25 Oct 2020

சின்ன சின்ன வெளிச்சங்கள்!

சின்ன சின்ன வெளிச்சங்கள்!

செய்யு - 605

            ரெண்டு பஞ்சாயத்து வெச்சதாலதாம் வாத்தியாரு பொண்ணுக்கு இப்பிடி ஆச்சுதோங்ற பேச்சு கிராமத்துல உண்டானுச்சு. சுப்பு வாத்தியாரு இதெப் பத்தி வெளிப்படையாவே சொன்னாரு, "மேக்கொண்டு பஞ்சாயத்துன்னா அதெ தாங்குற சக்தி நம்மட பொண்ணுக்கு யில்ல. அவ்வே அப்பிடிக் கெடக்குறதப் பாத்துட்டு அதெ தாங்குற சக்தி நமக்கில்ல!"ன்னு. இப்போ இந்தப் பிரச்சனைய முடிவுக்குக் கொண்டு வாரணுங்றதெ வுட, பொண்ண எப்பிடியாச்சும் கொணப்பாடு காண வெச்சிடனுங்ற கவலேதாம் சுப்பு வாத்தியாருக்கு அதிகமா இருந்துச்சு. மனசெ தேத்திக் கொண்டாந்துப்புட்டா, ஒடம்பு தேறிடுங்றது அவருக்கு நல்லா தெரிஞ்சது. அதுக்குத் தகுந்தாப்புல வூட்டுல இருக்குற ஒவ்வொருத்தரும் பேச ஆரம்பிச்சாங்க. நாளுக்கு ஒருத்தராவது சுப்பு வாத்தியாரு வூட்டுக்கு வந்து பாத்துட்டுப் போறதும், செய்யுவுக்கு தெகிரியத்தெ கொடுத்துட்டுப் போறதும் நடந்துகிட்டு இருந்துச்சு.

            கொஞ்சம் கொஞ்சமா நடந்த பஞ்சாயத்துலேந்து அவளோட மனசு வெலகி வந்தப்போ, மேக்கொண்டு படிக்கணுங்ற ஆசையெ மட்டுந்தாம் செய்யு சொன்னா. இப்படி ஓர் ஆர்வத்துல பொண்ணோட மனசு தெச திரும்புனா அதுவும் நல்லதுதாம்ன்னு நெனைச்சாரு சுப்பு வாத்தியாரு. இதெ வெச்சே அவளோட மனச மாத்திப்புடணும்ன்னு யோசனைய பண்ண ஆரம்பிச்சாரு. அவ்வே படிச்ச எம்மெஸ்ஸி, பியெட்டுக்கு மேல மேக்கொண்டு படிக்கணும்ன்னா தஞ்சாவூரு, கும்பகோணந்தாம் போயாவணும். அதுக்கு திருவாரூரு ல்லேன்னா ஆர்குடியில ஒரு வூட்டப் பாத்து குடி வெச்சி அங்கயிருந்து அனுப்பிச்சிப்புடலாமான்னு சுப்பு வாத்தியாருக்குள்ள யோசனெ ஓடுச்சு. கலியாணம் ஆவாத புள்ளையா இருந்தாலும் செரித்தாம், கலியாணம் ஆன புள்ளையா இருந்தாலும் செரித்தாம் அதுல இப்பிடி படிக்க அனுப்புறதுல எந்தப் பிரச்சனையும் இல்ல. ஆன்னா கலியாணம் ஆயி இப்பிடி பஞ்சாயத்து அது இதுன்னு பிரச்சனையா இருக்குற பொண்ண டவுன்ல தங்க வெச்சி அஞ்ஞயிருந்து தஞ்சாவூரு, கும்பகோணம்ன்னு அனுப்புறதுல உள்ள சிக்கலையும், பெரச்சனையையும் சுப்பு வாத்தியாரு ராத்திரி பகலா யோசிச்சுக்கிட்டுக் கெடந்தாரு. தானாவது குடும்பத்தெ வுட்டு ஆர்குடியோ, திருவாரூரு டவுன்லயோ குடியா கெடந்து அஞ்ஞயிருந்து கும்பகோணமோ, தஞ்சாவூரோ போறாப்புல ஏற்பாட்டப் பண்ணி படிக்க வெச்சி கொஞ்சம் மனசெ மாத்திக் கொண்டாந்துப்புடணும்ன்னு நெனைச்சாரு.

