செய்யு - 286
"இத்து கல்லாணம். ஆயிரம் காலத்துப்
பயிரும்பாங்க. ஒம் மனசுல ன்னா இருக்குன்னு தெரியாம நாம்ம பேசிடப்படாது பாருடாப்பா!
ஒம்மட அண்ணேம், யண்ணி பேசுறாங்களேன்னு அதெ வெச்சியும் சொல்லப்படாது. ஒங்க அத்தாங்காரரு
கேட்கறாரேன்னு வெச்சும் சொல்லப்படாது. யக்காப் பொண்ண கட்டிக்கலன்னா அஞ்ஞ நெலமை என்னாவும்னு
நெனைச்சும் சொல்லப்படாது. ஒம்மட மனசுல ன்னா இருக்குதோ அதெத்தாம் சொல்லணும். அதுக்குத்தாம்
முடிவு. அதாங் கோயிலு பக்கமா கொண்டாந்திருக்கேம். நீதானடப்பா யப்பாடி ஒம்மட மனசுல
உள்ளதெ சொல்லணும். பாடஞ் சொல்லிக் கொடுத்த வாத்திக் கேக்குறானேன்னு நெனைச்சிக்கிட்டு
அதுக்குத் தகுந்தாப்புலயும் சொல்லப்படாது. மனசுல ன்னா இருக்கோ அதுத்தாம். அதத்தாம்
சொல்லணும். வேற சொல்லப்படாது. சந்நிதிக்கு முன்னாடி மனசுல ன்னா இருக்கோ அத மட்டுந்தாம்
சொல்லணும்!"ங்றாரு விகடபிரசண்டரு வாத்தியாரு.
"யண்ணன் யண்ணிக்காகச் சொல்லலங்கய்யா!
நாம்ம படிச்சதுல, படிப்புல அதாஞ் சொல்றாங்க. சொந்த பந்தத்துல கட்டிக்கிறதெ விட, அதுவும்
நெருங்குன சொந்தத்துல கட்டிக்கிறதெ விட பெறத்தியில கட்டிக்கிறதுதாங் பொறக்குற கொழந்தைக்
குட்டிகளுக்கு நல்லதுன்னு சொல்றாங்க. யக்கா பொண்ண கட்டிக்கிறதுல ஒண்ணும் பெரச்சனையில்லங்கய்யா!
கட்டிட்டுப் பொறக்குற கொழந்தைக் குட்டிங்க கொறையா பொறந்துப் போச்சுன்னா காலத்துக்கும்
அதெ நெனைச்சிக்கிட்டு கஷ்டப்படணும்னு பாக்குறேம். யக்கா பொண்ணும் படிச்சப் பொண்ணு.
நல்ல கொணம், அறிவு. அதெயும் வாத்தியார் டிரெய்னிங் படிக்க வெச்சி வாத்தியாராவே ஆக்கிப்புடலாம்.
அதெல்லாம் வாணாங்ற மாரித்தாம் மனசுக்குப் படுது. அதுவும் இல்லாம இப்டி பொண்ணு கொடுக்கணுங்ற
சூழ்நிலை வருமுன்னு யோசிச்சிருந்தா அவரு நெலபுல விவகாரத்துல எறங்கியிருப்பாரா? என்னவோங்கய்யா!
இந்த நெலபுல விசயத்துல எஞ்ஞ யண்ணன் யண்ணி நடந்துகிட்டதும் பிடிக்கல. அஞ்ஞ வேலங்குடியில
அத்தாங்காரவங்க ரண்டு பேரும் நடந்துகிட்டதும் பிடிக்கல. இப்டில்லாம் ஆவும்னு தெரிஞ்சித்தாம்
ஆண்டவேம் நம்மள இப்டி சொந்த சனம் அண்டா அளவுக்கு ஒழுகச்சேரியில வேல கெடைக்குற மாரி
பண்ணிருக்குப் போலருக்கு!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
"யப்பாடா யப்பாடி! நீஞ் சொல்றதுல
ஒரு ஞாயம் இருக்கு. ஆளாளுக்கு ஒருத்தரு மேல ஒருத்தர் இருக்குற கோவத்துக்கு ஆடுறாங்க.
