நீலம் பாரித்த உடல்
மேகம் கலைகிறது
தடியடி நிகழ்த்தப்பட்ட
ஒரு களம் போல இருக்கிறது
வானம்
செக்கச் சிவப்புதான்
அதன் நிறம் என்று நினைத்திருக்கும்
வேளையில்
நீலத்தைப் புகுத்தி
கருப்புக்கு மாறிக் கொள்கிறது
தன் கண்டனங்களைத் தெரிவித்துக்
கொள்ளும்
இரவு முடிந்தவுடன்
தெளிந்த வானத்தில்
பஞ்சுப் போதிகளாய் மேகங்கள்
திரள்கின்றன
பல வண்ண சாயம் கலந்து
பூமியில் எதை நிகழ்த்தினாலும்
நீலமாக மாற்றிக் கொள்ளும்
வானம்
கரும்புகையையும் கலைத்துப்
போட்டு
நீலமாகவே உள்வாங்கிக் கொள்கிறது
நீலத்தின் மீது பிரியம் கொண்ட
வானம்
இரவின் கருப்பிலும்
நட்சத்திரக் கண்களால்
நீலத்தைத் துலாவிய வண்ணம்
இருக்கிறது
கருமையில் கரைந்திருக்கும்
வானத்தைக் காட்டும்
நீலப்படங்கள் ஒளிபரப்பாகத்
தொடங்குகின்றன
வானத்தின் தேகம் புணர்ந்தெழுந்து
விடியலில் கண் விழிக்கிறது
வெக்கச் சிவப்புடன்
நீலம் பாரித்த உடலுடன்
*****
No comments:
Post a Comment