30 Nov 2017

தூக்கத்தில் தூங்கிக் கிடக்கும் மருந்து!

தூக்கத்தில் தூங்கிக் கிடக்கும் மருந்து!
            தூக்கம் பலவற்றையும் மாற்றும் மாமருந்து. அதுவும் உழைத்த பின் கொள்ளும் உறக்கம் இருக்கிறதே அதுதான் சொர்க்கம்.
            "உழைப்பும், ஓய்வும் வைத்தியனின் வாசலை மூடுகின்றன" என்று சொன்ன சிந்தனையாளன் சர்க்கரை நோயாளியாக இல்லாவிட்டால் வாய்க்கு சர்க்கரைதான் போட வேண்டும். அது சரி! இப்படிப்பட்ட வாசகத்தைச் சொன்னவன் எப்படி சர்க்கரை நோயாளியாக இருக்க முடியும்? குளோப்ஜானையே எடுத்து அந்தச் சிந்தனையாளனின் வாயில் போடலாம்.
            தூக்கத்தின் சிறப்பே அதற்கு மூச்சை மாற்றும் வல்லமை இருப்பதுதான். அதுவரை சீரற்ற வகையில் இருக்கும் மூச்சு உறக்கம் கொள்ளும் போது சீராக இயங்க முயற்சிக்கும்.
            உடல் தூக்கத்தில் கிடக்கும் போது வேறு எந்த வேலையும் உடலுக்குக் கிடையாது என்பதால் தனது சீரற்ற பல இயக்கங்களை உடல் அப்போதுதான் சீராக்க முயலும்.
            என்னதான் நாம் உழைத்தாலும், அதாவது காசை மலை மலையாகக் குவிக்க வேண்டும் என்று நினைத்து உறக்கம் பாராமல் உழைத்தாலும், உழைப்பிற்குப் பின் உறங்கும் ஓய்வில் கிடைக்கும் சுகத்தை மலை மலையாக எவ்வளவு காசு கொட்டிக் கொடுத்தாலும் வாங்கி விட முடியாது.
            அதே போல உறங்கி ஓய்வெடுத்த பின் துவங்கும் உழைப்பு கொடுக்கும் உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் தொடர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் சோம்பேறித்தனமான உறக்கம் கொடுத்து விட முடியாது.
            அளவான உழைப்பு, அளவான உறக்கம் - இந்த இரண்டும் அவரவர்க்கு புரிய ஆரம்பித்து விட்டால் அவரவரும் தங்கள் வீட்டில் இருக்கும் மருந்து மாத்திரைகளை தூர எறிந்து விடலாம்.
            அந்த அளவு என்னவென்று சொல்லி விட்டால் உபயோகமாக இருக்கும் என்கிறீர்களா? அந்த அளவு என்பது அவரவர் மட்டுமே அறிந்த ரகசியம். அதை அவரவர்கள் மட்டுமே அறிய முடியும் என்பதே இதன் அதிசயம்.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...