கோவம் போயிடுச்சின்னா ஆதாயம் வந்திடுச்சின்னா கூடிக்குவாங்க போலருக்கு. அதாங் நம்ம
மனசுல பட்டிச்சி. அத்தாம் ஒன்னய தனியா கூப்டு ஒம்மட மனசுல உள்ளத கேட்டுக்கலாம்னு தெரிஞ்சிக்கக்
கொண்டாந்தேம். இத்து கல்லாண வெசயம். ஆயுசுக்கு வரப் போறது. பின்னாடி நம்மட வாத்தியாரு
இப்டிப் பண்ணிப்புட்டாரேன்னு நெனைக்கப்படாது பாரு! ஒன்னய கெடுதியில கொண்டு போயி தள்ளிட
மாட்டேம். இருந்தாலும் ஒங்கிட்ட ஒரு வார்த்தைக் கேட்டுப்புட்டா தெம்பா ஒரு முடிவுல
எறங்கலாம் பாருடப்பா!"ங்றாரு விகடபிரசண்டரு.
"பொண்ணுக்குப் படிப்பு இல்லாட்டியும்
பரவால்ல. கொணமா வூட்டப் பாத்துக்கிட்டா போதும். நாம்மத்தாம் சம்பாதிக்கிறேம். பெறவு
ன்னா? காலத்த ஓட்டிப்புடுவேம்ங்யா!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
"பொண்ணு கொணமா இல்லாட்டியும் நீயி
கொணமா மாத்திப்புடுவே யப்பாடா! பொண்ணு பெறத்தியாத்தான்னு முடிவு ஆயிடுச்சி. அதாஞ்
யோஜிக்கிறேம்! இஞ்ஞ ஒண்ணும் பொண்ணு இருக்குற மாரி தெரியல! நம்மட சங்கம் தெரியும்ல!
தஞ்சாரூ ஜில்லா மொதலியாரு சங்கம். நாம்ம ரிட்டையர்டு ஆனதும் அதுல பிடிச்சி நம்மள கொண்டுப்
போயிட்டானுவோ நம்ம ஆளுக. அதுக்கு ஆளு சேக்க போனப்ப ரண்டு மூணு எடத்துல ஒம்மட வகையறாவுல
உள்ள ஆளுங்கள பத்திப் பேச்சு வந்திருக்கு. செரி நாம்ம வெசாரிச்சிப் பாக்கிறேம். பாத்து
காலா காலத்துல ஆவ வேண்டியத முடிச்சிட வேண்டியதுத்தாம்!"ங்றாரு விகடபிரசண்டரு வாத்தியாரு.
விகடபிரசண்டரு வாத்தியாருக்கு மொதலியாரு
சங்கத்துக்காக வடவாதி வந்தது நல்லா ஞாபவம் இப்போ ஞாபவம் வருது. வடவாதி சர்க்கரை ஆலையே
அவங்க வகையாறவுல வர்ற மொதலியாரோட ஆலைத்தாம். அவர்ர போயிப் பாத்தா சங்கத்துக்கு பலமா
இருக்கும்னு கும்பகோணம், குடவாசல்ல இருந்த வகையறாக்களைத் திரட்டிட்டு வந்து சர்க்கரை
ஆலை மொதலியார்ர பாக்குறப்ப பழக்கமானவர்தாம் வடவாதி மில்லுக்காரரு. அவரும் ஒரு மொதலியாரு.
சர்க்கரை ஆலை மொதலியார்ர பாக்க வந்த அன்னைக்கு சாப்பாடு எல்லாம் மில்லுக்காரரு வூட்டுலத்தாம்
நடந்திருக்கு. சாப்பிட்டு முடிச்சி பேச்சு அப்பிடி இப்பிடின்னு சுத்தி வந்தப்ப வைத்தி
ஆச்சாரியப் பத்தி ஓடியிருக்கு.
மில்லுக்காரரு மில்லு வெச்சு நெல்லரைச்சு,
மொளகா மல்லி அரைச்சு, மாவரைச்சுக் கொடுக்குறதோட நெல்லு மூட்டைகளப் பிடிச்சி விக்குற
யேவாரியாவும் இருந்தாரு. வைத்தி தாத்தாவோட வயல்கள்ல வெளையுற நெல்லு மூட்டைகளப் பிடிக்கிறது,
கணக்கு வெச்சிக்கிறதெல்லாம் மில்லுக்காரருதாம். இந்த வடவாதி மில்லுக்காரர்ர ஒங்களுக்கு
ஞாபவம் இருக்கும்னு நெனைக்கிறேன். முருகு மாமாவோட பொண்ணு தேசிகா பிரச்சனையில பஞ்சாயத்துப்
பேசி விட்டவரு அவருதானே. இப்போ ஒங்களுக்கு ஞாபவம் வந்திருக்கும்னு நெனைக்கிறேன்.
