கேஸ் கட்ட கொடுங்க!
செய்யு - 707
அடிபட்டதோட வலி காலையில ரொம்பவே அதிகமாவ
ஆரம்பிச்சிது. வடவாதியிலப் போயி டாக்கடர்கிட்டெ காட்டிட்டு வந்துடுவோம்ன்னு விகடு
சுப்பு வாத்தியார்ரக் கூப்புட்டுப் பாத்தாம். அவரு வர முடியாதுன்னு வீம்பா உக்காந்திருந்தாரு.
மொல்லமா நாம்மப் போவச் சொல்லியும் மவ்வேன் அதெ பொருட்படுத்தாம ஏதோ தப்புப் பண்ணிக்
கொண்டுப் போயி விட்டுட்டாங்ற எரிச்சல் அவரோட மனசுல இருந்துச்சு போல. இந்த மாதிரி
எடத்துல இப்பிடி நடக்கும்ன்னு சொல்லியும் எச்சரிக்கெ யில்லாம இருந்துட்டானே மவ்வேன்ங்ற
கோவமும் அவரோட மனசுல இருந்திருக்கணும். அத்தோட மவளெ போலீஸ்லப் பிடிச்சிட்டுப் போயி,
அங்க அடிபட்டு ஆஸ்பிட்டல்ல வெச்சிருக்குற நெலமெயும் அவரோட மனசுல ஒரு விரக்திய உண்டு
பண்ணிடுச்சு. இந்த அடிபட்டதெ பாத்தா ன்னா? பாக்காட்டியும் ன்னாங்ற வெறுத்துப் போன விரக்தியான
மனநெலைக்கு அவரு வந்திருந்தாரு.
விகடு அடிபட்ட எடத்துலப் பாத்தாம். அடிபட்ட
எடத்துல எல்லாம் மண்ணு அப்பிடியே இருந்துச்சு ஒங் கூட ஒட்டிக்கிட ஒலகத்துல நாம்ம ஒருத்தெம்தாம்
இருக்கேம், மித்த எல்லாம் வெட்டிக்கிடத்தாம் இருக்காங்கறாப்புல. அதெ சரியா தேய்ச்சிக்
குளிக்காமலே பேருக்குக் குளிச்சிட்டு வந்து படுத்தது தெரிஞ்சது. இந்த வலிக்கும் செரி,
அடிபட்ட புண்ணு கொணமாவுறதுக்கும் செரி டாக்கடர்ரப் பாத்து ஊசியப் போடாம காரியம் ஆவாதுங்றது
அவனுக்குப் புரிஞ்சிது. அதுவா ஆறட்டும்ன்னு பாத்தா இந்த வலியோடயே ஆவ வேண்டிய காரியங்களப்
பாக்க முடியாதுங்றதும் அவனுக்குப் தெரிஞ்சது. அப்பங்காரரு அளவத் தாண்டி மல்லுகட்டியும்
வராமப் போனதுல அவ்வேம் மட்டும் வடவாதியில பக்தவச்சலம்ங்ற பத்து டாக்டர்கிட்டெ காட்டிட்டு
வந்தாம். வரும் போது மருந்து மாத்திரைகளயும், ஆயின்மெண்டையும் கூடவே வாங்கியாந்தாம்.
டாக்கடர்கிட்டெ காட்டாட்டியும் ஆயின்மெண்டு, மருந்து மாத்திரைகளாச்சும் அப்பங்காரர
போட வெச்சிப்புடலாம்ன்னு. ஆன்னா சுப்பு வாத்தியாரு ஆயின்மெண்டைக் கூட போட முடியாதுன்னு
பிடிவாதமா இருந்தாரு. ஒடம்புல பட்ட காயத்துக்கத்தாம் மருந்தெ போட முடியும், மனசுல பட்டிருக்குற
காயத்துக்கு எதெ போடுவேங்றாப்புல இருந்துச்சு அவரு பண்டுன மொரண்டு. அவருக்கு வாழ்க்கெ
மேல அவர்ர அறியாமலே ஒரு வெறுப்பும், சலிப்பும் படிஞ்சிருந்துச்சு. வயசான மனுஷங்களுக்கு
உண்டாவுறப் பிடிவாதத்தெ அவ்வளவு சீக்கிரமா போக்கிட முடியாதுங்றது விகடுவுக்குத் தோணுணுச்சு.
