15 Nov 2024

இப்படித்தான் எல்லாம்!

இப்படித்தான் எல்லாம்!

இப்படித்தான் வழங்கப்படுகின்றன இலவசங்கள்

ஒரு தோடு வாங்கினால் இன்னொரு தோடு இலவசம்

அதிர்ஷ்ட நாட்கள் இப்படித்தான் கணக்கிடப்படுகின்றன

தலைக்கவசம் அணியாமல் சென்று

தண்டம் அழாமல் வரும் நாட்கள் அதிர்ஷ்ட நாட்கள்

தள்ளுபடிகளில் இப்படித்தான் மகிழ்ச்சி கிடைக்கிறது

உடனடியாகச் செய்து கொண்ட அறுவை சிகிச்சைக்கு

இருபது சதவீத தள்ளுபடி

லாபங்கள் இப்படித்தான் புரிந்து கொள்ளப்படுகின்றன

திருடு போனதைக் கண்டுபிடிக்க புகார் கொடுக்காமல்

கண்டு கொள்ளாமல் விட்டு விடுவது லாபம்

கடைசி வரை இப்படித்தான் வாழப்படுகிறது வாழ்க்கை

உன்னுடன் மனிதர் வாழ்வாரா என்றபடி

எப்படியோ கடைசி வரை வாழ்ந்து முடித்து விடுகிறார்கள்

இப்படித்தான் என்றில்லாமல் எதைக் கேட்டாலும்

காலம் பதில் சொல்லும் என்கிறார்கள்

காலத்திற்கும் பரீட்சை வைத்து

மதிப்பெண் போட நினைக்கும் மனிதர்கள்

இப்படித்தான் வெற்றியை நம்ப முடியாத மனிதர்கள்

அதை கடவுள் கொடுத்தது என்கிறார்கள்

இப்படித்தான் தோல்வியை நம்ப முடியாத மனிதர்கள்

அதை மனிதர்கள் கொடுத்தது என்கிறார்கள்

இப்படித்தான் ஏரிகள் மேல் வீடுகளைக் கட்டி

வீடுகள் ஏரியாகும் போது

போக்குவரத்து நெரிசலுக்காகக் கட்டிய மேம்பாலங்களில்

வாகனங்களை நிறுத்தி வைக்கிறார்கள்

முன்யோசனையுள்ள மனிதர்கள்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...