4 Jan 2021

தீர்ப்புல ஜெயிச்சாச்சு! வாழ்க்கையில தோத்தாச்சு!

தீர்ப்புல ஜெயிச்சாச்சு! வாழ்க்கையில தோத்தாச்சு!

செய்யு - 676

            அந்தத் தேதியில ஜட்ஜ் தீர்ப்ப வழங்க முடியாத அளவுக்கு அவருக்குச் சுகரு அதிகமாயி ஆஸ்பிட்டல்ல சேர்க்குறாப்புல ஆயிடுச்சு. ஜட்ஜ் முப்பது நாளுக்கு மேல விடுப்புல இருந்தாரு. ஆன்னா அவரு இந்த வழக்குக்கான தீர்ப்ப எழுதி முடிச்சிட்டதா கோர்ட்டுல பேசிக்கிட்டாங்க. எழுதி முடிச்ச தீர்ப்பு என்னாங்றதெ தெரிஞ்சிக்கிறதுக்கு ஒரு மாச காலம் காத்திருக்க வேண்டியதா இருந்துச்சு. வழக்குன்னா ஏதோ ஒரு வெதத்துல தாமசம் வந்துக்கிட்டெ இருக்கும்ங்றது சொல்றாப்பல இருந்துச்சு நடந்துகிட்டு இருக்குற நடப்புக ஒவ்வொண்ணும். ஒரு மாச காலம் கழிச்சி ஜட்ஜ் திரும்ப கோர்ட்டுக்கு வந்தப்போ ஆளு கொஞ்சம் எளைச்சாப்புலத்தாம் இருந்தாரு. ஆன்னா கொரல்ல எந்த வெதமான எளைப்பும் தெரியல. கணீர்ங்ற கொரல்லத்தாம் சிங்கத்தப் போல தீர்ப்ப வழங்குனாரு. அந்தத் தேதிக்கும் ஜட்ஜ் வருவாரோ மாட்டாரோங்ற சந்தேகந்தாம். அந்தச் சந்தேகத்தால செய்யுவும் சுப்பு வாத்தியாரும் மட்டுந்தாம் கோர்ட்டுக்குப் போயிருந்தாங்க. ஏற்கனவே ஒரு தேதியில ஜட்ஜ் வந்து தீர்ப்ப வழங்குவாரு, அதே கேட்போம்ன்னு விகடுவும் கைப்புள்ளையும் போன அன்னிக்கு ஜட்ஜ் லீவுன்னு இன்னொரு தீர்ப்புக்கான தேதியக் கேட்டுட்டு ஏமாத்தமா திரும்பி வந்தாங்க. அதால ஜட்ஜ் என்னிக்கு வருவாரு எப்போ தீர்ப்ப வழங்குவாருன்னு சந்தேவமா இருந்துச்சு. இந்தச் சந்தேகத்தாலயே ஜட்ஜ் வந்த நாள்ல செய்யுவும் சுப்பு வாத்தியாருந்தாம் தீர்ப்ப கேக்க இருந்தாங்க. ஒருவழியா நெடுநாளையப் போராட்டத்துக்குப் பெறவு செய்யுவுக்கு ஜீவனாம்ச வழக்குல தீர்ப்பானுச்சு. பதினெட்டுப் பக்கத்துல அந்தத் தீர்ப்ப ஜட்ஜ் கொடுத்திருந்தாரு. அதுல உத்தரவா ஜட்ஜ் சொன்ன சங்கதிங்க,

            "2017 ஆம் வருடத்து ஆகஸ்ட்டு திங்கள் 25 வது நாள் வெள்ளிக் கிழமை, திருவள்ளுவராண்டு 2048 ஸ்ரீ ஹேவிளம்பி வருடத்து ஆவணித் திங்கள் 9 ஆம் நாள் வாழ்க்கைப் பொருளதவி கோரும் மனு மீது வழங்கப்படும் தீர்ப்பாவது.

            இவ்வழக்கானது 09. 05. 2016 இல் கோப்பில் எடுக்கப்பட்டு 29. 08. 2017 இல் இன்று இந்நீதிமன்றம் வழங்கும் உத்தரவு யாதெனில்

            கு.வி.மு.ச. பிரிவு 125 இன் கீழ் வாழ்க்கைப் பொருளதவி கோரி இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவில் மனுதாரர் மனுவில் கண்டுள்ள சங்கதிகளின் சுருக்கம்"ன்னு சொல்லி அதெ பத்தி ஜட்ஜ் சுருக்கமா சொன்னாரு. அதெ தொடந்தாப்புல, "இவ்வழக்கில் எதிர்மனுதாரர் தாக்கல் செய்துள்ள எதிருரையில் கண்டுள்ள சங்கதிகளின் சுருக்கம்"ன்னு சொல்லி அதெ பத்தியும் சுருக்கமா சொல்லி முடிச்சாரு. அதுக்கப்புறமா ஜட்ஜ் தீர்ப்புக்கு வந்த முறையப் பத்தி வாசிச்சாரு, அதாகப்பட்டது என்னான்னா, "இம்மனுவில் தீர்வு காண வேண்டிய பிரச்சனை யாதெனில், மனுதாரர் கோரியுள்ளபடி இம்மனு அனுமதிக்கத் தக்கதா? என்பதேயாகும்.

            இரு தரப்பு வாதுரையும் கேட்ட வகையில், மனு, எதிருரை, இரு தரப்பு சாட்சியங்கள் மற்றும் சான்றாவணங்கள், வழக்கு கோப்புடன் இணைத்து பரீசிலிக்கப்பட்டு, மனு எதிர்மனுதாரர் மீது வாழ்க்கைப் பொருளுதவி கேட்டு கு.வி.மு.ச. பிரிவு 125 இன் படி தாக்கல் செய்துள்ளதை இந்த நீதிமன்றம் பரீசீலனையில் கொள்கிறது.

            மனுதாரருக்கும் எதிர்மனுதாரருக்கும் 02. 11. 2014 இல் பாக்குக்கோட்டை மாடடிக்குமுளை, வைரம் திருமண மகாலில் திருமணம் நடைபெற்றதாகவும், கணவன் மனைவி இருவரும் பாக்குக்கோட்டையிலும், சென்னையிலும் வாழ்ந்து வந்ததாகவும், எதிர்மனுதாரர் மனுதாரரை அடித்தும் துன்புறுத்தியும், சித்திரவதை செய்தார் என்றும், தற்சமயம் மனுதாரர் கஷ்ட ஜீவனம் செய்து வருகிறார் என்றும், அதனால் மனுதாரருக்கு எதிர்மனுதாரர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டு, அதற்கு எதிர்மனுதாரர் தரப்பில் மனுதாரர் தன்னிசையாகப் பிரிந்து இருப்பதாலும் அவர் ஆசிரியராக வேலை பார்த்துச் சம்பாதிப்பதாகவும், காரணம் இல்லாமல் பிரிந்து இருப்பதால் எதிர்மனுதாரர் மனுதாரருடன் சேர்ந்து வாழ தயாராக இருந்தும் மனுதாரர் பிரிந்து விட்டதால் மனுதாரருக்கு ஜீவனாம்சம் எதிர்மனுதாரர் கொடுக்க கடமைப்பட்டவர் அல்ல என்ற வகையில் மனுவைத் தள்ளுபடி செய்ய எதிர்மனுதாரர் வாதிட்டுள்ள நிலையில் இம்மனு அனுமதிக்கத் தக்கதா? மனுதாரர் கேட்கும் பரிகாரம் வழங்கப்படத் தக்கதா? என்பது குறித்து ஆராய வேண்டியதாகிறது.

            மனுதாரருக்கும் எதிர்மனுதாரருக்கும் நடைபெற்ற திருமணம் மற்றும் அவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்தது மனுதாரர் தரப்பில் சொல்லப்பட்டு, அது எதிர்மனுதாரர் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. இப்பொருண்மையின் மூலம் மனுதாரர் எதிர்மனுதாரரின் சட்டப்பூர்வமான மனைவி என்பதை இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.

            அடுத்ததாக மனுதாரர் திருமண சீர்வரிசைகள் குறித்துக் கூறியுள்ளதை எதிர்மனுதாரர் மறுத்திருக்கிறார். இம்மனுவைப் பொருத்த வரையில் கு.வி.மு.ச. பிரிவு 125 இன் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் நகை, பணம் கொடுத்தது குறித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியமில்லை. அது குறித்து இரு தரப்பினருக்கும் பல்வேறு பூசல்கள் எழுந்து பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கல் தாக்கல் செய்யப்பட்டிருப்பதை எதிருரை மூலம் இந்நீதிமன்றத்தால் அறிய முடிகிறது. அத்துடன் அம்மனுவில் தரப்பினர்களுக்கிடையேயான மன விவகாரங்கள் குறித்தும் விரிவாக ஆராய வேண்டியதில்லை என்று இந்நீதிமன்றம் கருதுகிறது. அதற்குச் சான்றாக 1999 - 6SCC பக்கம் 306 இல் ராஜாத்தி எதிர் கணேசன் என்ற வழக்கில் உண்டாக்கப்பட்டிருக்கும் முன்தீர்வினை இந்நீதிமன்றம் சுட்டிக் காட்டுகிறது. அத்தீர்ப்பின் படி இம்மனுவின் பொருண்மை குறித்து ஆராய்வது மட்டுமே போதுமானது என இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.

            எதிர்மனுதாரர் வருமானம் குறித்து மனுதாரர் கூறியுள்ள சங்கதிகளை எதிர்மனுதாரர் தரப்பு வன்மையாக மறுத்துள்ளது. மேலும் அவ்வருமானங்கள் குறித்த நிரூபிக்கத் தக்க எவ்வித ஆவணங்களையும் மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. வேறு நம்பத்தகுந்த வாய்மொழி சாட்சியமும் இல்லை. எனவே எதிர்மனுதாரருக்கு வருமானம் வருகிறது என்பதை மனுதாரர் நிரூபிக்கவில்லை என்று இந்நீதிமன்றம் தீர்மானிக்கும் அதே வேளையில் எதிர்மனுதாரர் குறுக்கு விசாரணையில் அரசு மருத்துவராக இருப்பதாக அவரே தந்த வாக்குமூலத்தை இந்நீதிமன்றம் கவனமாகப் பரிசீலனையில் கொள்கிறது. அரசுப் பணியில் இருக்கும் ஒருவருக்கு மாதாந்திர வருமானம் வருவதையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது. அந்த வகையில் மனுதாரர் எதிர்மனுதாரரின் சட்டப்பூர்வமான மனைவியாக இருப்பதால் அவரைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு எதிர்மனுதாரருக்கு இருக்கிறது என்று இந்நீதிமன்றம் தீர்மானித்து, அவ்வாறு பராமரிப்பதற்கான வருமானமும், வாய்ப்பும் எதிர்மனுதாரருக்கு இருக்கிறது என்பதையும் தீர்மானிக்கிறது.

            அடுத்ததாக மனுதாரர் தன்னுடைய நிரூபண வாக்குமூலத்தில் எதிர்மனுதாரர் சண்டைகளையும், பிரச்சனைகளையும் ஏற்படுத்தினாலும் அதைப் பொறுத்துக் கொண்டு வாழ முடிந்தாலும், எதிர்மனுதாரரின் துன்புறுத்தலையும், அடி உதை போன்ற சித்திரவதைகளையும் தாங்க முடியாமல்தான் பிரிந்து வாழ்ந்திருப்பதாக கூறுவதை எதிர்மனுதாரர் பொய்ப்பிக்கவில்லை. மேலும் சமாதான முயற்சிகளில் மனுதாரர் எதிர்மனுதாரரின் துன்புறுத்தல் மற்றும் சித்திரவகைளால் உண்டான அச்சத்தின் காரணமாக சேர்ந்து வாழ பயமாக இருப்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். அதை இந்நீதிமன்றம் ஏற்கிறது. ஆதலால் எதிர்மனுதாரரின் சித்திரவதைகளாலே மனுதாரர் அவரை நியாயமான காரணங்களால் பிரிந்திருக்கிறார் என்பதை இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது. அத்துடன் எதிர்மனுதாரர் குறுக்கு விசாரணையில் இரண்டு வருட காலமாகப் பிரிந்திருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார். இக்காலகட்டத்தில் எதிர்மனுதாரர் மனுதாரருக்கு எவ்வித பொருளுதவி செய்யவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார். அதாவது இரண்டு வருட காலமாக எதிர்மனுதாரர் மனுதாரருக்கு எவ்விதப் பொருளுதவியும் கொடுக்காமல் புறக்கணித்துள்ளார் என்றே அதை இந்நீதிமன்றம் பார்க்கிறது.

            மனுதாரருடன் சேர்ந்து வாழ்வதற்கான வழக்கை எதிர்மனுதாரர் இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இவ்வழக்கிற்குப் பிறகே தாக்கல் செய்துள்ளார் என்பதும் தெளிவாகிறது. இதன் மூலம் இடைப்பட்ட இரண்டாண்டு காலத்தில் சேர்ந்து வாழ்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எதிர்மனுதாரர் வாளா இருந்துள்ளார் என்பது தெரிகிறது. மனுதாரர் பிரிந்து வந்தக் காலத்திலிருந்து இந்த ஜீவனாம்சம் கோரும் மனு தாக்கல் செய்திருக்கிற காலம் வரைக்கும் மனுதாரரை வாழ வைப்பதற்கோ அல்லது மனுதாரரைப் பராமரிப்பதற்கோ எதிர்மனுதாரர் மனுதாரருக்கு எதையும் கொடுக்கவில்லை. எனவே சட்டப்பூர்வமான கணவன் என்ற முறையில் தன் மனைவியான இந்த மனுதாரரை எதிர்மனுதாரர் போதிய வசதி இருந்தும் பராமரிக்க மறுத்துள்ளார் அல்லது பராமரிக்காமல் புறக்கணித்துள்ளார் என்று மனுதாரர் தரப்பில் நிரூபிக்கப்பட்டிருப்பதாக இந்த நீதிமன்றம் தீர்மானிக்கிறது. இவ்வாறான சூழ்நிலையில் மனுதாரரை எதிர்காலத்தில் சேர்ந்து வாழ வந்தால் வாழ வைப்பேன் என்று எதிர்மனுதாரர் கூறுவதை வைத்துக் கொண்டு இந்த வழக்கில் ஜீவனாம்சம் வழங்கி உத்திரவிடுவதைத் தடுக்க முடியாது என்பதை AIR 1924 M 624 இல் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் Once refusal of neglect to maintain in the past is proved, an offer at the trial to maintain in future does not oust the jurisdiction of the magistrate from making an order for maintenance என்று காட்டியுள்ள நல்வழியின் அடிப்படையில் தீர்மானிக்கிறது.

            அடுத்ததாக மனுதாரர் தன்னுடைய நிரூபண வாக்குமூலத்தில் எந்த வேலையும் வருமானமும் இன்றி தன்னுடைய வயதான தாய், தந்தையோடு கஷ்ட ஜீவனம் செய்து வருவதாக கூறியுள்ளதால் அவர் தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள இயலாதவராக இருப்பதை அறிய முடிகிறது. அதை மறுத்து மனுதாரர் பள்ளிக்கூடத்தில் வேலை பார்ப்பதாக எதிர்மனுதாரர் கூறுவது தகுந்த ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்படாமல் இருப்பதையும் பார்க்க முடிகிறது. மனுதாரர் படித்துள்ளது உண்மை என்றாலும் தான் வேலையில்லாமல் இருப்பதையும் கஷ்ட ஜீவனம் செய்து வருவதையும் ஒப்புக் கொண்டுள்ள பொருண்மையை மனுதாரர் நிரூபித்துள்ளதாகவே இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.

            மேலும் எதிர்மனுதாரர் தாக்கல் செய்துள்ள எழுத்துப்பூர்வமான வாதுரையில் பல முன்தீர்வுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அத்தகைய முன்தீர்வுகளுக்கும் இவ்வழக்கின் பொருண்மைக்கும் எவ்விதமான சம்பந்தமும், இணக்கமும் இல்லை. ஆதலால் எதிர்மனுதாரர் சுட்டிக் காட்டியுள்ள முன்தீர்வுகளால் அவரது கட்சிக்கு எவ்விதமான பலமும் இல்லை என்று இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.

            மே‍லும் ஆய்வு செய்த வகையில் எதிர்மனுதாரர் மனுதாரரின் சட்டப்பூர்வமான கணவன் என்பதாலும், மனுதாரரைப் பராமரிப்பதற்குப் போதிய வசதி எதிர்மனுதாரருக்கு இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாலும், எதிர்மனுதாரர் மனுதாரரை கணவன் என்ற முறையில் பராமரிக்க மறுத்துள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாலும், மனதாரர் தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள இயலாதவர் என்று மனுதாரர் தரப்பில் நிரூபிக்கப்பட்டிருப்பதாலும், போதிய வசதி இருக்கும் எதிர்மனுதாரர் கஷ்ட ஜீவனம் செய்து வரும் மனுதாரரைப் பராமரிக்கும் பொருட்டு வாழ்க்கைப் பொருளுதவி கொடுக்க கடமைபட்டவராக ஆகிறார் என்று இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.

            அவ்வகையில் மனுதாரரின் நிலை, எதிர்மனுதாரரின் வருமானம் மற்றும் அவரது பெற்றோரைப் பராமரிக்க வேண்டிய அவருக்கு இருக்கும் பொறுப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எதிர்மனுதாரர் மனுதாரருக்கு வாழ்க்கைப் பொருளுதவியாக மாதம் ஒன்றுக்கு ரூ. 5,000/- உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ செலவு ஆகியவற்றிற்காக கொடுக்க வேண்டும் என்றும், மேற்படித் தொகையானது இந்த மனு தாக்கல் செய்த தேதியிலிருந்து எதிர்மனுதாரர் மனுதாரருக்குக் கொடுக்க வேண்டுமென்றும், மாத ஜீவனாம்ச தொகையானது அந்த மாதம் முடிந்து எதிர்வரும் மாதம் ஐந்தாம் தேதிக்குள் மனுதாரருக்கு எதிர்மனுதாரர் கொடுக்க வேண்டும் என்று இந்நீதிமன்றம் தீர்வு கண்டு அந்த வகையில் இந்த மனு பகுதியாக அனுமதிக்கப்பட்டு உத்திரவிடப்படுகிறது. மேலும் இத்தொகையானது மனுதாரர் வழக்குத் தொடர்ந்த நாளிலிருந்து எதிர்வரும் மாதம் ஐந்தாம் ‍தேதிக்குள் மனுதாரருக்கு எதிர்மனுதார் கொடுக்க வேண்டும் என்று இந்நீதிமன்றம் தீர்வு கண்டு அந்த வகையில் இந்த மனு பகுதியாக அனுமதிக்கப்பட்டு உத்தரவிடப்படுகிறது." இப்படியாகத் தீர்ப்பைச் சொல்லி முடிச்சாரு ஜட்ஜ்.

            இந்தத் தீர்ப்பை அவரு தந்ததுக்குப் பெறவு மாசா மாசம் அஞ்சாயிரம் வர்றதோட, வழக்குத் தொடர்ந்த நாள்லேந்து கணக்குப் பண்ணி வர்ற வேண்டிய ரூவாயயும் பாலாமணி கொடுத்தாவணும்ன்னு நெனைச்சாங்க செய்யுவும் சுப்பு வாத்தியாரும். வக்கீல் திருநீலகண்டனும் அதைத்தாம் உறுதியா சொன்னாரு. ஒருவழியா எல்லாமும் முடிஞ்சதுன்னு நெனைப்பு எல்லாத்துக்கும் இருந்துச்சு. வக்கீல் திருநீலகண்டன் சொன்னாப்புல வழக்கு அஞ்சாறு வருஷத்துக்கு இழுக்கல. ஒண்ணேகால் வருஷத்துக்குள்ள முடிஞ்சது. ஆன்னா இந்த ஒண்ணேகால் வருஷத்துக்குள்ள கோர்ட்டுக்கு அலைஞ்ச அலைச்சலும் அதுக்கு மின்னாடி மகளிர் காவல் நிலையத்துக்கும் சமூக நீதி மையத்துக்கும் அலைஞ்ச அலைச்சல்ங்றது கொஞ்ச நஞ்சமல்ல. அதே அலைச்சல்ல ஒரு வேலைக்குன்னு அலைஞ்சிருந்தா கூட செய்யு மாசத்துக்குப் பத்தாயிரம் சம்பாதிச்சிருக்கலாம். ஆன்னா வக்கீல் திருநீலகண்டன் இப்படிச் சொன்னாரு, "இனுமே மாசா மாசம் அஞ்சாயிரம் கொடுக்குறதுக்கு அலறிட்டு அந்தப் பயெ சமாதானத்துக்கு வந்து வாங்குன நகெ, பணம், பொருளையெல்லாம் கொடுத்துட்டு ஓடப் போறான்னா இல்லையான்னு பாருங்க!"ன்னு. ஆன்னா நடந்த கதெ வேற. வழக்குல தீர்ப்பாயி எத்தனெ பேரு உத்தரவுக்குக் கட்டுப்பட்டு ஜீவனாம்சத்தெ கொடுக்குறாங்க? கோர்ட்டுல தீர்ப்பானதெ வாங்குறதுக்கு அதெ நிறைவேத்தணும்ன்னு சொல்லி மனு தாக்கல் பண்ணணுங்ற சங்கதியெல்லாம் இருக்கு. அடுத்த மாசம் அஞ்சு தேதியாயும் தீர்ப்பானபடி ஜீவனாம்சத் தொகையக் கொடுக்க முன்வரல பாலாமணி. அதுக்காக அதெ நிறைவேத்தணுங்றதுக்காக சிஜேயெம் கோர்ட்டுல ஒரு நிறைவேத்தும் மனு தாக்கல் பண்ண வேண்டியதா ஆனுச்சு.

            அடுத்ததா பாலாமணி இன்னொரு வேலையையும் செஞ்சாம். ஜீவனாம்ச வழக்கோட தீர்ப்ப எதிர்த்து மாவட்ட முதன்மை நீதிமன்றத்துல பாலாமணி மேல்முறையீட்ட உடனடியா பண்ணுனாம். பண்ணிட்டு கோர்ட்ட வுட்டு அவ்வேம் வெளியில வர்ற அன்னிக்கு எப்படியும் ஜீவனாம்சத் தொகைய வாங்கிப்புடலாம்ன்னு கோர்ட்டுலயே குடியா கெடந்த செய்யுவையும், சுப்பு வாத்தியாரையும் பாக்குறாப்புல ஒரு சூழ்நெல உண்டாயிடுச்சு. வழக்குல எப்பிடியோ அலைஞ்சி தீர்ப்ப வாங்குனாப்புல ஜீவனாம்சத் தொகையையும் அலைஞ்சி வாங்கிப்புடலாம்ன்னு செய்யுவுக்கு ஒரு நெனைப்பு. அதால அவ்வே தெனமும் அப்பங்காரர அழைச்சிக்கிட்டுக் கோர்ட்டுக்குப் போறதும் அங்க வக்கீல்கிட்டெ எதாச்சும் பண்ணி வுடுங்கன்னு யோசனெ கலந்துகிட்டு கோர்ட்டுலயே கெடக்குறதும் அவளுக்கு ஒரு பழக்கமா போயிடுச்சு.

இப்படியா கோர்ட்டெ கதின்னு கெடந்த செய்யுவப் பாத்தப்போ பாலாமணி சொன்னாம், "நீயி எங்கிட்டெயிருந்து எப்பிடி ஜீவனாம்சத்தெ வாங்குறேன்னு பாக்குறேம்டி? இத்து முடிஞ்சி நீயி ஹை கோர்ட்டு, அத்து முடிஞ்சி சுப்ரீம் கோர்ட்டுன்னு போயாவணும். அதுக்குள்ள பல்லு கெழண்ட கெழவியாயிடுவே. அப்ப வாணா ஒமக்கு ஜீவனாம்சம் கெடைக்கலாம். அது வரைக்கும் நீயி மறுகலியாணம் பண்ணாம வாழாவெட்டியா இருந்தாவணும். அப்பிடி வேணும்ன்னா இரு. சுப்ரீம் கோர்டுலேந்து அப்போ பிசாத்து காசெ அஞ்சாயிரத்தெ கொடும்பாம். அப்போ கொடுக்கிறேம். அப்போ அஞ்சாயிரங்றது இப்போ இருக்குற அம்பது ரூவாயிக்குச் சமானமா ஆயிடும். அதெ பிச்சக் காசின்னு தூக்கி எறிஞ்சிட்டுப் போயிட்டே இருப்பேம். அது வரைக்கும் கேஸ்லாம் நடத்துணுமே. அதெ ஒங் காசிய வெச்சே, ஒந் நகையே வித்தெ ஹாயா நடத்திட்டு இருப்பேம். எனக்கென்ன எம்மட பாட்டம் வூட்டுக் காசியா போவுது? ஒம்மட அப்பம் ஆயி யண்ணம் ஒழைச்சக் காசித்தானே போவுது? நல்ல குடும்பம்யா? பொண்ணையும் கொடுத்து பிரச்சனை வந்தா வழக்கை நடத்த பணங்காசி, நகையையும் கொடுத்து சரியான குந்தாணிக் குடும்பமா இருக்கும் போல!"ன்னு சிரிச்சிக்கிட்டெ சொல்லிட்டே போனாம்.

            பாலாமணி இப்படிச் சொன்னா பாலாமணியோட வக்கீலு கங்காதரன் ஒரு நிமிஷம் நின்னு நெதானிச்சு அலட்டலே யில்லாம, "யிப்பவும் ஒண்ணும் கெட்டுடல. சமாதானத்துக்கு வந்தா கொடுக்குற காசிய வாங்கிட்டு ஏதோ கெடைச்ச வரைக்கும் போதும்ன்னு கதெயக் கட்டிட்டுப் போவலாம். கோர்ட்டு மூலமாத்தாம் வாங்கணும்ன்னு நெனைச்சா எங் காட்டுல மழெ. ஒஞ்ஞளுக்குப் பைசா காசி தேறப் போறதில்ல. இப்பிடியே கோர்ட்டுக்கு அலைஞ்சிக்கிட்டெ கெடங்க. நெக்ஸ்ட் கோர்ட்டுல மீட் பண்ணுவேம். ன்னா?"ன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள பாலாமணி கோர்ட்டுப் படிக்கட்டெ வுட்டு எறங்கி இருவது அடிக்கு மேல நடந்து போயிருந்தாம். கங்காதரன் வேகு வேகுன்னு பாலாமணியப் பிடிக்க பின்னாடி ஓடுனாரு. 

            அதெயெல்லாம் கேட்டதும் சுப்பு வாத்தியாரும், செய்யுவும் செலையாப் போயி நின்னாங்க. தீர்ப்புல ஜெயிச்சாச்சு, ஆன்னா அதெ நிறைவேத்தணும்ன்னா ஒடனே முடியாது, அதாச்சி, தாகத்தால செத்துகிட்டு இருக்குறவனுக்குத் தண்ணி இருக்கு, அதெ ஒடனடியா கொடுக்க முடியாதுங்றது போல. ஓடியோடி களைச்சதோட களைப்ப உணர ஆரம்பிச்சாரு சுப்பு வாத்தியாரு. இவ்வளவு ஓடி வந்தது குடிக்க முடியாத கானல் நீர்ர குடிக்கணுங்றதுக்காத்தானான்னு, "ஆபரேஷன் சக்சஸ், பேஷண்ட் டெட்ங்ற மாதிரி, தீர்ப்புல ஜெயிச்சாச்சு, வாழ்க்கையில தோத்தாச்சு மவளே!"ன்னு சுப்பு வாத்தியாரு அப்பிடியே கோர்ட்டுப் படியில ஓரமா உக்காந்துட்டாரு.

செய்யுவுக்கும் தீர்ப்புக்கே இவ்ளோ காலம் அலைய வேண்டியதா இருந்துச்சு, இதுல அந்தத் தொகைய நிறைவேத்தச் சொல்லி கையில வாங்க எத்தனெ நாளு அலையணுமோன்னு மலைப்பாயி அவளும் அப்பிடியே தலையில கையிரண்டையும் வெச்சிக்கிட்டுப் படிக்கட்டுல ஓரமா உக்காந்தா. அந்தப் படிகட்டுங்க அவளெ மேல ஏத்தி வுடுறாப்புல தெரியாம, கீழே எறக்கி வுடுறாப்புல தோண ஆரம்பிச்சது. “சட்டப்படி எல்லாம் நடக்கணும்ன்னா சடமான பின்னாடித்தாம் நடக்கும் போல!”ன்னு முணுமுணுத்துகிட்டா செய்யு. மனசு வலி காண ஆரம்பிச்சிடுச்சு அவளுக்கு. ஓடியோடி வாயில் நொரை தள்ளுன்ன குதிரெ ஒண்ணு இனுமே நம்மால ஓட முடியாதுன்னு எஜமானனப் பாத்துக் கெஞ்சுறாப்புல பாக்குமே அப்படிப் படிக்கட்டுலேந்து நீதிமன்ற கட்டடத்தை அண்ணாந்து பாத்தா செய்யு.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...