அவ்வேம் அதுக்கு மேல மல்லுகட்டாம பள்ளியோடத்துக்குக் கெளம்புறதெப் பத்தி யோசிக்க
ஆரம்பிச்சாம்.
சைக்கிள்ல ஏறி உக்காந்து மிதிச்சிப் போவ
முடியும்ங்ற நம்பிக்கெ யில்லாததால டிவியெஸ் பிப்டியிலயே போறதுன்னு முடிவு பண்ணுணாம்.
அதுக்கு வண்டியயே முழுசா கழுவ வேண்டியதா இருந்துச்சு. ஒரு மணி நேரத்துக்கு மேல வண்டியத்
தேய்ச்சி கழுவுன பெற்பாடுதாம் வண்டியில ஒட்டியிருந்த களிமண்ணு சுத்தமானுச்சு. அந்த
களிமண்ணுக்கு வண்டிய ரொம்பப் பிடிச்சிப் போயிருந்திருக்கும் போல. வண்டிய ரொம்ப
கெட்டியாவே பிடிச்சிருந்துச்சு. மார்கழி மாசத்துப் பனியும், மனுஷனப் பிடிச்ச சனியும்
அவ்வளவு சீக்கிரத்துல வுடாதும்பாங்க. அந்தப் பிடிப்ப அகத்தி வுடுறது சாமானியமா யில்ல.
பிடிச்சிருந்த பிடிப்பெ அகத்தி வுட திரும்ப திரும்ப தேங்கா நார்ர போட்டு தேய்ச்சிக்கிட்டு
இருக்க வேண்டியதா இருந்துச்சு.
வண்டியிலேந்து கீழே வுழுந்து உண்டான வலியில
பேண்டைப் போடுறது ரொம்ப செருமமா இருந்துச்சுன்னு வேட்டியக் கட்டிக்கிட்டுக் கெளம்புறதுன்னு
முடிவு பண்ணிக் கெளம்புனாம். எப்படியும் உள்ளார அடிபட்டிருக்கிற காயத்துக்கு வலி எப்படியும்
முழுசா சரியாவ நாப்பது நாளுக்கு மேல கூட ஆவும்ன்னாரு பத்து டாக்கடரு. அது வரைக்கும
ரொம்ப மல்லுகட்டி எடை தூக்குற மாதிரிகளான வேலைகளச் செய்ய வேணாம்ன்னு சொல்லியிருந்தாரு.
ரெண்டு நாளைக்கு நல்லா ஓய்வு எடுத்துக்கிட்டா தேவலாம்ன்னும் சொன்னாரு டாக்கடரு. அதுப்படி
நடக்குறதுக்கான சூழ்நெல எங்க இருக்கு வாழ்க்கையில? ஓட்டமா ஓடிட்டேதாம் இருக்க வேண்டியதா
இருக்கு. இதுக்கு ஓய்வா இருக்குறதுக்கு ரண்டு நாளு லீவெப் போட்டா பின்னாடி ஏதோ ஒரு
முக்கியமான காரியத்துக்குப் போடுறதுக்கு லீவு யில்லாமலப் போயிடும்ன்னு நெனைச்சிக்கிட்டெ
விகடு பள்ளியோடத்துக்குப் போயிட்டு வந்தாம். பள்ளியோடம் போனதும் ஒரு வெதத்துல நல்லதாத்தாம்
போவுது. என்னத்தாம் காய்ச்சலா இருந்தாலும், ஒடம்புக்கு முடியாம இருந்தாலும், அடிபட்டுக்
கெடந்தாலும் புள்ளீயோளப் பாத்துப் பேசிட்டு இருக்குறப்போ அதோட வேதனெ தெரியாமப் போயிடுது.
