24 Dec 2019

போடாதடா புரோக்கிங் ஆபிஸ!



செய்யு - 308

            சுப்பு வாத்தியார் உச்சபட்ச கடுப்புல எகிறி குதிக்க  ஆரம்பிச்சிட்டாரு. நல்ல வெதமா சம்பாதிக்கிறதுக்கு அதெல்லாம் சரியான மொறை இல்லன்னு சம்மதிக்க முடியாங்றாரு. எதுக்குங்றீங்களா? விகடு புரோக்கிங் ஆபீஸ் போடுறதுக்குத்தாம். அவன் புரோக்கிங் ஆபீஸ் போடப் போற சங்கதியச் சொன்னதும் வூட்டுல ஒரு பிரளயமே கெளம்புறாப்புல இருக்கு.
            "ஏம்ப்பா! இத்தனை நாளு சம்பாதிச்ச காசுலத்தான வூட்டு வேலைகளப் பாத்திருக்கோம். கடனஉடன அடைச்சிருக்கோம். இப்போ சம்பாதிக்கப் போற காசு மட்டும் எப்படி நல்ல வெதமா இல்லாம போவுங்றேன்?"ன்னு இப்பத்தான் விகடு அவங்க அப்பங்காரர்கிட்ட ரொம்ப நாளுக்குப் பெறவு பேசுறான்.
            "அது வேற. இது வேற."ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "அதாங் எப்படி வேறேங்றேன்?"ங்றான் விகடு.
            "ஏலே! அப்பா சொன்னா கேளுடா! எதிருகேள்வி போடாத. ஒந் நல்லத்துக்குத்தாம் சொல்வாரு." அப்பிடிங்கிது வெங்கு.
            "நீயிச் சும்மா இரும்மா! எதுக்கெடுத்தாலும் ஒண்ணு கெடக்க ஒண்ணு பேசிக்கிட்டு!"ங்றான் விகடு.
            "இத்தனை நாளும் பேசாமத்தானடா கெடந்தீங்க! அப்டியே கெடந்து தொலைக்க வேண்டியதுதானடா! இப்போ ஏம்டா ரண்டு பேரும் பேசிக்கிட்டு வூட்ட ரெண்டு பண்றீங்க? ஏம் பிராணனைய அறுக்குறதுக்குன்னே ரண்டு பேரும் நின்னுகிட்டு இருக்கீங்கடா!"ங்குது வெங்கு.
            "யண்ணே ஆபீஸ் போடப் போவுதுன்னா வூட்டுல சந்தோஷப்படணும். நீஞ்ஞ என்னான்னா எதுக்கெடுத்தாலும் அதெ செய்யாதே, இதெ செய்யாதேன்னா அத்து என்னத்தாம் செய்யும்? அப்டிச் சொல்ற நீஞ்ஞலாது ஒரு வேலையை வாங்கிக் கொடுக்கணும். ஒங்களால முடியலல்ல. பேயாம இருக்கணும். அதுவா ஒரு வேலையத் தேடிகிட்டு அதுல முன்னேறப் பாக்குது. ஏம்ப்பா இப்டி எல்லாத்தையும் தடுக்கப் பாக்குறீங்க? யண்ணே நெனைச்சிருந்தா ஒங்ககிட்ட‍ கேக்காமா கூட ஆபீஸைப் போட்ருக்கலாம். அப்டியா செய்யுது யண்ணே? அத்து எல்லாத்திலயும் மொறையா நடந்துக்குது!" அப்பிடிங்குது செய்யு.
            "இந்தாருடி சின்ன குட்டி! ஒனக்கு ஒண்ணும் தெரியா. வெவரம் தெரியா வயசு. பேசாம கம்முன்னு கெட. பெரியவங்க விசயத்துல மூக்க நொழைக்காத. ஒம் வயசுக்கு ன்னாத்த பேசுணுமோ அதெப் பேசணும். பேயாம வேலயப் பாத்துட்டு அந்தாண்ட போ! வந்துட்டா பெரிய மனுஷியாட்டம்! ஒனக்கு ன்னாடி அனுபவம் இருக்கு? அப்பா சொன்னா கேட்டுக்கணும்! போட்டேன்னா ஒண்ணு வெச்சுக்க! ஓங்கி அடிச்சா ஏங்கி அழ முடியா பாத்துக்கோ"ங்குது வெங்கு.