            மவளோட மனசால இப்பிடி ஒரு பெரச்சனைன்னா, எப்பப் பேசினாலும் செய்யு அம்மாவாலாத்தாம் இப்பிடி ஆச்சுதுன்னுப் பேசப் பேச வெங்குவுக்கு அது மனச ரொம்பப் பாதிக்க ஆரம்பிச்சது. அது என்னவோ பித்துப் பிடிச்சாப்புல உக்கார ஆரம்பிச்சது. இதென்னடா எரியுற கொள்ளியிலேந்து ஒரு பக்கமா தப்பிச்சுப் போயிடலாம்ன்னு நெனைச்ச எறும்புக்கு ரண்டு பக்கமும் பத்திக்கிட்டு எரிஞ்சா எப்பிடி இருக்கும்? வூட்டுல பொண்ணுக்கு ஒண்ணுக்குத்தாம் மனக்கோளாறுன்னா அத்து தொத்து வெயாதியப் போல பொண்டாட்டிக்காரிக்கும் தொத்திக்குமோங்ற பயம் இப்போ சுப்பு வாத்தியாருக்கு உண்டாவ ஆரம்பிச்சது. கண்ணபிரான் டாக்கடரு சொன்னதெ போல எடமாற்றம்தாம் யிப்போ மனமாத்ததுக்கு ஒதவும்ன்னு நெனைச்சாரு சுப்பு வாத்தியாரு. நம்மளா ஒரு எடத்துக்கு மாத்துறதெ வுட பொண்ணுகிட்டெ கலந்துகிட்டு அவ்வே மனசுல நெனைக்குற மாதிரியான எடத்துக்கு மாத்துறது உசிதமா இருக்கும்ன்ன அவரு நெனைச்சாரு. கிராமத்த வுட்டு பக்கத்துல ஆர்குடி ல்லேன்னா திருவாரூரு டவுன்லயாவது ஒரு மாத்தத்துக்காகக் கொண்டுப் போயி வைக்கலாம்ன்னு தன்னோட யோஜனயோட செய்யுவோட நெனைப்பு என்னாங்றத தெரிஞ்சிக்க அவ்வேகிட்டெ கலந்துகிட்டப்போ அவ்வே திருவாரூருக்கோ ஆர்குடிக்கோ எடம் மாற ஒத்துக்கிடல. ஆர்குடியும், திருவாரூரும் அவ்வே காலேஜூ படிச்ச டவுனா இருந்ததால கூட படிச்சப் பொண்ணுகள யாராச்சியும் பாக்குற மாதிரியான சந்தர்ப்பம் வரும்ன்னும், அப்பிடி அவுங்கள மொகம் கொடுத்துப் பாக்குறாப்புல வந்துப்புட்டா, குடும்ப வாழ்க்கையப் பத்தி கேள்வி வந்தா அதுக்கு என்னத்தெ பதிலெச் சொல்றதுன்னு தடுமாறுனபடி அதெப் பத்திக் கேட்டா. கும்பகோணம், தஞ்சாவூரு, திருச்சின்னு தான் அறிஞ்ச சனங்க கண்ணு படாம எதாச்சும் ஓர் எடத்துக்குப் போவணுங்ற மாதிரிக்குச் செய்யு தன்னோட எண்ணத்தெ சொன்னா. பக்கத்து டவுனு வேணாம்ன்னா தொலைதூரத்துல எங்கயாவது கொண்டுப் போயி வெச்சா யாரு பாத்துக்கிறதுங்ற யோசனெ சுப்பு வாத்தியார்ர தொளைச்சி எடுத்தது.

