25 Dec 2019

காந்தியாரு போராட்டம்



செய்யு - 309

            எதெ பண்ண நெனைச்சாலும் அதுக்கு ஒரு தடை குடும்பத்துலேந்து வருதேன்னு நெனச்சி ரொம்பவே எரிச்சலாகுறான் விகடு. புரோக்கிங் ஆபீஸாலத்தாம் நாடே கெடுதுங்ற மாரில்ல பேசுறாங்க! குடியாலக் கூட எத்தனைக் குடும்பங்க கெடுது. அதுக்காக நாட்டுல சாராயக் கடையத் தெறக்கிறத யாரு நிப்பாட்டுறாம்? குடிக்கிறவம்தாங் எங்க குறையுறாம்? அதது நடந்துகிட்டேத்தாம் இருக்கு. கெட்டுப் போறது, குட்டிச் சுவராவுதுன்னு பாத்தா எல்லாத்திலயும்தாம் இருக்கு. அதெல்லாம் பாத்தா நாட்டுல பிழைக்க முடியுமா? சம்பாதிக்க முடியுமா? இப்பிடில்லாம் வெத வெதமா அவன் யோசிக்கிறான்.
            "ஏதோ வாத்தியாரு வேல கெடைச்சிட்டாதல அதெ கெளரவமா பாக்குறீங்க! இல்லேன்னா கெடைக்கிற வேலையத்தான பாக்க வேண்டிருக்கும்"னு இன்னும் கூட அப்பங்காரர்கிட்ட கேட்டிருக்கணும்னு தோணுது. வேலய கொடுத்தா பாக்க மாட்டேன்னு சொல்றதுக்கா படிச்சிருக்கிறேம்? அந்த வேல நேரா நேரத்துல கெடைக்காததாலத்தான கெடைக்கிற வேலைய பிடிச்சிக்கிட்டு அதுல முன்னேற முடியுமான்னு பாக்க வேண்டிக் கெடக்கு. நாட்டுல வாத்தியாருக்கும், கவர்மெண்டு வேல பாக்குறவங்களுக்கும்தாம் வேலைக்குப் பெறவும் பென்சன் கொடுக்குறாங்க. மித்த வேலைக்காரங்களுக்கு என்னத்த கொடுக்குறாங்க? கடெசி வரைக்கும் ஒழைச்சித்தாம் வாழ்ந்தாவணும். இல்லாட்டி அதுக்கு கவர்மெண்டு வேல கெடைக்கணும்னு தலைவிதி இருந்தாவணும். அது இல்லாட்டிப் போனா இது மாரி நல்ல சந்தர்ப்பம் அமையுறப்போ அதெப் பிடிச்சிக்கிட்டு சம்பாதிச்சு கெடைக்கிறப்ப‍ சேத்து வெச்சிக்கிட்டாத்தாம்.
            நல்ல சந்தர்ப்பங்கள் எப்ப பார்த்தாலும் என்னைக் கெட்டியா பிடிச்சுக்கோன்னு அடிக்கடி முன்னாடி வந்து நிக்குமா? இப்படி கெடைக்கிறப்பவே பிடிச்சிக்கிட்டாத்தாம் உண்டு. அதுல ஆயிரத்தெட்டு தர்ம ஞாயங்களப் பாத்துட்டு இருந்து, அந்தச் சந்தர்ப்பத்த நாம்ம பயன்படுத்திக்காம போனாலும் எவனாச்சிம் ஒருத்தன் அதெ பயன்படுத்திட்டுப் போயிட்டே இருப்பாம். இப்படியும் யோசனெ ஓடுது அவனுக்கு. நிச்சயமா ஆபீஸ் போட்டா யாரயும் கெடுக்குற மாரில்லாம் நடந்துக்க மாட்டேம். நம்ம ஆபீஸால நாலு பேரு நல்லா இருப்பாங்க. இன்னும் சொல்லப் போனா மித்த ஆபீஸ்ல போயி காச வுட்டுப்புட்டு நிக்குறவங்க நம்ம ஆபீஸ்ல நாலு காசு நிச்சயம் பாப்பாங்க. அப்படிப் பாத்தா கூட கெட்டுப் போற நாலு குடும்பமாவது உருப்படியாவும்.
