21 Dec 2019

இஷ்டப்பட்டு நஷ்டம் பண்ற எடத்துல...



செய்யு - 305

            தொண்டாமுத்தூர் கேப்பிட்டல்ல அப்பப்போ இன்வெஸ்டர்ஸ் மீட், ட்ரேடர்ஸ் மீட்னு திருவாரூர்ல இருக்குற ஓட்டல் செல்வீஸ்லயோ, ராயல் பார்க்குலயோ கூட்டம் போடுவாங்க. பங்குச் சந்தையில யேவாரம் பண்றங்கள தங்களோட புரோக்கிங் ஆபீஸ்லேய தக்க வெச்சிக்கவும், புதுசா பங்குச் சந்தையைப் பத்தி அறியாதவங்களுக்கு அதெ அறிமுகம் பண்ணி அவங்கள தங்களோட புரோக்கிங் ஆபீஸ்க்கு வாடிக்கையாளாரா இழுக்குறத்துக்காவும் பொதுவா ஒவ்வொரு புரோக்கிங் ஆபீஸூம் பண்ற உத்திதாம் இது. ஏன்னா பங்குச்சந்தைக்கு உள்ளே வர்றவங்க அளவுக்கு அதெ வுட்டு நஷ்டப்பட்டு வெளியில போறவங்களோட எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆபீஸ்க்கும் கணிசமா இருக்கும். இது மாதிரியான மீட் புதுசா ஆட்கள உள்ள கொண்டுவர்றதோட, சந்தைய விட்டுப் போவோமா இருப்போமான்னு இப்படியும் அப்படியுமா சஞ்சலப்பட்டுக்கிட்டு இருக்குறவங்களோட மனச மாத்தி சந்தையிலயே இருப்போம்னு நெனைக்குற அளவுக்கு ஒரு மாயாஜாலத்தைப் பண்ணிப்புடும்.
            பங்குச் சந்தையில தின வர்த்தகங்ற டே டிரேடிங் பண்ணி, குறுகின கால வர்த்தங்ற ஷார்ட் டேர்ம் டிரேட் பண்ணி நஷ்டப்பட்டவங்க நெறைய பேரு இருப்பாங்க. இதுல லாபம் பண்றவங்க லட்சத்துலயோ, கோடியிலயோ ஒருத்தருத்தாம் இருப்பாங்க. கிட்டதட்ட லாட்டரிச்சீட்டு கதெத்தாம். யாரோ ஒருத்தருக்கு லாட்டரிச் சீட்டு விழுந்ததப் பாத்துட்டு அதே போல வாங்குற எல்லாத்துக்கும் வுழுவுமுன்னு நெனைச்சுக்கிட்டு சனங்க அலைஞ்சு அலைமோதிக்கிட்டு அதெ வாங்குதுப் பாருங்க! அதெ சங்கதித்தாம் சந்தையில டிரேடிங்ல லாபம் பண்ண அந்த கோடியில ஒருத்தரப் பாத்து நாமளும் அப்படி ஆயிடலாமுன்னு லட்சக்கணக்குலயும், கோடிக் கணக்குலயும் டிரேடிங் பண்ணி பண்ணி நஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கிறவங்க சந்தையில அதிகம்.
            அப்படி நஷ்டம் பண்ணி பண்ணி அவுங்க பங்குச் சந்தையை வெறுத்து அதுல விலகிப் போயிடக் கூடாது பாருங்க. அப்படி விலகிப் போய்ட்டா புரோக்கிங் ஆபீஸோட நெலமை என்னாவுறது சொல்லுங்க? தலையில துண்டப் போட்டுக்கிட்டா உக்காந்திருக்க முடியும்? அதுக்காகவும்தாம் இப்படி மீட்டிங் போடுறது. அப்படி மீட்டிங் போட்டு புதுசு புதுசா இப்படி இப்படியெல்லாம் டெக்னிக் இருக்கு, மெத்தேட் இருக்குன்னு டெக்னிக்கல் அனாலிஸ், பண்டமெண்டல் அனாலிஸ், ஸ்டாக் அனாலிஸ்னு அதுல நிபுணர்கள்னு யாராச்சியும் கொண்டாந்து வெச்சி கதை அளந்து வுடுறது உண்டு. அதெ கேட்குற பங்குச் சந்தையிலேந்து விலகிடலாம்னு நெனைக்குற வாடிக்கையாளருங்க ஆகா இந்த மெத்தேடும், டெக்னிக்கும் தெரியாமத்தான் நஷ்டம் பண்ணிட்டோம்னு நெனைச்சுக்கிட்டு சந்தையிலேந்து விலகுற முடிவ அந்த நொடியிலயே பொசுக்குன்னு விட்டுடுவாங்க.
