24 Oct 2020

சேத்து வைக்குறாப்புல இல்ல!

சேத்து வைக்குறாப்புல இல்ல!

செய்யு - 604

            திருவாரூர் ஏமெம்ஸி ஆஸ்பிட்டல்ல ரண்டு நாளு கண்காணிப்புல வெச்சி செய்யுவ சரிபண்ணாங்க. ரெண்டு நாளும் பரசு அண்ணன் குடும்பத்தோட வந்து ஆஸ்பிட்டல்ல கெடந்துச்சு ஒத்தாசையா. "பஞ்சாயத்துன்ன அப்பிடித்தாம்பீ! சாதாரண விசயத்தெ பெரிசாக்கிப் பேசுவானுவோ. ஒண்ணுமில்லாதத ஊதி வுட்டுப்புடுவானுவோ. இதோட மனசு இப்பிடி இருக்கும்ன்னா பஞ்சாயத்தே வாணாம்ன்னு சொல்லிப்புட வேண்டித்தானே? ன்னா பெரிய பஞ்சாயத்து? வாழ விருப்பம் இல்லன்னா அதெ ஒத்த வார்த்தையில முடிச்சிக்கிட வேண்டித்தாம்! அவ்வளவுதாங் வெசயம்! இதுக்குப் போயி நம்ம மனசெ நாம்ம ஏம் தண்டிச்சிக்கிடணும்!"ன்னுச்சு பரசு அண்ணன்.

            செய்யுவுக்கு அடிக்கடி ரத்த அழுத்தத்தப் பாத்துக்கிட்டெ இருந்தாங்க. அது ஏறியும் எறங்கிக்கிட்டும் நெலையில்லாம இருக்குறதா சொன்னாங்க ஆஸ்பிட்டல்ல. ரண்டு நாளா ஊசி, மருந்து, மாத்திரைன்னு கொடுத்து கொஞ்சம் கொணப்பாட்டுக்குக் கொண்டு வந்தவங்க, ஒடம்புல ஒண்ணும் பெரச்சனெ இல்லன்னும், மனசுதாங் பெரச்சனைன்னும், மனசால ஒடம்பப் போட்டுச் சித்திரவதைப் பண்ணிக்கிறதா சொல்லி அங்கயே கண்ணபிரான்ங்ற மனநல மருத்துவரப் பாக்கச் சொல்லிப் பரிந்துரைப் பண்ணாங்க. அந்த டாக்கடர்ரு செய்யுவ தனியாவும், வூட்டுல இருக்குறவங்கள வெச்சியும் முழுசா வெசாரிச்சிக்கிட்டு மருந்துகள எழுதிக் கொடுத்தாரு. அதெ வாங்கிட்டு வூடு வந்துச் சேந்தப்போ, சுப்பு வாத்தியாரு ரொம்பவே தளர்ந்துப் போயிருந்தாரு.

            செய்யுவோட நடவடிக்கைக வித்தியாசமா ஆவ ஆரம்பிச்சது. திடீர்ன்னு எழுந்து சத்தம் போட ஆரம்பிச்சா. திடீர்ன்னு ஏம் அப்பிடி அமைதியா இருக்கான்னு தெரியாத அளவுக்கு அமைதியா இருக்க ஆரம்பிச்சா. சாப்புடுன்னு சொன்னா சாப்புட மாட்டா. சில நேரங்கள்ல அவ்வே பாட்டுக்கு வாயில வந்ததெ பொலம்பிக்கிட்டெ இருந்தா. அம்மாக்காரி தன்னோட வாழ்க்கையையே சீரழிச்சிப்புட்டதா சமயத்துல வெங்குவக் கண்டா சத்தம் போட்டு ரூமெ வுட்டெ வெளியில தள்ளிப்புடுவா. அவளோட நடவடிக்கைக அதிகமாகிறப்போ, கண்ணபிரான் டாக்கடரு கொடுத்த மாத்திரைகள எப்படியாச்சும் போட வெச்சிட்டாப் போதும் தூங்க ஆரம்பிச்சிடுவா. ஆன்னா அந்த மாத்திரைகளக் கொடுக்குறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடும். "நாம்ம ன்னா பைத்தியமா? பைத்தியக்கார டாக்கடர்ரு கொடுத்ததெ கொடுத்துப் போடச் சொல்லுதீயளே?"ன்னு மல்லுகட்டுவா. சமயத்துல அடிக்கவும் பாய்வா.