            நிச்சயமா நம்ம ஆபீஸ் போட்டா ஒருத்தரு கூட பைசா காசிய வுடாத அளவுக்குச் செஞ்சு கொடுக்க நம்மால முடியும். அதோட சூட்சமம் புரிஞ்சி நாளாவுது. அதுக்கான சந்தர்ப்பம்தாம் அப்போ அமையல. இப்போ அமைஞ்சிருக்கு. இதெ விட்டுட முடியாதுன்னு பல திக்குச் தெசையில அப்படியும் இப்படியுமா அல்லாடிக்கிட்டே யோசிச்சுக்கிட்டே ஒரே புடியா தம் புடியில யோசிச்சுக்கிட்டுப் போய்ட்டே இருக்கான் விகடு. அவனால மனசுக்குள்ள எழும்புற எண்ணங்கள் எதையும் நிறுத்த முடியல. அது பாட்டுக்கு எழுந்துகிட்டே இருக்கு. அவன் நிறுத்துணும்னு நெனைச்சாலும் நிறுத்த முடியல. அது பாட்டுக்கு ஓட்டை வுழுந்த பானையில தண்ணிய ஊத்த ஊத்த ஊத்திக்கிட்டு இருக்குமே அப்படி ஊத்திக்கிட்டு இருக்கு.
            அந்த யோசனை பெரிசாயிப் பெரிசாயி ஒரு முடிவுக்கு வர முடியாம, அப்பங்காரரு இப்படிப் பேசுறார்னு அன்னிக்கு ராத்திரி சாப்புடாமலே படுத்தாம் விகடு. அவனோட அம்மாக்காரி வெங்கு எவ்வளவோ கெஞ்சி அழுதுப் பாத்தது. அவன் கொஞ்சம் கூட அசைஞ்சுக் கொடுக்கல. கல்நெஞ்சுக்காரனாட்டம் அப்படியே சாப்புடாமலே கெடந்துட்டான். இவன் இப்படிக் கிடக்குறதப் பாத்துட்டு வெங்குவும் சாப்புடல. செய்யுவும் சாப்புடல. சுப்பு வாத்தியாரு கொஞ்சம் சோத்தைப் போட்டு தண்ணிய ஊத்தி உப்பைப் போட்டு அவரு மட்டுந்தாம் சாப்புட்டாரு. காலையில படுத்து எழும்புனா நெலமை சரியாயிடும்னு அவரு நெனைச்சிக்கிட்டாரு.
            காலையில எழுந்திரிச்ச விகடு அவ்வேம் பாட்டுக்கு குளிச்சான் முடிச்சான். வழக்கத்துக்கு மாறா இன்னுஞ் சீக்கிரமா அவ்வேம் பாட்டுக்குச் சாப்புடாம ஆபீஸூக்குக் கெளம்புறதுன்னு கெளம்பத் தயாராயிட்டாம். வெங்கு ஓடியாந்து அவனெ தடுத்துப் பாக்குது. "எப்பாடி சித்தப் பொருடா! ஒரு வாயிச் சாப்புட்டுப் போவலாம். சாப்புடாமா  போவாதடா! ராத்திரியும் சாப்புடல. ராப்பட்டினி கெடக்கக் கூடாதும்பாங்கடா! ராத்திரியும் சாப்புடாம இப்பயும் சாப்புடாம கெடந்தா உடம்பு வெலவெலத்துப் போயிடுமடா! வேலயப் பாக்க முடியா. எங்காச்சிம் மயக்கம் அடிச்சி வுழுந்தேன்னா அசிங்கமாப் போயிடுமடா! ஊருல நாலு வெதமா பேசித் தொலைவாங்கடா!"ங்குது அது.
            விகடு இவ்வேன் பிடிச்சாப் பிடிவாதத்துல நிக்குறாம். செய்யு கையப் பிடிச்சி அவனெ போக வுடாம தடுத்துப் பாக்குறா. இவ்வேன் கைய உதறிட்டுக் கெளம்புனவன்தாம். அவ்வேம் பாட்டுக்கு ஓடிப் போயி சைக்கிள எடுத்துக்கிட்டு கெளப்பிக்கிட்டு தெரு திரும்பி போய்ட்டே இருக்காம். இந்தக் குடும்பத்துல இப்டி ஒரு பெரச்சன. பிரச்சனைன்னா ஆளாளுக்குச் சாப்புடாம கெளம்பிப் போயி காந்தியாரு வழியில உண்ணாவிரதப் போராட்டம் பண்றது.
