24 Nov 2017

தூய்மை முக்கியம் என் இலக்கியக் காதலர்களே!

தூய்மை முக்கியம் என் இலக்கியக் காதலர்களே!
            கீழே எழுதப்படும் சங்கதிகள் எஸ்.கே. (தமிழ் எழுத்தாளன்(!)) ஆகிய என்னுடைய அனுபவங்கள். முடிந்தால் பயன்படுத்துங்கள். இல்லையேல் குப்பைத் தொட்டியில் வீசத் தயங்க வேண்டாம். ஏனென்றால், அநாவசியமாக இதை அச்சிட்டு (பிரின்ட் அவுட்டிட்டு) குப்பையாக்க வேண்டாம். எனக்கு தூய்மை முக்கியம். கொஞ்சம் அவசரத்தில் எழுதியதால் சங்கதிகள் அப்படி இப்படித்தான் இருக்கும். பொறுத்துக் கொள்ளுங்கள்.
            எல்லாரையும் பாராட்டிப் பேசு. யாரையும் குறை சொல்ல வேண்டாம். அதை அவர்கள் காலத்துக்கும் மறக்க மாட்டார்கள். அதை நினைத்துக் கொண்டு தேவையில்லாமல் வெறுப்பை உமிழ்வார்கள். இந்த உலகில் யாருமே தங்கள் குறையைச் சுட்டிக் காட்ட விரும்புவதில்லை எனும் போது அதை ஏன் செய்ய வேண்டும்? அவர்களுக்குத் தேவையான சிறுசிறு பாராட்டுதல்களை, அன்பை, ஆறுதல் மொழிகளைச் சொல். அதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். எதை எதிர்பார்க்கிறார்களோ அதை கொடு. எது மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லையோ அது வேண்டாம்.
            ஒரு சூழ்நிலையில் யாரும் தன்னை ஆறுதல்படுத்த விரும்ப மாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் போய் ஒருத்தரை ஆறுதல்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது. அவரை அப்படியே விட்டு விட வேண்டும்.
            சமாதானத்தை விரும்பாத சூழ்நிலையில் ஒருத்தருடன் சமாதானம் பேசிக் கொண்டு இருக்கக் கூடாது. அவர் அப்போது விரும்புவது சமாதானத்தைப் பேசாமல் இருப்பதுதான். அதையே அவருக்கு அப்போது செய்ய வேண்டும். பிறிதொரு நேரத்தில் அவரே மனம் மாறி வருவார். அப்போது பேசிக் கொள்ளலாம்.
            நிகழ்கின்ற சூழ்நிலைகளும் சரியாக இல்லை எனும் நாம் எதைச் சொன்னாலும் அதை யாரும் கேட்க மாட்டார்கள். அப்புறம் நாம் ஏன் சொல்கிறோம்? நம்மையும் அறியாமல் எப்படியும் ஒரு மாற்றம் வந்து விடாதா என்று சொல்லி விடுகிறோம். அது ஆயிரத்தில் ஒன்றாக எப்போதாவது நிகழும். எப்போதும் நிகழாது. அதற்காக மற்றவர்கள் மேல் கோபப்பட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. மற்றவர்களின் வெறுப்பைத்தான் சம்பாதித்துக் கொள்ள நேரிடும். நல்லதையும் சொல்லி கெட்டப் பெயரையும் வாங்குவது என்பது இதுதான்.
            முடிந்தால் முயன்று மாற்றிப் பார். முடியாவிட்டால் அதுவாக மாறும் வரைப் பொறுத்திரு. எல்லாம் மாறித்தான் ஆக வேண்டும். அதுதான் காலத்தின் கட்டாயம்.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...