            "வாத்திமார்கள்ல பணத்தெ வட்டிக்கு வுடுறவங்க இருக்காங்க. டியூசன் வெக்கிறவுங்க இருக்காங்க. அதெல்லாம் நாம்ம செய்யல. அதல்லாம் செய்யப்படாது. வட்டிக்கு வுட்டு வர்ற வவுத்தெரிச்சல காசெ வாங்கக் கூடாதுங்றதுக்கே அதெ செய்யல புரிஞ்சிக்கோ. வட்டிக்கு வுட்டு பணத்‍தெ சம்பாதிக்க தெம்பு இல்லாமலா போச்சு? தெம்பு இருந்தாலும் எதெ செய்யக் கூடாதோ அதெ செய்யக் கூடாது. நாம்மத்தாம் வட்டிக்கு வாங்கி பணத்தெ கொடுத்திருக்கோமே தவுர நாம்ம யார்கிட்டயும் வட்டிக்கு விட்டதில்ல. வட்டிப்பணத்த கொடுக்கறவேம் வவுறு எரிஞ்சிட்டுத்தாம் கொடுப்பாம். நாமளே அப்டித்தாம் கொடுக்குறேம். இதுல நாமளும் வட்டிக்கு வுட்டா நம்மகிட்ட வட்டிக் கட்டுறவனும் அப்படித்தானே வவுற எரிஞ்சிட்டுக் கொடுப்பாம்? அத்து நமக்கு எதுக்குன்னுத்தாம் அதெல்லாம் வாணாங்றது. இத்து எங்கப்பாங்காரு காலத்துலேந்து பண்ணிட்டு வர்றது. நீயுந் அதெத்தாம் பண்ணணும்!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "ச்சும்மா லூசு மாரி பேசாதீங்கப்பா! நாம்ம ஒண்ணும் வட்டிக்கும் வுடல. ஒண்ணுக்கும் வுடல. புரோக்கிங் ஆபீஸ் போடறதப் பத்தித்தாம் பேசுறேம்!"ங்றான் விகடு.
            "அடிச்சேன்ன பல்ல ஒடைச்சிப் புடுவேம்! சம்பாதிக்கிற திமிராடா ஒனக்கு? அப்பங்காரர லூசு அது இதுன்னு பேசுறே? அப்பஞ் சொன்னா மந்திரம்டா! அவரு சொல்றது வேதம்னு சொல்லுவாங்க! அவரு சொல்றதெ கேளு."ங்குது வெங்கு.
            சுப்பு வாத்தியாரு கோபப்படல. மவன் அவரை லூசுன்னு சொன்னதுல அவருக்கு எந்த வருத்தமும் இல்லாதது போல முகத்தை வெச்சிருக்காரு. அவரு முகத்துல எந்தச் சலனமும் இல்ல. முன்னையக் காட்டிலும் நிதானமா பேசுறாரு. "ஒந் வயசுக்குச் சம்பாதிக்கணும்னு நிக்குறது தப்பில்ல. வாலிபமான வயசுல சம்பாதிக்காம வேற வயசுல சம்பாதிக்க முடியா. நமக்குப் புரியாம இல்ல. சம்பாதிக்கிற காசு தலைமுறைக்கு நிக்கணும். வாரிசுங்க எந்தக் கொறையும் இல்லாம இருக்கணும். அதுக்கு காசிய நல்ல வெதமா சம்பாதிச்சாத்தாம் உண்டு. ஒழுங்கா சம்பாதிக்கிற காசியே ஒட்ட மாட்டேங்குது. இதுல மொறை கெட்டத்தனமால்லாம் சம்பாதிக்கக் கூடாது. கொறைச்சலா சம்பாதிச்சி வறுமையில இருக்கிறதால்ல தலைமுறை கெட்டுடாது. அதிகமா சம்பாதிக்கிறேன்னு கெட்ட வெதமா சம்பாதிச்சின்னா அத்து சந்ததிக்கு நல்லதில்ல. ஒன்னயப் பத்தி மட்டும் யோஜனெப் பண்ணிட்டுப் பேசப்படாது. ஒனக்குப் பின்னாடி வர்ற சந்ததியயும் பாக்கணும்! ஒன்னோட மட்டும் சந்ததிங்றது முடிஞ்சுப் போறதில்ல. புரிஞ்சுக்கோ!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.