            செய்யுவ குளிக்க வைக்கிறது, சாப்புட வைக்கிறது, தூங்க வைக்குறதுன்னு ஒவ்வொண்ணும் ரொம்ப செருமமா மாற ஆரம்பிச்சது. குடும்பத்துல ஆளாளுக்கு அவளெ பாத்துக்கிட்டுக் கெடந்ததுல எது பகல், எது ராத்திரின்னுப் புரியாமப் போயிடுச்சு. பகலெல்லாம் மாத்திரையப் போட்டுக்கிட்டு தூங்கிடுறதுல, ராவான்னா அவ்வே பாட்டுக்கு உக்காந்துகிட்டு எதையாச்சும் பெனாத்திக்கிட்டெ இருக்க ஆரம்பிச்சா. அவளெ தனியா வுட்டுப்புட்டுத் தூங்கி ஒண்ணுகெடக்க ஒண்ணு எதையாச்சியும் செஞ்சிக்கிடுவாளோன்னு யாராச்சும் ஒருத்தரு முழிச்சிக்கிட்டெதாம் இருக்க வேண்டியதா இருந்துச்சு. சமயத்துல வெறி பிடிச்சாப்புல தன்னைத் தானே அடிச்சிக்கவும் ஆரம்பிச்சிடுவா. அப்போ அவ்வே ரண்டு கைகளையும் பிடிச்சிக்கிட்டு தன்னைத் தானே அவ்வே அடிச்சிக்கிறதெ தடுத்துக்க வேண்டியதா இருந்துச்சு. ஒரு சில நாள்கள்ல அவள சமாளிக்கவே முடியாதப்போ கண்ணபிரான் டாக்கடர்கிட்டெ ஒடனடியா கார்ரப் பிடிச்சிக் கொண்டு போறாப்புல ஆயிடும். காருக்குள்ள அவளெ ஏத்துறதுக்குள்ள நாவு நொர தள்ளிடும். அவளெ ரண்டு பக்கமும் ரண்டு பேரு பிடிச்சிக்கிட்டுக் கொண்டு போயி காருக்குள்ள திணிக்குறாப்புலாத்தாம் கார்ல ஏத்த முடியும். அப்பிடிக் காருக்குள்ள ஏத்தி ரண்டு பக்கத்துலயும் ரண்டு பேரு பலமா அவளெ பிடிச்சிக்கிட்டு வேற உக்காந்திருக்கணும். சமயத்துல திமுற ஆரம்பிச்சான்னா கார்ர நிப்பாட்ட சொல்லிட்டு கொஞ்சம் சரிபண்ணிக்கிட்டுத்தாம் திரும்ப கௌம்பணும். இல்லன்னா அவ்வே திமுறு திமுறல்ல ரண்டு பக்கமும் உக்காந்திருக்கிறவங்க காரு கதவெ ஒடைச்சிக்கிட்டு ஓடுற கார்லேந்து கீழ வுழுந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல.

            மொத்தத்துல அவளெ காருக்குள்ளப் பிடிச்சி உக்கார வெச்சி ரெண்டு பக்கமும் வெங்குவும், ஆயியும் உக்காந்துகிட்டு, மின்னாடி டிரைவரு சீட்டுல விகடுவும் உக்காந்துகிட்டுக் கொண்டுப் போயிச் சேத்து, கொண்டு வர்றதுக்குள்ள உசுருப் போயி உசுரு வந்ததுப் போல ஆயிடும். பொண்ணோட நெலமெ நாளுக்கு நாளு மோசமாயிட்டுப் போறது போல தோணிட்டு இருந்துச்சு சுப்பு வாத்தியாருக்கு. இப்பிடியே போனா பொண்ணு பைத்தியமாயிடுவாளோன்னு அவரு ரொம்பவே கவலையா இருந்தாரு. ஏற்கனவே இருக்குற நெலமைக்கும் பைத்தியக்கார நெலமைக்கும் பெரிசா ரொம்ப வித்தியாசம் தெரியல. ஒரு மொறை செய்யுவ கண்ணபிரான் டாக்கடர்கிட்டெ அழைச்சிட்டுப் போனப்போ சுப்பு வாத்தியாரே நேர்ல வந்து டாக்கடர்கிட்டெ வெசாரிச்சாரு.

