நேரம்

ஐம்பத்து நான்கு நிமிடம்

நாற்பத்தேழு நொடிகள் ஆகின்றன

சற்றேறக்குறைய என்றால் பதினோரு வருடங்கள் ஆகின்றன

அது கிடக்கட்டும் கழுதை

வெளிவந்திருக்கும் இரண்டாம் தொகுப்பை

வாங்கிப் படியுங்கள் அல்லது பரிசீலியுங்கள்

என்ற கோரிக்கையோ அல்லது வேண்டுகோளோ வைக்கப்படுகையில்

அதற்கின்னும் பத்து சொச்சம் அல்லது

பதினோரு ஆண்டுகள் மிச்சம் இருப்பதாகப்

பின்னூட்டங்கள் வந்து சேர்கின்றன

காலப் பெருவெளியில் இப்படியும் அப்படியும் பார்க்கையில்

தொலைந்ததைத் தேடுவதும்

தேடிக் கொண்டிருப்பதைத் தொலைப்பதும்

சுவாரசியமான பொழுதுகளை உருவாக்கத் தொடங்கி விட்டதாக

மூழ்கிக் கிடக்கும் கப்பலின் ஓட்டையினின்று

கடலை நோக்கி ஓடும் நீரைப் போல

ஆங்காங்கே செய்திகளும் பார்வைகளும் வழிந்தோடுகின்றன

எப்படியும் வழுக்கிக் கொண்டு வழிந்தோடலாம் என்பதன் சாட்சியாக

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...