22 Dec 2019

23.2



            "பெண்கள் முகச்சவரம் செய்து கொள்ளும், ஆண்கள் மஞ்சள் பூசிக் குளிக்கும் எங்கள் கிராமநகரம் வித்தியாசமானது. உலகு எங்கும் இப்படி நடப்பதில்லை. எங்கள் கிராமநகரத்தில் அப்படி நடக்கிறது.

            எங்கள் கிராமத்தில் காதலிக்க தடையில்லை. காதலித்தவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயம். குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது சட்டப்பூர்வ நிர்ப்பந்தம். இதிலிருந்து யாரும் விலகிச் சென்று விட முடியாது. இது உங்கள் சமூகத்தில் அப்படியே நேர்மாறானது என்பது அறிகிறேன். முதலில் கல்யாணம், பிறகு காதல், பிறகு குழந்தை என்ற தலைகீழ்ப் பாதையில் பயணிப்பது உங்கள் சமூகம்.
            எங்கள் சமூகத்தில் காதலும், குழந்தையும் முக்கியம். எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் காதலிக்கலாம். சாதியில்லை. மதமில்லை. குழந்தை பெற்றுக் கொண்டபின் ஆண் பெண் என்கிற பேதமும் இல்லை எங்கள் சமூகத்தில். குழந்தை பிறந்ததற்குப் பின் கொடூரமான சடங்குதான் என்றாலும் திருமணத்திற்கு நூற்று எட்டு நாட்களுக்கு முன் ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றி விடும் சமூகம் எங்களது. இதை ஏதோ பழங்குடியின சம்பிரதாயமாக மட்டும் நினைத்து விடாதீர்கள். ஆணாக வாழ்ந்து ஆணாக இறப்பவனுக்கு பெண்ணைப் பற்றி என்ன தெரியும்? அவன் பெண்ணைப் பற்றி என்ன புரிந்து கொள்வான்? அதே போல பெண்ணாகப் பிறந்து பெண்ணாக இறப்பவளுக்கு ஆணைப் பற்றி என்ன தெரியும்? அவள் ஆணைப் பற்றி என்ன புரிந்து கொள்வாள்?
            ஒரு வித்தியாசமான சமூகத்தில் வந்துள்ளதாக நீங்கள் என்னைப் பார்க்கலாம். ஆனால் ஆண் - பெண் என்ற பேதம் கூட இல்லாத சமூகம் எங்களுடையது. ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றும் காட்டுமிராண்டித்தனமான சமூகம் உங்களுடையது என்று நீங்கள் சொல்லலாம். அதை என்னால் மறுக்க முடியாது. ஆனால் எங்கள் சமூகத்தில் பலாத்காரங்கள் கிடையாது, வன்புணர்ச்சிகள் கிடையாது, விபச்சாரம் கிடையாது. கூட்டு பாலியல் பலாத்காரங்கள் கிடையாது. ஆண் பெண்ணை மதிப்பான். பெண் ஆணை மதிப்பாள்.
            கல்யாணம் ஆகும் முன்பு வரைதான் ஆண் ஆணாக இருக்கிறான். பின்பு ஆண் பெண்ணாகி விடுவாள் எங்கள் சமூகத்தில். அதே போல கல்யாணம் ஆகும் முன்பு வரைதான் பெண் பெண்ணாக இருக்கிறாள். ஆன பின்பு பெண் ஆணாகி விடுகிறான் எங்கள் சமூகத்தில்.
            எங்கள் சமூகத்தில் ஆணாகப் பிறந்தவன் பெண்ணாக இறக்க வேண்டும் என்பதும், பெண்ணாக பிறந்தவள் ஆணாக இறக்க வேண்டும் என்பது எங்கள் முன்னோர் எழுதி விட்டுச் சென்று விட்ட நியதி. சாதி, மத, இன பேதம் மட்டுமில்லாமல் ஆண் - பெண் என்ற பேதம் கூட இருக்கக் கூடாது என்பதற்காக எங்கள் முப்பாட்டன்கள் செய்து வைத்த காரியத்தொடர்ச்சி அது.
            நாங்கள் தலையணை வைத்து தலையை உயர்த்திப் படுப்பதில்லை. தலையணை அளவுக்கு ஒரு பள்ளம் பறித்து வைத்து அந்தப் பள்ளத்தில் தலையை வைத்து படுக்கிறோம். தலை என்பது உயர்வு என்ற தலைக்கணம் ஏற்படுவதை இப்படி ஒரு சம்பிராயத்தின் மூலம் தடுப்பதாக எங்கள் முன்னோர்கள் கருதியிருக்கிறார்கள்.
            இனிய இசையால் கானத்தால் நிரம்பியது எங்கள் சமூகக் கூட்டம். இசையும் கானமும் நெடிய பயணங்களின் துணைவர். வெறுமையை நிரப்பும் அட்சயப் பாத்திரங்கள். வெற்றிடத்தில் பரவும் அதிசய சக்திகள். காதில் புகுந்து கண்கள், நாசிகள், வாயின் சுவை மொட்டுகள், உடலின் உணர்ச்சி நரம்புகள் என்று அத்தனையிலும் நிறைய முடிகின்ற ஒன்று இருக்குமானால் அது இசையும் கானமும்தாம்.
