30 Nov 2017

தூக்கத்தில் தூங்கிக் கிடக்கும் மருந்து!

தூக்கத்தில் தூங்கிக் கிடக்கும் மருந்து!
            தூக்கம் பலவற்றையும் மாற்றும் மாமருந்து. அதுவும் உழைத்த பின் கொள்ளும் உறக்கம் இருக்கிறதே அதுதான் சொர்க்கம்.
            "உழைப்பும், ஓய்வும் வைத்தியனின் வாசலை மூடுகின்றன" என்று சொன்ன சிந்தனையாளன் சர்க்கரை நோயாளியாக இல்லாவிட்டால் வாய்க்கு சர்க்கரைதான் போட வேண்டும். அது சரி! இப்படிப்பட்ட வாசகத்தைச் சொன்னவன் எப்படி சர்க்கரை நோயாளியாக இருக்க முடியும்? குளோப்ஜானையே எடுத்து அந்தச் சிந்தனையாளனின் வாயில் போடலாம்.
            தூக்கத்தின் சிறப்பே அதற்கு மூச்சை மாற்றும் வல்லமை இருப்பதுதான். அதுவரை சீரற்ற வகையில் இருக்கும் மூச்சு உறக்கம் கொள்ளும் போது சீராக இயங்க முயற்சிக்கும்.
            உடல் தூக்கத்தில் கிடக்கும் போது வேறு எந்த வேலையும் உடலுக்குக் கிடையாது என்பதால் தனது சீரற்ற பல இயக்கங்களை உடல் அப்போதுதான் சீராக்க முயலும்.
            என்னதான் நாம் உழைத்தாலும், அதாவது காசை மலை மலையாகக் குவிக்க வேண்டும் என்று நினைத்து உறக்கம் பாராமல் உழைத்தாலும், உழைப்பிற்குப் பின் உறங்கும் ஓய்வில் கிடைக்கும் சுகத்தை மலை மலையாக எவ்வளவு காசு கொட்டிக் கொடுத்தாலும் வாங்கி விட முடியாது.
            அதே போல உறங்கி ஓய்வெடுத்த பின் துவங்கும் உழைப்பு கொடுக்கும் உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் தொடர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் சோம்பேறித்தனமான உறக்கம் கொடுத்து விட முடியாது.
            அளவான உழைப்பு, அளவான உறக்கம் - இந்த இரண்டும் அவரவர்க்கு புரிய ஆரம்பித்து விட்டால் அவரவரும் தங்கள் வீட்டில் இருக்கும் மருந்து மாத்திரைகளை தூர எறிந்து விடலாம்.
            அந்த அளவு என்னவென்று சொல்லி விட்டால் உபயோகமாக இருக்கும் என்கிறீர்களா? அந்த அளவு என்பது அவரவர் மட்டுமே அறிந்த ரகசியம். அதை அவரவர்கள் மட்டுமே அறிய முடியும் என்பதே இதன் அதிசயம்.

*****

அந்தக் கவிதை வாசிக்கப்படும்

அந்தக் கவிதை வாசிக்கப்படும்
என்னிடம் நிறைய கவிதைகள் இருக்கின்றன
உன்னிடம் கொடுக்கவும் ஒரு கவிதை இருக்கிறது
அதைப் படிக்க உனக்கு நேரமிருக்கிறதோ
கசக்கி எறியவும் உனக்குப் பொழுது இருக்கிறதோ என்னவோ
கொடுத்தக் கவிதையைப் படிக்கவில்லை என்ற
உறுத்தலோடு நீ இருக்கக் கூடாது என்பதற்காக
உன்னிடமிருந்து மறைத்து விட்ட
அந்தக் கவிதை மேல் கொண்ட பேராசையை விடவும்
உன் மேல் கொண்ட பேரன்பு அதிகம் என்பதால்
கொடுக்காமல் விட்ட
இந்தக் கவிதையை
என்றோ ஒரு நாள் படித்துக் கொண்டிருப்பாய்
வாசிக்க நேரம் கொடுக்காத
காலத்தை நொந்தபடியாக
காலவெளி உருக்கி விடாத
பேரன்பு வெளியில் கரைந்தபடியாக

*****

அன்பே சொல்

அன்பே சொல்
வெயில் காலத்தில்
ஒரே குறைதான்
பகல் நீண்டிருக்கிறது
இரவு சுருங்கியிருக்கிறது,
அவ்வளவு சுட்ட
பகலைத் தாங்கிக் குளிர
இவ்வளவு சிறிய
இரவு போதுமா?