வூட்டுல கெடந்தா ஒடம்பச் சுருட்டிக்கிட்டுப் படுக்கத்தாம் தோணுது. மனுஷனப் பிடிச்சி
பல வெயாதிகளுக்கும், வலிகளுக்கும் வேல செய்யுறதப் போல ஒரு மருந்து கெடையாதுதாம். அத்துச்
செரி வேல செய்யுறப்போ ஒலகமே மறந்து போறப்போ இந்த வலியா மறந்துப் போவாது?
அடிபட்டதுல உண்டான வலியிலயும் ஒரு நன்மை
இருக்கத்தாம் செஞ்சிது. உசுர்ர எடுக்குறாப்புல வலிச்ச வலியிலயும், எரிச்சல்லயும் அது
வரைக்கும் தங்காச்சிப் பெரச்சனையில மனசுல உண்டாயிருந்த அத்தனெ வலியும் எங்கயோ பறந்துப்
போனாப்புல ஆயிடுச்சு. ஒடம்போட வலியும், எரிச்சலும்தாம் பெரிசா தோணுணுச்சு. இந்த
வலியும், எரிச்சலும் சரியாப் போனா ஆயிரம் பெரச்சனைகளச் சமாளிச்சிப்புடலாங்ற தெம்ப
தர்றாப்புல இருந்துச்சு. ஆன்னா இது அப்பிடியே சுப்பு வாத்தியாருக்கு நேர்மாறா இருந்துச்சு.
அவரு ஒடம்போட வலிய பெரிசா நெனைக்க முடியாத அளவுக்கு அவரோட மனசோட வலி இருந்துச்சு. வலிங்றது
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரித்தாம் போலருக்கு. இதுல எந்த வலி கடுமெ, எது கொடுமென்னு
வகெ பிரிச்செல்லாம் சொல்ல முடியாது. மனுஷங்களப் பொருத்து அவுங்கவுங்க வலி அவுங்கவங்களுக்குப்
பெரிசு அவ்வளவுதாம்.
சாயுங்காலம் பள்ளியோடம் விட்டு வந்ததும்
விகடு, "ஆர்குடிக்கு ஆஸ்பிட்டலுக்குப் போயிட்டு வந்துடுவோமா?"ன்னு கேட்டாம்
நடக்க வேண்டிய தூரம் ரொம்ப இருக்குறப்போ காலச் சொணக்கிக்கிட்டு உக்காந்துப்புட முடியாதுங்றாப்புல.
"ஏம் மறுக்கா கொண்டுப் போயி மாமாவத்
தள்ளி வுட்டு ரத்தக் காயத்தோட கொண்டு வர்றதுக்கா?"ன்னா ஆயி சோத்தெ ஆக்கப் போறேம்ன்னு
அதெ கொழைச்சிக் கொண்டார வேண்டாம்ங்றாப்புல.
"ஏம்டி நாமளுந்தாம் அடிபட்டு வந்திருக்கேம்!"ன்னாம்
விகடு தாம் மட்டும் ன்னா சோடிச்சு வெச்ச சாமியப் போலயா திரும்பி வந்திருக்கேம்ங்றாப்புல.
"ஒஞ்ஞ வயசு ன்னா? மாமாவோட வயசு ன்னா?
ஒஞ்ஞளுக்கு அடிபட்டா ஒஞ்ஞளால தாங்க முடியும். அவுங்க வயசுக்கு தாங்க முடியுமா? இன்னிக்குப்
பூரா படுத்துதாங் கெடந்தாங்க. இப்பிடி படுக்குறவங்கள மாமா? எல்லாம் ஒஞ்ஞளால வந்தது.
மாமாத்தாம் வழுக்கிட்டு வுழுந்துப்புடும்ன்னு சொன்னதெ கேக்காம வண்டிய வெரசா வெரட்டிக்கிட்டு
வந்திருக்கீயே?"ன்னா ஆயி முள்ளு கெடக்குன்னு தெரிஞ்சும் அதெ தேடிப் போயிக் குத்திக்கிட்டதா
குத்திக் காட்டுறாப்புல.
