முட்டாள்களிடம் மாபெரும் முட்டாளாக இருப்பதே
நல்லது!
கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பார்கள்.
கழுதையிடம் போய் கற்பூரத்தைக் காட்டி விட்டு அதற்கு அதன் அருமை தெரியவில்லையே என்று
புலம்பக் கூடாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவர் இந்த முதுமொழியைக்
காட்டும் வகையில் படைத்துள்ள ஒரு குறள் அற்புதமானது.
"ஒளியார் முன் ஒள்ளியார் ஆதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல்"
என்ற குறளில் அறிவுள்ளவர்களிடம்
அறிவாளிகள் போல் நடந்து கொள்ளுங்கள், அஃது இல்லாதவர்களிடம் முட்டாள்கள் போல் நடந்து
கொள்ளுங்கள் என்கிறார்.
கற்பூர வாசனைப் புரியாத கழுதைக்கு கற்பூர
ஆரத்தை எடுப்பதைப் போல, அறிவில்லாதவர்களிடமும், அறிவை உணரும் தன்மையில்லாதவர்களிடமும்
அறிவைப் பற்றி உரையாடிக் கொண்டிருப்பதும் எந்தப் பயனையும் தருவதில்லை.
நாம் யாரிடம் எதைப் பேசுகிறோம் என்பதைப்
புரிந்துப் பேச வேண்டும். நாம் பேசும் கருத்தைக் கேட்பவரால் புரிந்து கொள்ள முடியாது
எனும் பட்சத்தல் நாகரிகமாக அதை ஒதுக்கி விட்டு, எதை அவரால் புரிந்து கொள்ள முடியுமோ
அதைப் பற்றி மட்டும் பேசுவதே அறிவார்ந்த தனம்.
முட்டாள்களிடம் அறிவாளிகள் போல் நடந்து
கொள்வதும், அறிவாளிகளிடம் முட்டாள்கள் போல் நடந்துக் கொள்வதும் சில நேரங்களில் நம்மை
அறியாமலே நிகழ்ந்து விடும்.
அறிவாளிகளிடம் தன்னம்பிக்கையோடு அறிவாளியாகவே
நடந்து கொள்ளுங்கள். முட்டாள்களிடம் யோசிக்காமல் முட்டாள்கள் போல் நடியுங்கள். அதில்
பிழையேதும் இல்லை. முட்டாள்களிடமும் மாபெரும் அறிவாளியாக இருக்க நினைப்பவன் மாபெரும்
அறிவார்ந்த முட்டாளாகத்தான் இருக்க முடியும்.
*****
No comments:
Post a Comment