*****

29 Nov 2017

முட்டாள்களிடம் மாபெரும் முட்டாளாக இருப்பதே நல்லது!

முட்டாள்களிடம் மாபெரும் முட்டாளாக இருப்பதே நல்லது!
            கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பார்கள். கழுதையிடம் போய் கற்பூரத்தைக் காட்டி விட்டு அதற்கு அதன் அருமை தெரியவில்லையே என்று புலம்பக் கூடாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவர் இந்த முதுமொழியைக் காட்டும் வகையில் படைத்துள்ள ஒரு குறள் அற்புதமானது.
            "ஒளியார் முன் ஒள்ளியார் ஆதல் வெளியார்முன்
            வான்சுதை வண்ணங் கொளல்"
                        என்ற குறளில் அறிவுள்ளவர்களிடம் அறிவாளிகள் போல் நடந்து கொள்ளுங்கள், அஃது இல்லாதவர்களிடம் முட்டாள்கள் போல் நடந்து கொள்ளுங்கள் என்கிறார்.
            கற்பூர வாசனைப் புரியாத கழுதைக்கு கற்பூர ஆரத்தை எடுப்பதைப் போல, அறிவில்லாதவர்களிடமும், அறிவை உணரும் தன்மையில்லாதவர்களிடமும் அறிவைப் பற்றி உரையாடிக் கொண்டிருப்பதும் எந்தப் பயனையும் தருவதில்லை.
            நாம் யாரிடம் எதைப் பேசுகிறோம் என்பதைப் புரிந்துப் பேச வேண்டும். நாம் பேசும் கருத்தைக் கேட்பவரால் புரிந்து கொள்ள முடியாது எனும் பட்சத்தல் நாகரிகமாக அதை ஒதுக்கி விட்டு, எதை அவரால் புரிந்து கொள்ள முடியுமோ அதைப் பற்றி மட்டும் பேசுவதே அறிவார்ந்த தனம்.
            முட்டாள்களிடம் அறிவாளிகள் போல் நடந்து கொள்வதும், அறிவாளிகளிடம் முட்டாள்கள் போல் நடந்துக் கொள்வதும் சில நேரங்களில் நம்மை அறியாமலே நிகழ்ந்து விடும்.
            அறிவாளிகளிடம் தன்னம்பிக்கையோடு அறிவாளியாகவே நடந்து கொள்ளுங்கள். முட்டாள்களிடம் யோசிக்காமல் முட்டாள்கள் போல் நடியுங்கள். அதில் பிழையேதும் இல்லை. முட்டாள்களிடமும் மாபெரும் அறிவாளியாக இருக்க நினைப்பவன் மாபெரும் அறிவார்ந்த முட்டாளாகத்தான் இருக்க முடியும்.

*****

காரியம்

காரியம்
மூணாம் நாள் காரியம்
முடிந்ததும் புறப்பட்டோம்.
காலம் முழுதும்
தன் பிள்ளைமார்கள்
பால் வாங்கவோ
தண்ணீர் பிடிக்கவோ அனுமதிக்காமல்
பேருந்து வரை ஏற்றி விட்டு வந்த
அம்மாவை
முதல் காரியமாய்
சட்டமிட்டு ஒரு புகைப்படமாய்
சுவரில் மாட்டி வைத்தோம்.
இனி அவரவர் காரியம்
பால் வாங்கவும்
தண்ணீர் பிடிக்கவும்
பேருந்து பிடித்து ஏறி இறங்கவும் என
ஏகப்பட்டது இருக்கிறது.