"டிவியெஸ்ஸூ பிப்டி ன்னா புல்லட்டா
வெரட்டிட்டு வர்றதுக்கு? இந்த வண்டியில முப்பதுல போனாவே ஒதறும். இந்த வண்டியில எவ்ளோ
மெதுவா போவ முடியுமோ அதெ வுட மொல்லமாத்தாம் போனேம். அதாலத்தாம் இந்த அளவோட காயம்லாம்
வுட்டுச்சு!"ன்னாம் விகடு இந்த அளவு காயத்தோட தப்பிச்சது தல தப்புனது தம்புராம்
புண்ணியம்ங்றாப்புல.
"இதுல வேகமாப் போயி இன்னும் வேற
அடிபடணும்ன்னு நெனைப்போ? நல்லவேளையா ஒஞ்ஞளுக்கு வண்டி வாங்கிக் கொடுக்காம வுட்டது
நல்லதாப் போச்சு. ல்லன்னா வூட்டுல இருக்குற அத்தனெ பேரையும் அழைச்சிட்டுப் போயி கீழே
தள்ளி வுடுறதையே ஒரு வேலையா பண்ணிட்டு இருப்பீயே!"ன்னா ஆயி வண்டியிலேந்து வுழுந்து
எழுந்திரிச்சி வாரது என்னவோ அவ்வேம் பொழுதுபோக்குங்றாப்புல.
"செரி! இன்னிக்கு ஆஸ்பிட்டலு போறதா
ன்னா?"ன்னாம் விகடு டீக்கடை பத்திட்டு எரியுறப்போ தமக்கு இன்னும் டீத்தண்ணி வர்லங்றாப்புல.
"மாமா சாப்புட்டு நல்லா தூங்கிட்டு
இருக்காங்க. பேயாம வுடுங்க. ரண்டு நாளைக்குப் படுத்துத் தூங்குனாத்தாம் செரிபட்டு வாரும்.
ஊசி வேற போட்டுக்கிட மாட்டேங்றாங்க. பாப்பவ வுட்டுத்தாம் நீஞ்ஞ வாங்கியாந்த ஆயின்மெண்ட
தூங்குறப்ப போட்டு வுடச் சொன்னேம். அதுவுமில்லாம இந்தக் காயத்தோட அஞ்ஞப் போயி நின்னீயன்னா
அவுங்களுக்கும் சங்கடமா இருக்கும். ரண்டு நாளு பொறுத்தியன்னா காயமும் கொஞ்சம் காய்ஞ்சு
வந்துடும். அடிபட்டது ரொம்ப பெரிசா தெரியாது. சொல்றதெ கேட்டு வூடடங்கிக் கெடங்க!"ன்னா
ஆயி இது வரைக்கும் ஒட்டிக்கு ரெட்டி வேல பாத்ததே போதும், இனுமே எந்த வேலையும் பாக்க
வாணாங்றாப்புல.
"அஞ்ஞ ஆஸ்பிட்டலுக்குச் சொல்லணுமே
இன்னிக்கு வாரலங்றதெ?"ன்னாம் விகடு ஏரோப்ளான்ன நடு வானத்துல நிறுத்த முடியாதேங்றாப்புல.
"அதெல்லாம் நாம்ம போன் பண்ணி யத்தெகிட்டெ
சொல்லிட்டேம். இஞ்ஞ திருவாரூர்ல வக்கீலப் போயிப் பாக்க வேண்டிய வேல இருக்குங்ற மாதிரிக்கி.
மாமா கூட சொல்லிட்டே இருந்தாங்க. அந்த வக்கீல்கிட்டெ கேஸ் கட்டெ வாங்கிட்டு வாரணும்ன்னு.
அதுக்கு நீஞ்ஞ ஆர்குடிக்கு ஆஸ்பிட்டலுக்குப் போறதுக்குப் பதிலா, இஞ்ஞ திருவாரூருக்குப்
போயி வக்கீல் ஆபீஸ்ல அதெயாச்சும் வாங்கிட்டு வாங்களேம்! அதுதாங் யிப்போ பண்ணுற வேலையில
உருப்படியான வேலையா இருக்கும்!"ன்னா ஆயி தனியா போயி வுழுந்து எந்திரிச்சு வந்தாலும்
பரவாயில்ல, யாராச்சும் கூப்புட்டுப் போயி வுழுந்து எந்திரிச்சுக் காயத்தோட வராதீயேங்றாப்புல.
