5 Jan 2021

வாயைக் கட்டி வயித்தைக் கட்டிக் கொடுத்த பணம்!

வாயைக் கட்டி வயித்தைக் கட்டிக் கொடுத்த பணம்!

செய்யு - 677

            ஆர்குடி குற்றவியல் நீதிமன்றத்துல போட்டிருந்து வன்கொடுமை வழக்க நடத்த வுடாம, பாலாமணி திருவாரூர் முதன்மை நீதிமன்றத்துல போட்டிருந்த டிரான்ஸ்பர் ஓப்பி வழக்கு ஒரு முடிவுக்கு வந்துச்சு. அதுல வக்கீல் திருநீலகண்டன் ஆஜராயி அதுக்கு சம்மதிக்க முடியாதுன்னு வாதாடுனதெ கோர்ட்டு ஏத்துக்கிட்டு, எந்தெந்த வழக்குக எங்கெங்க நடக்குதோ, அங்கங்கத்தாம் நடக்கணும்ன்னு உத்தரவு பிறப்பிச்சாங்க. அந்த உத்தரவால தள்ளிப் போயிக்கிட்டு இருந்த வன்கொடுமெ வழக்கும், ஹெச்செம்ஓப்பி வழக்கும்  நடக்க ஆரம்பிச்சது.

            வக்கீல் திருநீலகண்டன் ஜீவனாம்ச வழக்குல அய்யாயிரம் மாசா மாசம் கொடுக்கணும்ன்னு தீர்ப்ப வாங்கி ஜெயிச்சுக் கொடுத்ததால அதுக்கு ஒரு இருபத்தஞ்சாயிரமும், டிரான்ஸ்பர் ஓப்பி வழக்குல பாலாமணியோட நோக்கம் நிறைவேறாம பண்ணி வுட்டு ஜெயிச்சதுல அதுக்கு ஒரு பாஞ்சாயிரமும் பீஸ்ஸ கேட்டாரு. திருவாரூரு கோர்ட்டுல அவரு பாக்குறப்பல்லாம் திரும்ப திரும்ப தனக்குக் கொடுக்க வேண்டிய காசு இருக்குறதுங்றதெ ஞாபவம் பண்ணிக்கிட்டெ இருக்க ஆரம்பிச்சாரு.

            "ஜீவனாம்ச வழக்குல பணத்தையே வாங்கித் தர்றமா எப்பிடி பணம் கொடுக்குறது? கையில் பணமிருந்தா ஒஞ்ஞளுக்குக் கொடுக்குறதுக்கு ன்னா? ஜீவனாம்சம் பணம் வந்தா அதுல பைசா காசிய எடுக்காம ஒஞ்ஞ பீஸ கொடுத்துட்டு மிச்சம் இருந்தா கொடுங்க!"ன்னு சொல்லிப் பாத்தா செய்யு அதுக்கேத்தாப்புல தன்னோட இல்லாத கொறைய சொல்றாப்புல.

            "அந்தப் பணம் என்னிக்கோ ஒரு நாளு வந்தே தீரும். அதுல மாத்தம் கெடையாது. கஷ்ட ஜீவனம் பண்றதுன்னு கோர்ட்டே முடிவு பண்ணிக் கொடுக்க சொன்ன தொகை அது. சுப்ரீட் கோர்ட்டு வரைக்கும் அது நிக்கும். நீ கஷ்ட ஜீவனம் பண்றதுக்குப் பணத்தெ வாங்குறதுக்கான உத்தரவ வாங்கிக் கொடுத்துட்டு நாம்ம கஷ்ட ஜீவனம் பண்ண முடியாதுல்லம்மா! ஒன்னோட வழக்குல ஒரு சாமாதானத்தக் கொண்டு வந்தேம். அந்த எடத்துல முடிச்சிருந்தேன்னா உனக்கு நகையையும், பணத்தையும் வாங்கிக் கொடுத்துட்டு அதுலேந்து எடுத்திருப்பேம். இப்ப பாரு ஒன்னோட வழக்க இத்தனை நாளு நடத்திருக்கேம். நமக்கும் குடும்பம் இருக்கு செலவுகள் இருக்குல்ல. வழக்கு நடக்குறப்போ எதுவும் கொடுங்கன்னு பெரிசா கேக்கல. வழக்கு வெற்றிகரமா முடிச்சிக் கொடுத்துட்டுத்தாம் கேட்கிறேம்!"ன்னாரு திருநீலகண்டன் தான் பீஸ் கேக்குறதுலயும் ஒரு காரணம் இருக்குங்றதெ சுட்டிக் காட்டுறாப்புல.

