மூன்றாவது கூட்டத்தின் - பல இடங்களில்
- கித்தாஸ் பண்டாரம் தேவையில்லாமல் - பல இடங்களில்
- குறுக்கிடுகிறார். அவர் குறுக்கிட்டதையும், குறுக்கிட்டு கூறிய கருத்துகளையும் அவர்
கூறிய படியே அவ்விடங்களில் நாவலில் பதிவு செய்யப்படுகிறது.
கித்தாஸ் பண்டாரம் முற்போக்கான சிந்தனைகளில்
வாழ்ந்த கால கட்டங்களில் உயர்கல்வி நிறுவனம் ஒன்றில் தன் மகன் சென்று பயில்வதை மிகவும்
எதிர்த்திருக்கிறார். மகன் மிகவும் வற்புறுத்திக் கேட்ட போது கித்தாஸ் கேட்ட முக்கியமான
கேள்வி, "அங்கே போய் தற்கொலை செய்து கொள்ளப் போகிறாயா?" என்பதுதான்.
இதைக் கேட்ட மகன் சிரித்திருக்கிறான். அப்போது சிரித்த மகன் கடைசியில் அதைத்தான் செய்து
கொள்கிறான். மகனின் தற்கொலையைக் கேட்ட கித்தாஸ் பைத்தியமாகிறார். ஒரே ஒரு மகனைப்
பெற்ற தகப்பன்மார்கள் அப்படித்தான் ஆகிறார்கள். கணவர் பைத்தியம் ஆன செய்தி கேட்டு நெஞ்சைப்
பிடித்துக் கொண்டு உட்கார்ந்த கித்தாஸின் மனைவி சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் பைத்தியம் தெளிந்த கித்தாஸூக்கு
மகனுமில்லை, மனைவியுமில்லை என்ற உண்மை உரைத்த போது, பண்டாரமாகிறார். அதிலிருந்து கித்தாஸ்க்கு
மனஇறுக்கம் பிடித்தமற்றதாகிறது. உலகெங்கும் இருக்கும் மனஇறுக்கத்திற்காக அவர் போராடி
வருகிறார். மனிதர்களைக் கிச்சுகிச்சு மூட்ட அவர் பிரயத்தனப்படுகிறார். அதற்காக எங்கு
கூட்டம் நடந்தாலும் கல்லடிகளைப் பொருட்படுத்தாமல் சொற்பொழிவாற்றுவதில் கவனம் செலுத்துகிறார்.
ஒரு கூட்டத்தில் அவர் மீது அழுகிய முட்டை வீசப்பட்ட போது, அதை கையில் கொடுத்திருந்தால்
ஆம்லெட் போட்டு சாப்பிட்டிருப்பேனே என உருக்கம் காட்டியிருக்கிறார். அதைக் கேட்டு
கலங்கிய அழுகிய முட்டை வீச்சாளர்கள் வீசவிருந்த அழுகிய தக்காளியைக் கைகளில் கொடுத்து
தொக்கோ, சாஸோ செய்து சாப்பிடுமாறு சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.
கித்தாஸ் பண்டாரம் உணர்ச்சிவசப்படும் நேரங்களில்
கீச்சுக் குரலில் ஆங்கிலத்தில் பேசுகிறார். தாய்மொழியாம் தமிழில் உணர்ச்சிவசப்பட்டு
பேசக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். ஆங்கிலத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசினால்
அது உலகளவில் பேசப்படும் என்பது அவரது தீர்க்கம். அதையும் கூட்டம் நடப்பதற்கு இடையே
நீங்கள் கேட்பீர்கள்.
கித்தாஸ் பண்டாரம் சொல்கிறார்,
"வாழ்க்கைக்கு நிரம்ப எதுவும் தேவையில்லை. கொஞ்சமே போதுமானது. கொஞ்சத்தை வைத்துக்
கொண்டே நிறைவாக வாழ முடியும். உண்மையில் கொஞ்சத்தோடு மட்டும்தான் நிறைவாக வாழ முடியும்.
நிறைய வைத்துக் கொண்டு நிறைவாக வாழ முடியாது. கொஞ்சமாக இருப்பவர்கள் பாக்கியவான்கள்.
நிறைய இருப்பவர்கள் அபாக்கியவான்கள். நிறைய வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இந்த
உலகம் அதிக அளவில் மனநல மருத்துவர்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. உங்களுக்கு அந்தக்
கொஞ்சமும் வேண்டாம் என்று நீங்கள் ஒவ்வொருவரும் முடிவெடுத்து விட்டால் இந்த உலகில்
மனநல மருத்துவர்களுக்கு வேலையில்லாமலே போய் விடும்!"
*****
No comments:
Post a Comment