            "அய்யா! நமக்கு இந்த நெலமெ நரகத்தெ போல இருக்கு. ரொம்ப கொடுமையா இருக்கு. இந்தக் கொடுமைய நம்மாள தாங்க முடியல. வூடெ சோகமா கெடக்குதுங்க. நாஞ்ஞ சிரிச்சி நாளாச்சு. நல்ல வெதமா சோறு தண்ணிச் சாப்புட்டு நாளாச்சி. வூட்டுக்காரி எந்நேரத்துக்கும் அழுதுகிட்டெ இருக்கா. தப்பா பொண்ணக் கொண்டுப் போயிக் கட்டிக் கொடுத்துட்டதா வேதனெ பட்டுக்கிட்டு அவளும் எந்நேரமும் அழுதுகிட்டெ இருக்கா. யிப்போ இருக்குற நெலமையில இதுலேந்து வெளியில வந்தா போதும்ன்னு இருக்கு. எதாச்சும் பண்ணி சீக்கிரமா கொணம் பண்ணிப்புடுங்க!"ன்னு கால்ல வுழுவாத கொறையா கொரலு தளுதளுக்கக் கேட்டாரு.

            கண்ணபிரான் டாக்கடர்ரு சுப்பு வாத்தியார்ர நிமுந்துப் பாத்தாரு. "மாத்திரைகக் கொடுத்துட்டுத்தாம் இருக்கேம். மாத்திரைக மட்டுமே கொணம் பண்ணும்ன்னு சொல்ல முடியாது. நீஞ்ஞ அனுசரணையாப் பேசுறதும், அவுங்களோட விருப்பப்படி நடந்துக்கிறதும் முக்கியம். தனியா உக்கார வுடாதீங்க. எதாச்சும் பேசிட்டெ இருங்க. அந்தப் பொண்ணு எதெ விருப்பப்படுதோ அதெ கொஞ்சம் கஷ்டம் பாக்காம செஞ்சி வுடுங்க. எல்லாத்துக்கும் மேல இப்போ இருக்குற எடத்துலயே இருக்காம எடமாற்றம் பண்ணீங்கன்னா மனசு கொஞ்சம் மாற வழியிருக்கு. அவுங்க எங்க இருக்க விரும்புறாங்க? என்ன ஏதுன்னு உக்காந்துப் பேசுங்க. மனசு ஒண்ணுத்தையே அப்பிடியே பிடிச்சிக்கிட்டு இருக்கு. அதெ கொஞ்சம் டைவர்ட் பண்ணி வுட்டுப்புட்டா போதும். அந்த டைவர்ஷன மனசுப் பிடிச்சிக்கிட்டு இதெ வுட்டுப்புடும். அவுங்கப் போக்குக்குக் கொஞ்ச நாளு வுட்டுத்தாம் நீங்கப் பிடிச்சாவணும். புருஷங்காரனோடப் போயி வாழணும்ன்னு வற்புறுத்தாதீங்க. சேர்ந்து வாழ விருப்பமில்லைன்னா வுட்டுப்புடுங்க. தனியா இருக்குறதுன்னு சொன்னா இருக்கட்டும். கொஞ்சம் மனசு தெளிவானப் பெற்பாடு எடுத்துச் சொன்னா புரிஞ்சிக்குவாங்க. ஆன்னா அதுக்கு அவசரப்படக் கூடாது. மனசு கொஞ்சம் கொஞ்சமாத்தாம் மாறும்! அவுங்க மைண்ட் எதுல டைவர்ட் ஆவணுங்றதெ நாமத்தாம் பொறுமையா இருந்து கண்டுபிடிக்கணும். இப்போ இருக்குற நெலமைக்குத் தொடர்ச்சியா அவுங்க மருந்து சாப்புட்டு ஆவணும். இல்லேன்னா நெலமெ ரொம்ப மோசமாயிடும். யிப்போ கொஞ்ச நாளுக்கு வாரத்துக்கு ஒரு தடவெ வந்துப் பாத்துக்கிட்டு இருக்கட்டும். போவப் போவ பாஞ்சு நாளுக்கு ஒரு தடவெ, மாசத்துக்கு ஒரு தடவென்னு கொறைச்சிக்கிடலாம்! வேற எதுவும் அவசரம்ன்னா போனப் பண்ணிட்டுக் கொண்டாங்க!"ன்னாரு டாக்கடர்ரு.

