17 Aug 2021

மீண்டும் மீண்டும் உருண்டு திரண்டு வரும் அலை

மீண்டும் மீண்டும் உருண்டு திரண்டு வரும் அலை

            கொரோனாவின் மூன்றாவது அலையை உலகம் அதிர்ச்சியோடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை அலைதான் வந்து வந்து போகும் என்ற கேள்வி ஒவ்வொருவர் மனதிலும் தொக்கி நிற்கிறது.

            ஆகஸ்ட் 2021 இன் இறுதியில் மூன்றாவது அலை தொடங்கலாம். அது அக்டோபரில் உச்சத்தை எட்டலாம். பிறகு தணியலாம். இப்படியான ஊகங்கள் தற்போது உலவி வருகின்றன.

            முதல் அலையிலிருந்து இரண்டாவது அலை உருவாவதற்கும் இரண்டாவது அலையிலிருந்து மூன்றாவது அலை உருவாவதற்கும் உருமாற்றம் அடையும் கொரோனா காரணமாகக் கூறப்படுகிறது. அடுத்தடுத்த அலைகள் உருவாகப் போவதற்கும் உருமாற்றம் அடையும் கொரோனா காரணமாக அமையும் என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது.

            கரப்பான் பூச்சியை அழிக்க அழிக்க அது மேலும் வீரியமாகப் பெருகும் என்று குறிப்பிடுவார்கள். அது போல கொரோனாவை அழிக்க முற்பட அது வேறு விதமாக வீரியமாகிப் பெருகிக் கொண்டிருக்கிறது.

            முதலிரண்டு தடுப்பூசிகள் மூன்றாவது அலையை எதிர்கொள்ள போதுமானதா? அல்லது மூன்றாவதாக ஊக்க நிலை தடுப்பூசி போடப்பட வேண்டுமா? என்ற வினாவில் மருத்துவ உலகம் மூழ்கியிருக்கிறது.

தற்போது போடப்படும் இரு தடுப்பூசிகளின் வீரிய காலம் ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை நீடிக்கும் என்கிறார்கள். இதைப் பார்க்கும் போது வருடா வருடம் கொரோனாவுக்கான தடுப்பூசியைப் போடும் நிலை வருவமோ என்று சிந்திக்க இடம் இருக்கிறது.

வேறொரு வகையில் மனிதர்கள் தம்முடைய எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலமாக கொரோனாவை எதிர்கொள்வதற்கான உருமாற்றத்தை அடையலாம். மனிதர்கள் இயற்கைக்குத் திரும்புவதன் மூலமாக இயல்பாக அவர்களது எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் இயற்கைக்குத் திரும்புதல் என்பது வணிக முக்கியத்துவம் இல்லாத பண்ட மதிப்பு இல்லாத ஒன்று என்பதால் அது உலக அளவிலான வணிக அரசாங்கங்களால் ஏற்கப்படுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

தொற்றுநோய்க் கிருமிகள் என்பது கொரோனாவோடு நின்று விடும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. வேறு பல்வேறு வடிவுகளில் அது வந்து கொண்டு இருக்கலாம். இயற்கை எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் எதிர்ப்பாற்றலை மனிதர்களுக்குத் தர தயாராக இருப்பதால் நாம் எப்போதும் இயற்கையை நாடலாம் நோய்களிலிருந்து விடுபட.

நாம் விடுபட நினைக்கும் நோயானது தொற்றும் நோயாக இருந்தாலும் சரி, தொற்றாத நோயாக இருந்தாலும் சரி அதற்கான மருத்துவம் இயற்கையிடம் இருக்கிறது. இயற்கையிடம் இருக்கும் தூய்மையான நீர், தூய்மையான காற்று, தூய்மையான சுற்றுச்சூழலுக்கு நிகரான மருந்து வேறெங்கே இருக்கிறது?

இயற்கையிடம் இருக்கும் தூய்மையை நாம் மாசுபடுத்தாமல் இருந்தால் மனிதர்களுக்குத் தேவையான மருந்தை இயற்கை வழங்க தயாராக இருக்கிறது. அந்த மருந்தை ஏற்றுக் கொள்ள இனிவரும் மனிதர்கள் தயாராக இருப்பது எக்காலத்தையும் எதிர்கொள்வதற்கான மிகச் சிறந்த வழியாக அமையும் என்று கருதுகிறேன்.

மனிதர்களுக்கு இயல்பான நோய் எதிர்ப்பாற்றல் இருந்தால் கொரோனா உட்பட எந்த பெருந்தொற்று நோயாக இருந்தாலும் அது காலாவதியாகி விடும் என்பது இயற்கை சொல்ல விழையும் பாடம். அந்தப் பாடத்தை விரும்பி நாம் கற்க வேண்டுமே!

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...