            சுப்பு வாத்தியாரு, "கொஞ்ச கால அவகாசம் மட்டும் கொடுங்க. எங்கயாச்சும் பணத்தெ பொரட்டிக் கொண்டாந்து தந்துப்புடுறேம்! உழைப்புக்கேத்த கூலிய கொடுத்துத்தாம் ஆவோணும். உழைச்சவங்களோட காசி எஞ்ஞளுக்கு வாணாம்!"ன்னாரு கூடிய சீக்கிரமே பீஸ கொண்டாந்து கொடுத்துடுறாப்புல.

            "பீஸ்ஸ சொல்லிட்டேம். அதெ நீங்க எப்ப வேணாலும் கொடுக்கலாம். இன்னிக்குத்தாம் கொடுங்கன்னு கட்டாயம் பண்ண மாட்டேம்! ஆன்னா கொஞ்சம் சீக்கிரம் கொடுத்தா நல்லா இருக்கும்! காரியத்தெ முடிச்சிட்டுத்தாம் கேக்க வேண்டியதெ கேக்குறேம்!"ன்னு சொல்லி ஒவ்வொரு மொறையும் அனுப்பி வெச்சாரு திருநீலகண்டன்.

            "ஏம்ப்பா! நாப்பதினாயிரம் வருதே. கொஞ்சம் கொறைச்சிக் கேட்டுப் பாத்தா ன்னா?"ன்னு கேப்பா செய்யு சுப்பு வாத்தியார்கிட்டெ கோர்ட்டெ வுட்டு வீட்டுக்கு வர்றப்பல்லாம். இத்து ஒரு பெரும்பேச்சா அப்பங்காரரோட டிவியெஸ்ல வூடு வந்த சேர்ற வரைக்கும் நடக்கும்.

            "இந்த வழக்கோட முடியுதுன்னா அப்படிக் கேட்டுப் பாக்கலாம். இன்னும் ரண்டு வழக்கு இருக்கு. அத்தோட ஜீவனாம்ச வழக்கு அப்பீலு வேற இருக்கு. மொத்தத்துல மூணு கேஸூ இருக்கு. நாம்ம கேக்குற காசியக் கொடுக்கலன்னு அதுல கவுத்து வுட்டுப்புட்டா என்னத்தெ பண்ணுவே? இந்தக் காரியத்துல இவ்வளவு எறங்கியிருக்கக் கூடாது. ஆன்னா எறங்கியாச்சு. இனுமே இதுல கணக்குப் பாக்கக் கூடாது. வக்கீலு கேக்குறக் காசியக் கொடுத்து சந்தோஷப்படுத்துனாத்தாம் அடுத்தடுத்த வழக்குல ஜெயிச்சா இந்த மாதிரிக்கிக் காசியக் கொடுப்பாங்கன்னு துடிப்பா வாதம் பண்ணி ஜெயிக்கப் பாப்பாரு. அதால அதுலப் போயிப் பேரத்தப் பேசக் கூடாது!"ன்னு சுப்பு வாத்தியாரு மவளுக்கு அதுல உள்ளார காரணத்தெ வௌக்கிப் புரிய வைப்பாரு.

            "அத்துச் சரித்தாம்பா! இந்த வழக்க நடத்தி நமக்கு இன்னிய வரைக்கும் பைசா காசி பிரயோஜனமெ யில்லயே?"ம்பா செய்யு அப்பங்காரரு வௌக்குத்துல இருக்குற ஓட்டையக் கண்டுபிடிச்சிட்டாப்புல.