            அன்னிக்கு செய்யுவ அழைச்சிக்கிட்டுத் திரும்புறப்போ டாக்கடர்ரு சொன்னதெப் பத்தியே யோசிச்சுக்கிட்டெ வந்தாரு சுப்பு வாத்தியாரு. வூடு வந்ததும் செய்யுவக் கூப்புட்டு வெச்சிப் பேசுனாரு. ஆரம்பத்துல அப்பங்காரரு பேசுனதுக்குல்லாம் எடக்கு முடக்கா பதிலெ சொல்லிட்டு இருந்தா. கலியாணங் கட்டி வெச்சி தன்னோட வாழ்க்கையையே சீரழிச்சிட்டதா கொறை சொன்னா. "போயிட்டு போயிட்டு எம்மட வாழ்க்கையே போயிடுச்சு. நம்மள அவ்சாரின்னு கதெ கட்டிப்புட்டாம். அவ்வந்தானே அவ்சாரிப் பயெ. ஆம்பளையோட படுக்குற வெக்கங் கெட்டப் பயெ. அந்தப் பயெ நம்மள மானங்கெட்டவன்னு பஞ்சாயத்துலச் சொல்லிப்புட்டாம். அவனெ ஒரு தெய்வம் வந்து கேக்கலீயே? எந் தாயி, தகப்பன், யண்ணங் கூட ஏம்டா பேசுதீயேன்னு ஒரு அடி கூட அடிக்கலீயே? இனுமே நாம்ம இந்த ஊர்ல எப்பிடி இருக்குறது? இந்தச் சனங்க மூஞ்சுல முழிக்கிறது எப்பிடி? நாம்ம எதுக்கு உசுரோட இருக்கணும்? சாவப் போனாலும் சாவ வுட மாட்டேங்குதுங்களே இந்தச் சனங்க. உசுரோடயும் இருக்க முடியல! சாவவும் முடியல! நம்மாள எதுவும் முடியல. நம்மாளல்லாம் எதுவும் முடியாது. நாம்மல்லாம் பொறந்திருக்கவே கூடாது. பொறந்தப்பவே கொன்னுருக்கணும். இப்பிடி வளத்து விட்டு கலியாணத்தப் பண்ணி வுட்டுக் கொல்லுதுங்களே! கொல்லுதுங்களே!"ன்னு மடமடன்னு தலையில அடிச்சிக்க ஆரம்பிச்சிட்டா.

