நிர்வாணங்களை மறைக்கும் போராட்டங்கள்
ஆடையைப் போர்த்த சொல்லி
நிர்வாணத்திற்கு எதிரான வியாபாரி
துணிகளை விற்றுக் கொண்டிருக்கிறார்
வண்ணங்களைக் குழைத்து
தயாரிக்கப்பட்டிருக்கும்
துணிகள்
நூல்களால் இணைக்கப்பட்டிருக்கின்றன
நூல்களைப் பிரித்தால் தெரியும்
துணியின் நிர்வாணத்தில்
புற்றை மறந்த பாம்பின் தவிப்புகள்
கூட்டத்தைப் பிரிந்த நூடுல்ஸ்
பிரியின் ஏக்கங்கள்
எதுவும் குறித்த பிரக்ஞையின்றி
ஆடைகளைக் கிழித்து விட்டுத்
திரியும்
பிரேமை பிடித்த ஒருவர்
வியாபாரியின் அடுக்கத்தின்
கீழ் படுத்துறங்குகிறார்
பிரேமை பிடித்தவர்களின் நிர்வாணங்கள்
குறித்த பொருட்டில்லாமல்
வியாபாரியும் படுத்து உறங்குகிறார்
ஒவ்வொரு நாளும் கண் விழிக்கும்
வியாபாரி
மக்களின் நிர்வாணங்களை மறைக்க
விற்பனைத் தந்திரங்களால்
போராடிக் கொண்டிருக்கிறார்
போட்டிப் போட்டு வாங்கியபடி
எல்லாரும் போராடிக் கொண்டிருக்கிறோம்
அவரவர் நிர்வாணங்களை மறைக்கும்
விலைச்சீட்டை உற்று பார்த்தபடி
*****

No comments:
Post a Comment