"இஞ்ஞ வக்கீலு ஆபீஸ்ன்னா ஏழு மணிக்கு
மேல போனாத்தாம் சரிபட்டு வாரும். போன பண்ணிக் கேட்டுக்கிட்டுதாம் போவணும்!"ன்னாம்
விகடு யானை வாரதுக்கு மின்னாடி அது மணியடிச்சிட்டுத்தாம் வாரணும்ன்னு சொல்றாப்புல.
"மாமா போன் பண்ணிட்டுப் போயில்லாம்
கேக்கக் கூடாது. சட்டுன்னு போயி நின்னு கேக்கணும்ன்னு சொன்னாவோ! பெறவு ஒஞ்ஞ இஷ்டம்!"ன்னா
ஆயி பூனை வாரதுக்குல்லாம் மணியடிச்சிட்டு வாரக் கூடாதுங்றாப்புல.
"ஏம் போன்ல பண்ணிக் கேட்டுக்கிட்டுப்
போனா கொடுக்க மாட்டாங்களாக்கும்?"ன்னாம் விகடு பூனை மணியடிச்சிக்கிட்டுப் போனா
எலி ஓடிப் போயிடும்ங்ற சூட்சமம் புரியாதவேம் போல.
"என்னவோ இழுத்தடிச்சாலும் இழுத்தடிப்பாங்கன்னு
மாமா அபிப்ராயப் பட்டாங்க. மத்தியானம் சாப்புட்டு முடிச்சிட்டு இதெப் பத்தித்தாம் பேசிட்டு
இருந்தாவோ. அதுல கேட்டதெ வெச்சிச் சொல்றேம். வேணும்ன்னா நீஞ்ஞ மாமாவ எழுப்பி வுட்டுக்
கேட்டுக்கிடுங்க!"ன்னா ஆயி சொல்றதெ சொன்ன பெறவும் முட்டா பட்டம் வாங்கிக் கட்டிக்கிறது
அவுங்கவுங்க தோதுங்றாப்புல.
"ந்நல்லா தூங்கிட்டு இருக்குறவங்களெ
எழுப்ப வாணாம். வலி வேற இருக்கும். எழும்புனா பெறவு தூங்க முடியாது. நமக்கும் ஒடம்பெல்லாம்
வலி தாங்கல. ராத்திரி தூங்குனது வேற நேரம் கெட்ட நேரத்துல. நமக்குமே கொஞ்சம் தூக்கமாத்தாம்
வருது! சித்தெ படுத்துட்டு வக்கீலு ஆபீஸூ போற வேலையப் பாக்கறேம்!"ன்னு சொல்லிட்டுப்
படுக்க வந்தாம் இன்னிக்கு ஆவ வேண்டிய காரியத்தெ நாளைக்கு முடிச்சிடுவேம்ன்னு சத்தியம்
பண்ணிச் சொல்றவனெப் போல. தூங்கப் போனவேம் தூங்கப் போனவந்தாம். அவனால அதுக்கு மேல எழும்ப
முடியல. ராத்திரிச் சாப்பாட்டுக்கு ஆயி எழுப்பி பாத்தும் அவ்வேம் எழும்பல. ஆள ச்சும்மா
அடிச்சிப் போட்டாப்புல மறுநாளு காலம்பர ஆறு மணிக்கு வரைக்கும் தூங்குனாம். அப்பிடித்
தூங்கி எழும்புன பெற்பாடுதாம் அவனுக்கு ஒடம்புக்குக் கொஞ்சம் எதமா இருந்துச்சு. எழும்புனதுமே
நேத்திக்கு வக்கீலு ஆபீஸூக்குப் போவ வேண்டிய வேலைய செய்யாம வுட்டதுல ஒரே குத்த உணர்ச்சியா
இருந்துச்சு. குறள்ன்னா ‘தன்னெஞ்சே தன்னைச் சுடும்’னு அவ்வேம் பள்ளியோடத்துப் புள்ளையோ
அடிக்கடி சொல்ற குறள் நெனைவுக்கு வந்து துப்பாக்கியால சுடுறது போல அவ்வேம் நெஞ்சுக்கு
நேரா சுடுறாப்புல இருந்துச்சு. இன்னிக்கு அந்த வேலைய எப்பிடியும் முடிச்சிப்புடணுங்றதுல
குறியா இருந்தாம்.