            "இவரு ஒருத்தரு. அவ்வேம் பாட்டுக்கு எதாச்சியும் பண்ணிகிட்டுப் போவட்டுமே! என்னவோ திருவாரூ மாவட்டம் புதுசா பிரிச்சிக்கிறதால சீக்கிரமே வேல கெடைக்குமுன்னு அவனெ கொண்டு போயி வாத்தியாரு டிரெய்னிங்கச் சேத்து வுட்டீங்க. அவ்வேம் வேல கெடைக்காம, நீஞ்ஞ படுற கஷ்டத்தப் பாத்துத்தானே வேலைக்கிக் கெளம்பினாம். அவ்வேம் பாட்டுக்கு புள்ள யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்காம அடைஞ்சிக் கெடந்து படிச்சிட்டுக் கெடப்பாம். அப்டியே வுட்டுருந்தா அவ்வேம் பாட்டுக்குக் கெடந்திருப்பாம். ஏம் புள்ளே வூட்டுல ச்சும்மா உக்காந்திருந்தாலும் நாம்ம ஒழைச்சிப் போடுவேம். அவனெ கெளப்பி வுட்டு அவ்வேம் போன அன்னிக்கே எட்டாம் நெம்பரு பஸ்ஸூ தலைகீழா கவுந்துப் போயி, அதெயும் பாக்காமல்ல அந்தப் பயெ அவனா போயி அலைஞ்சித் திரிஞ்சி அன்னிக்கே வேலயத் தேடிட்டு வந்து நின்னாம். அவ்வேம் என்னத்தாம்ங்க பண்ணுவாம்? அவனுக்குத் தெரிஞ்சத, அவனுக்குக் கெடைச்சத செய்யுறாம். இத்தனெ நாளும் ஏம்யா ஒம்ம கூட பேசாமத்தான இருந்தாம். என்னவோ ஆபீசு ஆரம்பிக்கப் போறப்ப ஒம்மகிட்ட சொல்லாம பண்ணக் கூடாதுன்னு மருவாதி பாத்துத்தான சொல்றாம். என்ன எளவோ ஆரம்பிச்சிட்டுப் போன்னு ஒரு வார்த்த சொன்னா கொறைஞ்சா போயிடுவீரு? ஊரு ஒலகத்துல பண்ணாததையா எம் புள்ளே பண்றாம்? அதாங் கவர்மெண்டே பண்ணச் சொல்லுதுன்னு சொல்றாம்ல! பெறவு ன்னா? ரண்டு வேளயும் சாப்புடாம சைக்கிள மிதிச்சிட்டுப் போனா எங்கப் போயி எங்க மயக்கம் அடிச்சி வுழுவப் போறானோ? ஒண்ணும் புரிய மாட்டேங்குது. மத்தியானம் வேற சாப்புட்டுத் தொலைவானோ? பட்டினியா கெடந்து தொலைவானா? நெனைக்க நெனைக்க நம்மட ஈரக்கொலைத்தாம் நடுங்கு. நீஞ்ஞ ஆம்பள. நாலு எடுத்துக்கப் போவீங்கோ, பேசுவீங்‍கோ. ஒஞ்ஞ மனசு மாறிப் போயிடும். நாம்ம பொம்பள. வூட்டுலயே கெடந்து நொம்பலப் பட வேண்டித்தாம். அதெ நெனைப்பா கெடந்து நெஞ்சழிஞ்சுக் கெடக்க வேண்டித்தாம்.  அவ்வேம் அப்பிடி இருக்காம். நீரு இப்படி இருக்கீரு? நாம்ம என்னத்தாம் பாவம் பண்ணோமோ? ரண்டுப் பக்கமும் கெடந்து லோலு பட!" அப்பிடிங்கிது வெங்கு.

            சுப்பு வாத்தியாரு பார்த்தாரு. இதென்னடா புதுக் கொடுமையா இருக்குன்னு நேரா டிவி‍எஸ்‍ஸைக் கெளப்பிக்கிட்டு விநாயகம் வாத்தியாரு வூட்டுக்குப் போயிட்டாரு. இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ல சுப்பு வாத்தியாரு விநாயகம் வாத்தியாருகிட்டத்தாம் பேசுவாரு. அவருகிட்ட யோஜனெ கலந்துகிட்டுத்தாம் எதாச்சிம் செய்வாரு. அங்கப் போயி பேசிப்புட்டு பள்ளியோடம் கெளம்புற நேரத்துக்கு வந்தவரு அவரும் சாப்புடாமலே பள்ளியோடம் கெளம்பிப் போனவருத்தாம்.