            ஆர்குடி, திருவாரூரு டவுன தாண்டுனா தஞ்சாவூரு ஒரு டவுனு. அத்து லாலு மாமா இருக்குற டவுனு. அங்கக் கொண்டுப் ‍போயி வெச்சி லாலு மாமா எதாச்சும் கோளாறு கொடுத்துப்புட்டா அதெ எப்பிடிச் சமாளிக்கிறதுன்னு யோசனெ பண்ணிட்டுக் கெடந்தாரு சுப்பு வாத்தியாரு. திருவாரூர்ர தாண்டி கெழக்கால வந்தா நாகப்பட்டிணம் கூட தெரிஞ்ச டவுனுதாம். அங்கக் கோண்டுப் போயி வைக்குறதுக்கு தெரிஞ்ச ஆளு யாருமில்லங்றதால அந்த யோசனையும் அவருக்குச் சரிபட்டு வர்றாப்புல தோணல. கும்பகோணங்றதும் கொண்டு வைக்குறாப்புல டவுன்னுதாம். அங்கத்தாம் நாது மாமாவோட ஊரான கோவில்பெருமாள் பக்கத்துல இருக்குறதால அங்கக் கொண்டுப் போயி வெச்சி அப்பிடியே கூட செய்யு விருப்பப்பட்டபடி எதாச்சும் படிக்குறாப்புல பண்ணலாம்ன்னு நெனைச்சாரு. எல்லாம் நெனைப்பாவும், யோசனையாவுந்தாம் ஓடிட்டு இருந்துச்சு. அவரால ஒரு முடிவுக்குத் தெடமா நின்னு வர்ற முடியல. மனசு பாதிக்கப்பட்ட பொண்ணு படிப்புல எப்பிடி நாட்டமா இருந்து படிக்க முடியுங்ற சந்தேகமும் அவருக்கு இருந்துச்சு. ஆன்னா செய்யு படிக்கிறதெ விரும்புனா. தாம் படிக்க ஆரம்பிச்சா எல்லாம் மாறிடுங்றாப்புல நம்புனா.

            இருந்தாலும் இருக்குற இருட்டுல, இத்து ஒரு சிறு வெளிச்சமா தோணி, சுப்பு வாத்தியாரு மனசுல கொஞ்சம் நம்பிக்கெ உண்டாயிருந்துச்சு. படிப்புல பொண்ணோட மனசெ கொண்டுப் போயி மாத்திப்புடலாம்ன்னு அவரு தெடமா நம்பி எறங்கலாம்ன்னு நெனைச்சிக்கிட்டாரு. விகடுவும் அதுக்குத் தகுந்தாப்புல தங்காச்சிய எம்பில் படிக்க வைக்கணும்ன்னு பிடிவாதமா நின்னாம். செரித்தாம் இப்போதைக்கு இப்பிடிப் போறதுதாம் சரின்னு சுப்பு வாத்தியாரும் முடிவெ பண்ணிட்டுக் காரியத்துல எறங்குனாத்தாம் சிலது பிடிபடும்ன்னு நெனைக்க ஆரம்பிச்சாரு. பொண்ணோட படிப்புச் சம்பந்தமா வெசாரிச்சி வைக்கணும்ன்னு அதெப் பத்தி தெரிஞ்சவங்கிட்டெ பேச ஆரம்பிச்சாரு. ஒரு நாளு கோவில்பெருமாள் நாது மாமா வூட்டுக்கும் போயி வெவரத்தையெல்லாம் சொல்லி, அவுங்களோட மனநெல இதெப் பத்தி எப்பிடி இருக்குங்றதெ நூலு பிடிச்சிப் பாத்துட்டும் வந்தாரு. ஒரு கஷ்ட காலத்து மச்சாங்காரனோட பொண்ண வெச்சிப் பாத்துக்கிறதுல நாது மாமாவுக்குச் சந்தோசம். அண்ணங்குடும்பம் அல்லாடுற நேரத்துல அண்ணன் மவளெ அனுசரணையா பாத்துக்குறதுல நாகு அத்தைக்கும் சந்தோஷம். “கொண்டாந்து வுடு பாத்துப்பேம்!”ன்னு ரண்டு பேத்தும் ஒத்த கொரல்ல சொன்னாங்க.