            "அதெத்தாம் மின்னாடி இருந்த ஜட்ஜூ சொன்னாரு. இதெ நடத்தி நீஞ்ஞ வக்கீலுக்குத்தாம் காசியக் கொடுக்குற மாதிரி இருக்கும்ன்னு வக்கீலுங்கள வெச்சிக்கிட்டெ சொன்னாரா ல்லையா? அப்போ அதெ நீயும் கேட்டுக்கிட்டுத்தானே இருந்தே?"ம்பாரு சுப்பு வாத்தியாரு மவ்வே சுட்டிக் காட்டுன்ன ஓட்டைய அடைக்குறாப்புல.

            "இந்த வழக்குல ஜெயிச்சுட்டா எப்படியாச்சும் ஜீவனாம்சத்தெ கொடுத்துப்புடுவாங்கன்னு நெனைச்சிட்டேம்ப்பா! அவ்வேம் மேல மேல அப்பீலுக்குப் போயிக் கொடுக்க வுடாம பண்ணிப்புடுவாம்ன்னு நெனைக்கலப்பா!"ம்பா செய்யு பரிதாபமா தாம் போட்ட கணக்குத் தப்பா போனதெ நெனைச்சு வருந்துறாப்புல.

            "அவ்வேம்கிட்டெ யிப்போ நம்ம காசி இருக்கு. அதால வழக்குக்குக் காசிச் செலவு பண்றதெ பத்திப் பெரிசா நெனைக்க மாட்டாம். நம்மகிட்டெ காசி யில்ல. மாசா மாசாமான வட்டியக் கட்டுறதெ நெனைச்சாலே முழி பிதுங்குது. இதுல வழக்குக்கும் சிலவெ பண்ணுறதெ நெனைச்சா எப்பிடிச் சமாளிக்குறதுன்னே புரிய மாட்டேங்குது. இப்பிடி கோர்ட்டுக்கும் வூட்டுக்கும் அலையுறதுல வேற சோலிக ஒண்ணுத்தையும் பாக்க முடியல, குடும்பத்திலயும் யாரையும் சரியா கவனிக்க முடியல. வய வாய்க்கா வேற அடமானத்துலயே போயிட்டு இருக்கு. அத்து இருந்தாலாவது கொஞ்சம் எதாச்சும் வெளைஞ்சு கொடுக்கும். அரிசி, உளுந்து, பயிறுன்னு வூட்டுக்கு வந்துச்சுன்னா அதுல சிலவு கொஞ்சம் மிச்சமாவும். வெளைஞ்சு கொடுக்குறதுல கைக்கும் கொஞ்சம் காசி வரும். யண்ணன் கையில காசில்லங்றதெ காட்டிக்காம, ஒண்ணும் சொல்ல முடியாம எப்பிடியோ சமாளிச்சிக்கிட்டு இருக்காம். அவ்வேம் ஒடம்பப் பாரு ரொம்ப எளைச்சிப் போயிக் கெடக்குறாம். ஊர்ல இருக்குற புள்ளீயோ எல்லாம் வேன்ல போயிப் பள்ளியோடம் படிக்குதுங்க. ஒம்மட யண்ணனப் பாரு. தன்னோட பள்ளியோடத்துல சேத்துட்டு அஞ்ஞ அழைச்சிட்டுப் போயிட்டு இருக்காம். வேன்ல போயிப் படிக்குற பள்ளியோடத்துல சேத்தா காசிக்கு எஞ்ஞப் போறதுன்னு நெனைக்குறாம் போலருக்கு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு கையில இருந்த காசியெல்லாம் கரைஞ்சுப் போன கதைய சொல்றாப்புல.

            "யண்ணனுக்கு அப்பிடில்லாம் நெனைப்புக் கெடையாதுப்பா. தாம் ஒரு அரசாங்க வாத்தியார்ர இருந்துகிட்டு, தன்னோட புள்ளைய தனியாரு பள்ளியோடத்துல சேக்கக் கூடாதுங்ற நெனைப்புத்தாம். அந்த நெனைப்புலத்தாம் அத்து தன்னோட பள்ளியோடத்துலயே சேர்த்துட்டு அழைச்சிட்டுப் போவுதுப்பா. யண்ணனப் பத்தி நமக்குத் தெரியும்ப்பா! பவ்வு பாப்பாவ வேன்ல போற பள்ளியோடத்துல சேக்குறதுக்கு அப்பிடியே என்னா பெரிசா சிலவு ஆயிடப் போவுதுப்பா? அதுக்குல்லாம் யண்ணன் கணக்குப் பாக்காதுப்பா! யண்ணனுக்கு அப்பிடில்லாம் எந்த நெனைப்பும் இருக்காதுப்பா!"ன்னா செய்யு யண்ணங்காரனெ ஒசத்திப் பிடிக்குறாப்புல.

