யோசிக்க வேண்டிய பேரிடர்கள்!
வெள்ளம்,
பூகம்பம் போன்றவற்றையே பேரிடர்களாகப் பார்க்கிறோம். கஷ்டப்பட்டுப் பணத்தைச் சம்பாதிக்கும்
ஒருவர் அதை இழப்பதும் அவரைப் பொருத்தமட்டில் அவருக்கு ஒரு பேரிடர்தான். இயற்கைக்கு
எதிராக செயல்படுவதும், இயற்கை வளங்களை அழிப்பதும் அதனால் வருங்கால தலைமுறை இடர்பாடுகளை
எதிர்கொள்வதும் ஒரு வகை சமூகப் பேரிடர்தான். இந்த இரு வகைப் பேரிடர்கள் குறித்தும்
நாம் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
தனிநபர் பேரிடர்
பணமாக
எடுத்துச் செல்லும் காலத்தில் கத்தரிக்கள்ளர்களிடமிருந்து (பிக்பாக்கெட் அடிப்பவர்களிடமிருந்து)
காப்பாற்றுவது ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது. சரிதான் எல்லாம் இணைய வழியில் இருக்கட்டும்
என்று நினைத்தால் இணைய வழிகள் மோசடிகள் (ஆன்லைன் மோசடிகள்) பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
பணத்தை எந்த வடிவில் கையாண்டாலும் அதைப் பறிப்பதற்கான ஆட்கள் அதற்கேற்ற வடிவில் நொடியில்
உருவாகி விடுகிறார்கள்.
என்னதான்
செய்வது இந்த இணையவழி மோசடிகளை? விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
எவ்வளவுதான் விழிப்புணர்வை வளர்த்துக் கொள்வது? அதற்கு ஓர் அளவே இல்லையா?
இருபதாயிரம்
ரூபாய்க்கு மேல் இணையவழி பரிவர்த்தனை செய்தாலே தானியங்கி முறையில் மத்திய வங்கியும்
(ரிசர்வ் வங்கியும்) அதனுடன் தொடர்புடைய கண்காணிப்பு அமைப்புகளும் கண்காணிக்கத் தொடங்கி
விடுகின்றன. அதற்கான செயற்கை நுண்ணறிவு தானியங்கி கண்காணிப்பு அமைப்பு முறைகளை அரசாங்க
நிதி நிர்வாக அமைப்புகள் கையில் எடுக்கத் தொடங்கி விட்டன.
நிலைமை
இப்படி இருக்க ஒருவர் இணையவழி மோசடியில் லட்சக் கணக்கில், கோடிக் கணக்கில் பணத்தை இழக்கும்
போது, பெரும்பாலான மோசடிகள் கண்டு கொள்ளப்படுவதே இல்லை. புகார்கள் அளித்தாலும் நிவாரணம்
விரைவில் கிடைப்பதில்லை.
இப்படி
லட்சக் கணக்கில், கோடிக் கணக்கில் இணைய வழியில் மோசடிகள் செய்வோர்களை எல்லாம் மத்திய
வங்கியும் அதன் கண்காணிப்பு அமைப்புகளும் கண்காணிக்காமலா இருக்கும்?
அவர்கள்
மீது விரைவாக நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தருவதற்கான நடவடிக்கைகளில் ஏன் சுணக்கம்
காட்டப்படுகிறது? பேரிடர்கள் என்றாலே நிவாரணங்கள் தாமதமாகத்தான் கிடைக்குமா? அல்லது
கிடைக்காமலே போய் விடுமா?
ஏதோ
ஒரு சிலருக்குப் பணம் கிடைக்கிறது. பலருக்குக் கிடைப்பதில்லை. பணத்தை இழந்தால் அதைப்
பெறுவதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டியதாகத்தான் இருக்கிறது. இது எத்தகைய ஒரு வகைப் பேரிடர்தான்.
பணத்திற்கான பேரிடர்.
சமூகப் பேரிடர்
திடீரென்று
நாம் தொற்றுநோய் பிரச்சனைகளைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்து விடுகிறோம். காலரா, பிளேக்,
சார்ஸ், நிமோனியா, கொரோனா என்று ரோக்காவுக்குள் அடங்காத நோய்கள் மனித குலத்தைத் தாக்க
தொடங்குகின்றன.
நன்றாக
இருந்தால் சும்மா இருக்கிறோமா என்றால், அஜித் நடித்த படம் சரியாகப் போகவில்லை என்ற
கவலை வந்து விடுகிறது. அடுத்த ஆப்பிள் அலைபேசி விற்பனைக்கு வந்தால் கையில் பணம் இருக்குமா
என்ற பரிதவிப்பு ஏற்பட்டு விடுகிறது.
இன்னும்
எவ்வளவு கண்டுபிடிப்புகள் வேண்டுமானாலும் கண்டுபிடிக்கலாம். கொரோனா காலம் என்ற ஒன்று
வந்து விட்டால் எல்லாவற்றையும் மூட்டை கட்டி விட்டு வயக்காட்டில் இறங்கி வயிற்றுப்
பசிக்கான உணவைத் தேட வேண்டியதுதான். ஆசை ஆசையாக வாங்கி வைத்திருந்த வாகனங்களை ஒட்டடைக்கு
ஓய்வெடுக்க கொடுத்த அந்தக் காலத்தைப் பற்றி என்ன சொல்வது?
பங்குச்
சந்தைகள் படுத்துக் கொண்டன. கணினிகள், இணையங்கள், தகவல் தரவுகள் எல்லாம் வீட்டிலிருந்து
இயங்கிக் கொண்டிருந்தன. தெருவில் நடமாடினால் காவலர்கள் லத்திகளால் அடித்தனர். நடைபயிற்சிக்குச்
சென்று வந்த நடராசன் அப்போது ரத்த களறியோடு திரும்பி வந்திருந்தார். கொரோனா தாக்கியிருந்தால்
கூட அவ்வளவு மோசமாகத் தாக்கப்பட்டிருக்க மாட்டார்.
பேரிடர்
காலம் என்பது எப்போதும் எதிர்பாராத விதமாகத்தான் இருக்கும். அதை எதிர்கொள்வதற்கு அனைவரும்
தார்மீக பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். என்ன வேண்டுமானாலும் ஆகட்டும் என்று
இருக்கின்ற நிலங்களை எல்லாம் வீட்டுமனைகளாகக் கூறு போட்டுக் கொண்டிருந்தால், காற்றும்
நதியும், பூமியும் எப்படி வேண்டுமானாலும் மாசுபடட்டும் என்று அதீதமாக இயங்கிக் கொண்டிருந்தால்
அதற்கான விலையைப் பேரிடரின் வடிவில் கொடுக்கத்தான் வேண்டியிருக்கும்.
*****
No comments:
Post a Comment