            எந்த வாடிக்கையாளரும் மெத்தேட், அனாலிஸ்னு பேசுற நிபுணருங்க அதுல கில்லின்னா அதெ பயன்படுத்தி அவுங்க கோடி கோடியா சம்பாதிச்சிருக்கலாமே! அதெ வுட்டுப்புட்டு ஏம் இப்படி எங்களுக்கு வந்து பிரசங்கம் பண்ணிக்கிட்டும், கதெ அளந்துகிட்டும் இருக்கிறாங்கன்னு கேட்க மாட்டாங்க. பங்குச்சந்தையில இருக்குற எல்லாத்துக்கும் ஆசெ அதிகம். ஒரே நாள்ல சம்பாதிச்சு அதே நாள்ல கோடீஸ்வரனா, பில்லினியரா, பில்கேட்ஸையும் வாரன் பப்‍பெட்டையும் முந்திக்கிட்டுப் போயிடுணும்னுத்தாம் நெனைப்பாங்களே தவுர ஞாயமா எதையும் யோசிக்கவே மாட்டாங்க.
            அப்படிச் சந்தையில லட்சம் லட்சமா நஷ்டம் பண்ற அந்த அசாமிங்களோட இன்னொரு சுபாவத்தைக் கேட்டா சிரிச்சிப்புடுவீங்க. அவுங்க எவ்வளவு வேணாலும் லட்சம் லட்சமா சந்தையில நஷ்டம் பண்ணுவாங்க. ஆனா அவுங்க பொண்டு, புள்ளைகளுக்கு பைசா காசு செலவு பண்றதுக்கு அம்புட்டு யோசனைப் பண்ணுவாங்க. அவுங்களுக்குச் செலவு பண்ற ஒத்த பைசா வரைக்கும் கணக்கு எழுதி நோட்டு வெச்சிப்பாங்க. சந்தையில டிரேட் பண்ற நேரத்துல அதெ பத்தியெல்லாம் ஒருத்தருக்கொருத்தரு பேசிப்பாங்க பாருங்க, போன மாசத்த வுட இந்த மாசத்துக்குக் காப்பி போடி ரெண்டு ரூவாய்க்குக் கூடுதலா வாங்கியிருக்காங்க அப்பிடின்னு. அந்த அளவுக்குத் துல்லியமாக பூதக் கண்ணாடிய வெச்சு கணக்குப் பாக்குற ஆளுங்க எப்படித்தாம் லட்சம் லட்சமா சந்தையில வுடுறாங்கன்னு நெனைக்க நெனைக்க ஆச்சரியமாத்தாம் இருக்கும்.
            இந்த இன்வெஸ்டர்ஸ் மீட், டிரேடர்ஸ் மீட்னு வந்துட்டா அது ஒரு கொண்டாட்டம்தாம். அதுக்காக தொண்டாமுத்தூர் கேப்பிட்டல்ல அம்புட்டுச் செலவு பண்ணுவாங்க. வேலை பாக்குற ஆபரேட்டர்ஸ்க்கு சம்பளத்த கொஞ்சம் கூட்டிக் கொடுங்கன்னா அவ்வளவு யோசிக்கிற தொண்டாமுத்தூர் கேப்பிட்டல்ல மீட் ஒவ்வொண்ணுத்துக்கும் காச தண்ணியா அடிச்சி வுடுவாங்க. சாப்பாடு பப்பே முறையில வெச்சிருப்பாங்க. அது அம்புட்டு வதையழிஞ்சி வீணாவும். சைவம் அசைவம்னு பண்ணி நெறைய வீணாவுறத்துக்கு கணக்கில்ல. நம்ம ஆசைக்கார வாடிக்கையாளருங்க ஓசியில கெடைக்குதுன்னு நெனைப்பாங்களோ, யில்ல நம்மகிட்ட சம்பாதிச்சக் காசுலத்தாம் மீட்டீங்கைப் பண்றாங்கன்னு நெனைப்பாங்களோ என்னவோ அவுங்க எவ்வளவு சாப்பிடணுமோ அம்புட்டு எடுத்துச் சாப்பிட மாட்டாங்க. கரண்டி கரண்டியா பகாசுரன் சாப்புடுறது போல சாப்புடறதா நெனைச்சி அள்ளி வெச்சி சாப்புட முடியாம அப்படியே தட்டோட வெச்சிட்டுப் போவாங்க.
