26 Nov 2017

பேராசை & பேரச்சக் கொலைகள்!

பேராசை & பேரச்சக் கொலைகள்!
            பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்துப் பயந்து அவர்களை அச்சுறுத்தி அச்சுறுத்தியே உளவியல் ரீதியாகப் பயப்படும் ஒரு சமூகத்தை நாம் உருவாக்கி விட்டோம்.
            குழந்தைகளின் உளவியல் ரீதியான பயம் அவர்களை எளிதில் தற்கொலையை நோக்கித் தூண்டி விடுகிறது.
            கல்வியின் தற்போதைய நோக்கம் அறிவை வளர்ப்பது அன்று, அச்சத்தை அகற்றுவதே. கல்வியின் எப்போதைய நோக்கமும் அதுவாக இருக்கிறது. கல்வியாளர்களின் சிந்தனைகளில் அத்தகைய தன்மையே பளிச்சிடுகிறது. அப்படியானால் எந்த புள்ளியில் கல்வி அச்சத்தை நோக்கி நகர்கிறது?
            இன்றையக் கல்வியின் துவக்கப் புள்ளியே அச்சத்தை நோக்கி நகர்த்தப்படுவதாக அமைவது நமது துரதிர்ஷ்டம். அந்தப் புள்ளியைத் துவக்கி வைப்பது, வேலையை நோக்கிய அணுகுமுறையிலான நமது கல்வி வேட்டலே.
            ஒரு மருத்துவரை உருவாக்குவதற்காகத்தான், ஒரு பொறியாளரை உருவாக்குவதற்காகத்தான் நம் பிள்ளைகளிடம் கல்விக் கனவுகளை விதைக்கிறோம். யாரும் கல்வியின் மூலம் நல்ல மனிதனாக தம் பிள்ளைகள் பரிணமிக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. படிக்காமல் போனால், வேலை கிடைக்காமல் போய் விடுமோ என்ற ஆழ்மன அச்சமே நம் குழந்தைகளைக் கல்வியை நோக்கி தள்ளி விட காரணமாக இருக்கிறது.
            கல்வியில் நிகழும் தற்கொலைகளுக்கு ஒரு போதும் குழந்தைகள் காரணமல்ல. கல்வி குறித்த நமக்குள் ஊறிப் போன ஆழ்மன அச்சங்களே குழந்தைகள் மூலம் தற்கொலைகளாகப் பிரதிபலிக்கப்படுகிறது.
            கல்வியில் தோல்வியுற்ற குழந்தைகளால்தான் கல்வியியலில் புதிய புதிய விதிகளும், கண்டுபிடிப்புகளும் உருவாகின்றன என்பது மாபெரும் உண்மை. இன்னும் கல்வியை எளிமையாக்க அவர்களே வழிகோலுகிறார்கள். நிலைமை இப்படியிருக்க கல்வியில் தோல்வியுற்றவர்கள் கொண்டாடப்படுவதற்குப் பதிலாக, கல்வியில் வெற்றி பெற்றவர்கள் கொண்டாடப்படும் இருண்மை தன்மை மிகுந்ததாக நமது கல்வி வரலாறு அமையப் பெறுவது வேதனையான வேதனை.
            வேப்ப மர உச்சியில் பேயொண்ணு ஆடுதுன்னு பட்டுக்கோட்டையார் பாடுவார். ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும், ஒவ்வொரு கல்விக் கூடத்தின் உச்சியிலும் மதிப்பெண் எனும் பேயொண்ணு ஆடுதுன்னு சொல்லி வைப்பாங்க, இந்த வாடிக்கை மனிதர்களின் பேச்சை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே என்று பாட வேண்டும் போலிருக்கிறது.
            நமது மதிப்பெண் முறைகளும், மதிப்பீடுகளும் தவறானவை என்பதை கல்வி முறையில் தோற்று சாதனை படைத்த எத்தனையோ பேர் இந்த உலகிற்கு உரக்க சொல்லியிருக்கிறார்கள். இந்தக் கல்வி முறையின் மதிப்பீட்டு அம்சத்துக்குப் பயந்து கிணற்றில் விழுந்து தற்கொலையுண்ட மாணவிகளும் அதையேத்தான் சொல்கிறார்கள். சொன்ன முறை எதிர்மறையாக இருக்கலாம் அல்லது மாறுபாடானதாக இருக்கலாம். சொல்ல வந்த விசயம் சத்தியமாக அதுவேத்தான்! அச்சத்தை அகற்ற முடியாத ஒரு கல்வி முறை கல்வி முறையே அல்ல!

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...