யாரு யார்கிட்டயோ நெல்லு மூட்டைகளப் பிடிச்சாலும்
வைத்தித் தாத்தா மில்லுக்காரருக்கு விசேசமான ஆளு. அதுக்குக் காரணம் இங்க சுத்துப்பட்டியில
வெளையுற நெல்ல மில்லுக்காரர்ட்ட போடுறதுல ஒரு அர்த்தம் இருக்கு. ஆனா எட்டுக்குடியில
வெளைஞ்ச நெல்லை அங்கயிருந்து வண்டிக் கட்டிட்டு இவருகிட்டப் போட்டா அது எப்பிடியிருக்கும்?
எட்டுக்குடி பக்கத்துல வெளைஞ்ச நெல்ல அங்க உள்ள யேவாரிகிட்டப் போடாம, நம்ம மேல எம்மாம்
மதிப்பு இருந்தா இங்க கொண்டாந்து போடுவாருன்னு மில்லுக்காரருக்கு வைத்தி தாத்தா மேல
ஏகத்துக்கும் பிரியம் உண்டாயிப் போயிடுச்சி. ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தரு குடும்ப
விசயங்கள பேசிக்கிற அளவுக்குத் தோஸ்த்தா போயிட்டாங்க.
வைத்தி தாத்தா திருத்துறைப்பூண்டிக்காரர்ங்றதும்,
சாமியாத்தவா கட்டிக்கிட்டு இங்க ஜாகையா வந்தவர்ங்ற சங்கதியும் ஒங்களுக்குத் தெரிஞ்சதுதாம்.
அவருக்கு அப்பங்காரரு சொத்துங்ற பூர்வீகத்துல வந்த நெலபுலங்க எட்டுக்குடியிலத்தாம்
இருந்துச்சு. அந்த நிலபுலம்ங்க சுமாரா எட்டு மா அளவுக்கு இருக்கும். அந்த நிலபுலத்தைக்
கிட்டத்தட்ட கடைசீ வரைக்கும் விக்காம அவரு வெவசாயம் பண்ணிட்டு இருந்தாரு. கடைசீ வரைக்கும்ன்னா,
குமரு மாமா வெளிநாடு போவணும்னு வந்து நிக்குற வரைக்கும். அது அப்டி நின்னப்பத்தாம்
அந்த நெலபுலத்தையெல்லாம் வித்து காசுபணத்த தயாரு பண்ணிக் கொடுத்தாரு. அதுவரைக்கும்
அந்த நிலபுலம்ங்க அவரு கையிலத்தாம் இருந்துச்சு. எப்படியும் அந்த நிலபுலம்ங்க அறுவதுலேந்து
எம்பது மூட்டை வரைக்கும் மகசூலு காணும். அதெ மூணு மாட்டு வண்டியில அங்கேயிருந்து வண்டிச்சத்தமெல்லாம்
கொடுத்து வடவாதிக்குத்தாம் கொண்டு வருவாரு வைத்தி தாத்தா. அந்த மூணு மாட்டு வண்டிகள்ல
இருக்குற மாடுங்களும் எட்டுக்குடிய தாண்டி வெரட்டுனா வண்டியோட நேரா வந்து மில்லுக்காரரோட
மில்லுல நிக்குங்ற அளவுக்கு வருஷா வருஷம் அதே வண்டிங்கத்தாம் வரும்.
வடவாதிக்கும், எட்டுக்குடிக்கும் எப்படியும்
பத்து பன்னெண்டு மைலு தூரத்துக்குக் கொறைவு இருக்காது. அம்மாம் தூரத்தையும் அவரு சைக்கிள்லயே
போயித்தாம் பாத்துட்டு வருவாரு. அவரோட சைக்கிளப் பத்தித்தாம் ஒங்களுக்குத் தெரியும்.
நல்லா சைக்கிளா வெச்சிக்க மாட்டாரு. ஒட்டை ஒடைசலான சைக்கிள்தாம். டயருல்ல காத்து அரையும்,
கொறையுமாத்தாம் இருக்கும். டயருல்ல காத்தே இல்லன்னாலும் இவருக்கு மட்டும் எப்படியோ
சைக்கிளு ஓடும். சைக்கிளு பிரேக்கு சுத்தமா பிடிக்காது. அத ஒரு பேச்சுக்குக் கேட்டாக்கா,
பிரேக் இல்லன்னத்தாம் சைக்கிளு வேகமா போவும்பாரு அலட்சியமா. உக்கார்ற சீட்டுல ஸ்பாஞ்சு
வெச்ச கவர்ர வாங்கி மாட்டியிருக்க மாட்டாரு. சீட்டுல உக்கார்றப்பயே சீட்டு சூத்துல
குத்தும். அந்த சீட்டுல உக்காந்துகிட்டு ஒரு பர்லாங் தூரம் போனாக்கா போதும், மனுஷன்
செத்துச் சுண்ணாம்பாப் போயிடுவான். இவரு அந்தச் சைக்களில்லயே எட்டுக்குடி வரைக்கும்
அசால்ட்டா போயி வெதை வெதைப்பு, நாத்து நடவு, களைப் பறிக்கிறது எல்லாத்தையும் ஒரு மேம்பார்வை
பாத்துட்டு வருவாரு. அந்த மேம்பார்வை எதுக்குன்னா பார்த்த வேலைக்குப் பணத்தைக் கொண்டு
போயி கொடுத்துட்டு வர்றதுக்குத்தான். இவருக்கு வேலை பார்த்தா காசு பணம் டான் டான்னு
வரும்ங்றதால எட்டுக்குடியில இருந்த வேலையாளுளும் வேலைய கண் மாரி முடிச்சி வெச்சிருப்பாங்க.
