அணில் கடித்த கரண்ட்
பள்ளி வயதுகளில் அணில் மேல் ஒரு கரிசனமும் ஓணான்கள் மேல் ஒரு
வெறுப்பும் இனம் புரியாமல் இருக்கும். அணிலின் புசு புசு உடலும், ஓணானின் வறண்ட உடலும்
அதற்குக் காரணமாக இருக்கலாம். அணிலிடம் தென்படும் ஒரு வித அழகும் ஓணானிடம் தென்படும்
அழகற்ற தன்மையும் மற்றொரு காரணமாக இருக்கலாம்.
என் சிறுவயதில் ஓணானைப் பிடித்து அதை அடித்து அதன் வாயில் புகையிலையை
வைத்து ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிய நண்பர்களைப் பார்த்திருக்கிறேன். அணிலையும் ஓணானையும்
இராம கதையோடு தொடர்புபடுத்திச் சிறுபிள்ளைகள் பேசுவார்கள்.
அணில் பிள்ளை ராமர் பாலம்
கட்டிய போது தன்னால் முடிந்த சிறுகல்லை எடுத்துக் கொண்டு போனதாகவும், ஓணான் அந்த நேரத்தில்
ஒண்ணுக்கு அடித்ததாகவும் சொல்வார்கள். ஓணான் – ஒண்ணுக்கு என்ற கதை மோனை நயத்துக்காகவும்
இருக்கலாம் என்று சந்தேகிக்கவும் இடமிருக்கிறது.
அணில் பிள்ளை இராமர் பாலம்
கட்ட உதவியதால் இராமர் அதன் முதுகில் தடவிக் கொடுத்து மூன்று கோடுகளை அமைத்ததாகவும்
கூறுவார்கள். பெரும்பாலும் நம் நாட்டு அணில்களுக்கு மூன்று கோடுகள் இருக்கும் என்றால்
வெளிநாட்டு அணில்களுக்கு ஐந்து கோடுகள் இருப்பதை அணில்கள் பற்றி நீங்கள் இணையத்தில்
தேடினால் தெரிந்து கொள்ளலாம்.
அணில், ஓணான் ஆகிய இரு ஜீவன்களும் அது பாட்டுக்கு ஓடிக் கொண்டும்
ஒளிந்து கொண்டும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஓணான் எந்த தீமையும் செய்வதில்லை
என்றாலும் அதற்கு ஒரு கெட்ட பெயர் இருக்கிறது. நாம் பாட்டுக்குப் பேசாமல் இருந்தாலும்
கெட்ட விதமாகப் பேசி விட்டுப் போகும் மனித சமூகத்தின் தொடர்ச்சிதான் இது என்று எடுத்துக்
கொள்ள வேண்டியிருக்கிறது.
அணில்கள் திங்கலாம் என்று ஆசை ஆசையாகப் பார்த்து வைத்திருக்கும்
கொய்யா, பப்பாளி, மா என்று அத்தனை பழங்களையும் வேட்டு விட்டு விடும். ஓணான் அப்படி
ஒன்றும் செய்வதில்லை. அப்படி இருந்தாலும் அணிலுக்கு நாம் மனதில் தரும் வெகுமதியை ஓணான்களுக்குத்
தருவதில்லை.
அணில்கள் குழந்தைகள் மத்தியில் பிரபலம் என்றாலும் சமீபத்தில்
அணில்கள் பிரபலமானது மின்வெட்டில் அதன் பெயர் அடிபட்ட போது எனலாம். அணில்களுக்கான மரங்கள்
செடி கொடிகள் எல்லாவற்றையும் வெட்டி விட்டு மின்கம்பங்களையும் டிரான்ஸ்பார்மர்களையும்
நாம் வளர்க்க ஆரம்பித்தன் விளைவு அது. இல்லையென்றால் அது பாட்டுக்கு நாம் திங்கலாம்
என்று பார்த்து வைத்திருக்கும் பழங்களையும் திங்க வேண்டாம் என்று விட்டு வைத்திருக்கும்
பழங்களைத் தின்று விட்டு அது பாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கும்.
அணில்களுக்கு ஒரு குணம் என்னவென்றால் திங்கலாம் என்று முடிவெடுத்து
விட்ட பொருளை உரசியும் சுரண்டியும் பார்க்கம். அதே பழக்கத்தில் மின்கம்பங்களிலும் டிரான்ஸ்பார்மர்களிலும்
செய்து விடும் போது அது அணில்களின் உயிருக்குப் பாதகமாகி மின்வெட்டுக்கும் காரணமாகி
விடுகிறது.
நாம் மின்மரங்களை அதிகமாக நடுவதைக் குறைத்துக் கொண்டு உயிர்
மரங்களை நட வேண்டும். குறைந்தபட்சம் கம்பி வேலி, போஸ்ட் அமைப்பதைக் குறைத்துக் கொண்டு
உயிர்வேலி அமைப்பதைத் தொடரலாம்.
மேலும் அணில்கள் பற்றி அறிய விரும்புபவர்கள் கீழே உள்ள இணைப்பைச்
சொடுக்கி அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment