12 Dec 2018

'கெட்டவர்' என்ற சொல்!

'கெட்டவர்' என்ற சொல்!
என்னை கெட்டவர் என்று சொல்ல ஊரில் யாரும் நல்லவர் இல்லை என்ற வாசகத்தை ஒரு வாகனத்தின் பின்புறம் பார்த்தேன்.
கெட்டவர் என்று சொல்வது ஒவ்வாமையாக இருக்கிறது. அதாவது அலர்ஜியாக இருக்கிறது. அதன் தாக்கமே மேற்கண்ட வாசகம் என்று நினைக்கிறேன்.
கெட்டவர் என்று சொல்லி விட்டால் அப்படிச் சொல்லப்பட்டவருக்கு அதிலிருந்து ஓர் ஆறுதல் தேவைப்படுகிறது. அந்த ஆறுதலாகவும் மேற்கண்ட வாசகம் இருக்கலாம்.
நல்லவர் என்று சொல்லப்படுவதை எல்லாரும் விரும்புகிறோம். கெட்டவர் என்று சொல்லப்படுவதை எல்லாரும் வெறுக்கிறோம்.
அவைகள் வெறும் வார்த்தைகள்தான். ஆனால் அந்த வார்த்தைகள் ஆழமான ஒரு தாக்கத்தை மனதுக்குள் ஏற்படுத்துகிறது.
அந்தத் தாக்கத்திலிருந்து விடுபட நினைக்கும் மனிதர் என்னை கெட்டவர் என்று சொல்லும் நீ நல்லவரா? என்ற கேள்வியை எழுப்புகிறார்.
அந்தக் கெட்டவர் என்ற வார்த்தை அந்த நேரத்துக் கோபமான வார்த்தையாகக் கூட இருக்கலாம். ஆனால் அது தாக்கவே செய்கிறது.
நல்லவர், கெட்டவர் என்பது ஒரு மனப் பார்வையின் வரையறைதான். அந்த வார்த்தை ஒருதலைபட்சமான வார்த்தையாகக் கூட இருக்கலாம். ஒருதலைபட்சமாக இருந்தாலும் கூட அந்த வார்த்தையை யாரும் விரும்புவதில்லை.
சமூகத்தில் வார்த்தைகள் தேவையாக இருக்கின்றன. கெட்டவர் என்ற வார்த்தையை சமூகத்தால் தவிர்க்க முடியுமா என்பது கேள்விக்குறியே. அப்புறம் சமூகத்தல் கெட்டவராக இருக்கும் ஒருவரை எப்படிக் குறிப்பிடுவது என்ற கேள்வி எழும்.
ஒருவரை ஏன் கெட்டவர் என்று சொல்ல விழைகிறோம் என்ற ஆழமான கேள்வியை நமக்குள் எழுப்பிப் பார்க்கலாம். அவரை நல்லவர் என்று சொல்லும் நிலைக்கு மாற்றுவதற்கு ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா என்றும் யோசித்துப் பார்க்கலாம்.
குறைந்தபட்சம் நம் பெருந்தன்மையான மனதால் மன்னிக்க முடியுமானால் அதைச் செய்தாவது ஒவ்வொருவர் மனதில் வாழும் கெட்டவர் என்ற பிம்பத்தை அழிக்க முடியுமானால் அதைத் தாராளமாகச் செய்யலாம்.
*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...