21 Dec 2019

23.1



            மன்மத்தனூரின் மகாகவி சந்தர்பாய். மணமங்கலத்தின் மகாகவி மாணிக்கம் ஐயா. இரண்டு மகாகவிகளும் சந்திக்கக் காரணமாக இருந்த இளநீரை இந்த நேரத்தில் வாழ்த்துவோமாக! அவர்கள் எப்படிச் சந்தித்திருப்பார்கள்? எப்படி ஒரு மகாகவியால் இன்னொரு மகாகவி ஈர்க்கப்படுகிறார் என்பதெல்லாம் சுவாரசியமான அத்தியாயங்கள். அதை நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம்.

            மகாகவிகளுக்கு உலகம் சுற்றும் இயல்பூக்கமானது இயல்பாகவே இயற்கையாகவே இருக்கும். அந்த இயல்பூக்கத்தின்படி ஒரு மகாகவியோடு இன்னொரு மகாகவி இணைவதும், சந்திப்பதும், புதுப்புது கூட்டங்களில் கலந்து கொள்ள விழைவதும் பிரபஞ்ச நியதியாகும். அந்த நியதியின்படியும், இயல்பூக்கத்தின் படியும் மாணிக்கம் ஐயாவோடு கிளம்பிய சந்தர்பாய் இன்று வந்து நிற்கும் இடம் அகல் இலக்கியக் கூடல்.
            எழுந்து நின்ற சந்தர்பாய் விகடுவைப் பார்த்து, "பழம் அது பலமும் கூட!" என்று சொன்ன இடம் நெகிழ்ச்சியானது. கனிவது என்பதில் இருக்கிறது மனிதம். உலகம் கனிய உள்ளங்கள் கனிய வேண்டும். காய் அன்றோ கனிகிறது. கசந்துதாம் கனியும் மனிதம். அவசரம் கூடாது ஐயன்மீரே! உமது பேச்சுச் சிறப்பு. என்றாலும் ஓர் அவசரம் காணப்படுகிறது உமது பேச்சில். இன்னும் கூர்ந்து அவதானித்துப் பேச வேண்டும். என்றாலும் குறையொன்றுமில்லை. உமது பார்வை புதிது. சிந்தனைப் புதிது. வாழ்த்துகிறேன் உன்னை!" என்கிறார்.
            அதைத் தொடர்ந்து, "தொடர்ந்து பேசுவதற்கான நிகழ்ச்சி நிரல் உங்களிடம் இருக்கும். இடையில் குறுக்கிட்டுப் பேசியதற்குப் பொறுத்துக் கொள்ள வேண்டும்." என்கிறார் சந்தர்பாய்.
            "நீங்கள் விருப்பப்பட்டால் இப்போதிலிருந்தே பேசலாம்! திட்டமில்லாத ஒரு திட்டம்தான் நம்முடைய திட்டம். நாங்கள் உங்கள் பேச்சை ஆவலோடு எதிர்பார்க்கிறோம் என்றே சொல்ல வேண்டும்." என்கிறான் விகடு.
            "தாங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்களே?" என்கிறார் சந்தர்பாய்.
            "எல்லாம் நேற்றே திட்டமிட்டவை. இந்தக் கணத்தில் எதுவும் திட்டமிடப்படவில்லை. நீங்கள் பேசுவது அந்த கணத்தில் பேசப்படுவது போலத் தோன்றுகிறது. ஏதோ ஒரு கணத்தில் தயாரித்ததை இந்தக் கணத்தில் பேசுவதை விட அந்தந்த கணத்தில் பேசுவது அழகானது மற்றும் ரம்மியமானது." என்கிறான் விகடு.
            சந்தர்பாய் பேசத் தொடங்குகிறார்.
            "நான் பேசுவது புதிர் போல இருக்கலாம். எங்கள் வாழ்க்கை அதுவே. உங்களது வாழ்க்கை எங்களுக்குப் புதிராக இருக்கலாம். உங்கள் வாழ்க்கை அதுவே. இந்த இரண்டையும் தொடர்புபடுத்திப் பார்த்தால் உலகில் எந்த வாழ்க்கையும் புதிர் அல்லது புதிரில்லை என்பதுதாம். உங்களுக்குத் தெரியாத வாழ்க்கை புதிரைப் போல தோற்றம் அளிக்கிறது. உங்களுக்கு அறிந்த வாழ்க்கை சுவாரசியம் இழந்து புதிர்த்தன்மையிலிருந்து விடுபட்டு விடுகிறது...
*****


No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...