            தொண்டாமுத்தூர் கேப்பிட்டல்ல வேல பாக்குற லெனின், விகடு, கோபி, சுபா எல்லாமும் அன்னிக்கு கோட்டு, சூட்டு, ஷூன்னு போட்டு டையெல்லாம் கட்டிக்கிட்டுத்தாம் அன்னிக்கு மீட்ல எல்லாத்தையும் வரவேற்று உபசரிச்சி வர்ற ஆட்கள மாப்பிள்ளை பொண்ணு கணக்கா கவனிச்சி உக்கார வைக்கணும். மத்த பிராஞ்ச் ஆபீஸ்ல வேல பாக்குற மேனேஜருங்க, ஆபரேட்டருங்களும் அன்னிக்கு மீட்டீங்கை ஒருங்கிணைச்சிக் கொடுக்க வருவாங்க. அந்த நாளு ரொம்ப கொண்டாட்டமா இருக்கும்.

            மீட் போடுறதுக்கு முன்னாடியே நோட்டீஸ் அடிச்சி விநியோகிச்சிடுவாங்க. பேப்பர், எப்.எம். ரேடியோன்னு விளம்பரமும் பண்ணிப்புடுவாங்க. அது தவிர வேலை பாக்குற லெனின், விகடு, கோபி, சுபான்னு ஒவ்வொருத்தருக்கிட்டேயும் நூறு நோட்டீஸைக் கொடுத்து அதெ அவங்களுக்குத் தெரிஞ்சவங்க, தெரியாதவங்கன்னு கொடுத்து ஒவ்வொருத்தரு தரப்பிலேந்தும் கொறைச்சலா இருவது புது ஆளாவது மீட்டுக்கு வர வைக்கணும்னு டார்கெட் வைப்பாங்க. ஒரு மீட் நடந்துச்சுன்னா குறைந்தபட்சம் ஐம்பது புது வாடிக்கையாளரையாவது ஆபீஸ்ல சேத்திருக்கணும்னு அது ஒரு தனி டார்கெட் வெச்சிருப்பாங்க. ஆளுக்கு அப்படி பத்து பேரையாவது கொண்டு வந்திருக்கணும். அப்படி சேர்ற ஒவ்வொருத்தருக்கும் ஒரு கணக்கு வெச்சி யார் யாரு எத்தனைப் பேரைச் சேர்த்து விட்டாங்களோ அவுங்களுக்கு தனியா ஒரு தொகையையும் சம்பளத்தோட சேர்த்துக் கொடுத்துடுவாங்க தொண்டாமுத்தூர் கேப்பிட்டல்ல.
            தொண்டாமுத்தூரு கேப்பிட்டல்ல சம்பளங்றது ஐயாயிரம்தாம். அந்த ஐயாயிரத்தை ஐம்பதாயிரம் வரைக்கும் உசத்திக்குங்றது ஆபரேட்டரோட சாமர்த்தியம்தான். எந்த அளவுக்கு வாடிக்கையாளரை டிரேட் பண்ண வெச்சு தரகுத்தொகையை அதிகரிக்க வைக்கிறோமோ அதுக்குத் தகுந்தபடிச் சம்பளத்தோட தனியா கவனிப்பாங்க. ஒவ்வொரு மாசமும் எந்த அளவுக்கு வாடிக்கையாளருங்க புதுசா சேர்றாங்க, இருக்கறவங்க விலகுறாங்கறதையும் கணக்குல வெச்சி அதுக்குத் தகுந்தாற்போல சம்பளத்தையும் வெட்டுவாங்கங்றதையும் நீங்க தெரிஞ்சிக்கணும். இதுல வேலை பாக்குறது கத்தி முனை மேல நிக்குற மாதிரித்தாம். ஆபரேட்டரு சரியில்லன்னு ஆபீஸ்க்குத் தெரிஞ்சிப் போச்சுன்னா புடிடா காகிகத்தன்னு வேலையை வுட்டு தூக்கி அடிக்க யோசிக்கவே மாட்டாங்க. இங்க வேல பாக்குறதுக்கு நீங்க என்ன படிச்சிக்கங்க, படிக்கலேன்னுலாம் பார்க்க மாட்டாங்க. வாடிக்கையா வர்றவங்கள டிரேட் பண்ண வெச்சி தரக அதிகம் பண்ணத் தெரியுதாங்ற ஒண்ண மட்டுந்தாம் பார்ப்பாங்க.