            "நீஞ்ஞ நல்லதுதாம் சொல்றீங்கன்னா நமக்குப் புரியிறப்படி சொல்லுங்க. நீஞ்ஞ சொல்றது நமக்குச் சுத்தமாவே புரியல. நீஞ்ஞ பேசுறதுக்கும் நாம்ம ஆபீஸூ போடுறதுக்கும் எதாச்சிலும் சம்பந்தம் இருக்கா? ஏம்ப்பா இப்டி சம்பந்தம் சம்பந்தமில்லாம பேசுறீங்க? அந்த ஆபீஸ்ல வேல பாக்கலாம்! ஆனா அந்த ஆபீஸைப் போடப்படாதுன்னா ன்னா அர்த்தம்? நீஞ்ஞ பேசுறதெ கேக்க கேக்கறவனுக்கு மண்டைத்தாம் வெடிக்கும்."ங்றான் விகடு.
            "நீயி அந்த ஆபீஸ்ல வேல பாக்குறதும் நமக்குப் பிடிக்கல. நாம்மத்தாம் பார்த்தேமே. ஒரு ஆயி மண்ண வாரி எறைச்சி வாசாப்பு வுட்டத. வாசாப்புங்றது சந்ததியத் தாண்டி தொரத்தும். அது ரொம்ப சூட்சமமானது. வாசாப்பு, வவுத்தெரிச்சல வாஞ்ஞக் கூடாதுடா மவனே! அதெல்லாம் சூட்சமமா தொரத்துற சங்கதிங்க. ஒனக்குப் புரியாது. ஒம் வயசுக்குப் புரியாது. ஒமக்குப் புரியாதத நாம்ம அதெ தப்புன்னு சொல்ல மாட்டேம். ஆண்டு அனுபவிச்சுப் பாத்தவங்க சொல்றதெ இந்த விசயத்துல கேட்டுக்கணும். ஆராய்ச்சில்லாம் பண்ணக் கூடாது. ஏம்? எப்டி?ன்னு கேள்வில்லாம் கேட்டுகிட்டு நிக்கக் கூடாது. நீயி அந்த ஆபீஸ்ல வேல பாக்கக் கூடாதுன்னு நாம்ம ஒத்தக் காலுல்ல நின்னிருக்கேம். பதிலுக்கு நீயி ஒத்தக் காலுல்ல நின்னுத்தாம் அதுக்குப் போயிருக்கிறே. செரி பரவாயில்ல வுட்டேன்னா அதுக்கு ரொம்ப யோஜனெ பண்ணிருக்கேம். நமக்குப் பேஸிக் டிரெய்னிங்கல சொல்லிருக்காங்க. வருமானத்துக்காக குடும்பத்த நடத்துறதுக்காக கள்ளுக்கடையில கள்ள குடிக்காம வேல பாக்குறதுங்றது பெரிசு, அத்து தப்பிலன்னு காந்தி சொல்றார்ன்னு. செரி நீயி ஒரு வருமானத்துக்காக அஞ்ஞ வேலைக்குப் போறே பரவாயில்லன்னு வுட்டுப்புட்டேம். இத்தனெ வருஷமா அதுல பணம் போடணும்னு சொன்னப்போ ஏம் வேண்டாம்னு சொன்னாக்கா நீயி வேல பாக்குறது கள்ளுக்கடையிலத்தாம். அது மாதிரியான ஒரு கடைத்தாம் அது. கள்ளுக்கடையில வேல பாக்குறேன்னா கள்ள குடிக்கணுமா ன்னா? ஒரு வருமானத்துக்காக வேலயப் பாக்கறே அவ்வளவுத்தாம். அந்தக் கள்ள குடிக்க வாணாம்ங்றதுக்காகத்தாம் அதுல நீயி பணத்தப் போடக் கூடாதுன்னு தடுத்தேம். இந்தாருடா! நீயி சூதாட்ட க்ளப்புல வேல பாக்குறேடா! எதுக்கு வேல பாக்குறே? யோஜிச்சியா? வரும்படிக்கு. அத்தோட வுட்டுப்புடணும். அதுல கட்டுற கல்லாவ பாத்துப்புட்டு நாமளே ஒரு சூதாட்ட க்ளப்பு ஆரம்பிக்கணும்னு நின்னா எப்டிடா? பல குடும்பங்க வூணாப் போயிடும்டா! அந்த வாசாப்பு நம்ம குடும்பத்துக்கு வாணாம்டா!"ங்றாரு சுப்பு வாத்தியாரு கெஞ்சும் தொணியில.