            இதுக்கு எடையில ரெண்டாவது பஞ்சாயத்து முடிஞ்சு அதுக்குள்ள இருவது நாளு ஓடியிருந்துச்சு. அன்னிக்குக் காலையில பரமுவோட அப்பா, சொட்டெ கண்ணுராசு, சின்னுவோட அப்பா, பட்டறைக்காரரு பட்டாமணி, இன்னும் சில கிராமத்து ஆளுங்க கூட்டமா சுப்பு வாத்தியாரு வூட்டுக்கு வந்தாங்க. பரமுவோட அப்பாதாம் பேச ஆரம்பிச்சாரு. "வாத்தியாரே! தப்பா எதுவும் நெனைச்சிக்கக் கூடாது. எஞ்ஞளால வடவாதிப் பக்கமே போவ முடியல. முருகுவும், அவரோட மவ்வேன் சித்துவீரனும் பஞ்சாயத்தெ முடிச்சி வையுங்கன்னுப் போட்டு பிடுங்கி எடுக்குறாப்புல. எஞ்ஞளால பதிலெ ஒண்ணும் சொல்ல முடியல! இன்னிக்கு ராத்திரி மூணாவதா ஒரு பஞ்சாயத்தெ பேருக்கு வெச்சி முடிச்சி வுட்டுப்புடுறதுன்னு முடிவு பண்ணிருக்கேம்!"ன்னாரு.

            "அதாங் பஞ்சாயத்துல எஞ்ஞ யக்கா மவ்வேம் சொல்லிட்டானே! ஒறவுக்குள்ள நாஞ்ஞ பெரியவங்கப் பாத்துப் பேசி முடிச்சிக்கிடுறதா? பெறவென்ன அதெ தாண்டி மேக்கொண்டு பஞ்சாயத்து? நீஞ்ஞ வெச்சப் பஞ்சாயத்தால எம் பொண்ணு பொழைச்சது மறுபொழைப்புன்னு ஆயிப் போச்சு. எப்பிடியோ காபந்துப் பண்ணிக் கொண்டாந்து வெச்சிருக்கிறேம். நாஞ்ஞ எஞ்ஞ குடும்பத்தோட நல்லா இருக்கணும்ன்னா இன்னொரு பஞ்சாயத்துன்னுப் பேசிட்டு வூட்டுப் பக்கம் வாரதீயே! நாசமா போவணும்ன்னு நெனைச்சா தாராளமா இன்னொரு பஞ்சாயத்தெ வையுங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு நொந்துப் போயி.  

            "அதென்ன கெராமத்த அவமதிக்குறாப்புல பேசுறது? ஒஞ்ஞப் பொண்ண ஒழுங்காப் போயி குடித்தனம் பண்ணா யாரு பஞ்சாயத்துன்னு வர்றப் போறா? வேத்தூருக்கார்ரேம் நம்மள மதிச்சு பஞ்சாயத்துல பிராதுன்னு ஒண்ணு கொடுத்திருந்தா அதெ தீத்து வைக்க வேண்டியது கிராமத்துல இருக்குற முக்கியஸ்தர்களோட கடமெ. இந்தக் கிராமத்துல இருந்தா அதுக்கு ஒத்துழைச்சுத்தாம் ஆவணும். ஒத்துழைக்க முடியாதுன்னா வேற கிராமத்துலப் போயி குடியிருந்துக்கிட வேண்டித்தாம். பஞ்சாயத்துன்னு வெச்சி வரலன்னா வெச்சுக்கோங்க, இந்த வூட்ட மொதல்ல கெராமத்துல வெலக்கி வையுங்க. கோயிலு, திருவிசாவுல இந்தக் குடும்பத்த வெலக்குங்க. கெராமத்துல யாரு வூட்டு தேவ திங்களுக்கு இந்த வூட்டுலேந்து யாரும் வாரணும்ன்னு சொல்லப்படாது. இந்த வூட்டு தேவ திங்களுக்கும் யாரும் போவக் கூடாது. நீஞ்ஞ பாட்டுக்கு தனித்தீவா இருந்துக்கிடறதா யிருந்தா பஞ்சாயத்தா மசுரான்னு போயிட்டு இருக்குங்க!"ன்னாரு பட்டறைக்காரரு பட்டாமணி ரொம்ப காட்டமா.

            "பஞ்சாயத்தெ மதிக்கலன்னு யாரும் சொல்லல. எங் குடும்பத்து நெலமெ அப்பிடி இருக்குன்னு சொல்ல வர்றேம். அப்பிடிப் பஞ்சாயத்துல வந்துதாம் நாம்ம எங் குடும்பத்தோட சின்னாபின்னாபட்டு நிக்கணும்ன்னா நமக்கு வேற வழியில்ல. ஏன்னா நமக்குக் கிராமம் வேணும். வந்து நிக்குறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஒடைஞ்சாப்புல.