அன்னிக்குப் பள்ளியோடம் வுட்டு வந்ததும்
மொத வேலையா வக்கீலு ஆபீஸ்லப் போயிக் காத்துக் கெடந்தாலும் பரவாயில்ல, இஞ்ஞ வூட்டுல
கெடந்து ஒடம்பு முடியாததுக்குத் தூங்கிடப் படாதுன்னு பள்ளியோடம் வுட்டு வந்ததும் வராததுமா
கெளம்பிட்டாம். அங்கப் போயி வக்கீலுக்குப் போன அடிக்காமலே காத்துக் கெடந்தாம். ஏழே
காலப் போல வக்கீலு வந்தாரு. இவனெப் பாத்ததும் வக்கீலு திருநீலகண்டன், "சாரி பிரதர்!
வீட்டுல அப்பாவுக்கு ரொம்ப ஒடம்பு முடியல. அந்த நேரத்துல ஒங்கப் பெரச்சனை சேந்ததுல
நமக்கு எதெப் பாக்குறதுன்னு தெரியாமப் போயிடுச்சு. இப்போ தங்கச்சி எப்பிடி இருக்காங்க?
நம்ம உதவி ஏதும் தேவைப்படுதா? ஒரு போன் அடிச்சிட்டு வந்திருக்கலாம்ல?"ன்னாரு
நாடவத்துல வேஷம் கட்டுன நல்லவர்ரப் போல. விகடு பேசாம நின்னாம்.
"என்னா பிரதர் ஒண்ணுமே பேச மாட்டேங்றீங்க?
நம்ம மேல கோவமா? நம்ம சிச்சுவேஷன் அப்பிடி அமைஞ்சுப் போச்சு பிரதர்!"ன்னாரு
வக்கீலு வாழ்க்கெங்ற நாடவத்துல எப்பிடி நடிக்க முடியுமோ அப்பிடித்தாம் நடிக்க முடியும்ங்றாப்புல.
"மேல ஆபீஸ்லப் போயி பேசுவமா?"ன்னாம்
விகடு மேலப் போயி முடிவு பண்ண வேண்டியதெ கீழேயெ முடிவு பண்ண முடியாதுன்னு ஆத்திகவாதிங்க
பேசுறாப்புல.
"அதுவும் சரித்தாம்! வாங்க!"ன்னு
காம்ப்ளக்ஸோட மொத மாடிக்குப் போயி சாவியப் போட்டு பூட்டெ தொறந்து ஷட்டர்ர மேல
தூக்கி வுட்டு, பட் பட்டுன்னு பேன், டியூப்லைட் எல்லாத்தையும் போட்டு வுட்டாரு வக்கீலு.
பேன் ரொம்ப மெதுவா சுத்துச்சு. "இந்தப் பேனைத்தாம் சரி பண்ண முடியல? எலக்டரீசியன்
வர்றேன் வர்றேன்னு சொல்லிட்டு வர்ற மாட்டேங்றாம்!"ன்னாரு வக்கீல மூடியத் தொறந்தும்
சாமான் கைக்கு வார மாட்டேங்குதுங்றாப்புல.
"ஒங்களப் போலவே!"ன்னாம் விகடு
ஒண்ணுமில்லாத பாட்டில்ல கைய வுட்டு எடுக்க என்னா இருக்குங்றாப்புல. அதெ கேட்டுக்கிட்டுச்
சம்பந்தம் இல்லாம சிரிச்சாரு திருநீலகண்டன் சாலு ஜாப்பா சமாளிக்குறாப்புல.