            "டேய் யம்பீ! அதாங் சொல்றார்ல கேளுடாம்பீ! இவ்ளோ எறங்கி வந்து சொல்றார்ல. நீயி இதுல சம்பாதிக்கிறதெ போதும்டாம்பீ! நாம்ம கூட இந்த வயசுல இம்மாம் சம்பாதிச்சதில்லன்னு ஒங்க அப்பங்காரரே நம்ம காது குளிர சொல்லிருக்காருடா! ரொம்ப ஆசெ படாதடாம்பீ!"ங்குது வெங்கு.
            "யய்யோ யம்மா! இத்து ஆசெல்லாம் இல்ல. நம்மோட லட்சியம். நம்மோட கனவு. மனுஷனா பொறந்தா எதாச்சிம் இலக்கு இருக்கணும்மா! இத்து நம்மோட இலக்கு. நாம்ம யாரையும் சூதாடல்லாம் வுடல. பணத்த நம்மள நம்பிப் போடுவாங்கம்மா. அரசாங்கமே இதெ அனுமதிச்சு ஒரு தொழிலா நடத்த வுட்டுருக்காங்க. இத்து நாட்டோ பொருளாதாரம்மா! இதுல பணத்தப் போட அரசாங்கமே சலுகையெல்லாம் கொடுக்குறாங்க. இதுல சம்பாதிக்கிற டிவிடெண்டுக்கு வரியே கெடையாதும்மா! மூணு வருஷம் பணத்த போட்டுப் பின்னாடி எடுத்தா சம்பாதிக்கிற லாபத்துக்கு பைசா வரி கெடையாது தெரியுமா? நீயி தங்கத்துலயும், நெலத்திலயும் பணத்தப் போட்டீன்னா நாட்டோட பொருளாதாரம் எப்டி வளரும்? இதுல பணத்தப் போட்டாத்தாம் நாட்டோட பொருளாதாரம் வளரும். அரசாங்கமே அவுங்களோட நிறுவனப் பங்குகள இதுல டிரேட் பண்ண வுடுறாங்க தெர்யுமா? நீயும் அப்பாவும் பணத்த போட்டு வெச்சிருக்கீங்களே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அதோட பங்குல்லாம் இதிலத்தாம் வர்த்தகமாவுது. அரசாங்கமே யப்பா பணத்த கட்டிட்டு வர்ற பி.எப். பணத்தெ இஞ்ஞ கொண்டாந்துத்தாம் போடப் போறாங்க. அந்த வேலையத்தாம் நாம்ம பாக்குறேம். யாரோ ஒண்ணு ரண்டு பேரு இதுல நட்டப்படுறாங்க. நாம்ம ஆபரேட்டரா இன்னிய வரைக்கும் அந்த மாதிரில்லாம் யாரையும் வுட்டுப்புடல. அதாலயே நமக்கு ஏகப்பட்ட கிளையண்டுஸ் இருக்காங்க யம்மா! ஏம் ஒங்களுக்கு ஒண்ணுமே புரிய மாட்டேங்குது. இப்டி ஒலகமே புரியாம இருந்தா எந்தக் காலத்திலயும் நாலு காசெ பாக்க முடியாம்மா!"ங்றான் விகடு.