            இங்க ஆபீஸ் கெளம்பிப்‍ போன விகடு மத்தியானமும் சாப்புடல. வூட்டு நெலமையச் சொல்லி சாப்புட முடியாதுன்னுட்டான். லெனின், கோபி, சுபா எல்லாரும் எவ்வளவோ சொல்லிப் பாக்குறாங்க. அவன் முடியாதுங்றதுல ரொம்ப உறுதியா நின்னுப்புட்டான். டிரேடிங் நேரத்துல இதெப் பேசிக்கிட்டு சரி பண்ண முடியாதுன்னு யாரும் ஒண்ணும் சொல்லல. டிரேட் மூணரைக்கு முடிஞ்சி போஸ்ட் மார்கெட் டிரேட் நாலு மணிக்கு முடிஞ்சி பிற்பாடுத்தாம் கிளையெண்ட்ஸையெல்லாம் கெளப்பி வுட்டுப்புட்டு பேச ஆரம்பிக்கிறாங்க.
            வூட்டுல என்ன நடந்துச்சுங்குறத மறுக்கா சுருக்கமா சொல்லிப்புட்டு வாயை மூடிட்டு உக்காந்துட்டான் விகடு. பெறவு ஒவ்வொருத்தரா பேச ஆரம்பிக்கிறாங்க.
            "இதுக்கு மேல இதெ வூட்டுல பேச வாணாம். வேணும்னா நம்ம மூணு பேர்லயும் பிரான்சைஸ் எடுத்துப் பண்ணுவேம். நாம்ம மூணு பேருமே இஞ்ஞ வேல பாப்பேம். ஒரு ஆள டிரெய்னிங் கொடுத்து அஞ்ஞ போட்டுப்பேம். நாம்ம வேணும்னா அப்பப்போ போயிப் பாத்துப்பேம்." அப்பிடிங்கிறாரு லெனின்.
            "இத்து ஒரு மேட்டரே யில்ல. இந்தாரு வெகடு! எம் பேர்ல நீயி பிரான்சைஸ் எடுக்கச் சொல்லு. இஞ்ஞ இவரு லெனின்கிட்ட வேல பாத்து நமக்கு அலுத்துப் போயிடுச்சு. நாம்ம அஞ்ஞப் போயி வேல பாத்துக்கிறேம். யில்ல ஒம் பேர்லயே பிரான்சைஸ் இருக்கட்டும். நாம்ம அஞ்ஞப் போயிடுறேம். இந்தச் சுபா மூஞ்சியப் பாக்கவே புடிக்கல. இத்து மூஞ்சிய பாத்துட்டுல்லாம் இனுமே நம்மால வேல பாக்க முடியாது. அஞ்ஞயாவது போயி நாம்மத்தாம் மேனேஜரு, நாம்மத்தாம் ஆப்பரேட்டருன்னு ஒன்மேன் ஆர்மின்னு இருந்துக்கிறேம். சம்பளத்த நீயா எதாச்சிம் பாத்து செஞ்சி வுடு." அப்பிடிங்கிறாரு கோபி.
            "இந்தா கோபி! இதாம் ஜோக்கு அடிக்கிற நேரமா? நீயி அடிக்கிற ‍கே்கு கன்ட்ராவியா இருக்கு. இந்தாருப்பா வெகடு! இத்து சாதாரண மேட்டரு. நீயி தேவையில்லாம போட்டுக் கொழப்பிக்கிறே. நீயி பாட்டுக்குப் பிரான்சைஸ் எடுத்துட்டு அஞ்ஞப் போயிடு. கேட்டாக்க ஆபீஸ்ல பிராஞ்ச் ஆரம்பிச்சி அஞ்ஞ ஒன்னய டிரான்ஸ்பர் பண்ணிருக்காங்கன்னு சொல்லு. நீயி ஏம் போய் தேவையில்லாம வூட்டுல ஒளறி வெச்சிருக்கே! ஒஞ்ஞ வூட்டப் பத்தி ஒன்னய வுட நமக்கு நல்லா தெரியும். நீயி வூட்டுல என்ன சொல்லப் போறேன்னு சொல்லிருந்தீன்னா அதெ எப்டிச் சொல்லணும்னு நாம்ம சொல்லிருப்பேம்ல."ங்குது சுபா.
            இப்போ விகடு எல்லாரும் இவ்வளவு பேசியும் பேசாம உக்காந்திருக்காம்.