"செரி! சொல்லுங்க பிரதர்! தங்கச்சிய
போலீஸ்ல அழைச்சிட்டுப் போனதா சொன்னீங்களே? என்ன வெசாரிச்சாங்க? என்னத்தெ பண்ணாங்க?
அந்தத் தகவல ஒரு வக்கீல்ங்ற மொறையில நீங்க எங்கிட்டெ சொல்லணுமா இல்லியா? இப்பிடி
பொறுப்பில்லாம இருந்தா எப்பிடி பிரதர்?"ன்னாரு வக்கீலு என்னவோ வக்கீலு ஆபீஸ்ஸ
தேடி வர்றவேம்ல்லாம் குற்றவாளிங்ற மாதிரிக்கு குற்றம் சொமத்துறாப்புல.
"போலீஸ்ல அழைச்சிட்டுப் போனாங்கய்யா!
எந் தங்காச்சிக் கேக்கற கேள்விக்குல்லாம் பதிலச் சொல்றான்னு கோவத்துல, நாற்காலியோட
வெச்சி மல்லாக்கப் பெரட்டி வுட்டாங்கய்யா.அதுல மயக்கம் அடிச்சி வுழுந்தாங்கய்யா. எந்
தங்காச்சி செத்துப் போயிடுவாளோ என்னாங்ற பயத்துல அனுப்பிச்சு வுட்டாங்கய்யா. நாஞ்ஞ
தங்காச்சிய ஆர்குடி ஆஸ்பிட்டல்ல கொண்டாந்து சேத்திருக்கோம்யா!"ன்னாம் விகடு
தளும்புன கொரல்ல ஒலகத்துக்கே தெரிஞ்ச ரகசியம் ஒங்களுக்குத் தெரியலையாங்றாப்புல.
"பாத்த ஒடனே கேக்கணும்ன்னு நெனைச்சேம்.
ஒங்களுக்குக் காயமா இருக்குறாப்புல தெரியுதே? ஒங்களயுமா போலீஸ்ல வெசாரிச்சாங்க?"ன்னாரு
வக்கீலு கண்ணால பாக்குறவேம் சரியா பாத்தாலும் கற்பனெ தப்பாத்தாம் பண்ணிப்பாம்ங்றாப்புல.
"இத்து நேத்தி வண்டியிலேந்து வுழுந்து
அடிபட்டுக்கிட்டது!"ன்னாம் விகடு எப்பிடி வேணும்னாலும் எதால வாணாலும் மனுஷம் அடிபடலாம்ங்றாப்புல.
"வண்டியில போறப்ப பாத்துப் போகணும்
பிரதர்! இப்பிடித்தாம் சமயத்துல தள்ளி விட்டுடும்!"ன்னாரு வக்கீலு வண்டியப் பத்திக்
கூட இருந்துகிட்டெ குழி பறிக்கும்ங்றாப்புல.
"அத்து பரவால்லங்கய்யா!"ன்னாம்
விகடு சொமக்குற குதிரெ கடிச்சு வெச்சாலும் சரித்தாம், குப்புற தள்ளி வுட்டாலும் சரித்தாங்றாப்புல.
"அப்பிடில்லாம் சொல்லக் கூடாது.
வண்டியில எப்பவும் கவனமா இருக்கணும். வண்டி எப்பவுமே மனுஷன எப்ப தள்ளி விடலாம்ன்னு
பாத்துக்கிட்டெத்தாம் இருக்கும்! ஸோ ரொம்ப கேர்ப்புல்லா இருக்கணும்!"ன்னாரு
வக்கீலு வண்டிய என்னவோ துரோகத்தனம் பண்டுற மனுஷனப் போல.