            "என்னாங்க அவ்வேம் ஏத்தோ சொல்றாம். நீஞ்ஞ என்னமோ சொல்றீக. ஒண்ணும் புரிஞ்சபாடாயில்ல. எடையில இந்தக் குட்டி வேற சத்தம் போடுறா. நமக்குக் கண்ணுல தண்ணித் தண்ணியா வருது. ஒரு வூட்டுக்குள்ள அப்பாருமா மவனுமா சண்டைக்கி நிக்காதீங்க. அதையெல்லாம் தாங்குற மனசு நமக்கு இல்ல. இப்பவே நெஞ்சு படபடன்னு வருது. சட்டுன்னு அத்து நின்னுப்புட்டா தேவல. நின்னு தொலய மாட்டேங்குதே!"ன்னு அழுவுது இதெ கேட்டுக்கிட்டு வெங்கு.
            "அழுவாதே யம்மா! நாம்ம ஆபீஸூம் போடல. ஒரு மண்ணும் போடல. எதாச்சிம் ஆரம்பிக்கணும்னா நல்ல வெதமா பேசுறீங்களா? எதுக்கு எடுத்தாலும் ஒளவையாரு கெழவி மாதிரி ஆயிரத்தெட்டு வெளக்கத்தச் சொல்லுதீங்க! எதுக்கெடுத்தாலும் நெகட்டிவ்வா பேசுதீங்க. ஒங்களுக்கு ஒலகமே புரியல. நாம்ம ஆபீ‍ஸைப் போடலன்னாலும் எவனாச்சிம் அதெ செஞ்சு சம்பாதிக்கத்தாம் போறாம். எவனாச்சிம் சம்பாதிக்கட்டும். ஆனா ஒங்கப் புள்ளெ சம்பாதிக்கக் கூடாது. அதானே ஒங்களுக்கு? அப்டியே இருந்துட்டுப் போவட்டும்! நாம்ம நல்லா வளர்றது ஒங்களுக்குப் பிடிக்கலயில்ல!" அப்பிடிங்றான் விகடு.
            "பாருங்க அவ்வேம் எப்டிப் பேசுறாம்னு? அவ்வேம் ந்நல்லா இருந்தா அதெ பாத்துச் சந்தோஷப்படுறதுல நம்மள வுட இந்த ஒலகத்துல வேற யாரு இருக்கா சொல்லுங்க? ஏம் இவ்வேம் இப்டிப் பேசுறாம்?"ன்னு இன்னும் அழுவுது வெங்கு.
            "இந்தா நீயிச் ச்சும்மா கெட.! ச்சும்மா மூசு மூசுன்னு அழுதுகிட்டு. அவ்வேம் வயசுக்கு இதெல்லாம் புரிஞ்சிக்கிடறது செரமம். எடுத்துச் சொன்னா புரிஞ்சிப்பாம்!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "நீங்களே பெரிய அறிவாளியா இருந்துக்குங்க! நாம்ம முட்டாப் பயலாவே இருந்திக்கிறேம். அதாங் ஆபீஸ் போடப் போறதில்லன்னு சொல்லிட்டேம்ல. அவ்வளவுதாம் வுட்டுப்புடுங்க! நாம்ம நல்லா வர்றது பெறத்தியாளுக்குப் பிடிக்கலன்னா பரவாயில்ல. வூட்டுக்குள்ள இருக்குறவங்களுக்கே பிடிக்கலன்னா எப்டி?"ங்றான் வெகடு.
            "எலே! எலே! இப்டில்லாம் பேசாதேடா! அவர ஒன்னப் பெத்தவருடா! ஒனக்கு நல்லத்துதாம் சொல்வாருடா!"ங்குது வெங்கு.
            மூஞ்சைத் திருப்பிக்கிறான் விகடு.
*****


No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...