மனிதர்கள் வளர்க்கும் மரங்களை விட இயற்கை வளர்க்கும் மரங்களே சிறப்பு!
மரம் வளர்ப்பைப் பற்றிக் கேட்டால் நீங்கள் மரங்களை வளர்க்க வேண்டாம்,
இருக்கும் மரங்களை வெட்டாமல் இருந்தால் போதுமானது. ஆதியில் இந்தப் பூமியில் இருந்த
அநேக மரங்கள் மனிதர்களால் நடப்பட்டதல்ல. ஆனால் ஆதியில் இருந்த அத்தனை மரங்களும் மனிதர்களால்
வெட்டப்பட்டவை.
மரம் வளர்ப்பதில் மனிதர்கள் மரங்களுக்கு ஒரு தடையாக இல்லாமல்
இருந்தால் போதுமானது. விதைகள் எங்கும் எப்படியும் வளரும். அதற்குத் தேவையான தண்ணீரை,
வெளிச்சத்தை, விதைகளைப் பரப்பும் உயிரினங்களை இயற்கை படைத்து வைத்திருக்கிறது.
எங்கள் வீட்டுக் கொல்லையில் ஒரு நாவல் மரம் இருக்கிறது. மரம்
என்றால் அது கன்றாக இருந்து இப்போது மரமாக வளர்ந்து நிற்பது வரை நாங்கள் பார்த்து வளர்ந்த
மரம். நாவல் மரத்துக்கான விதையை எங்கள் வீட்டில் யாரும் போடவில்லை. அது கன்றாக வளரத்
தொடங்கியதிலிருந்து யாரும் தண்ணீர் ஊற்றவும் இல்லை. அந்த மரத்திற்காக நாங்கள் எதுவும்
செய்யவில்லை, அந்த மரம் வளர்ந்து கொண்டிருப்பதை அவ்வபோது வேடிக்கை பார்த்ததைத் தவிர.
நாவல் மரத்துக்கான விதையைப் போட்டது பழந்தின்னி வௌவால். மனிதர்கள்
போடும் விதைகளை விட பறவைகளும் வௌவால்களும் போடும் விதைகளுக்கு வீரியம் அதிகம். பெய்யும்
மழையில் அதுவாக முளைத்தது. அதுவாக வேர்களைத் துழாவச் செய்து மரமாக வளர்ந்து நின்றது.
என் மகள் அம்மரத்தின் கீழ் நாவல் பழங்களைப் பொறுக்கும் போது
அவளுக்குள் இனம் புரியாத ஆனந்தம். பழங்களைப் பொறுக்கிக் கொண்டு வந்து உப்பு போட்டு
அதைக் குலுக்கிச் சாப்பிடும் போது அவளுக்கு வாங்கிக் கொடுக்கும் பண்டங்களை விட பேருவுவகைத்
தருவதாக அமைகிறது.
இதற்கு அடுத்தபடியாக சர்க்கரை நோய் இருக்கிறது என்று அந்த மரத்தின்
கீழ் வந்து நாவல் பழங்களை அதன் கொட்டைகளுக்காகச் சேகரித்துக் கொண்டு போகுபவர்களும்
எங்கள் கிராமத்தில் இருக்கிறார்கள். ஒரு நோய்க்கான மருந்துக் கூடமாகவும் மரம் இருக்கிறது.
அதுவும் மனிதர் விதைக்காத மரம். அதுவாக வளர்ந்த மரம்.
மற்றொரு அனுபவமும் எங்கள் கொல்லையிலிருந்து எனக்குக் கிடைத்தது.
எங்கள் கொல்லையில் ஆரம்பத்தில் சவண்டல் மரம் கிடையாது. பக்கத்துக் கொல்லையில் இருந்தது.
அதன் விதைகள் காற்றாலோ, மழையாலோ எங்கள் கொல்லைக்கு வந்திருக்கலாம். அதன் பின் இரண்டு
மூன்று ஆண்டுகளுக்குள் எங்கள் கொல்லை முழுவதும் சவண்டல் மரங்களால் நிறைந்தன.
எங்கள் கொல்லையில் மாமரம், கொய்யா மரம், தேக்கு மரம் ஆகியவை
நாங்கள் கன்றுகளாக வாங்கி வந்து நட்டு வைத்தவை. அவற்றின் வளர்ச்சியை விட அதுவாக எங்கள்
கொல்லையில் வளரும் மரங்கள் வீரியமாக வளர்கின்றன. இப்போது நினைத்துப் பார்க்கும் போது
நாங்கள் எந்தக் கன்றுகளையும் வாங்கி வந்து எங்கள் கொல்லையில் நட்டிருக்க வேண்டாம் என்று
தோன்றுகிறது.