            "எதாச்சிம் பேசணும். தப்பா இருந்தாலும் பரவாயில்ல. எல்லா நேரத்துலயும் ஒரு மனுஷனால கரெக்டால்லாம் பேசிட்டு இருக்க முடியா. தப்புத் தப்புத்தாம் பேசி சரியான பேச்சுக்கு வர முடியும். இப்டி பேசாம இருந்தீன்னா அத்து ஒன்னய நீயி தேவையில்லாம டிஸ்டர்ப் பண்ணிக்கிறதாத்தாம் ஆவும். என்னவோ ஒலகத்துலயே நடக்கக் கூடாதது நடந்துட்டது போலல்ல நீயி நடந்துக்குறே. ஒரு பிசினஸ் பண்ண ஆரம்பிச்சா இப்பிடித்தாம் ஆயிரத்தெட்டு பிரச்சனைக வரும். அதையெல்லாம் சமாளிச்சாத்தாம் பெரிய ஆளா முடியும். நீயி வேலைன்னு வந்து நின்ன மொத நாளே வேலையப் போட்டுக் கொடுத்திருக்கக் கூடாது. ஒரு மாசத்துக்கு அலைய வுட்டுக் கொடுத்திருந்தா பிரச்சனைன்னா என்னான்னு ஒனக்குப் புரிஞ்சிருக்கும்."ங்றாரு லெனின்.
            "அதுக்கில்லங்கய்யா! எதெச் செய்யுறதாச் சொன்னாலும் அதுக்கு ஒரு எதிர்ப்புன்னா நம்மள ன்னா பண்ணச் சொல்றீங்க? வெளியிலத்தாம் ஆயிரம் எதிர்ப்பு, பிரச்சனைக இருக்கும். வூட்டுல எல்லாத்துக்கும் நம்ம மேல சப்போர்ட்டால்ல இருக்கணும். நமக்கு அப்டியே நேர்மாறல்ல இருக்குது. வெளியில சப்போர்ட்டு. வூட்டுக்குள்ள எதிர்ப்புன்னு. அதெத்தாம் தாங்க முடியல. சத்தியமா சொல்றேம் இந்தச் சந்தர்ப்பத்த வுட்டா மறுக்கா இப்டி ஒரு வாய்ப்புல்லாம் நமக்கு அமையாது. அதுவுஞ் பைசா காசி செலவில்லாம் புரோக்கிங் ஆபீஸ் போட முடியுமா? ஏத்தோ நம்ம நேரம்னுத்தாம் நெனைச்சிக்கிறேம்." இதெச் சொல்ல சொல்ல விகடுவின் கண்களிலிருந்து கண்ணீர் திரண்டு உருண்டு வருது.
            "ஹே லெனின்! சித்தே சும்மா இரு! ரொம்ப டிஸ்டர்ப் ஆகியிருக்காப்புல. கொஞ்சம் வெகடுவோட நெலமையில இருந்து இதெப் பாரு. ‍பெரிய பருப்பு மாரில்லாம் ‍மெசேஜ் சொல்லிட்டு இருக்காதேப்பா!"ங்குது சுபா.
            "யாரு நாம்ம பருப்பு மாரி ‍மெசேஜ் சொல்லிட்டு இருக்கேமா? நாம்லாம் பட்ட கஷ்டம் ஒனக்குத் தெரியுமா? இன்னிக்கு ஏ.சி.யில உக்காந்து வேல பாத்துட்டு இருக்கேம்னா இப்படியேத்தாம் இந்த வேலைக்கு வந்தேம்னு ஒனக்குத் தெரியுமா? உண்மையைச் சொல்லணும்னா நீயி, கோபி, வெகடு எல்லாத்துக்கும் மொத வேலையே ஏ.சி.யில பாக்குற மாரி அமைஞ்சுப் போச்சு. ஏந் நெலமையெல்லாம் தெர்யுமா ஒனக்கு?"ங்றாரு லெனின்.
            "யோவ் லெனின்! இந்த நேரத்துல ஒஞ் சோகக் கதெய அவுத்து வுட்டு ஆபீஸையே ஐ டிராப்ஸ்ல மெதக்க வுட்டுடாதய்யா!"ங்றாரு கோபி.
            "ச்சும்மா நான்சென்ஸ் மாரி பேசாத கோபி! கஷ்டங்றது வேற! இதல்லாம் ஒரு கஷ்டமே இல்ல. அதெ சொல்ல வர்றேன்!"ங்றாரு லெனின்.
            "அப்படி பேசாதப்பா லெனின்! கஷ்டங்றது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாரி. அததெ அவங்கவங்க அனுபவிச்சுப் பாத்தாத்தாம் தெரியும். நீயி பேசாம இருப்பா!"ங்குது சுபா.
            "எங் கதெயெச் சொல்லவா! பெறவு தெரியும் கஷ்டம்னா ன்னான்னு?"ங்றாரு லெனின்.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...