தொலைக்காட்சி, அலைபேசி இவைகள் வாசிப்பைக் குறைத்திருக்கலாம். வாசிப்பு குறைந்து போனாலும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஒவ்வொருவர் மனதிலும் இருக்கிறது.
எல்லாவற்றையும் கூகுளில் தேடும் நண்பர்கள் கூட ஒரு புத்தகமாவது வாசித்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள்.
கொஞ்சம் நேரம் கிடைத்தால் தூக்கம்தான் வருதுப்பா! இதுல புத்தகத்தை எடுத்தால தூக்கம் ஜெட் வேகத்துல வருதுப்பா! என்ற நண்பர் வாசிப்பதற்கு ஏதேனும் வழிகள் இருந்தால் சொல்லேன் என்றார்.
யோசித்துப் பார்த்ததில் சில வழிகள் தோன்றின.
நமக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதிலிருந்து வாசிப்பைத் தொடங்குவது சரியான வழியாக இருக்கும்.
கவிதையைத் பிடித்தவர்கள் கவிதைகளிலிருந்து தொடங்கலாம்.
சிறுகதையை நேசிப்பவர்கள் அதிலிருந்து தொடங்கலாம்.
நாவல் என்றால் நாவலிலிருந்து, தத்துவம் என்றால் தத்துவத்திலிருந்து தொடங்கலாம்.
எனக்கு வார இதழ்கள் தவிர எதுவும் பிடிக்காது என்பவர்கள் அதிலிருந்து தொடங்கலாம்.
உலகில் வாசிக்க முடியாத புத்தகம் என்று எதுவும் இல்லை. எந்தப் புத்தகத்தில் முதல் சில பக்கங்களை வாசித்துக் கடப்பதே சிரமம். சில பக்கங்களைக் கடந்த பிறகு வாசித்து முடிக்காமல் இருப்பது சிரமம்.
வாசிக்க முடியாமல் இருக்கும் தடிமனான பெரிய புத்தகங்களின் முதல் முப்பது பக்கத்தை வாசித்து முடித்து விட்டால் எவ்வளவு பெரிய தடிமனான பெரிய புத்தகமும் வாசிப்புக்குக் கட்டுபடும் சிறிய நூலாகி விடும்.
தனிமையைப் பயனுள்ளதாக்கிக் கொள்வதற்கு வாசிப்பைப் போல பயனுள்ள வழி வேறு என்ன இருக்கிறது!
வாசிப்பால் மனம் விரிகிறது என்பதைப் புரிந்து கொண்டால் வாசிக்காமல் இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது புரியும்.
வாசிப்பைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு ஒரு நல்ல வழி வாசிக்கும் நண்பர்களை பக்கத்தில் வைத்துக் கொள்வது. வாசிப்பு என்பது ஒரு தொற்றுநோய் போல. அது ஒருவருக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால் மற்றொருவருக்கும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது போல.
வாசிக்கும் நண்பர்கள் நம்மைச் சுற்றி இருந்தால் புத்தகங்களை நேசிக்கும் ஆர்வம் நம்மை அறியாமல் தானே ஏற்பட்டு விடும்.
*****
அருமையான வழிகாட்டல்
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி ஐயா! தங்களது வாசிப்புப் பயணம் தொடரட்டும்! பயணங்கள் முடிவதில்லை என்பதை உலகுக்குச் சொல்லட்டும்!
Delete