கடவுளுக்கு நன்றியறிதல்களை அனுப்புபவன்
பொழுதானால்
போதை கொண்ட மிருகங்களின்
பாதைகளில்
நிகழ்கின்றன தினசரிப் பயணங்கள்
காட்டையழித்து
வேட்டையாடியதற்கு
பழி
தீர்க்கப்படுவது போல இருக்கிறது
தாயைக்
கொன்ற மகனைப் பற்றி
செய்தித்தாள்கள்
ரத்தத்தை கண்களில்
தெறிக்க
விடும் போது
உல்லாசமாக
மது அருந்தியபடி
தள்ளாடிக்
கொண்டிருக்கிறான் தகப்பன்காரன்
மிருகங்களால்
மிருகங்களுக்காக ஆளப்படும்
மிருகங்களாட்சியில்
விலை போன
வாக்குகளின்
மது நெடி வீச்சமும்
ஒரு
தலைமுறையை நாறடித்த பிரியாணிக் கவிச்சையும்
எங்கும்
வீசிக் கொண்டு இருக்கின்றன
சிக்னல்களின்
வெளிச்சம் அங்கதமாய்ச் சிரித்துக் கொண்டிருக்க
மதுபானக்
கடைகளின் வெளிச்சம்
விண்மீன்களை
மீறி பரவிக் கொண்டிருக்கின்றன
நள்ளிரவு
மிருகங்களின் வேட்டையில்லாதபடி
விடியலின்
பிரத்யேகச் செய்திகள் அமைவதற்கான
வேண்டுதல்களை
வீட்டைப் பூட்டியபடி தொடர்கையில்
சாலையோரம்
காலி மதுபானப் புட்டில்களை
பொறுக்கிக்
கொண்டுச் செல்கிறவன்
நன்றியறிதல்களைக்
கடவுளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறான்
*****
No comments:
Post a Comment