            "யண்ணனுக்கு யில்லாம இருக்கலாம். யண்ணிக்கு இருக்குமுல்ல. அத்து குடும்பத்து நெலமெய நெனைச்சித்தானே ஒண்ணும் சொல்ல முடியாம இருக்கு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு யோசிக்கிறதெ முழுசா யோசிச்சுப் பேசணுங்றதெ மவளுக்கு உணர்த்துறாப்புல.

            "பேயாம இந்த வழக்க இத்தோட போதும்ன்னு நடத்தாம வுட்டுப்புடுவோமாப்பா!"ன்னா செய்யு அதெ கேட்டதும் விரக்தியா பேசுறாப்புல.

            "வெச்சா குடுமி! செரைச்சா மொட்டெ! அப்பிடியெல்லாம் நெனைச்சிட்டு செஞ்சிக்கிட்டு இருக்க முடியாது. முடின்னு சொன்னப்ப முடிக்க முடியாதுன்னு சொல்லிப்புட்டு, இப்போ முடிக்க முடியாத எடத்துல வந்து முடின்னா எப்பிடி? வழக்க இன்னும் கொஞ்சம் கெளரவமா நடத்தி வுட்டுத்தாம் முடிக்கணும். ஒம் இஷ்டத்துக்கு முடிச்சா சுத்தப்படாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு கௌரவத்தெ வுட்டுக் கொடுக்க முடியாதுங்றாப்புல.

            "வக்கீல் கேட்ட பணத்துக்கு என்னத்தெப்பா பண்ண போறீயே?"ம்பா ஒடனே செய்யு ஒடைஞ்சுப் போன கொரல்ல.

            "யண்ணனக் கலந்துகிட்டு எதாச்சும் பண்ணுவேம். ஒரே அடியா நாப்பதினாயிரத்தெ கொடுக்க முடியாட்டியும் பத்துப் பத்தாவது கொடுக்கப் பாப்பேம்! வக்கீலுதாம் பணத்ததெ தோது பண்ணிட்டு கொடுங்கன்னு சொல்லிருக்கார்ல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு எப்படியாச்சும் பணத்தெ கொடுத்துச் சமாளிச்சுப்புடலாங்ற மாதிரிக்கு.

            கடெசீயா வூடு வந்து சேர்ந்து இந்த நாப்பதினாயிரம் பணம் கொடுக்குற விசயத்தெ விகடுகிட்டெ கலந்துகிட்டப்போ அவ்வேம் மாசா மாசம் சிலவெ கொஞ்சம் கொறைச்சிக்கிட்டு பத்தாயிரம் பத்தாயிரமா கொடுத்து முடிச்சிப்புடலாம்ன்னாம். மேக்கொண்டு கொறைக்குறதுக்கு என்னத்தெ இவ்வேம் சிலவெ பண்ணுறாம்ன்னு கேக்கத்தாம் சுப்பு வாத்தியாருக்கு தோணுச்சு. ஆனா கேக்கல. நெலமெ அப்படி இருந்துச்சு. ஏன்னா மேக்கொண்டு இதுக்காக ஒரு கடனெ வாங்கி அதுக்குன்னு வட்டிக் கட்டுறதுக்கு இப்பிடி பண்ணிக்கிறதுதாம் இப்போதைக்குச் சரின்னு சுப்பு வாத்தியாரு மவ்வேம் போக்குல எதாச்சும் பண்ணட்டும்ன்னு வுட்டுட்டாரு. அதுவரைக்கும் வூட்டுல சோறும் மோருமாவே பாத்துப்போம், சிலிண்டர்ர வாங்காம கொள்ளாம கொல்லையில கெடக்குற வெறவுகள அள்ளி சமையலுக்கு எரிச்சிப்போம், அங்காடியில வாங்குற சாமான்கள மட்டும் வெச்சி எப்பிடியோ மாசத்த ஓட்டிப்போம்ன்னு மவ்வேம் சொன்னதெ கேட்டு அப்பிடியே இருந்துப் பாத்துக் காசிய சேக்க முடியுமான்னு பாப்பேம்ன்னு முடிவாயிடுச்சு. அது படியே நாலு மாசத்துக்கும் வாயக் கட்டி வயித்தக் கட்டி மாச வட்டி கொடுத்ததுப் போவ சம்பளத்துல மிச்சமானதெ சேத்தப்போ பணம் சேர்ந்து நாப்பதினாயிரத்தெ வக்கீலுக்கு கொடுத்து முடிச்சானது. “நல்லவேள வக்கீலு நாப்பதனாயிரத்தோட வுட்டாம். நாலு லட்சம்ன்னா அதெ சேக்குறதுக்கு இந்தப் பெய நம்மள பட்டினிப் போட்டே எலும்பு கூடா ஆக்கியிருப்பாம்!”ன்னுக்கு வெங்கு நொந்துப் போயி மவ்வேம் பண்ணுன திட்டத்தெ பாத்து.

