பேச வைப்பதன் சூட்சமம்
எதையோ என்னைப் பேச வைக்கிறார்கள்
பிறகு
அதை நான் பேசியதாய்ப் பொறுப்பேற்க
சொல்கிறார்கள்
அந்த உணர்வு நானல்ல
அந்தச் சொற்கள் நானல்ல
என்று மன்றாடியதன் பின்னணியில்
நீ ஏன் பேசினாய் என்கிறார்கள்
நீங்கள் ஏன் பேச வைத்தீர்கள்
என்ற போது
உசுப்பேற்றியவர்கள் குற்றத்திற்குப்
பொறுப்பேற்க இயலாது என்கிறார்கள்
மௌனித்திருப்பது நல்லதென
இருக்கும் போது
என் பேச்சால் எல்லாம் மாறும்
என்கிறார்கள்
மாறும் எனில் மாற்றி விடும்
போது
நீ செய்த மாற்றத்தின் விளைவுகள்
பார் என்கிறார்கள்
என்னை என்னதான் செய்ய சொல்கிறீர்கள்
எனும் போது
குற்றத்திற்குப் பொறுப்பேற்றுக்
கொள் என்கிறார்கள்
ஒருவரைப் பேச வைப்பதன் சூட்சமம்
அவரைக் குற்றவாளியாக்குவது
என்று சொல்லிச் சிரிக்கிறார்கள்
*****
No comments:
Post a Comment