            எங்கள் இசை ஆதியின் இசை. வலிகளை மறக்கச் செய்யும் இசை. உங்கள் தலையை வெட்டிப் போட்டாலும் அதன் வலி தெரியாது வெட்டிப் போடப்பட்ட தலையின் காதுகள் எங்கள் இசையைக் கேட்கும். வேதனைகள் ஒவ்வொன்றையும் மென்று முழுங்கும் வல்லமை படைத்த ‍இசை எங்கள் இசை. அந்த இசையை வெறுமனே தோலால் செய்யப்பட்ட இசைக்கருவிகளால், நரம்புகளால் கட்டப்பட்ட இசைக்கருவிகளால், காற்றை நிரப்பும் குழல் இசைகளால் நாங்கள் உண்டாக்குவதில்லை. எங்களின் தோலிலிருந்து அந்த இசையை, எங்களின் நரம்புகளிலிருந்து அந்த இசையை, எங்களின் உயிர்க்காற்றிலிருந்து அந்த இசையை உண்டு பண்ணுகிறோம்.
            மகத்தான இசையும், பாடலும், ஆடலும் எங்கள் வாழ்வின் அங்கமாய் இருந்து எங்களை மாற்றுகின்றன. எங்களிடையே சிறு சண்டை கூட கிடையாது. சிறு மனஸ்தாபங்கள் கூட கிடையாது. நாங்கள் எதற்கும் போட்டிப் போடுவது கிடையாது. எந்த மனச்சுமையையும் நாங்கள் ஏற்றிக் கொள்வது கிடையாது. நாங்கள் இலேசானவர்கள். நாங்கள் மென்மையானவர்கள். எந்த நேரத்திலும் ஆண் - பெண் மாற்றம் நிகழலாம் என்பதால் மாறுவதே - மாற்றமே எதுவும் நிரந்தரமற்றதுதாம்  மானிட வாழ்க்கை என்பதைப் புரிந்து கொண்டவர்கள் நாங்கள்.
            எங்கள் சமூகத்தில் தாலியறுப்பு இல்லை. சதி என்றும் உடன்கட்டை என்றும் முன்னர் உங்கள் சமூகத்தில் சிலவற்றைக் கேள்விப்படுகிறேன். அப்படி எதுவும் எங்கள் சமூகத்தில் நான் கேள்விப்பட்ட வரை இருந்ததில்லை. ஈவ் டீசிங் என்றும் ஆடம் டீசிங் என்று சொல்கிறீர்களே. அந்தப் பதங்கள் எங்கள் சமூகம் கேள்விப்படாதது. குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் பாலியல் வன்புணர்ச்சி செய்வதாக உங்கள் சமூகத்தைப் பற்றிக் கேள்விப்படுகிறேன். அதென்ன வன்மமோ, வக்கிரமோ கேள்விப்படுவதற்கே பயங்கரமாக இருக்கிறது.
            உங்கள் சமூகத்தைப் பற்றிக் கேள்விப்பட பட நான் எவ்வளவு பாதுகாப்பான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் சமூகத்தின் மகாகவிஞன் மாணிக்கம் மூலமாக அறிந்து கொண்டதை வைத்து நான் என் சமூகத்தையும், உங்கள் சமூகத்தையும் ஒப்பிட்டுப் பேசுகிறேன். மற்றபடி உங்கள் சமூகத்தை மட்டம் தட்ட வேண்டும் என்பது என் நோக்கமில்லை. ஆனால் பாருங்கள் மட்டும் தட்டக்கூடிய வகையில் உங்கள் சமூகம் மிக மோசமாக இருக்கிறது. அதை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.
            உங்கள் சமூகத்தின் விபச்சாரத்தைப் பற்றி கேள்விப்படுகையில் பணத்திற்காக எதையும் செய்ய வைக்கும் உங்கள் அசிங்கம் என் மனதில் அருவருப்பாய் தொண்டைக்குழியில் நின்று எதையும் உண்ண விடாமல் செய்கிறது. பணத்தை வைத்துக் கொண்டு நீங்கள் உருவாக்கிய விபச்சாரம் என்ற தொழில்தான் உங்கள் ஆதித் தொழிலாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் வேறொன்றை ஆதித்தொழில் என்று சொல்லி வரலாற்றைக் களங்கம் செய்கிறீர்கள். செய்வதையெல்லாம் செய்து விட்டு ஒழுக்கசீலர்களாக உங்களை நீங்கள் காட்டிக் கொள்வதை நினைக்கும் போது சிரிப்பதா? அழுவதா? என்பது புரியாமல் திகைத்து நிற்கிறேன்.
            ஒரு பெண்ணை எத்தனை பேர்தான் கண்களால் கண்டு கண்டு கற்பழிப்பீர்களோ? பின் உடல்ரீதியாக சித்திரவதைச் செய்வீர்களோ? பெண்ணுடலின் மோகத்தில் சிக்கிக் கிடக்கும் ஒரு சமூகத்தை நான் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்..." இப்படியாக எந்த இடத்திலும் நிறுத்தாமல் பேசிக் கொண்டே செல்கிறார் சந்தர்பாய்.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...