            குடும்பத்துல நல்லது கெட்டதுன்னு லீவு எடுக்குறதுன்னா அந்த லீவைக் கொடுக்குறதுக்கும் அம்புட்டு யோசிப்பாங்க தொண்டாமுத்தூர் கேப்பிட்டல்ல. ஆபீஸைப் பொருத்தமட்டுல ஒவ்வொரு ஆபரேட்டரும் பண்ண வைக்குற யேவாரத்துத் தரகுத் தொகையிலத்தானே வருமானமே இருக்கு. அதால பூமியே ரெண்டா பொளந்துட்டுன்னாலும் ஆபரேட்டருக்கு லீவுங்றத அனுமதிக்கவே மாட்டாங்க. மார்கெட் நேரத்த தவித்து மித்த நேரத்துல ஆபரேட்டருங்க என்ன வேணாலும் பண்ணிக்கலாம். அதெயும் கண்டுகிடா மாட்டாங்க. மார்கெட் ‍நேரம் முடிஞ்சா போதும் ஆபரேட்டர்களா இருக்குற விகடு, கோபி, சுபா இவங்க எல்லாம் நெட்டுல சஞ்சாரம் பண்றதுத்தாம் வேல. அதுல பூந்து வெளையாடுறது, படம் பாக்குறது, எதாச்சியும் தேடிட்டுக் கெடக்குறதுன்னு ஒரு மணி நேரம், ரெண்டு மணி நேரம் மூழுகிட்டுத்தாம் வூட்டுக்குக் கெளம்புவாங்க. பின்னே அப்போ ஒரு மணி நேரத்துக்கு பிரெளசிங் சென்டர்ல முப்பது ரூவா வசூலு பண்ணுவாங்க. அரை மணி நேரம்னா இருவது ரூபா கேட்பாங்க. இங்க அது ஓசிதான. அது மட்டுமில்லாம நெட்டோ வேகம் இருக்கே, கைய வெச்சா போது அடுத்த நொடி சல் சல்லுன்னு வந்து நிக்கும். டிரேடிங் நடக்குற ஆபீஸ் இல்லையா. அதால இதுக்குன்னே கொடையெல்லாம் மேல வெச்சுல்ல நெட் கொடுத்திருப்பாங்க.
            ரெண்டாயிரத்து ஆறு வரைக்கும் அங்கத்தாம் செம ரகளையா வேலையப் பாத்துகிட்டுக் கெடந்தான் விகடு. ரெண்டாயிரத்து ஆறுல மே மாசம் ஓட்டல் செல்வீஸ்ல நடந்த டிரேடர்ஸ் மீட்ல நிபுணருங்கன்னு சொல்லப்படுற எக்ஸ்பர்ட்ஸ் வித விதமா எப்படி டிரேட் பண்றதுன்னு ஐடியா கொடுத்து முடிச்சப் பிறவு விகடுவும் அரை மணி நேரத்துக்கு மேல பேசுனான். கிரிக்கெட் விளையாடுறவன விட அதெ பாத்துகிட்டு இருக்கிறவனுக்கு தினுசு தினுசா ஐடியா வரும்பாங்களே! சுகருக்காக ட்ரீட்மெண்ட் எடுக்குற நோயாளி ஒரு கட்டத்துக்குப் பெறவு டாக்கடருக்கே மருந்து மாத்திரைகளோட பேரைச் சொல்ற அளவுக்கு நிலைமை மாறிடும்பாங்களே! அப்படித்தாம் ஆகிப் போயி விகடு அந்தக் கூட்டத்துலப் பேசுனான். நெறைய பேரு டிரேட் பண்றதப் பார்த்து பாத்து அவுங்க பண்ற தப்பு, சரியெல்லாம் டிரேட் பண்ணாத இவனுக்கு நல்லா தெரிஞ்சிப் போச்சி. வேலையில இருக்குறவனெ விட அதெ ‍வேடிக்கைப் பாக்குறவனுக்கு அந்த வேலையைப் பத்தின அறிவு ஜாஸ்தியாயிடும்பாங்களே! அப்படித்தாம் அது பத்தின அறிவு கண்டமேனிக்கு வளர்ந்து போயி புதுசா புதுசா ஐடியா கொடுக்குற மாதிரி அவன் அன்னிக்குப் பேசுறான்.
