18 Feb 2026

நியாயம், நேர்மை மற்றும் சில துண்டு துணுக்குகள்!

நியாயம், நேர்மை மற்றும் சில துண்டு துணுக்குகள்!

நியாயம் என்பது பல கோடி பக்கங்கள் உள்ள ஓர் அகராதித் தேடல். அது யார் பக்கம் இருக்கிறது என்பதுதான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மில்லியன் டாலர் கேள்வி. என் நியாயம் உனக்கு அநியாயமாகவும், உன் நேர்மை எனக்குப் பிடிவாதமாகவும் தெரிவதில் தான் மனித இனத்தின் சகலமும் அடங்கியிருக்கிறது.

ஒவ்வொரு மண்டைக்குள்ளும் ஒரு குட்டி ஹிட்லர் ஒளிந்து கொண்டிருக்கிறான். தான் நினைப்பதே வேதம், தான் சொல்வதே நியாயம் அவனுக்கு. அவனோடு நீங்கள் தர்க்கம் செய்யப் போனால், உங்கள் ரத்த அழுத்தம்தான் ஏறுமே தவிர, அவன் ஓர் அங்குலம் கூட நகர மாட்டான். வாதம் செய்யச் செய்ய அவன் இன்னும் மூர்க்கமாவான். இறுதியில், சரிதான், நீ சொல்வதே சரி என்று சொல்லிவிட்டு நகர்வதுதான் பிபியைக் குறைக்க எளிய வழி. இதைக் கோழைத்தனம் என்று சொல்ல முடியாது.  இது ஒரு சர்வைவல் டெக்னிக்.

இவர்களை எதிர்க்க முடியாதா? அதற்கு மன வலிமை கிலோ கணக்கில் வேண்டும். கிராம் கணக்கில் இருப்பது பயன் தராது.

அப்படி எதிர்ப்பது என்று முடிவெடுத்துவிட்டால், அதற்கு ஓர் அறிவாற்றல் வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எதிர்க்கிறேன் என்று கையைத் தூக்கிவிட்டு, பிறகு பின்விளைவுகளைப் பார்த்து பயந்து மன உளைச்சலுக்கு ஆளாவதற்குப் பெயர்தான் பலவீனம்.

அப்படி ஆனால் மனம் ஹேங் ஆன கம்ப்யூட்டர் போல ஆகி விடும்.  ரீ-பூட் செய்ய வழி தெரியாமல் போய் விடும். இதனால் எப்போதும் சோர்ந்து கிடக்கும் ஒரு பயந்த மனதை எதிர்கொள்ள நேரிடும். பயம் என்பது ஓர் இருட்டு அறை. அதில் எதைத் தொட்டாலும் அது பாம்பாகவே தெரியும்.

எதிர்ப்பதைப் போல எதிர்க்காமல் இருப்பதற்கும் பெரிய மன வலிமை வேண்டும். உணர்ச்சிவசப்படாமல் இருந்தால்தான் அது சாத்தியம். உங்கள் உணர்ச்சிகளை உங்களுக்கு ஆளத் தெரிந்தால் அதை விட பெரிய வலிமை உலகில் ஏதும் இல்லை.

ஹிட்லர்களை எதிர்த்து அழிக்க வேண்டும் என்பதில்லை. அவர்களாகவே அழிந்து போவார்கள். அவர்களின் சாப்ட்வேர் பேக்கேஜ் அப்படித்தான் டிசைன் பண்ணப் பட்டிருக்கும். அதற்காக நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை.

ஆக நதியாய் இருங்கள். எதிர்ப்பவர்களைப் பொருட்படுத்தாமல், யாரையும் எதிர்க்காமல் ஓடிக் கொண்டே இருங்கள். வாழ்க்கையில் நிலையான முடிவு என்பதெல்லாம் ஒரு மாயை. எதிர்க்கின்ற முடிவுகளை க்விஸில் பாஸ் பண்ணுவதைப் போலப் பாஸ் பண்ணுங்கள்.

இன்று எடுக்கும் முடிவு நாளை அபத்தமாகத் தோன்றலாம். வாழ்க்கை என்பது நேர்கோடு அல்ல, அது ஒரு வளைந்து நெளிந்து செல்லும் நதி. பாறைகள் வந்தால் மோதாமல் வளைந்து செல்வதே நதியின் புத்திசாலித்தனம். நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும். இதைக் காலத்தின் கட்டாயமாக எடுத்துக் கொண்டாலும் சரிதான், வாழ்க்கையின் கட்டாயமாக எடுத்துக் கொண்டாலும் சரிதான். அது உங்கள் விருப்பம்.

*****

No comments:

Post a Comment