5 Jun 2025

சகுனம் பார்க்கத் தொடங்கி 2000 ஆண்டுகளாகி விட்டன!

சகுனம் பார்க்கத் தொடங்கி 2000 ஆண்டுகளாகி விட்டன!

சுத்தம் பார்ப்பவர்களோடு எதையும் சாப்பிட முடியாது. சகுனம் பார்ப்பவர்களோடு தொடர்ந்து பயணிக்க முடியாது.

நாள் பார்க்கிறேன், நேரம் பார்க்கிறேன் என்று சிறுநீரைக் கூட கழிக்க விடாமல் செய்து விடுபவர்கள் நம்மிடையே ஏராளம். பூனை குறுக்கே போகக் கூடாது, யானை குறுக்கே வர வேண்டும் என்று சகுனம் பார்த்து பக்கத்துத் தெருவிற்குக் கூட போக விடாமல் செய்து விடுபவர்கள் கோடானு கோடி பேர்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்குச் சாப்பிடும் போது மின்சாரம் போய் விடக் கூடாது. அப்படிப் போய் விட்டால் அதற்கு மேல் சாப்பிடாமல் எழுந்து விடுவார். மின்சாரம் போன பிறகு தொடர்ந்து சாப்பிட்டால் இறந்து போய் விடுவோம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அதனால் சாப்பிடும் போது மின்சாரம் போகக் கூடாது என்பதை அவர் ஒரு சகுனமாகவே வைத்திருந்தார். சாப்பிடும் போது மின்சாரம் போவது அவருக்குக் கெட்ட சகுனம்.

ஒரு முறை உணவகம் ஒன்றில் அரைத்தட்டு பிரியாணியை ஒரு வாய் எடுத்து வைக்கும் போது மின்சாரம் போய் விட்டது. நண்பர் என்ன செய்திருப்பார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? அதற்கு மேல் அவர் சாப்பிடவில்லை. மற்றவர்களும் அதிலிருந்து ஒரு கவளம் கூட எடுத்துச் சாப்பிடக் கூடாது என்று சொல்லி விட்டார். அரைத் தட்டு பிரியாணிக்கு தண்டம் கட்டி வந்ததுதான் மிச்சம். தற்போது போல் மின்சாரம் தடைபட்டாலும் மின்சேமிப்புக் கலன்கள் வைத்துச் சமாளித்துக் கொள்ள முடியாத அந்தக் காலத்தில் அவரை வைத்துச் சமாளிக்க அவரது குடும்பத்தினர் படாத பாடு பட்டனர்.

இரவில் அவரைச் சாப்பிட வைக்க வீட்டில் உள்ள மின்விளக்குகளையெல்லாம் அணைத்து விட்டுக் காடா விளக்கைக் கொழுத்தி வைத்து அவரைச் சாப்பிட வைத்த கருமங்கள் எல்லாம் நடந்தன. இப்படிப்பட்டவர் வீட்டிற்கு ஏன் மின்சார வசதி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்காதவர்கள் குறைவு. எதற்கும் அந்த மனிதர் அலட்சிக் கொள்ளவில்லை. கடைசி வரை அப்படியே இருந்துவிட்டு அப்படியே போய்ச் சேர்ந்து விட்டார். அவர் சாகும் வரை அவரது குடும்பத்தில் மின்அதிர்ச்சி குறித்த பயத்தை விட அவரது மின்சார சகுனம் குறித்த பயம் அதிகமாக இருந்தது.

இப்படிப் பலவிதமாகச் சகுனம் பார்ப்பது பலருக்கு பல விதமாக இருக்கும். அவற்றை அறியப் புகுந்தால் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமாக ஒரு கதை விரியும்.

இப்படி நாள், சகுனம் பார்ப்பது எப்போது தொடங்கியது தெரியுமா?

கி.மு நான்காம் நூற்றாண்டிலேயே தொடங்கி விட்டது. அக்காலத்தே எழுதப்பட்ட தொல்காப்பியத்தில்,

“நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்”

என இடம்பெறும் வரி அதற்குச் சான்று பகர்கிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் இதனை மாற்ற முடியுமா? இதெல்லாம் பாரம்பரிய வழக்கம் போல ஆகி விட்டதால் மக்கள்தான் மாறிக் கொள்ள விரும்புவார்களா?

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள். சுடுகாட்டிலும் நாள், நேரம், சகுனங்கள் இருக்கின்றன. சனிப் பிணம் தனியாகப் போகாது என்பார்கள். குளுசத்தில் காரியம் பார்க்கக் கூடாது என்பார்கள். சுடுகாட்டைத் திரும்பிப் பார்க்காமல் போக வேண்டும் என்பார்கள்.

மொத்தத்தில் நம் மனிதர்கள் பிறப்பிலிருந்து இறப்பு வரை மட்டுமல்லாமல் இறப்பைக் கடந்தும் எதையும் விட்டு வைக்கவில்லை. இறந்து போனவர்கள் கனவில் வரக் கூடாது என்பது வரை பலவித நம்பிக்கைகள் இருக்கின்றன. அது சரி இறந்து போனவர்கள் கனவில் வராமல் நேரிலா வருவார்கள்?!

*****

No comments:

Post a Comment