            ஒடனே சுப்பு வாத்தியாரு அவ்வே கையி ரண்டையும் அடிச்சிக்காத அளவுக்குப் பிடிச்சிக்கிட்டாரு. ஏம்டா இதெ பொண்ணுகிட்டெ பேச ஆரம்பிச்சோம்ன்னு அவருக்கு விரக்தியாவும் வேதனையாவும் இருந்துச்சு. வெங்கு ஓடி வந்து பிடிக்கப் பாத்ததுக்கு சுப்பு வாத்தியாரு பிடிச்சிருந்த கைகள ஒதறி விட்டுப்புட்டு, வெங்கு ஓடிப் போயி கண்டமேனிக்கு அடிக்க ஆரம்பிச்சா செய்யு. ஆயி, விகடு எல்லாம் ஓடிப் போயி அவளெ அப்பிடியே சொவத்து ஓரத்துல அணைச்சிப் பிடிச்சிக்க, சுப்பு வாத்தியாரு வெங்குவ அழைச்சுக் கொண்டு போயி அந்தாண்ட கூடத்துல வுட்டுப்புட்டு வந்தாரு.  கூடத்துல அப்பிடியே சொவத்துல சாஞ்சி உக்காந்த வெங்கு இப்போ தலையில அடிச்சிக்கிட்டு அழுவ ஆரம்பிச்சிது. "எம் பொண்ணோட வாழ்க்கயெ நாமளே கெடுத்துப்புட்டோமே! எம்மட வூட்டுக்காரரும் வாணாம் வாணாம்ன்னு தல தலயா அடிச்சிக்கிட்டாரு! நாம்ம கேக்கலையே! டாக்கடர்ரு மாப்புள்ளன்னு போயி வுழுந்தேமே! பொத ‍குழியில வுழுந்தேமே! எங் குடும்பமே யிப்பிடி நிக்குதே! பரிதவிச்சி நிக்குதே! யாரு கண்ணுப் பட்டுச்சோ? எங்க தப்பு நடந்துச்சோ? அந்தத் தெய்வம் கூட தொணை நிக்க யோசிக்குதே!"ன்னு பொலம்ப ஆரம்பிச்சிது. "ந்தா! சித்தெ சத்தம் போடாதே! நாம்ம யிப்போ ஒன்னயப் பாக்குறதா? பொண்ணப் பாக்குறதா?"ன்னு ஒரு அதட்டல்லப் போட்டுட்டு சுப்பு வாத்தியாரு கடெசீயா இருக்குற ரூமுக்குள்ளார செய்யுவப் பாக்க வந்தாரு.

            சொவத்தோட மூலையோட மூலையா பிடிச்சி வெச்சிருந்த செய்யு திமிரிக்கிட்டு இருந்தா. சுப்பு வாத்தியாரு செய்யுவப் பாத்தாரு. ஒடைஞ்சி அழுதுடுற நெலையில இருந்துச்சு அவரோட முகம். "ஒம் மனசுல ன்னா இருக்குன்னுத் தெரிஞ்சாத்தாம் மேக்கொண்டு என்னத்தெ பண்ணலாங்றதெ நாம்ம முடிவு பண்ண முடியும். ஒன்னயே யிப்பிடியே வுட்டா அரெ பைத்தியமா இருக்குற நீயி முழு பைத்தியமாவே ஆயிடுவ. ஒம்மட மனசுல ன்னா இருந்தாலும் சொல்லு. அதெ நாம்ம பண்ணுறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நமக்கு இந்த எடமெ பிடிக்கல. இந்த வூடு பிடிக்கல. இந்த ஊரு பிடிக்கல. யப்பாவ புடிக்கல, யம்மாவ புடிக்கல, யண்ணன புடிக்கல, யண்ணிய புடிக்கல, ஒங்கள யாரையும் பிடிக்கல. இந்த வூட்ட வுட்டுப் போகணும். இந்த எடத்து வுட்டுப் போகணும். இந்த ஊரு வுட்டுப் போகணும். இந்த மனுஷங்கள வுட்டுப் போகணும். இந்த ஊரு சனங்க யாரையும் நமக்குப் பிடிக்கல. இவுங்கள எல்லாம் பாக்க பாக்க பைத்தியம் பிடிக்குறாப்புல இருக்கு. இந்தக் கெட்ட மனுஷங்கள வுட்டு நாம்ம அந்தாண்ட போவணும். இந்த மனுஷங்களே இல்லாத எடத்துக்குப் போவணும்! அத்து இந்தப் பூமிய வுட்டுன்னாலும் அஞ்ஞனப் போவணும். அம்புட்டுதாங்!"ன்னா செய்யு.

