27 Nov 2017

ஆசிரியர் நல்லதொரு மீட்பர்!

ஆசிரியர் நல்லதொரு மீட்பர்!
            நம் சமூகம் உறவுகளை நிறையவே இழந்து விட்டது. தாத்தா - பாட்டி என்ற உறவு முறைகளை முதியோர் இல்லம் ஆரம்பிக்க வைத்து மூட்டை கட்டியது. அப்பா - அம்மா என்ற உறவு முறைகளை தனிக்குடும்பத்துக்கு மாறி கட்டம் கட்டியது. சித்தப்பா - பெரியப்பா - சித்தி - பெரியம்மா - அத்தை - மாமா என்ற உறவுமுறைகளை எல்லாம் செலவைக் காரணம் காட்டி செல்லாததாக்கியது. அக்கா - அண்ணன் - தங்கை - தம்பி என்ற உறவு முறைகளை 'ஒரே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து' இல்லாமல் அடித்தது.
            எஞ்சி நிற்கும் உறவு முறைகளில் ஒன்றாக ஆசிரியர் - மாணவர் என்ற உறவு முறை இருந்து வருகிறது. அதுவும் கேள்விக்குள்ளாகி விடும் நிலையில் இருக்கிறது. தரும் காசுக்கு மதிப்பெண்களை வாங்கித் தர வேண்டிய கட்டாயத்தில் அவர் நிறுத்த வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
            இருக்க வேண்டிய அனைத்து உறவு முறைகளும் இல்லாமல் போனதன் உணர்வு நிலையை மீட்டுக் கொண்டு வர வேண்டிய நிலை இன்று ஆசிரியர் கைகளில்தான் இருக்கிறது.
            இந்தச் சமூகம் எவ்வளவு உறவு முறைகளை இழந்ததோ, அத்தனை உறவு முறைகளுக்கும் ஆதாரமாக, அச்சாகச் சுழன்று பரிவைத் தர வேண்டியவர் அவரே.
            இத்தனை உறவு இழப்புகளால் எவ்வளவு அன்பைக் குழந்தைகள் இழந்திருக்கிறார்களோ அவ்வளவு அன்பையும் மீட்டுத் தர வேண்டிய மீட்பர் அவரே.
            குழந்தைகளிடம் மிகுந்த அனுசரணையாக இருப்பதன் மூலமே அவர்களுக்குக் கல்வியைக் கொண்டு செல்ல வேண்டும். அவர்களுக்காக வளைந்து, நெளிந்து கல்வியைக் கொண்டு செல்வதில் தவறு ஏதும் இருக்க முடியாது. அவர்கள் விரும்பினால்தான் அது கல்வி. அவர்கள் விரும்பா விட்டால் அந்தக் கல்வியை வழங்காமல் இருப்பதே சிறந்த கல்வி.
            குழந்தைகள் கல்வியை விரும்ப வேண்டும். கல்வியை நேசிக்க வேண்டும். அவர்களை அப்படிக் கல்வியை விரும்பவும், நேசிக்கவும் செய்ய வைக்க வேண்டியப் பணியைச் செய்வதற்கே ஆசிரியர்கள் உலகில் பிறந்துள்ளனர்.
            ஓர் ஆசிரியரின் அரவணைப்பில் இருக்கும் குழந்தை அவர் போதிக்கும் கல்வியை வெறுக்குமானால் அப்படிப்பட்ட கல்வியைப் போதித்ததற்காக அந்த ஆசிரியர் வெட்கப்பட வேண்டும். அந்தக் குழந்தை விரும்பும் வகையில் அந்தக் கல்வியை எப்படிக் கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் யோசிக்க வேண்டும்.
            ஆனால் நடைமுறை அப்படியா இருக்கிறது?
            தற்கொலை செய்து கொண்ட குழந்தைகளுக்காக கண்ணீர் விடாமல், குறைந்தபட்சம் அனுதாபப்படாமல், பணிபாதுகாப்பைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் ஒரு சில ஆசிரியர்கள். ஆசிரியர்களின் பணிபாதுகாப்பை விடவும் குழந்தைகளின் உயிர் பாதுகாப்பு முக்கியம் அல்லவா!
            குழந்தைகளின் மதிப்பெண் குறைவை வெறுமனே பெற்றோர்களை அழைத்து வரச் செய்வதாலும், அவர்கள் முன் கண்டிப்பாகவும் கறாராகவும் பேசுவதால் மட்டுமே சரி செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட குழந்தைகளிடமே ஆசிரியர் பரிவாகவும், அன்பாகவும் இறங்கிப் பேசினாலே போதும். அந்த அன்புக்காகவும், பரிவுக்காகவும் பாடத்தின் கடினத்தன்மையைப் பொருட்படுத்தாமல் படிப்பவர்களே குழந்தைகள்.
            குழந்தைகளைப் புரிந்து கொள்வதற்காகவும், நேசிப்பதற்காகவுமே ஆசிரியர்கள். அவர்களும் புரிந்து கொள்ளா விட்டால், நேசிக்கா விட்டால் அவர்களைப் புரிந்து கொள்ளவோ, நேசிக்கவோ இந்த உலகில் யாரும் இல்லை.
            வெற்றுக் கண்டிப்புகள் நிறைந்த வகுப்பறை அராஜகவாதமும், மதிப்பெண் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை என்ற கோட்பாட்டு முறையிலான கல்வி அணுகுமுறைகளும் ஒழிக்கப்படாத வரை கல்வியால் மாணவர்களைப் புரிந்து கொள்ள முடியாது. கல்வியால் புரிந்து கொள்ள முடியாத குழந்தைகளை அந்தக் கல்வியைக் கொண்டு செல்லும் ஆசிரியர்களாலும் புரிந்து கொள்ள முடியாது.
            வாழ்வை நேசிக்கவும், மனிதர்களை வாசிக்கச் செய்வதுமே கல்வி. மற்றைய அறிவியல், தொழில்நுட்ப, கணித, கருத்துப் பெட்டகங்களை எல்லாம் குழந்தைகள் தங்களின் கற்பனையாலும், ஆர்வத்தாலும் மிக எளிதாகக் கற்றுக் கொண்டு விடுவார்கள்.
            குழந்தைகளின் மென்மையான இதயத்துக்குத் தேவையான அன்பையும், பரிவையும் வழங்க வேண்டியதே ஒரு நல்ல கல்வியின் தரமான அடையாளம். அதை ஆற்றுபடுத்திச் செயல்படுத்துபவரே அத்தகைய கல்விக்குத் தேவையான சரியான, தரமான ஆசிரியர்.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...