அந்தக் கவிதை வாசிக்கப்படும்
என்னிடம் நிறைய
கவிதைகள் இருக்கின்றன
உன்னிடம் கொடுக்கவும்
ஒரு கவிதை இருக்கிறது
அதைப் படிக்க
உனக்கு நேரமிருக்கிறதோ
கசக்கி எறியவும்
உனக்குப் பொழுது இருக்கிறதோ என்னவோ
கொடுத்தக்
கவிதையைப் படிக்கவில்லை என்ற
உறுத்தலோடு
நீ இருக்கக் கூடாது என்பதற்காக
உன்னிடமிருந்து
மறைத்து விட்ட
அந்தக் கவிதை
மேல் கொண்ட பேராசையை விடவும்
உன் மேல் கொண்ட
பேரன்பு அதிகம் என்பதால்
கொடுக்காமல்
விட்ட
இந்தக் கவிதையை
என்றோ ஒரு
நாள் படித்துக் கொண்டிருப்பாய்
வாசிக்க நேரம்
கொடுக்காத
காலத்தை நொந்தபடியாக
காலவெளி உருக்கி
விடாத
பேரன்பு வெளியில்
கரைந்தபடியாக
*****
No comments:
Post a Comment