            "வாத்தியார்ரே! இந்தப் பஞ்சாயத்துல பேச்சுல்லாம் ஒண்ணும் கெடையாது. யோசிச்சுப் பாத்தாச்சு. முங்கூட்டியே எழுதி வெச்சிடுறேம், இதாங் பஞ்சாயத்து முடிவுன்னு. அதெ அஞ்ஞ வெச்சு ஒரு வாசிப்ப வாசிச்சுக் காட்டிப்புட்டு இதாங் பஞ்சாயத்து முடிவுன்னு சொல்லிப்புடுறேம். நீஞ்ஞளும் ஒரு கையெழுத்தப் போட்டுக் கொடுத்துப்புட்டு வந்துப்புடுங்க. கிராமத்துக்கும் பஞ்சாயத்துக்கும் ஒரு கெளரவமா போயிடும் பாருங்க. நாளைக்கி கிராமத்துல பிராத கொடுத்தேம், அதெ முடிச்சு வைக்கலன்னு ஒருத்தெம் நாக்கத் தூக்கிப் பேசிப்புட முடியாது பாருங்க!"ன்னாரு சொட்டெ கண்ணுராசு ரொம்ப நைச்சியமா.

            "பஞ்சாயத்துக்கு வர்றதெப் பத்தி ஒண்ணுமில்லே. பஞ்சாயத்துல எதுவும் கலாட்டா ஆயிடப் படாது. தேவையில்லா வாயிச் சண்டெ, கையிச் சண்டென்னு எதுவும் இருக்கக் கூடாது. தண்ணியப் போட்டுட்டு அவனவனும் ஆளாளுக்குப் பேசுனா சுத்தப்படாது. இன்னிக்கு ராத்திரியே பஞ்சாயத்துன்னா நாம்ம சொந்தபந்தத்தச் சொல்லி அழைக்குறதுல்லாம் முடியாதுப் பாத்துக்கோங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.  

            "ரண்டு பக்கத்துலேந்தும் யாரையும் அழைச்சிட்டு வாரக் கூடாதுன்னு கண்டிஷனா சொல்லியாச்சு. போன தடவெ அப்பிடி வுட்டுத்தாம் ஆளாளுக்கு ஆளுகள அழைச்சாந்து ரணகளத்த பண்ணிப்புட்டீயே. இந்தப் பஞ்சாயத்துல அந்நியம்ங்ற யாரும் கெடையாது. நொழையவும் வுட மாட்டேம். அவுங்க தரப்புலேந்து ரண்டு பேரோ, மூணு பேரோ ஒஞ்ஞ தரப்புலேந்த அதெ மாதிரிக்கி வந்துப்புட்டா போதும். நீஞ்ஞ இவ்ளோ பயப்படுறதால, ஒஞ்ஞ திருப்திக்குச் சொல்றேம். ஆம்மாம் கெராமத்துல ஒஞ்ஞள பஞ்சாயத்து கைவுட்டுப்புட்டதா நாளைக்கி ஒரு பேச்சு வந்துப்புடக் கூடாது பாருங்க. அதால பஞ்சாயத்துல என்னத்தெ எழுதணுங்றதெ ஒரு சீட்டுல எழுதிக் கொடுத்துப்புடுங்க. அதெ அப்பிடியே பஞ்சாயத்து முடிவாவே எழுதிப்புடுறேம்! யிப்போ ஒஞ்ஞளுக்குப் பஞ்சாயத்துல திருப்திதானா?"ன்னாரு பரமுவோட அப்பா.