*****

தலைவன் சொல் தெளிந்த தலைவி

தலைவன் சொல் தெளிந்த தலைவி
முத்தமிடத் தொடங்குகையில்
சூடுதான்
மேலே மேலே போகப் போக
குளிர்ந்து விடும் என்று
வெயில் சொன்னதை நம்பி
அதற்கு இடம் கொடுத்து
வறண்டு போனது
பாளம் பாளமாய் வெடித்த குளம்.
சொன்ன சொல் தவறாமல்
ஒரு நாள்
மேகமாய்ப் பொழிந்த வெயிலை
தன்னுள்
போதும் போதும் எனும் அளவுக்கு
தண்ணீராய் நிரப்பிக் கொண்டது
தாகம் அடங்காத குளம்.

*****

28 Nov 2017

ஆண் பெண் மேகங்கள்

ஆண் பெண் மேகங்கள்
வெயில் காலத்தில்
தழுவிக் கொள்ளும் போதெல்லாம்
நமக்கு முன்
ஒட்டிக் கொள்ளும் வியர்வை
வானத்து மேகத்தைப் பரிகசிக்கிறது.
மேகங்கள் தழுவிக் கொண்டால்
தேகங்கள் பொழிவதை விட
அதி மழையாய்ப் பொழியும் என்பதை
விலகிச் செல்லும்
அந்த ஆண் மேகமும்
பெண் மேகமும்
புரிந்து கொள்வதாகுக.

*****

வெயில் கண்களிலிருந்து கொட்டும் மழை

வெயில் கண்களிலிருந்து கொட்டும் மழை
மரத்தை எரிப்பது போல்
வெயில் அடிக்கிறது.
சிரித்துக் கொண்டு
நீர்மோர் கொடுப்பது போல்
நீராவியை
அனுப்பிக் கொண்டிருக்கிறது
மரம்.
முடியாத போது
இலைகளை அவிழ்த்து விட்டு
நிர்வாணமாகும்
மரத்தைப் பார்த்து
வெட்கம் தாளாமல்
மேகத் துணியால்
கண் மூடிக் கொண்டு
வெயிலின் கண்களிலிருந்து
கொட்டுகிறது மழை.

*****

வெளுத்துப் போன உண்மை

வெளுத்துப் போன உண்மை
அதே கருமைதான்
வெயிலில் அலையும்
கரிச்சிட்டான் குருவி
ஒரு நூல் கூடுதலாய்க் கருக்கவில்லை
வெயிலில் போட்ட
உள்ளாடைப் போல்
ஒரு நூல் குறைவாய் வெளுக்கவுமில்லை.

*****

27 Nov 2017

ஆசிரியர் நல்லதொரு மீட்பர்!

