கால தேவரின் கட்டளை
சாலையைக் கடக்கையில்
இருமருங்கிலும் தொழில்கள்
பிரசவமாவது தெரிகின்றன
சிறுநீரைக் கழிக்க செய்யும்
வியாபாரம்
ஒவ்வொருவருக்கும் இரண்டு
ரூபாய் வசூலிக்கிறது
மலம் கழிக்க செய்யும் வியாபாரம்
இரண்டு மடங்கு கட்டண உயர்வோடு
இருக்கிறது
தவிக்கும் தாக சாந்திக்கான
பாட்டில்கள்
இருபது ரூபாய் வைத்திருப்போரை
கவர்ச்சி காட்டி அழைக்கின்றன
பசிக்கான மேசைகள்
பண்டங்களுக்கேற்ப விலை பேசுகின்றன
அசந்து போய் மர நிழலில் அமர்கையில்
பூங்காவுக்கான நுழைவுக் கட்டணம்
என்று
ஒரு சீட்டுக் கிழித்து நீட்டப்படுகிறது
செத்தொழிந்து போகலாமென்றால்
போவதற்கு முன் இன்ஷ்யூரன்ஸ்
கிளெய்ம்மை
சொல்லி விட்டுப் போ என்று
கூக்குரல்கள் கேட்கின்றன
சரிதான் போ வாழலாம் என்றால்
ஒவ்வொரு நாளும் வாழ்வதற்கு
உடல் நோக உளம் நோக ஆன்மா
நோக
உழைத்து உழைத்து
காசு கொடுத்துக் கொண்டே இரு
என்கிறார் கால தேவர்
*****
No comments:
Post a Comment