25 Dec 2019

24.1



அதாகப்பட்டது, தமிழய்யா மேலும் தொடர்கிறார்,
            "... ஆதிமனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்கிறார்கள்.

            அப்படியானால் இப்போதுள்ள குரங்குகள் ஏன் மனிதராகவில்லை என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வது?
            குரங்கிலிருந்து மனிதன் தோன்றியது என்பது ஒரே காலத்தில் தோன்றிட வாய்ப்பில்லை. இருக்கின்ற உயிர்களில் மனிதனை ஒத்த தோற்றம் குரங்கிற்கு இருக்கிறது. மனிதத் தோற்றம் குரங்கிலிருந்து துவங்குவதற்கு அது ஒரு காரணமாக இருக்கலாம்.
            ஆதி மனிதரிலே பாகுபாடுகள் இருக்கின்றன, பழைய கற்கால மனிதன், புதிய கற்கால மனிதன் என்று. வரலாற்றைச் சுருக்கி ஒற்றை வரியில் படித்து விட முடியாது. அதன் ஒவ்வொரு வரியும் பக்கம் பக்கமாக நீளும் விளக்கங்களைக் கொண்டது வரலாறு.
            வரலாறு காலந்தோறும் எழுதி எழுதி எழுதியவற்றுள் மேலும் நுட்பமாய் எழுதி எழுதி செம்மைப்படுத்தப்படுகிறது. வரலாற்றுக்கு ஒரு ஆரம்பமோ, முடிவோ இருக்கப் போவதில்லை. அது இரண்டு பக்கமும் முடிவில்லாமல் நீளும் ஒரு எண்கோட்டைப் போன்றது. இந்தப் பக்கத்துக்கும் அதன் எல்லை முடிவிலியாகவும், அந்தப் பக்கத்துக்கும் அதன் முடிவு முடிவிலியாக நீள்கிறது. குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதற்கு இடைப்பட்ட கால அளவு நம்மால் கணிக்க முடியாதது. அவ்வளவு கால அளவுக்குமான வரலாற்றை நாம் கடந்த காலத்தில் சென்று எழுத இன்னும் நம் அறிவு செல்ல வேண்டிய, பயணிக்க வேண்டிய தூரம் அதிகமாக இருக்கிறது.
            மனிதர்களின் உணர்வுகளை எடுத்துக் கொண்டால் அது இன்னும் சிக்கலான வரலாற்றை நோக்கிச் செல்லும். அதை உளவியல் என்று ஒரு சொல் உருவாக்கித் தனித்துறையாக நீங்கள் பார்க்கலாம்.
            மனிதருக்குப் பசி என்பதும், தாகம் என்பதும் ஒரு தூண்டல். உயிர்கள் உண்பதை, குடிப்பதைப் பார்த்து மனிதர்களுக்கு ஒரு தெளிவு ஏற்பட்டிருக்கலாம். பார்த்துக் கற்கும் அறிவு வளர்ச்சியும், முளை மேம்பாடும் மனிதருக்கு வாய்த்திருக்கிறது. அவர்கள் அதைக் கொண்டு மேம்பட்ட பசி, தாகம் தீர்க்கும் முறைகளை உருவாக்கியிருக்கிறார்கள்.
            இன்று மனிதருக்கு வீடு இருக்கிறது. மனிதரின் தொடக்கக் கால வீடு காடும் மலையும். காடே, மலையே மனிதரின் வீடு. ஆதி மனித வாழ்வு காட்டிலிருந்தும், மலையிலிருந்தும் தொடங்குகிறது. காட்டில், மலையில் பல வித பாடங்களைக் கற்றிருக்கிறார்கள் நம் ஆதி மனிதர்கள்.
            காடும், மலையும் ஆதி மனிதருக்குத் தாகம் தீர்க்க ஆறுகள், அருவிகள், சிற்றோடைகள் எல்லாவற்றையும் தந்திருக்கிறது. பசியைப் போக்கிக் கொள்ள காய்கள், கனிகள், மிருக மாமிசம் எல்லாவற்றையும் தந்திருக்கிறது.
            வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும்
            மந்தி சிந்தும் கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
என்ற திரிகூடராசப்ப கவிராயரின் வரிகளை நீங்கள் இந்த இடத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும். ஆதிமனிதர் குரங்கிலிருந்து தோன்றினார் என்றால், ஆதி மனிதருக்கு காடே கனிகள் தந்து பசி போக்கியது என்றால் திரிகூட ராசப்ப கவிரயார் அதையும் தாண்டி காதலைத் தந்ததும் காடு என்பதை அவ்வரிகளில் கூறுவதைக் கவனிக்க வேண்டும். காட்டு வாழ்வு கவினுறு வாழ்வாக இருந்திருக்கிறது. காட்டு வாழ்வில் சுகத்தின் ஆதி மனிதர் அமிழ்ந்து கிடந்திருந்த அப்போது, அப்படியே உடுத்திக் கொள்ள இழை, தழை, சருகுகளைத் தந்திருக்கிறது காடு. தாகமும், பசியும் தீர்ந்த இடம் மனிதருக்கு நிரந்தர இடமாக ஆகியிருக்கிறது.
            காட்டை அழித்த மனிதர் மென்மேலும் முன்னேறியிருக்கிறார். மலையில் வாழ்ந்து காட்டை அழிக்காத மனிதர் பழங்குடியினராகி இருக்கிறார். காட்டை அழித்தவர் ஆளும் அதிகாரத் தன்மையைப் பெற்றதும், காட்டை காக்க முனைந்தவர் அடங்கிப் போகும் அடிமைத் தன்மையைப் பெற்றதும் ஒரு சமூக வரலாற்று முரண்.
            காடும் மலையும் ஆதிகாலத்து வீடுகள் மனிதருக்கு. அங்கே கிடைத்த கற்களைக் கொண்டு பழைய கற்கால கருவிகளை அவர்கள் உருவாக்கியிருப்பார். அதைச் செம்மைப்படுத்திப் பளபளப்பாக்கிப் புதிய கற்கால கருவிகளை நோக்கி மனிதர் முன்னேறியிருப்பார். மெல்ல மெல்ல பழைய புலன் காட்சி செம்மையாகி உலோக கருவிகளை நோக்கி மனிதர்கள் முன்னேறியிருக்க வேண்டும்..."
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...