12 Dec 2022

வீட்டைத் தள்ள முயற்சித்தவர்

வீட்டைத் தள்ள முயற்சித்தவர்

பக்கத்து வீட்டுக்காரர் விசித்திரமானர்

பக்கத்து வீட்டுக்காரராய் இருக்க விருப்பமில்லாதவர்

அவருக்கு என் வீடு

இன்னும் நான்கு வீடுகள் தள்ளி இருக்க வேண்டும்

ஒரு முறை என் வீட்டைத் தள்ளிப் பார்த்திருக்கிறார்

முடியாது எனத் தெரிந்து

முயற்சியைக் கைவிட்டிருக்கிறார்

நான் நகராமல் இருந்த

என் வீட்டிற்கு நன்றி சொல்லிக் கொண்டேன்

எப்போது பார்த்தாலும்

ஏதாவது பேசி விடுவோனோ என்ற பதற்றத்தில் இருக்கிறார்

அணு பொழுதும் அலுப்புறாது

அலைபேசியில் யார் யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறார்

எனத் தெரிந்து

அலைபேசியில் அழைத்துப் பார்த்தேன்

பக்கத்து வீட்டுக்காரர் எனத் தெரியாது பேசிக் கொண்டிருந்தவர்

அது அறிந்ததும் பட்டெனத் துண்டித்துக் கொண்டார்

சரிதான் போ என

பேசா மடையரின் பக்கத்தில் இருப்பது வெறுத்து

நான்கு தெருக்கள் தள்ளி குடி புகுந்தேன்

பக்கத்து வீட்டுக்காரர் பேசத் துவங்கியிருந்தார்

பேசுவதற்கு வசதியாகப் பக்கத்து வீட்டில் குடி வரவா என்றதற்கு

வேண்டாம் நாம் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்றார்

பக்கத்து வீட்டுக்காரர்கள் பேசாது போனால்

வருத்தம் கொள்ளாதீர்கள்

இரண்டு வீடுகள் தள்ளி இருப்போரிடம் பேசிக் கொள்ளுங்கள்

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...