காசு பண விசயத்துல ரொம்ப துல்லியமா இருப்பாரு.
வைத்தி தாத்தா இரும்பு மனசுக்காரரு. எந்த
விசயம் பேசுனாலும் உள்ள போவுமே தவிர வெளியில வராது. ரொம்ப ஆட்களிட்டயும் பழக்கம்
வெச்சிக்க மாட்டாரு. ஒரு பிரச்சனைன்னா முடிவுல்லாம் மின்னலு வேகத்துல எடுப்பாரு. எவ்ளோ
நெருக்கமான சொந்த பந்தம்னாலும் சரி, சிநேகிதம்னாலும் சரி வந்துப் பாக்குறதுன்னா ஆடிக்கொரு
தரம், அமாவாசிக்கு ஒரு தரம்தாம் வந்துப் பார்ப்பாரு. இந்தக் குணமெல்லாம் மில்லுகாரருக்கு
ரொம்பப் பிடிச்சிப் போயி தன்னோட தோஸ்த்து வட்டாரத்துல வைத்தித் தாத்தாவையும் வெச்சிக்கிட்டாரு.
இவுங்க ரெண்டு பேரும் சந்திச்சுப் பேசி ஊர்ல ஒருத்தரும் பாத்திருக்க மாட்டாங்க. நெல்ல
போடக் கூட வைத்தி தாத்தா நேர்ல போவ மாட்டாரு. நெல்லு மூட்டைங்க ஏத்துன வண்டிப் பாட்டுக்கு
மில்லுக்குள்ள போவும். நெல்லு மூட்டைகளப் போட்ட பணத்தை முருகு மாமாத்தாம் மில்லுக்காரர்ட்டேயிருந்து
வாங்கியாந்து வைத்தி தாத்தாகிட்ட கொடுக்கணும்.
அவங்க ரெண்டு பேரும் தோஸ்த்துன்னா ஊருல
ஒரு ஈ, காக்கா கூட நம்பாது. ஆனா அவங்க ரெண்டு பேரும் தோஸ்த்துங்றது அவங்க ரெண்டு பேரு
மட்டும் அறிஞ்ச ரகசியம். எதாச்சிம் விசயம் பேசணும்ன்னா எங்க சந்திப்பாங்க? என்ன பேசுவாங்கங்கிற
விசயமெல்லாம் வெளியில தெரியாது. ரண்டு மூணு மணி நேரம் பேசி முடிச்சித் தீர்க்க வேண்டிய
விசயத்த வைத்தி தாத்தா பத்தே நிமிஷத்துல பேசி முடிச்சிடுவார்ன்னு மில்லுக்காரரு சொல்லுவாரு.
வைத்தி தாத்தா பேச்சு எப்பயும் மட்டையடிப் பேச்சுத்தாம். ரொம்பல்லாம் யோசிச்சிக்கிட்டு
மண்டைய கொழப்பிக்க மாட்டாரு. கொஞ்சமா யோசிச்சாலும் அதுல ரொம்ப தெளிவா யோசிப்பாரு.
அது மில்லுக்காரருக்கு ரொம்பப் பிடிக்கும். மில்லுக்காரருக்கு வைத்தி தாத்தாவோட ரொம்ப
நேரம் பேசிட்டு இருக்கணும்னு ஆசையாத்தாம் இருக்கும். இவரு பேசணுமே? பேசிட்டு இருக்கிறப்பவே
அஞ்சு நிமிஷம் ஆனா போதும், சோலி முடிஞ்சிட்டுல்ல, கெளம்புட்டமா?ம்பாரு வைத்தி தாத்தா.
பேச்சு, பழக்க வழக்கம், வேலை, சோலின்னு எல்லாத்திலயும் சதுரிச்சி விட்ட ஆளு மாதிரித்தாம்
நடந்துப்பாரு வைத்தி தாத்தா.
*****
No comments:
Post a Comment