            பொதுவா ஆபரேட்டரா இருக்குறவங்கள டிரேட் பண்ண ஆபீஸ்ல அனுமதிக்க மாட்டாங்க. ஏன்னா டிரேட்ல லாபமும் வரும், நஷ்டமும் வரும். ஒருவேளை ஆபரேட்டரு அவரு கணக்குக்கு டிரேட் பண்ணி நஷ்டம் ஆயி அதுல மனச வுட்டுப்புட்டு வாடிக்கையாளரங்க டிரேட்ல கவனம் இல்லாம இருந்துட்டாங்கன்னா நஷ்டம் ஆபீஸூக்குத்தானே. அதால அதுக்கு எப்பவும் நோ என்ட்ரித்தாம். ஆனா டிரேட் பண்றவங்களப் பாத்து ஆபரேட்டருக்கு நாமளும் இப்படி வேலையையும் பார்த்துட்டு நாம்ம ஒரு கணக்குத் தொடங்கி சைடுல வருமானம் பண்ணிப் பாக்கலாமேன்னு ஒரு ஆசை வரத்தாம் செய்யும். ஆனா அவங்க கணக்குத் தொடங்குனாத்தானே தெரியும்னு ஆபரேட்டருங்க ரொம்ப சாமர்த்தியமாக அவுங்களோட அம்மா, அக்கா, பெரிம்மா, சின்னம்மான்னு யாரு பேர்லயே கணக்கு ஆரம்பிச்சி அதுல பண்ணிட்டு இருப்பாங்க. இதுக்குன்னே அவுங்க பேர்ல பான் கார்டு வாங்கி, பேங்க் அக்கெளண்ட் பண்ணி, டீமேட் கணக்கு ஆரம்பிச்சி எல்லா வேலையையும் பண்ணுவாங்க.
            தொண்டாமுத்தூரு கேப்பிட்டல் மேனேஜர் லெனின் அப்படி அவுங்க ஒண்ணுவுட்ட அத்தை பேர்ல ஒரு கணக்கு ஆரம்பிச்சி பண்ணிட்டுக் கெடப்பாரு. ஆபீஸ்ல ஏன் ஆபரேட்டருங்களும், மேனேஜரும் கணக்கு ஆரம்பிச்சி டிரேட் பண்ண வேணாம்னு சொல்றாங்றத அவரப் பாக்குறப்பத்தாம் தெரியும். சில டிரேட்கள பயங்கர நஷ்டம் வர்றப்ப மேனேஜரு லெனின் சோர்ந்துப் போயிடுவாரு. அவருக்கு வேலையிலயே கவனம் ஒடாது. நஷ்டம் எப்படியும் கொறைஞ்சிடாதா? நஷ்டம் மாறி லாபம் வந்துடாதான்னு எந்த பங்குல நஷ்டம் பண்ணாரோ அதையே பாத்துப்புட்டு உக்காந்துடுவாரு. அவர்ர அப்ப பாக்குறப்ப ரொம்ப சங்கடமாத்தாம் இருக்கும்.
            இதையெல்லாம் பார்த்தாலும் கோபி அவரு அண்ணன் பேர்ல ஒரு கணக்கு ஆரம்பிச்சி வெச்சிருந்தாரு. சுபா அதோட பிரெண்ட் பேர்ல ஒரு கணக்கு ஆரம்பிச்சி வெச்சிருந்தது. லெனின் லட்சக் கணக்குல நஷ்டம் பண்ணா கோபி ஆயிரக் கணக்குல நஷ்டம் பண்ணுவாரு. சுபா ஐம்பது, நூறுங்ற அளவுல நஷ்டம் பண்ணும். இதுல நஷ்டம் பண்ணாத ஒரே ஆளு விகடுதாம். அவனுக்குத்தாம் கணக்கே கெடையாதே. அவ்வேன் யாரு பேர்லயும் கணக்கும் ஆரம்பிக்கல. சொல்லப் போனா அவனுக்கு பேங்க் அக்கெளண்ட்டே கெடையாது. சம்பளத்த கூட கையில வாங்கிகிட்டுத்தாம் இருந்தான் அவன். இந்த எல்லாரோட அனுபவங்கலேந்து வந்த முடிவுகளப் பத்தித்தாம் அவன் அந்த மீட்ல ரொம்ப அனுபவப்பட்டவன் போல இதுலயே பழந்தின்னு கொட்டய போட்டவனப் போல பேசிட்டு இருக்கான்.
            அந்த மீட்ல யாரு வேணாலும் வந்து டிரேடிங் பண்றதையும், இன்வெஸ்ட் பண்றதையும் ஊக்குவிக்கிற மாதிரி என்ன வேணாலும் பேசலாம். அதெத்தாம் ஆபீஸ்ல எதிர்பார்ப்பாங்க. நிபுணருங்க ஒரு மணி நேரம் பேசி முடிச்சாங்கன்னா அதுக்குப் பெறவு வாடிக்கையாளருங்க ரெண்டு மணி நேரத்துக்கு அவங்க பாட்டுக்கு பேசுவாங்க, பேசுவாங்க அப்படிப் பேசுவாங்க. அவங்களோட சந்தேகம், அனுபவம்னு போட்டு கொலகுத்து குத்துவாங்க பேச்சுல.
*****


No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...