மரங்கள் வளர்வதற்குத் தேவை இடம். அந்த இடத்தை மனிதர்கள் தொந்தரவு
செய்யாமல் இருந்தால் போதும். செடிகளும் கொடிகளும் மரங்களும் அதுவாக வளரும்.
மரங்களுக்கான இடங்களை நாம் தொந்தரவு செய்கிறோம் என்பது மறுக்க
முடியாத உண்மை. இந்த உலகம் என்பது மனிதர்களான இடம் என்பது போல மனிதர்கள் நடந்து கொள்கிறார்கள்.
மரங்களுக்கும் இந்த உலகில் இடமிருக்கிறது என்பது அறிந்து ஒதுங்கிக் கொண்டால் போதும்.
மரங்கள் அதுவாக வளரும். மற்றபடி மரம் வளர்ப்பது அதற்காக ஓர் இயக்கத்தை உருவாக்குவது
என்பதெல்லாம் ஏமாற்று வேலைகள் என்றுதான் நான் நினைக்கிறேன்.
மரம் வளர்ப்பதால் எல்லாம் உலகில் மரங்கள் வளராது என்பதும் என்
தாழ்மையான கருத்து. ஏனென்றால் மரங்கள் ஒன்றும் மனிதர்கள் வளர்க்க வேண்டிய அனாதைகளாக
இல்லை. மனிதர்களை வளர்க்கும் பெற்றோர்களாக மரங்கள் இருக்கின்றன என்பதுதான் உண்மை. மரங்கள்
அதுவாக வளரும். நாம் மரங்களைத் தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும்.
இந்தப் பூமியில் இருக்கும்
கோடிக்கணக்கான மரங்களை மனிதர்களா நட்டு வளர்த்தார்கள்? இந்த மனிதர்களுக்குப் புகழ்
வேண்டும், பெயர் வேண்டும், சமூக சேவை செய்ய வேண்டும் என்று காட்டிக் கொள்வதற்காக மரம்
வளர்ப்பைக் கையில் எடுத்துக் கொண்டு வேடிக்கை காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஓர் இடத்தை மனிதர்கள் வாங்கினால்
குறைந்தபட்சம் வேலிகளைக் கூட போத்துகளைக் கொண்டு அமைப்பதில்லை. சிமெண்ட் அல்லது கருங்கல்
போஸ்ட்டுகளைக் கொண்டு அமைத்து கம்பி வேலிகளால் அமைக்கிறார்கள்.
வாங்கிப் போட்ட இடத்தில் போய் வரும் போது கால்கள் மண்ணாகிறது,
சேறாகிறது என்று காங்கிரீட்டைப் போடுகிறார்கள் அல்லது இதற்கென இருக்கும் கற்களைப் பரப்பி
வைக்கிறார்கள்.
மரங்கள் வளர்வதற்கான அத்தனை இடங்களையும் ஆக்கிரமித்து விட்டு
பேருக்கு ஓர் இடத்தில் ஒரு மரக்கன்றை நட்டு விட்டு அதை மாபெரும் மர நடுவிழாவாகக் காட்டுகிறார்கள்.
பிறகு அதற்கு தண்ணீர் ஊற்றுவது யார், பராமரிப்பது யார் என்பதெல்லாம் அதை நட்டவர்களுக்கும்
தெரியாது, மரம் நட்டதைப் பாராட்டியவர்களுக்கும் தெரியாது.
இயற்கையில் மனிதர்களுக்கு என்ன தேவையோ அதை அளவோடு எடுத்துக்
கொண்டு அளவோடு நிறுத்திக் கொள்ளும் போது இந்த உலகுக்கு எது எது தேவையோ அதை இயற்கை செய்து
கொடுத்து விடும்.
நம்முடைய செயல்பாடுகளில் ஓர் இயற்கையான தன்மை இல்லையென்றால்
நாம் என்னதான் செயற்கையான செயல்பாடுகளைச் செய்தாலும் அது விளம்பரமாக அமையுமே தவிர இயற்கையான
நன்மையைத் தருவதாக அமையாது.
இந்த உலகில் நடக்கின்ற கூத்துகளை எல்லாம் பார்த்தால் இந்த மனிதர்கள்
எதுவும் செய்யாமல் இருந்தால் போதும் உலகமும் உலகில் உள்ள இயற்கையும் நன்றாக இருக்கும்.
அப்படியே விட்டு விட்டால் மனிதர்களும் இவ்வளவு நோய்களோடும் உளைச்சல்களோடும் போராட தேவையில்லை.
மரம் வளர்ப்பதற்கென்று இப்படி சில இணையதள ஊக்குவிப்புகளும் இருக்கின்றன.
ஆனால் மனிதர்கள் அளவோடு நின்று கொண்டால் எந்த முயற்சியும்தேவையில்லை. இருந்தாலும் நீங்கள்
விரும்பினால் இதைச் சொடுக்கிக் கீழே பாருங்கள்.
No comments:
Post a Comment