ஆசிரியர் நல்லதொரு மீட்பர்!
            நம் சமூகம் உறவுகளை நிறையவே இழந்து விட்டது. தாத்தா - பாட்டி என்ற உறவு முறைகளை முதியோர் இல்லம் ஆரம்பிக்க வைத்து மூட்டை கட்டியது. அப்பா - அம்மா என்ற உறவு முறைகளை தனிக்குடும்பத்துக்கு மாறி கட்டம் கட்டியது. சித்தப்பா - பெரியப்பா - சித்தி - பெரியம்மா - அத்தை - மாமா என்ற உறவுமுறைகளை எல்லாம் செலவைக் காரணம் காட்டி செல்லாததாக்கியது. அக்கா - அண்ணன் - தங்கை - தம்பி என்ற உறவு முறைகளை 'ஒரே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து' இல்லாமல் அடித்தது.
            எஞ்சி நிற்கும் உறவு முறைகளில் ஒன்றாக ஆசிரியர் - மாணவர் என்ற உறவு முறை இருந்து வருகிறது. அதுவும் கேள்விக்குள்ளாகி விடும் நிலையில் இருக்கிறது. தரும் காசுக்கு மதிப்பெண்களை வாங்கித் தர வேண்டிய கட்டாயத்தில் அவர் நிறுத்த வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
            இருக்க வேண்டிய அனைத்து உறவு முறைகளும் இல்லாமல் போனதன் உணர்வு நிலையை மீட்டுக் கொண்டு வர வேண்டிய நிலை இன்று ஆசிரியர் கைகளில்தான் இருக்கிறது.
            இந்தச் சமூகம் எவ்வளவு உறவு முறைகளை இழந்ததோ, அத்தனை உறவு முறைகளுக்கும் ஆதாரமாக, அச்சாகச் சுழன்று பரிவைத் தர வேண்டியவர் அவரே.
            இத்தனை உறவு இழப்புகளால் எவ்வளவு அன்பைக் குழந்தைகள் இழந்திருக்கிறார்களோ அவ்வளவு அன்பையும் மீட்டுத் தர வேண்டிய மீட்பர் அவரே.
            குழந்தைகளிடம் மிகுந்த அனுசரணையாக இருப்பதன் மூலமே அவர்களுக்குக் கல்வியைக் கொண்டு செல்ல வேண்டும். அவர்களுக்காக வளைந்து, நெளிந்து கல்வியைக் கொண்டு செல்வதில் தவறு ஏதும் இருக்க முடியாது. அவர்கள் விரும்பினால்தான் அது கல்வி. அவர்கள் விரும்பா விட்டால் அந்தக் கல்வியை வழங்காமல் இருப்பதே சிறந்த கல்வி.
            குழந்தைகள் கல்வியை விரும்ப வேண்டும். கல்வியை நேசிக்க வேண்டும். அவர்களை அப்படிக் கல்வியை விரும்பவும், நேசிக்கவும் செய்ய வைக்க வேண்டியப் பணியைச் செய்வதற்கே ஆசிரியர்கள் உலகில் பிறந்துள்ளனர்.
            ஓர் ஆசிரியரின் அரவணைப்பில் இருக்கும் குழந்தை அவர் போதிக்கும் கல்வியை வெறுக்குமானால் அப்படிப்பட்ட கல்வியைப் போதித்ததற்காக அந்த ஆசிரியர் வெட்கப்பட வேண்டும். அந்தக் குழந்தை விரும்பும் வகையில் அந்தக் கல்வியை எப்படிக் கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் யோசிக்க வேண்டும்.
            ஆனால் நடைமுறை அப்படியா இருக்கிறது?
            தற்கொலை செய்து கொண்ட குழந்தைகளுக்காக கண்ணீர் விடாமல், குறைந்தபட்சம் அனுதாபப்படாமல், பணிபாதுகாப்பைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் ஒரு சில ஆசிரியர்கள். ஆசிரியர்களின் பணிபாதுகாப்பை விடவும் குழந்தைகளின் உயிர் பாதுகாப்பு முக்கியம் அல்லவா!
            குழந்தைகளின் மதிப்பெண் குறைவை வெறுமனே பெற்றோர்களை அழைத்து வரச் செய்வதாலும், அவர்கள் முன் கண்டிப்பாகவும் கறாராகவும் பேசுவதால் மட்டுமே சரி செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட குழந்தைகளிடமே ஆசிரியர் பரிவாகவும், அன்பாகவும் இறங்கிப் பேசினாலே போதும். அந்த அன்புக்காகவும், பரிவுக்காகவும் பாடத்தின் கடினத்தன்மையைப் பொருட்படுத்தாமல் படிப்பவர்களே குழந்தைகள்.
            குழந்தைகளைப் புரிந்து கொள்வதற்காகவும், நேசிப்பதற்காகவுமே ஆசிரியர்கள். அவர்களும் புரிந்து கொள்ளா விட்டால், நேசிக்கா விட்டால் அவர்களைப் புரிந்து கொள்ளவோ, நேசிக்கவோ இந்த உலகில் யாரும் இல்லை.
            வெற்றுக் கண்டிப்புகள் நிறைந்த வகுப்பறை அராஜகவாதமும், மதிப்பெண் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை என்ற கோட்பாட்டு முறையிலான கல்வி அணுகுமுறைகளும் ஒழிக்கப்படாத வரை கல்வியால் மாணவர்களைப் புரிந்து கொள்ள முடியாது. கல்வியால் புரிந்து கொள்ள முடியாத குழந்தைகளை அந்தக் கல்வியைக் கொண்டு செல்லும் ஆசிரியர்களாலும் புரிந்து கொள்ள முடியாது.
            வாழ்வை நேசிக்கவும், மனிதர்களை வாசிக்கச் செய்வதுமே கல்வி. மற்றைய அறிவியல், தொழில்நுட்ப, கணித, கருத்துப் பெட்டகங்களை எல்லாம் குழந்தைகள் தங்களின் கற்பனையாலும், ஆர்வத்தாலும் மிக எளிதாகக் கற்றுக் கொண்டு விடுவார்கள்.
            குழந்தைகளின் மென்மையான இதயத்துக்குத் தேவையான அன்பையும், பரிவையும் வழங்க வேண்டியதே ஒரு நல்ல கல்வியின் தரமான அடையாளம். அதை ஆற்றுபடுத்திச் செயல்படுத்துபவரே அத்தகைய கல்விக்குத் தேவையான சரியான, தரமான ஆசிரியர்.