            "போவணும் போவணும்ன்னா எந்த எடத்துக்குன்னு சொன்னாத்தானே புரியும்? நீயி எஞ்ஞ இருக்க பிரியப்படுறேன்னு சொன்னாத்தானே புரியும்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "இந்த மனுஷங்க யில்லாத எடத்துக்கு! இந்த ஊரோட காத்து வீசாத ஊருக்கு!"ன்னா செய்யு. சுப்பு வாத்தியாரு அப்பிடியே இடிஞ்சுப் போனாப்புல தரையில உக்காந்து யோசிக்க ஆரம்பிச்சிட்டாரு. அதுக்குள்ள விகடு ஒரு மாத்திரையக் கொண்டாந்து எப்பிடியோ வாயிக்குள்ள போட வெச்சி, ஆயி வாயிக்குள்ள தண்ணிய ஊத்த வெச்சி அதெ முழுங்க வெச்சாங்க. கொஞ்ச நேரத்துக்குல்லாம் அப்பிடி ஒரு ஆர்ப்பாட்டம் நடந்ததுக்கான அறிகுறி யில்லாம அப்பிடியே கட்டில்ல கண்கள் சொழல உறங்க ஆரம்பிச்சா செய்யு. அந்த ரூமெ பாக்குறதுக்கே படுமோசமா இருந்துச்சு. செய்யு பண்ணுன அமளிதுமளியில துணி மணிக கண்டபடிக் கிடந்துச்சு. சாமாஞ் செட்டுக பல ஒடைஞ்சிக் கெடந்துச்சு. அங்கங்க ஒட்டடையும், தூசுமா இருந்துச்சு. எந்தச் சாமானும் ஒழுங்க அடிக்கியில்ல. அடுக்கியும் வைக்க முடியல. அடுக்கி வெச்சாலும் அதெ கலைச்சிப் போட்டு, வீசி அடிச்சா செய்யு. பல நேரங்கள்ல அந்த ரூமெ பூட்டி வெச்சிக்கிட்டு வெளியில நின்னு அவ்வே உள்ளார பண்ணுறதெ வேடிக்கைப் பாக்குறதெ வுட வேற வழி தெரியல வூட்டுல இருந்த யாருக்கும்.

            சுப்பு வாத்தியாரு ஒரு முடிவுக்கு வந்தவரா ராத்திரி விகடுவெக் கூப்புட்டு சந்தானம் அத்தானுக்குப் போன போடச் சொன்னாரு. அவ்வேம் போன போட்டுக் கொடுத்து சுப்பு வாத்தியாரு கையில கொடுத்ததும், சுப்பு வாத்தியாரு செளக்கியமா இருக்கீயளா என்னாங்ற வெசாரிப்புல்லாம் யில்லாம நேரடியா விசயத்துக்கு வந்தாரு, "சேத்து வைக்குற யோஜனையெல்லாம் வாண்டாம்! பொண்ணுக்கு மனசுக் கெட்டுப் போயிக் கெடக்கு. இதுக்கு மேல கெட்டுப் போச்சுன்னா நம்மாள பொண்ணச் சொமக்க முடியாது. இப்பவே குடும்பமே சேந்துச் சொமந்துகிட்டு இருக்கு. வூட்டுல இவ்வே ஒருத்தி பைத்தியமாயி வூட்டையே பைத்தியக்கார வூடா ஆக்கிப் புடுவா போலருக்கு. இதுல அந்தப் பயலுவோ வேற பொண்ண அழைச்சிட்டுப் போயி அரைப் பைத்தியமா இருக்குறதெ முழு பைத்தியமாக்கிக் கொண்டாந்து இனுமே ஒம்மட பொண்ண வெச்சிக்கிட முடியாதுன்னு சொன்னானுவோன்னா அதெ நாம்மாள பாக்க முடியாது. இப்போ எம் பொண்ண நாம்ம சரி பண்ணணும். இதெல்லாம் உத்தேசம் பண்ணித்தாம் கொஞ்ச நாளு பொண்ணு நம்ம வூட்டுல இருக்கணும்ன்னு சொன்னது. கொஞ்சம் காலம் தள்ளுன்னா ரண்டுப் பக்கமும் எதாச்சும் ஒரு மாத்தம் வரும்ன்னு நெனைச்சேம். அதாலத்தாம் பஞ்சாயத்துல சேத்து வெச்சிடுறதா நீயி பண்ண முடிவுக்கு அப்பிடி ஒரு சாதவம் இருந்தா அதெயுந்தாம் பாப்பேம்ன்னு பொறுமெயா இருந்தேம். யிப்போ அந்த சாதவத்த உண்டு பண்ண முடியாம அந்தப் பயலுவோ நெருக்கடியப் பண்ணதுல ஏமாத்தந்தாம் உண்டாயிடுச்சு. அவனுவோ பண்டுறதையெல்லாம் பண்ணிட்டு தெனாவெட்டா உக்காந்திருக்கானுவோ. இஞ்ஞ நாம்மத்தாம் பைத்தியம் பிடிச்சாப்புல உக்காந்திருக்கேம். இனுமே சேத்து வைக்குறதா யில்ல. அப்பிடி எதையும் பேச வாணாம். கதெயெ முடிக்கிற முடிவுக்கு நாம்ம வந்துட்டேம்!"ன்னு பேசி முடிச்சவரு, சந்தானம் அத்தான் பேசுறதையெல்லாம் கேக்க விருப்பமில்லாதவர்ரப் போல போன விகடுகிட்டு கொடுத்துட்டு வேகுவேனுன்னு அந்தாண்டப் போயிட்டாரு.

