மனதின் இரைச்சலுக்கு இலக்கிய தெரபி!
இப்படி ஒரு
மன உளைச்சல் இதற்கு முன் எப்போதும் வாய்த்ததில்லை. காரணம் சிம்பிள். வாசிப்பைக் கைவிட்டது.
மனசு என்பது ஒரு லைப்ரரி மாதிரி. ஒழுங்காக அடுக்கி வைக்காத புத்தகங்களால் மூளை இப்போது
குப்பையாகிக் கிடக்கிறது.
மீண்டும் ஒரு
சீர்மையும் ஒழுங்கும் தேவைப்படுகிறது.
திருக்குறள்,
தொல்காப்பியம், நன்னூல், சங்க இலக்கியம்... இவற்றைத் தேடித் தேடி படிக்க செய்ய வேண்டும்.
சூத்திரங்கள் மனதுக்குள் அமர்ந்தால், தர்க்கம் தானாகத் திரும்பும். சிதறிய எண்ணங்கள்
வரிசைக்கு வரும்.
அப்புறம் அந்த
அதீத உழைப்பு வியாதி.
இத்தனை நாள்
யார் யாருக்காகவோ உழைத்தேன். அப்போது விதவிதமான எதிர்பார்ப்புகள் முளைத்திருக்கின்றன.
என் உழைப்பை நான்கு பேர் பாராட்ட வேண்டும், அதில் கொஞ்சமேனும் சொற்ப வருமானம் வர வேண்டும்
என்ற நப்பாசை.
உலகியல் தர்க்கப்படி
பார்த்தால் பார்த்தால், இது ஒரு தேவையற்ற குப்பை வேதாந்தம். உண்பதற்கு, உடுப்பதற்கு,
இருப்பதற்கு வருமானம் வருகிறதா? யாரையாவது சந்தித்தால் நான்கு பேருக்குத் தேநீர் வாங்கிக்
கொடுக்க பையில் காசு இருக்கிறதா? அதுவே போதுமான சம்பாத்தியம். அதற்கு மேல் ஏன் அதீத
எதிர்பார்ப்பு?
அதிர்ஷ்டம்
இல்லாமல் ஏதோ கிடைப்பதுதான் எல்லாருக்கும் கொடுப்பினை. முட்டி மோதி யாரும் இதுவரை எதையும்
சாதித்ததாகச் சரித்திரம் இல்லை, தலையை உடைத்துக் கொண்டு தக்காளி சட்டினியைப் பார்த்ததுதான்
மிச்சம்.
இன்னொரு தவறு,
வழக்கமாக எல்லாரும் செய்வது. எல்லாவற்றிலும் கை வைப்பது. மல்டி டாஸ்கிங் என்பது கேட்க
நன்றாக இருக்கும். ஆனால், எல்லாத் துறைகளிலும் கால் வைத்தால் கவனம் காற்றில் பறந்துவிடும்.
அதுதான் மனச்சோர்வாகத் திடீரென பூதம் போல எதிரில்
வந்து நிற்கிறது.
ஆனால் ஒன்று...
செயல்பட ஆரம்பித்தால் சோர்வு காணாமல் போய் விடும். ஐந்து நிமிடம் யோசிப்பதை விட, ஒரு
நிமிடம் வேலை செய்வது மேல் என்கிற இன்ஜினியரிங் இத்தியாதிதான் இதற்குத் தீர்வு.
இவற்றையெல்லாம்
எப்படிப் புரிந்து கொள்வது. வாசிக்க வாசிக்க ஏதோ கொஞ்சம் புரிகிறது. அனுபவப்பட செருப்படி
சித்தாந்தங்கள் நிறையே கிடைக்கின்றன.
மற்றபடி நிற்காமல்
வாசித்துக் கொண்டே, எதிர்கொள்ளும் அனுபவங்களைச் சுவாசித்துக் கொண்டே பயணித்துக் கொண்டே
இருங்கள். இளைப்பாறுவதற்கான நிழல் தரும் கானகத்தைப் பயணமே காட்டிக் கொடுக்கும். உங்களுக்கு
மட்டுமல்ல, எனக்கும் இதையே நான் சொல்லிக் கொள்கிறேன்.
*****

No comments:
Post a Comment