*****

மழைச்சூடு

மழைச்சூடு
மரணத்தைக் கொண்டாடும்
திருப்தி
மேகத்திலிருந்து குதிக்கும்
மழைத்துளிக்கு.
பத்து மாடிக் கட்டிடடத்திலிருந்து
குதிக்கும் ஒருவனை
வேடிக்கைப் பார்க்கும் கூட்டம்
மழைத்துளிக்கு விலகி ஓடும்.
ஏதேச்சையாய்
விழுந்து விடும்
ஒரு மழைத்துளி
தன் அத்தனை சந்தோசத்தையும்
குளிர்ச்சியை
ஆணி அடித்து உள்ளிறக்கிக்
கொண்டிருக்கும்.
முற்றிலும் நனைந்துப் பார்த்தால்
மழையில் ஒளிந்திருக்கும்
வெயிலின் சூடு
ஜூரமாய்த் தகித்துக்
கொண்டிருக்கும்
மழையும் வெயிலும்
வேறல்ல என்பதை
உணர்த்தியபடி.

*****

உணர்வு

உணர்வு
வெயிலைப் பழித்து
ஐஸ்கிரீமைப் புகழ்ந்தாய்
அந்த ஐஸ்கிரீமைத்
தேட வைத்ததே
இந்த வெயில் என்பதை
உணராமல்.

*****

26 Nov 2017

பேராசை & பேரச்சக் கொலைகள்!