            சந்தானம் அத்தான் விகடுகிட்டெத்தாம் நடந்த கதையெல்லாம் வெசாரிச்சிது. "எந்த முடிவா இருந்தாலும் அவசரம் காட்ட வாணாம். கொஞ்ச நாளு தள்ளட்டும். பொண்ணு இம்மாம் பலவீனமா இருக்கும்ன்னு நாம்ம நெனைக்கல. இப்பிடி ஒரு பொண்ண கொண்டாந்து வெச்சி குடித்தனம் பண்ணுன்னு சொல்ல முடியா. அந்தப் பயலும் ஒரு அதிகப்படிப் பிடிச்ச பொட்டப் பயத்தாம். சேத்து வெச்சாலும் கொழந்தெ பொறக்குமாங்றதும் சந்தேகந்தாம். அந்த மாதிரிப் பயலுவோளுக்கு எய்ட்ஸூ கூட இருக்கலாம். அத்து வேற பெரச்சனெ இருக்கு. எப்பிடியோ சேத்து வெச்சி எந்த வெதத்துலயாவது சரி பண்ணிப்புடம்ன்னும்தாம் பாத்தேம். கலியாணமானதுகளப் பிரிச்சி வைக்குறது பாவம்பாங்கன்னு பாத்தேம். அதாலத்தாம் நம்மள குத்தஞ் சொன்னதெயும் பெரிசு பண்ணல. யிப்போ இஞ்ஞ சேத்து வெச்சா பாவமாயிடும் போலருக்கு. நீயி ஒண்ணும் மனசெ வுட்டுப்புடாதே. எல்லாம் கொஞ்ச காலம் அப்பிடித்தாம் இருக்கும். வருஷம் பூரா புயலு அடிக்கிறதில்ல, வெள்ளம் வாரதில்ல. வருஷத்துல செல நாளு அப்பிடித்தாம் ஆவும். அத்து எப்பிடி வந்துச்சோ அப்பிடியே அது போயிட்டெ இருக்கும். மனசெ போட்டுக் கொழப்பிக்கிடாம நீயிப் பாட்டுக்கு பேயாம இரு. நாம்ம எடையில ஒரு நாளு வந்துட்டுப் போறேம்! வேற எதுனாச்சும் முக்கியமான சங்கதின்னு ஒடனே போன அடி மாப்ளே!"ன்னுச்சு சந்தானம் அத்தான். அவ்வளவுதாங் அத்துச் சொல்லிட்டுப் போன வெச்சது.     

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...