4 Aug 2021

இனி வானவெளிப் பயணங்களும் போகலாம்!

இனி வானவெளிப் பயணங்களும் போகலாம்!

            எப்பவாவது வெளியூர் பயணம். பெரும்பாலும் கல்யாணம், காது குத்தல், சாவு, கருமாதி இப்படித்தான் இருக்கும். மாட்டு வண்டி கட்டிக் கொண்டுபோன நாட்கள் ஞாபகம் இருக்கிறது. எங்குப் போய் வந்தாலும் அதைப் பற்றிய பேச்சு அடுத்த பயணம் வரும் வரைக்கும் நீடிக்கும். பேசியதைத் திரும்ப பேசினாலும் கொஞ்சம் கூட சலிக்காது.

விவசாயத்திற்கு டிராக்டர் வந்த பிறகு அதன் டிரக்கில் ஏறிச் சென்ற நாட்களும் பசுமையாகப் பின் தொடர்கின்றன. இப்போது டாட்டா ஏஸில் செல்கிறார்களே அது போல. ஒரு டிரக் இருந்தால் போதும். கிராமமே ஏறிக் கொள்ளும். நெரிசல் நெருக்கடி எதுவும் தெரியாது. சந்தோஷம் மட்டுந்தாம் தெரியும்.

            பிறகு பேருந்திற்குக் காத்திருந்து அது ஒரு காலம். ஒரு நிறுத்தத்தில் ஏறும் கூட்டத்திற்குப் பேருந்து கொள்ளாது. ஏறும் போதும் சரி இறங்கும் போதும் சரி யார் ஏறுகிறார்கள், யார் இறங்குகிறார்கள் என்று எதுவும் புரியாது. சரியாக எல்லாரும் ஏறியிருப்பர்கள், இறங்கியிருப்பார்கள். நடத்துநர் கம்பியைப் பிடித்தபடி பேருந்தோடு பறந்தபடியெல்லாம் வரும் அளவுக்குக் கூட்டம் கூட்டமாய்ப் போயிருக்கிறோம்.

            அந்தச் சம்பவங்களை எல்லாம் இப்போது நினைக்கும் போது அந்தக் கால பயணங்களைச் செய்வதற்குத் தனிபயிற்சி வேண்டும் என்று தோன்றும். கூட்டமாய்ச் சேர்வதும், நெருக்கடியத்துக் கொண்டு செல்வதும் அவ்வளவு சந்தோஷம். இந்தக் காலத்துப் பிள்ளைகள் என்றால் அது போன்ற பயணங்களுக்குக் கையில் எலும்பை எண்ணி எடுத்துக் கொண்டு வர வேண்டியதாக இருக்கும்.

            பக்கத்து ஊரில் சினிமா பார்ப்பதற்கு நடந்து சென்ற நாட்கள், நகரத்தில் சினிமா பார்ப்பதற்கு சைக்கிளில் சென்ற நாட்கள் என்று ஒவ்வொன்றும் அதிசய அத்தியாயங்களாகத் தோன்றுகின்றன. ஒவ்வொரு பயணத்திற்குள்ளும் ஒரு சிறுகதை இருக்கிறது. எல்லா பயணங்களையும் நிரல்பட தொகுத்தால் நாவலாகி விடும்.

            இந்தப் பயணங்களில் ஒரு சில பயணங்கள் எப்போதும் கற்பனையில் மட்டும் நினைத்துப் பார்ப்பதாக இருந்திருக்கிறது. உதாரணமாக இமயமலைக்குப் போவது, காசிக்குப் போவது. இதெல்லாம் எல்லாரும் போய் விட முடியாது. அதற்கென வயது வேண்டும், ஞானம் வேண்டும் என்று அதற்கு ஏகப்பட்ட தகுதிக்கான நிபந்தனைகள் அப்போது இருந்தன. இப்போது எல்லாம் சர்வ சாதாரணம். அதுவும் ரஜினி போய் வருவதால் இமயமலைக்கு இருக்கும் மௌசு தனி. கொரோனாவுக்குக் கும்பமேளாவில் கூடிய கூட்டத்தைப் பார்த்தால் பல விசயங்கள் சர்வ சாதாரணம்.

            அத்தோடு வெளிநாட்டுப் பயணம். பத்து ஊருக்குச் சேர்த்துப் பார்த்தால் யாரோ ஒருவர் அரேபியாவிற்கு ஒட்டகம் மேய்க்க சென்றிருப்பார். அவர் ஊருக்கு வந்தால் போதும் அவரை போய்ப் பார்த்து மாய்ந்து மாய்ந்து கதை கேட்பதுண்டு.

இப்போது எல்லா பயணங்களும் ரொம்ப சுலமாகி விட்டது. ஊருக்கு நான்கு பேர் சிங்கப்பூர் போய் வந்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியா போய் திரும்பி வருகிறார்கள். அமெரிக்கா போய் சுற்றிப் பார்த்து விட்டு வருகிறார்கள். ஆனால் இப்போதெல்லாம் அவர்களிடம் போய் யாரும் கதை கேட்பதில்லை. அதுதான சோகம்.

மொத்தத்தில் கையில் காசு இருந்தால் வையத்தில் எங்கும் சென்று வந்து விடலாம்.

            வையம் என்ன வையம்? வானத்துக்கும் சென்று வந்து விடலாம். காசுதான் கொஞ்சம் அதிகம். கொஞ்சம் என்று சொல்ல முடியாது. ரொம்ப ரொம்பவே அதிகம். வருங்காலத்தில் மலிவு விலைக்கு வந்து விடலாம். அரசாங்கமே இலவச பாஸ்கள் வழங்கினாலும் வழங்கலாம். வான்வெளிக்குப் பயணக் கட்டணம் அதிகரிக்கப்படுவதை எதிர்த்து நாம் வான்மறியல் செய்யும் நிலை கூட வரலாம்.

வானவெளிப் பயணங்கள் சாத்தியமாகிக் கொண்டு இருக்கின்றன. நிலவுக்குப் போகுதல், செவ்வாய் கிரகத்துப் போகுதல், வெள்ளி கிரகத்துக்குப் போகுதல் என்று அடுத்தடுத்த பயணங்கள் பற்றி நாம் பேச ஆரம்பித்து விடலாம் போலிருக்கிறது.

வானவெளிப் பயணங்களுக்கெனவே Blue Origin என்ற நிறுவனம் உதயமாகி விட்டது. நிறைய நிறுவனங்கள் தோன்றுவதற்கான அறிகுறிகளும் தெரிகின்றன. வானவெளிப் பயணங்கள் பற்றி, நிலாவில் பாட்டி வடை சுட்ட கதையைத் தவிர சொல்வதற்கு என்னிடம் கதைகள் இல்லை. வேண்டுமானால் நீங்கள் கீழே சொடுக்கிப் பார்த்துக் கொள்ளலாம்.

 https://www.blueorigin.com/new-shepard/

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...