பேராசை & பேரச்சக் கொலைகள்!
            பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்துப் பயந்து அவர்களை அச்சுறுத்தி அச்சுறுத்தியே உளவியல் ரீதியாகப் பயப்படும் ஒரு சமூகத்தை நாம் உருவாக்கி விட்டோம்.
            குழந்தைகளின் உளவியல் ரீதியான பயம் அவர்களை எளிதில் தற்கொலையை நோக்கித் தூண்டி விடுகிறது.
            கல்வியின் தற்போதைய நோக்கம் அறிவை வளர்ப்பது அன்று, அச்சத்தை அகற்றுவதே. கல்வியின் எப்போதைய நோக்கமும் அதுவாக இருக்கிறது. கல்வியாளர்களின் சிந்தனைகளில் அத்தகைய தன்மையே பளிச்சிடுகிறது. அப்படியானால் எந்த புள்ளியில் கல்வி அச்சத்தை நோக்கி நகர்கிறது?
            இன்றையக் கல்வியின் துவக்கப் புள்ளியே அச்சத்தை நோக்கி நகர்த்தப்படுவதாக அமைவது நமது துரதிர்ஷ்டம். அந்தப் புள்ளியைத் துவக்கி வைப்பது, வேலையை நோக்கிய அணுகுமுறையிலான நமது கல்வி வேட்டலே.
            ஒரு மருத்துவரை உருவாக்குவதற்காகத்தான், ஒரு பொறியாளரை உருவாக்குவதற்காகத்தான் நம் பிள்ளைகளிடம் கல்விக் கனவுகளை விதைக்கிறோம். யாரும் கல்வியின் மூலம் நல்ல மனிதனாக தம் பிள்ளைகள் பரிணமிக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. படிக்காமல் போனால், வேலை கிடைக்காமல் போய் விடுமோ என்ற ஆழ்மன அச்சமே நம் குழந்தைகளைக் கல்வியை நோக்கி தள்ளி விட காரணமாக இருக்கிறது.
            கல்வியில் நிகழும் தற்கொலைகளுக்கு ஒரு போதும் குழந்தைகள் காரணமல்ல. கல்வி குறித்த நமக்குள் ஊறிப் போன ஆழ்மன அச்சங்களே குழந்தைகள் மூலம் தற்கொலைகளாகப் பிரதிபலிக்கப்படுகிறது.
            கல்வியில் தோல்வியுற்ற குழந்தைகளால்தான் கல்வியியலில் புதிய புதிய விதிகளும், கண்டுபிடிப்புகளும் உருவாகின்றன என்பது மாபெரும் உண்மை. இன்னும் கல்வியை எளிமையாக்க அவர்களே வழிகோலுகிறார்கள். நிலைமை இப்படியிருக்க கல்வியில் தோல்வியுற்றவர்கள் கொண்டாடப்படுவதற்குப் பதிலாக, கல்வியில் வெற்றி பெற்றவர்கள் கொண்டாடப்படும் இருண்மை தன்மை மிகுந்ததாக நமது கல்வி வரலாறு அமையப் பெறுவது வேதனையான வேதனை.
            வேப்ப மர உச்சியில் பேயொண்ணு ஆடுதுன்னு பட்டுக்கோட்டையார் பாடுவார். ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும், ஒவ்வொரு கல்விக் கூடத்தின் உச்சியிலும் மதிப்பெண் எனும் பேயொண்ணு ஆடுதுன்னு சொல்லி வைப்பாங்க, இந்த வாடிக்கை மனிதர்களின் பேச்சை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே என்று பாட வேண்டும் போலிருக்கிறது.
            நமது மதிப்பெண் முறைகளும், மதிப்பீடுகளும் தவறானவை என்பதை கல்வி முறையில் தோற்று சாதனை படைத்த எத்தனையோ பேர் இந்த உலகிற்கு உரக்க சொல்லியிருக்கிறார்கள். இந்தக் கல்வி முறையின் மதிப்பீட்டு அம்சத்துக்குப் பயந்து கிணற்றில் விழுந்து தற்கொலையுண்ட மாணவிகளும் அதையேத்தான் சொல்கிறார்கள். சொன்ன முறை எதிர்மறையாக இருக்கலாம் அல்லது மாறுபாடானதாக இருக்கலாம். சொல்ல வந்த விசயம் சத்தியமாக அதுவேத்தான்! அச்சத்தை அகற்ற முடியாத ஒரு கல்வி முறை கல்வி முறையே அல்ல!

*****

பேரன்பு

பேரன்பு
தண்டவாளங்கள்
நிலையாக இருப்பதால்தான்
ரயிலில் பயணிக்க முடிகிறது
என்றேன் அம்மாவிடம்.
ரயில்கள் பயணிக்கத்தான்
தண்டவாளங்கள் இருக்கின்றன
என்றாள் அம்மா
இயல்பாக விளம்பப்பட்ட அன்பை
பேரன்பாய் விளக்கியபடி.

*****

பண்ட மாற்று

பண்ட மாற்று
உறிஞ்சுவதற்கு
குளம் இருந்த இடத்தில்
கட்டிடம் முளைத்தப் பிறகு
வியர்வையாய்
உறிஞ்சிக் கொள்கிறது
வெயில்.

*****

25 Nov 2017

மேலும் பல சிந்தனைகள்

மேலும் பல சிந்தனைகள்
            காலத்திற்கு ஏற்ப புதிய மொழியில் சிந்தனைகள் வளர்ச்சி பெறவில்லை என்பது எஸ்.கே.யின் தாழ்மையான எண்ணம்.
            ஆகவே எஸ்.கே....
            என்ன என்கிறீர்களா?
            நீங்களே கீழே மேற்கொண்டு படித்துப் பாருங்கள்...
            களவைப் பொருத்த வரை... செய்! மீண்டும் மீண்டும் செய்! அப்போதுதான் நிறைய உண்மைகள் புலப்படும். களவாடப்பட வேண்டியது சட்டைப் பைகளில், கைப் பைகளில் இல்லை, பெட்டிகளில் உள்ளன என்பது புலப்படும்.
*****
            மனம் கொஞ்சம் விரைவாகத்தான் செல்லும். சாலையின் வேக எல்லை (ஸ்பீடு லிமிட்) அதுக்குப் புரியாது. நாம் வாகனம் வேகமாகச் செல்வதாக (பொய் அல்லது மெய்) சொல்லுவோம்.
*****
            விரைவுபடுத்துவதுதான் எல்லாவற்றிலும் பிரச்சனை. எல்.கே.ஜி. முடித்த அடுத்த ஆண்டிலே டாக்டரேட் கிடைத்தால் நல்லதுதான். கொடுக்க மாட்டேன்கிறார்களே என்பது நமது கவலை. டாக்டரேட்டை முடித்த அடுத்த ஆண்டிலே முறைப்படி யு.கே.ஜி. படிக்க நேர்மையாக வந்து விடும் நல்லவன் நாம் என்பது அவர்களுக்குத் தெரியாது மற்றும் புரியாது. ஆகவே பொறுமையாகப் படித்துக் கொண்டு செல்வதுதான் நல்லது. எல்லாம் தானாகவே நிறைவேறும். பணத்தை மட்டும் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் குறியாக இருக்க வேண்டும், ஆமாம்!
*****
            தேவையற்ற ஒன்றைச் செய்து கொண்டிருந்தால் எல்லாரது கோபத்திற்கும் ஆளாவாய். ஆக, தேவையான ஒன்றை இன்றிலிருந்து செய். எல்லார் மீதும் கோபப்படு(ம்). யாரும் உன் மீது கோபப்பட மாட்டார்கள். அவன் அப்படித்தான் நாய் மாதிரி வள் வள் என்று எரிந்து விழுவான் என்று விட்டு விடுவார்கள்.
*****
            எங்கே நிறைவேறாமல் போய் விடுமோ என்ற அச்சமும், ஐயமும்தான் உன்னை விரைவுபடுத்துகிறது. அதற்கு முன் அதாவது இந்த நிலைக்கு முன் நீ மகிழ்ச்சியாக இருந்திருந்தால் எதையும் நிறைவேற்ற முயற்சி எடுக்காமல் இருப்பது சிறப்பு. ஏன் என்பாய்? நீ குறுக்குவழிக்காரன். ஆதலால் நீ அப்படியே இருப்பது வெகு சிறப்பு.

*****

காதல் வெயில்

காதல் வெயில்
இந்த வெயிலுக்கு ஈடாக
ஒரு முத்தம் தந்தாய்
அது
இன்னும் சுட்டுக் கொளுத்தியது
இதயத்தை.
சூடு குளிர்ந்து
இதமான குளிரைக் கொண்டு வந்த
நள்ளிரவில்
உன் கண்களில் தெறித்த சூரியனில்
புளுங்கிய புளுக்கத்தில்
வியர்த்துக் கொட்டியது
மொத்த உலகின் வெயிலையும்
உள்வாங்கிய தொரணையில்
உடல்.
எப்போதும் வெயில் நீ
அதைத் தாங்கும்
அதற்காக ஏங்கும் உயில் நான்.

*****

வியர்வையின் இனிப்பு

வியர்வையின் இனிப்பு
மாமனாரின் சுகருக்கு நாவல் பொடி
மாமியாரின் மூட்டுவலிக்கு தைலம்
கொழுந்தியாளுக்கு வத்தல் வடகம்
கணவனுக்கு கண் எரிச்சல் தீர அகத்திக் கீரை
கையிலிருக்கும் குழந்தைக்கு குச்சி மிட்டாய்
தனக்கென ஒரு முழம் மல்லிப்பூ
வாங்கிக் கொள்கையில்
நெற்றியில் வழியும் வியர்வை
இதழ்களில் பட்டு
இனிக்கிறது அவளுக்கு தாம்பத்யம்.