அப்படி மிச்சம் பிடிச்சி சேத்த அந்தப் பணத்தெ கொடுத்த பிற்பாடு வக்கீல் திருநீலகண்டன் அடுத்த ஒரு விசயத்தச் சொன்னாரு. "மேல் கோர்ட்டுல ஜீவனாம்ச அப்பீல்லயும் ஆஜராயிட்டு இருக்கேம்ல. அதுக்கு ஒரு அய்யாயிரத்தெ கொடுத்துப்புடுங்க!"ன்னாரு எரியுற வூட்டுல புடுங்குற வரைக்கும் ஆதாயங்ற மாதிரிக்கு. சுப்பு வாத்தியாரு வூடும் இப்போ எரியுற வூடுதாம் ஒரு வகையில. காசிய மிச்சம் பண்ணும்ன்னு பல நேரங்கள்ல சரியா சாப்புடாம கொள்ளாமல வூட்டுல இருந்த பல பேத்துக்கு பசியால வயிறு எரிஞ்சிட்டுத்தாம் இருந்துச்சு. எவ்வளவோ காசிய லட்சம் லட்சமா மவளோட கலியாணத்துக்குச் சிலவ பண்ணவருன்னாலும் சுப்பு வாத்தியாருக்கு யிப்போ வட்டியக் கட்டிக்கிட்டு, குடும்பத்தைச் சமாளிச்சிக்கிட்டு வக்கீலு மறுக்கா கேக்குற அய்யாயிரத்தெ கொடுக்குறது ரொம்ப சிரமமாத்தாம் இருந்துச்சு.

            வக்கீலு காசியக் கேட்டதும் அதுக்கு எந்த வெதத்துலயும் மறுப்ப சொல்லாம, "அடுத்த மாசத்துல பத்து தேதிக்குள்ள கொடுத்துப்புடுறேம்! அது வரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கணும்ங்க்யயா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு கேக்குற எதுவா இருந்தாலும் அதெ எப்படியும் தந்துப்புடுறாப்புல.

            "நீஞ்ஞ எப்ப வாணாலும் கொடுக்கலாம். ரண்டு மாசம், மூணு மாசம் கழிச்சிக் கூட கொடுக்கலாம். நாளைக்கே கொடுக்கணும்ன்னல கட்டயாம்ல்லாம் ஒண்ணுமில்ல. ஒரு ஞாபவத்துக்குச் சொன்னேம்!"ன்னாரு திருநீலகண்டன் ரொம்ப நைச்சியமா சொல்றாப்புல.

            "ரண்டு மாசம் மூணு மாசமல்லாம் யில்ல. அடுத்த மாசம் பத்து தேதிக்குள்ள. முடிஞ்சா அஞ்சு தேதிக்குள்ளயே கொடுத்தாலும் கொடுத்துப்புடுவேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு அதுக்கு அறுத்துக் கட்டிச் சொல்றாப்புல. சொன்னபடியே அதுக்கு அடுத்த மாசம் அஞ்சாயிரத்தெ வக்கீலு கையில கொண்டு சேத்தாரு சுப்பு வாத்தியாரு. அதெ வாங்குன பிற்பாடுதாம் திருநீலகண்டன் வக்கீல் ஆர்குடியில நடந்துகிட்டு இருந்த வன்கொடுமெ வழக்குல வந்து ஒருநாள் காசிய வாங்குன பாவத்துக்கும் பரிகாரத்துக்கும் ஆஜரானாரு. அது வரைக்கும் செய்யுவும், சுப்பு வாத்தியாருந்தாம் போயிட்டு இருந்தாங்க. வக்கீலு பணத்தெ தவணைத் தவணையாக் கொடுக்குறதெ கணக்குப் பண்ணி அத்து முழுசா வந்து சேர்ற வரைக்கும் காத்திருக்காருன்னும் அதாலத்தாம் கூப்புடுறப்பல்லாம் வர்றாம எதாச்சும் ஒரு காரணத்தெ சொல்லி இழுத்தடிக்கிறார்ங்றது புரிஞ்சது இப்போ சுப்பு வாத்தியாருக்கு. அத்து புரிஞ்சாலும் பணத்தெ ஒரே தவணையா கொடுக்க வழியில்லாமப் போனதால ஒண்ணும் சொல்ல முடியாம ஆர்குடி கோர்ட்டுக்கு ஆஜராவறதும், அங்க நடக்குறதெ மறுநாளு வக்கீலோட ஆபீஸ்ல சுப்பு வாத்தியாரே வேல மெனக்கெட்டுப் போயிச் சொல்றதையும் வழக்கமா வெச்சிருந்தாரு.

வழக்குன்னா ஒண்ணு வக்கீலு சொல்றப்போ முடிச்சிக்கிடணும், இல்லன்னா வக்கீலு கேக்குறப்பல்லாம் காசியக் கொட்டிக் கொடுத்துக்கிட்டே இருக்கணும்ன்னு சுப்பு வாத்தியாரு மனசுக்குள்ள பல வித நெனைப்புக ஓடி ஆரம்பிச்சது. இது ஒரு பக்கம்ன்னா இன்னொரு பக்கத்துல மின்ன மாதிரி இல்லாம ஆர்குடி வன்கொடுமெ வழக்குல பாலாமணி தொடர்ச்சியா ஆஜராவ ஆரம்பிச்சாம். ஜீவனாம்ச வழக்குல வந்த தீர்ப்பும், அந்த தீர்ப்ப எதுத்து அப்பீல் பண்ணி கொடுக்க வேண்டிய ஜீவனாம்சத்தெ கொடுக்க வுடாம இழுத்தடிக்க முடிஞ்சதும் அவனோட மனசுல ஒரு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் உண்டு பண்ணிட்டு இருந்துச்சு. ஒவ்வொரு தடவெ ஆஜரானப்பயும் அவனோட வக்கீல் ஹை கோர்ட்டு, சுப்ரீட் கோர்ட்டு சைட்டேஷன்னு சொல்லி நெறைய முன்தீர்வுகள ஜட்ஜ்கிட்டெ சொன்னது வேற செய்யுவுக்குப் பீதியக் கெளப்புனுச்சு. அதெல்லாம் பாலாமணியே நெறைய சட்டப் புத்தகங்கள படிச்சிப் படிச்சி எடுத்த சைட்டேஷனாத்தாம் இருக்கணும். அதெ வக்கீல் கங்காதரன வுட்டு சொல்லிட்டு இருந்தாம்.

            ஒரு கட்டத்துல செய்யுவோட வக்கீல் திருநீலகண்டன் ஆஜராவமா இருக்குறதையும், பாலாமணியோட வக்கீல் சைட்டேஷன் மேல சைட்டேஷன் கொடுக்குறதப் பாத்து கடுப்பான ஜட்ஜ் செய்யுவப் பாத்து, "வழக்க நடத்துறதா இருந்தா ஒழுங்கா வக்கீல வர்றச் சொல்லி நடத்து. இல்லாட்டி வாபஸ் வாங்கிட்டுப் போயிடு!"ன்னு சொல்ற அளவுக்கு திருநீலகண்டன் ஆர்குடி கோர்ட்டுக்கு வர்றாம இழுத்தடிச்சாரு. ஜட்ஜ் அப்பிடிச் சொல்றதெ வெச்சிக்கிட்டு வக்கீல் கங்காதரன், "இவுங்கப் போட்டிருக்கிறது பொய் வழக்குங்கய்யா! நெசமான வழக்குன்னா இவுங்க எடுத்து நிச்சயம் நடத்துவாங்கய்யா!"ன்னு கோர்ட்டுல தூபத்தப் போட்டுகிட்டு இருந்தாரு. அதெ கேட்டு வேற செய்யுவுக்கு மன உளைச்சல் தாங்க முடியாம இருந்துச்சு. அவளோட உளைச்சலப் பாக்குறப்பல்லாம் சுப்பு வாத்தியாரு, வாங்குன கடனெ வாங்கியாச்சு, வேற எங்காயச்சும் கடனெ வாங்கி வக்கீலுக்கு இன்னும் கூடுதலா கொடுக்க வேண்டிய பணத்தெ கொடுத்து எப்படியாச்சும் வர வெச்சிப்புடலாமான்னு நெனைப்பாரு. அதெ செய்யுகிட்டெயும் சொல்லி அபிப்ராயம் கேப்பாரு. அப்பல்லாம் செய்யு, "பரவால்லப்பா! எவ்வளவோ காலம் பொறுத்தாச்சு. இன்னும் கொஞ்சம் பொறுமையாவே இருந்துடுவோம்ப்பா!"ன்னு சொல்லுவா அப்பங்காரர ஆறுதல் பண்டுறாப்புல.

            மொத்தத்துக்கு நாப்பத்தி அஞ்சினாயிரம் கையில கெடைச்ச பெறவு வக்கீல் திருநீலகண்டன் ஆர்குடி குற்றவியல் நீதிமன்றத்துல நடந்து வந்த வன்கொடுமெ வழக்குல மட்டும் ஒரு தவா ஆஜரானாதோட செரி. சார்பு நீதிமன்றத்துல நடந்த ஹெச்செம்ஓப்பி வழக்குல ஒரு தவா கூட ஆஜராவல. "அது பாட்டுக்கு அப்பிடியே கெடக்கட்டும். அதெ இழுத்தடிப்பேம். இந்த வன்கொடுமெ வழக்க மட்டும் நடத்தி முடிப்பேம்!"ன்னாரு ஹெச்செம்ஓப்பி வழக்குல அவரு ஆஜராகாம இருக்குறதப் பத்திக் கேக்குறப்பல்லாம்.

            "அந்த வழக்குக்கு ஆஜராவறதுக்குக் கூடுதலா பணம் வேணும்ன்னாலும் தந்துப்புடுறேம்ங்கய்யா!"ன்னு ஒரு மொறை கேட்டுப் பாத்தாரு சுப்பு வாத்தியாரு.

            "என்னா சார்! நம்மளப் பத்தி இப்பிடி நெனைச்சிட்டீங்க? இதெல்லாம் ஒரு வழக்க கையாள்றதுல உள்ள ராஜதந்திரங்கள். இந்த வழக்குக்கு இப்பிடித்தாம் ஆஜராவணும். ஏன்னா இந்த வன்கொடுமெ வழக்கு நாம்ம தொடர்ந்தது. நாம்மத்தாம் பெட்டிஷனர். ஆன்னா… அந்த வழக்குக்கு அப்பிடித்தாம் ஆஜராவக் கூடாது. ஏன்னா அது நாம்ம தொடர்ந்ததுல்ல. அதுல அவ்வேம் பெட்டிஷனர். அதுல அவனெ இழுக்கப் போடணும்!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் ரொம்ப சாமர்த்தியமா வழக்கெ கொண்டு போறாப்புல.

            "அதுக்கில்லங்கய்யா! வழக்குல தொய்வடைஞ்சிடக் கூடாது பாருங்க. நீஞ்ஞ வேற திருவாரூர்ல இருக்கற வக்கீலு. அஞ்ஞ ஒஞ்ஞளுக்கு வேல நெறைய இருக்கும். அதெ வுட்டுப்புட்டு வேல மெனக்கெட்டுத்தானே இஞ்ஞ வர்றீயே. அதுக்கு ஈடு செய்யுறாப்புல நாஞ்ஞளும் ஒஞ்ஞ கைச்சிலவுக்கு எதாச்சும் கொடுக்கணுமில்ல!"ன்னு சுப்பு வாத்தியாரு முடிவா வக்கீலோட மனசெ ஆழம் பாக்குறாப்புல கேட்டுப் பாத்தாரு.

            "அப்போ ஒண்ணு பண்ணுங்க. ஒவ்வொரு மொறை ஆஜராவுறப்பயும் ஐநூறு ரூவாய்யக் கொடுத்துப்புடுங்க!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் தன்னோட மனசுல உள்ளதெ பொட்டுன்னு போட்டு ஒடைக்குறாப்புல. அப்பத்தாம் வக்கீலோட மனநெல புரிஞ்சு அவர்ர ஆர்குடி கோர்டுக்கு கேட்டபடிக்குக் காசு கொடுக்குறேம்ன்னு உறுதி சொல்லி அதுப்படியே கொடுக்க ஆரம்பிச்சாரு சுப்பு வாத்தியாரு. அத்தோட திருநீலகண்டன் வக்கீலு ஆர்குடி பஸ் ஸ்டாண்டுல வந்து எறங்குனதும் அவர்ர டிவியெஸ் பிப்டியில வெச்சி அழைச்சிக்கிட்டு ஓட்டல் ஆரியாஸ்ல காலைச் சாப்பாட்ட பண்ணியும், வழக்க முடிஞ்சதுக்குப் பெறவு மத்தியானச் சாப்பாட்ட பண்ணியும் பஸ்ல ஏத்தி வுட்டாரு. அப்படி திருநீலகண்டன் வக்கீலு வர்ற சில நாட்கள்ளயும் அவரு மெனக்கெட்டு வந்ததெப் பத்தியோ, அவருக்காகச் சுப்பு வாத்தியாரு காசி சிலவெ பண்ணுறதெப் பத்தியோ நெனைக்காம இன்னொரு தேதிய வாங்குவாரு. அப்பிடியில்லன்னா அவரு தேதியக் கேட்டு வாங்காத அளவுக்கு இன்னொரு தேதிக்கு வர்றாப்புல அன்னிக்கு ஜட்ஜ் லீவு போட்டிருப்பாரு.

            என்னடா இந்த கேஸ்ஸூ வக்கீலு வராம இருந்தாலும் இழுத்தடிச்சிக்கிட்டுத்தாம் போவுது, வந்தாலும் இழுத்தடிச்சிக்கிட்டுத்தாம் போவுதுன்னு ரொம்பவே நொந்துப் போனாரு சுப்பு வாத்தியாரு. திருவாரூர் முதன்மை நீதிமன்றத்துல ஜீவனாம்ச அப்பீல், ஆர்குடி குற்றவியல் நீதிமன்றத்துல வன்கொடுமெ வழக்கு, ஆர்குடி சார்பு நீதிமன்றத்துல ஹெச்செம்ஓப்பி வழக்குன்னு மாறி மாறி அலைஞ்சி செய்யுவும் வர வர வழக்குன்னா நொந்துப் போவ ஆரம்பிச்சா. இப்படியா வழக்குக்கான்னா அலைச்சல் ஒவ்வொண்ணும் முடிவுக்கு வராத சங்கிலித்தொடர் சுழற்சியா இருந்துச்சே தவுர பட்டுன்னு முடியுறாப்புல தெரியல. பொறந்த மனுஷன் மறுபொறப்பு எடுத்துக்கிட்டே இருந்தா எப்படி இருக்கும்? அப்படி இருக்குறாப்புல வழக்குக ஒவ்வொண்ணும் மறு வாய்தா எடுத்துக்கிட்டே இருந்துச்சு.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...