            "நம்மளயும் மதிக்குறீங்றது சந்தோஷம். அதுக்கு நாம்ம கட்டுப்பட்டுத்தாம் ஆவணும். சமூகத்துல தனி மனுஷனா வாழ முடியாது. ஒஞ்ஞ முடிவுக்கு நாம்ம ஒத்துக்கிடுறேம். அதாச்சி என்னத்தெ எழுதணும்ன்னா இதாங் விசயம். எம் பொண்ணோட உடல்நலமும் சரித்தாம், மனநலமும் சரித்தாம் கலியாணங் கட்டி கொடுத்த நாள்லேர்ந்து சரியில்ல. அவ்வே மனசளவுலயும், ஒடம்பு அளவுலயும் ரொம்ப பாதிக்கப்பட்டு வந்திருக்குற காரணத்தால அதெயெல்லாம் சரிபண்ணி வுட்டுப்புட்டுத்தாம் மேக்கொண்டு பேசுறதப் பத்தி முடிவெ பண்ணணும். அது வரைக்கும் பொண்ணு எஞ்ஞ வூட்டுலத்தாம் எஞ்ஞ கவனிப்புலத்தாம் இருக்கும். இத்து சம்பந்தமா இனுமே கிராமப் பஞ்சாயத்து எந்த முடிவையும் பண்ட வாணாம். அதெ நாங்க ஒறவுகளுக்குள்ள இருக்கற பெரியவங்கள வெச்சிப் பேசிக்கிடுறேம்! இதாங் விசயம். இதெ போன பஞ்சாயத்துலயே வெளக்கமுறையா சொல்லியாச்சு. அதெ எழுதி கையெழுத்தும் வாங்கியாச்சு. அதெயே மேக்கொண்டு மூணாவதா ஒரு பஞ்சாயத்தப் பண்ணி என்ன குட்டிச்சுவர்ர பண்டப் போறீயளோ? அத்து நமக்குத் தெரியல. இருந்தாலும் வூடு தேடி வந்து கேக்குறப்ப நம்மாள மறுக்க முடியல. அதே நேரத்துல அஞ்ஞ எதாச்சும் ஏடாகூடமா ஆச்சு அதுக்குக் காரணம் நீஞ்ஞ வைக்கப் போற பஞ்சாயத்துதாம்ங்றதயும் இந்த நேரத்துல சொல்லிக்கிடுறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. அதே கேட்டதும் பரமுவோட அப்பா சுப்பு வாத்தியாரு கட்டிக்கிட்டு தோளுல்ல ஆறுதலா தட்டிக் கொடுத்தாரு. “கெட்ட வெதமா எதுவும் நடந்துடாது வாத்தியாரே!” ன்னாரு சுப்பு வாத்தியார்ட்ட. "யப்பா சொன்னதெ அதெ அப்பிடியே ஒரு காயிதத்துல எழுதிக் கொடுடா விகடு!"ன்னாரு அப்படியே விகடுவப் பாத்து. விகடுவும் சுப்பு வாத்தியாரு சொன்ன சங்கதிய வெச்சி காயிதத்துல எழுதிக் கொடுத்தாம். அதெ வாசிச்சிக் காமிச்சிட்டு, சங்கதி சரியாங்றதெயும் பரமுவோட அப்பா அந்த எடத்துல உறுதிப் பண்ணிக்கிட்டாரு. சுப்பு வாத்தியாரும் அதெ சரின்னு சொன்னாரு.

            விகடு எழுதுன காயிதத்த பரமுவோட அப்பா கையில வாங்கி சொட்டெ கண்ணுராசுகிட்டெ கொடுத்தாரு. அதெ அவரு கையோட கொண்டாந்த பஞ்சாயத்து நோட்டுக்குள்ள வெச்சிப் பத்திரம் பண்டிக்கிட்டாரு. "அப்பிடில்லாம் ஒண்ணும் ஆவாது வாத்தியார்ரே! யாருக்கும் பேசுறதுக்கு எந்த எடமும் கெடையாது. நாஞ்ஞ பேசுறது மட்டுந்தாம். பஞ்சாயத்து ஆரம்பிச்சு ஒரு பத்து நிமிஷம் கூட இருக்காது. ஒடனே முடிச்சிக் கலைச்சி வுட்டுப்புடுவேம்! வேறொண்ணுமில்ல. பஞ்சாயத்துல அப்பிடி ஏடா கூடமா எதாச்சும் நடந்தா எஞ்ஞள செருப்பால முச்சந்தியில நிக்க வெச்சி அடிங்க!"ன்னாரு சொட்டெ கண்ணுராசு.