"சில மனுஷங்களெ வுட வண்டி ஒண்ணும்
மோசமா தள்ளி வுட்டுடலங்கய்யா!மனுஷங்கத்தாம் எப்போ தள்ளி வுடுவாங்கன்னு ரொம்ப சூதானமா
இருக்க வேண்டி இருக்கு!"ன்னாம் விகடு மனுஷப் பயெ அறிஞ்சு பண்டுறதெ வண்டி அறியாமத்தாம்
பண்டும்ங்றாப்புல. எதுக்கெடுத்தாலும் பட் பட்டுன்னு பதிலச் சொல்லிட்டு இருந்த வக்கீலு
அதுக்கு எந்தப் பதிலையும் சொல்லல, படமெடுத்து பாச்சா காட்டிட்டு இருந்த பாம்பு பட்டுன்னு
பொட்டியில அடங்குனாப்புல
"நாஞ்ஞ எப்பிடி இருக்கேம்? என்ன கதியில
இருக்கேம்?ன்னு ஒரு போன பண்ணிக் கூட கேக்க ஒஞ்ஞளுக்கு தோணலயில்ல!"ன்னாம் விகடு
இப்போ ஒடைஞ்ச கொரல்ல ஒத்த வார்த்தெ விசாரிக்கிறதுல குத்தம் என்ன வந்துப் போச்சுங்றாப்புல.
"தப்பா எடுத்துக்காதீங்க பிரதர்.
நாம்ம இந்த அளவுக்கு நடக்கும்ன்னு நெனைக்கல. பட் அவனுவோ ப்ரி ப்ளான்ட்டா பண்ணிருக்கானுவோ.
இப்பிடி நடக்கணும்ன்னே தயாரா வந்திருக்கானுவோ. அதெ நாம்ம கணிக்கத் தவறிட்டேம். அத்தோட
எங்க பாதருக்கு ஒடம்பு சரியில்லாம போனதுல நம்மாள வேற எதுலயும் கான்சென்ட்ரேஷன் பண்ணவே
முடியாமப் போயிட்டது."ன்னாரு வக்கீலு கைய ஓங்கிப்புட்டு வெட்டுனது அரிவாளுத்தாம்ங்றாப்புல.
"நாம்ம இஞ்ஞ வந்து காத்துக்கிட்டு
நின்னப்பவே வெசாரிச்சிட்டேம்ய்யா! நீஞ்ஞ நெதமும் சரியா ஆபீஸூக்கு வந்துட்டுத்தாம் போயிருந்திருக்கீயே!
அப்பக் கூடவா எஞ்ஞளப் பத்தின நெனைப்பு ஒஞ்ஞளுக்கு வர்றாமப் போயிருந்திருக்கும். நல்ல
நேரத்துல ஒஞ்ஞளோட ஒதவி தேவையில்லங்கய்யா. நெருக்கடியான நேரத்துல எஞ்ஞளுக்கு ஒதவின்னு
யாரு இருக்கா சொல்லுங்க? ஒஞ்ஞள மாதிரி யாராச்சும் வந்துப் பாத்தாத்தாம் நெலமெய எஞ்ஞளால
சமாளிக்க முடியும் பாருங்க! ஒஞ்ஞள கொறெ சொல்றதா தயவுப்பண்ணி நெனைச்சிட வேணாம். ஆத்தாமையில
பேசுறேம்ங்கய்யா நாம்ம!"ன்னாம் விகடு சுட்டவனெ வுட்டுப்புட்டுத் துப்பாக்கிக்
குண்டுகிட்டெயா கோவப்பட முடியும்ங்றாப்புல.
"இப்போ என்னா? நாளைக்கு நாம்ம வரவா?"ன்னாரு
வக்கீலு ஆஸ்பத்திரிக்குக் கொண்டுட்டுப் போன பெறவு மொதலுதவி பண்டிடட்டுமாங்றாப்புல.
"வேணாங்கய்யா! நீஞ்ஞ கேஸ்ஸூ கட்டெ
கொடுத்துடுங்க. நாஞ்ஞ வேற யாராச்சும் வக்கீல வெச்சிப் பாத்துக்கிடுறேம்!"ன்னாம்
விகடு எரிஞ்சுப் போன வூட்டுல எடுக்குறதுக்கு என்னா இருக்குங்றாப்புல. அதெ கேட்டதும்
அதிர்ந்துப் போனாப்புல விகடுவே ஆழமா பாத்தாரு வக்கீல் திருநீலகண்டன் கொடுக்குற பூச்செண்டுக்குள்ள
வெடிகுண்டா இருக்குங்றாப்புல.
*****
No comments:
Post a Comment