*****

24 Nov 2017

தூய்மை முக்கியம் என் இலக்கியக் காதலர்களே!

தூய்மை முக்கியம் என் இலக்கியக் காதலர்களே!
            கீழே எழுதப்படும் சங்கதிகள் எஸ்.கே. (தமிழ் எழுத்தாளன்(!)) ஆகிய என்னுடைய அனுபவங்கள். முடிந்தால் பயன்படுத்துங்கள். இல்லையேல் குப்பைத் தொட்டியில் வீசத் தயங்க வேண்டாம். ஏனென்றால், அநாவசியமாக இதை அச்சிட்டு (பிரின்ட் அவுட்டிட்டு) குப்பையாக்க வேண்டாம். எனக்கு தூய்மை முக்கியம். கொஞ்சம் அவசரத்தில் எழுதியதால் சங்கதிகள் அப்படி இப்படித்தான் இருக்கும். பொறுத்துக் கொள்ளுங்கள்.
            எல்லாரையும் பாராட்டிப் பேசு. யாரையும் குறை சொல்ல வேண்டாம். அதை அவர்கள் காலத்துக்கும் மறக்க மாட்டார்கள். அதை நினைத்துக் கொண்டு தேவையில்லாமல் வெறுப்பை உமிழ்வார்கள். இந்த உலகில் யாருமே தங்கள் குறையைச் சுட்டிக் காட்ட விரும்புவதில்லை எனும் போது அதை ஏன் செய்ய வேண்டும்? அவர்களுக்குத் தேவையான சிறுசிறு பாராட்டுதல்களை, அன்பை, ஆறுதல் மொழிகளைச் சொல். அதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். எதை எதிர்பார்க்கிறார்களோ அதை கொடு. எது மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லையோ அது வேண்டாம்.
            ஒரு சூழ்நிலையில் யாரும் தன்னை ஆறுதல்படுத்த விரும்ப மாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் போய் ஒருத்தரை ஆறுதல்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது. அவரை அப்படியே விட்டு விட வேண்டும்.
            சமாதானத்தை விரும்பாத சூழ்நிலையில் ஒருத்தருடன் சமாதானம் பேசிக் கொண்டு இருக்கக் கூடாது. அவர் அப்போது விரும்புவது சமாதானத்தைப் பேசாமல் இருப்பதுதான். அதையே அவருக்கு அப்போது செய்ய வேண்டும். பிறிதொரு நேரத்தில் அவரே மனம் மாறி வருவார். அப்போது பேசிக் கொள்ளலாம்.
            நிகழ்கின்ற சூழ்நிலைகளும் சரியாக இல்லை எனும் நாம் எதைச் சொன்னாலும் அதை யாரும் கேட்க மாட்டார்கள். அப்புறம் நாம் ஏன் சொல்கிறோம்? நம்மையும் அறியாமல் எப்படியும் ஒரு மாற்றம் வந்து விடாதா என்று சொல்லி விடுகிறோம். அது ஆயிரத்தில் ஒன்றாக எப்போதாவது நிகழும். எப்போதும் நிகழாது. அதற்காக மற்றவர்கள் மேல் கோபப்பட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. மற்றவர்களின் வெறுப்பைத்தான் சம்பாதித்துக் கொள்ள நேரிடும். நல்லதையும் சொல்லி கெட்டப் பெயரையும் வாங்குவது என்பது இதுதான்.
            முடிந்தால் முயன்று மாற்றிப் பார். முடியாவிட்டால் அதுவாக மாறும் வரைப் பொறுத்திரு. எல்லாம் மாறித்தான் ஆக வேண்டும். அதுதான் காலத்தின் கட்டாயம்.

*****

ஞான வெட்டு

ஞான வெட்டு
வெட்டாமல் சென்ற
விறகுவெட்டியிடம் கேட்டால்
"வேரைப் பார்க்கும்
பாக்கியவான்களுக்குத் தெரியும்
எந்தக் கிளையை
வெட்டக் கூடாது என்பதும்
எந்தக் கிளையை
வெட்ட வேண்டும் என்பதும்"
என்பார்.

*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...