            "இந்தாருங்க வாத்தியாரே! ராத்திரிப் பஞ்சாயத்துக்கு யாரும் வர வாணாம். நீஞ்ஞ மட்டும் வாத்தியார்ரே வந்தா போதும். நீஞ்ஞ ஒரு விசயத்தெ ஞாபவத்துல வெச்சிக்கிடணும். நம்ம கிராமத்துல யாரு வந்து என்னத்தெ பண்ணிட முடியுங்றீயே? நாஞ்சல்லாம் அதெப் பாத்துப்புட்டு ச்சும்மாவா இருந்துடப் போறேம்? போன தடவெ மாரில்லாம் பஞ்சாயத்தப் போட்டு இழுத்துக்கிட்டுக் கெடக்க மாட்டேம்!"ன்னாரு சின்னுவோட அப்பா. 

            இப்பிடி ஆளாளுக்கு எல்லாரும் பேசிட்டுக் கெளம்பிட்டாங்க. அவுங்க கெளம்பிப் போன பெற்பாடு விகடு அப்பங்காரர்ட்டெ கேட்டாம். "இவுங்க சொல்றதெ நம்பி பஞ்சாயத்துக்குப் போறதெ வுட போவாமலே இருக்கலாம்ப்பா!"ன்னு.

            "கிராமம் வாணாம்ன்னா அப்பிடிப் பண்ணலாம். நமக்குப் பெறவு ஒங் குடும்பம் இருக்கு. இந்த ஊர்ல நீயி இருந்தாவணும். அதெயெல்லாம் யோஜிச்சாவணும். தங்காச்சி தூக்குப் போட்டுக்கிட்டான்னு கேள்விப்பட்டதும் மின்னாடி வந்து நின்னுது, ஒடம்புக்கு முடியாமப் போயி ஏயெம்ஸியில சேத்தப்போ தொணைக்கு வந்த நின்னதுன்னு அத்தனையையும் யோஜிச்சுப் பாக்க வேண்டிக் கெடக்கு. அத்தோட இப்பிடித்தாம் பேசப் போறேம்ன்னு வந்து நம்மகிட்டெயே நமக்குச் சாதவமா எழுதி வாங்கிட்டுப் போறவங்களோட பஞ்சாயத்துக்குப் போவலன்னா அசிங்கமாப் போயிடும்டாம்பீ! இத்து நம்ம ஊரு. நம்ம எடம். நம்ம எடத்துல நமக்குத்தாம்டாம்பீ பெலம். அவனுக என்னத்தெ பண்ணிட முடியும்? நம்மள பேச வுட்டுப்புட்டோ, அடிக்க வுட்டுப்புட்டோ கிராமத்துல பாத்துக்கிட்டுச் சும்மா இருந்துப் புடுவாங்களா? அப்பிடில்லாம் நடக்காது. அதெல்லாம் வீண் கற்பனெதாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "என்னவோ நமக்கு இத்துப் புரியல. அநாவசியமா ஒரு பஞ்சாயத்தெ வைக்குறாப்புலத்தாம் தெரியுது. நல்லது நடக்கும்ன்னு நம்பிக்கெயில்ல. ரண்டாவது பஞ்சாயத்து முடிஞ்சி தங்காச்சிய வெச்சிகிட்டு நாம்ம பட்ட கஷ்டம் சொல்லி மாளாது. அதெ நெனைச்சித்தாம்பா சொல்றேம். அதெ தெரிஞ்சும் மூணாவதா ஒரு பஞ்சாயத்தெ வெச்சி எதாச்சும் ஆச்சுன்னா அதெ எப்பிடிச் சமாளிக்குறதுன்னு தெரியலையே?"ன்னாம் விகடு.

            "நாம்ம ஒண்ணும் பேசிட்டு நிக்கப் போறதில்ல. கூப்புட்டு வுட்ட ஒடனே போவப் போறேம். போயி பொண்ண அனுப்ப இஷ்டமில்லன்னு ஒத்த வார்த்தெதாம் அதெ சொல்லி முடிச்சிப்புட்டு எழுதுன காயிதத்துல கையெழுத்த வெச்சிப்புட்டு வந்துப்புடுறேம்! வேறொணணும் சொல்ல மாட்டேம். இதெ சொன்னமா வந்தோமா, வூட்டுக்குள்ள பூட்டப் போட்டு படுத்தமான்னு இருப்பேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. மேக்கொண்டு அதெப் பத்தி என்னத்தெ பேசுறதுன்னு தெரியாம சரித்தாம்ன்னு அத்தோட வுட்டுட்டாம் விகடு.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...