6 Jan 2021

வரச் சொல்லிட்டு வேண்டாம் என்றது!

வரச் சொல்லிட்டு வேண்டாம் என்றது!

செய்யு - 678

            “வன்கொடுமெ வழக்குல புலியப் போல பாயுவேம்! ஹெச்செம்ஓப்பி வழக்குல எலியப் போல பதுங்குவேம்!”ன்னாரு வக்கீல் திருநீலகண்டன். அதுக்கேத்தாப்புல வன்கொடுமெ வழக்குல மட்டும் ஆவப் போறதெ பாக்க ஆரம்பிச்சாரு. அதுக்காக    ஆர்குடி குற்றவியல் நீதிமன்றத்துல வன்கொடுமெ வழக்குல ஆவணப் பட்டியல்ல இருந்த அத்தனெ நகெ வாங்குன ரசீது, சாமாஞ் செட்டுக வாங்குன ரசீது, கலியாணத்துக்கென பணத்தெ எடுத்த பாஸ்புக்கோட என்ட்ரின்னு அத்தனையையும் தாக்கல் பண்ணி அத்தோட செய்யுவோட நிரூபண வாக்குமூலத்தெ தாக்கல் பண்ணிட்டுச் சாட்சிகளோட வாக்குமூலத்தெ தாக்கல் பண்ண சாட்சிகள வரச் சொன்னாரு வக்கீல் திருநீலகண்டன். கல்யாண சீரா காருக்குப் பணம் கொடுத்தது, கலியாணத்துக்குன்னு பணத்தெ கொடுத்தது, சாமாஞ் செட்டுகள வாங்கிக் கொடுத்ததுன்னு அதுக்கு எல்லத்துக்கும் சுப்பு வாத்தியாரு சொன்னதெ வெச்சிப் பரமுவோட அப்பாவையும், சந்தானத் அத்தானையும் சாட்சிகளா வக்கீல் சேத்திருந்தாரு. அவுங்கள  ஒருநாள் மெனக்கெட்டு ஆர்குடி கோர்ட்டுக்கு வரச் சொல்ல வேண்டியதா இருந்துச்சு. சந்தானம் அத்தான் இதுக்காகவே மெனக்கெட்டு சென்னைப் பட்டணத்துலேந்து கார்ல வந்துச்சு. பரமுவோட அப்பாவ திட்டையிலேந்து அழைச்சிக்கிட்டுப் போயாச்சு. அவரு இதுக்குன்னே மெனக்கெட்டு அவரோட டிவியெஸ் எக்செல் சூப்பர்ல வந்தாரு.

            சந்தானம் அத்தானோட கார்ர வெச்சி பஸ் ஸ்டாண்டுலேயே நின்னு வக்கீல் வந்ததும் அவர்ர அழைச்சிக்கிட்டு வழக்கமா போற ஓட்டல் ஆரியாஸ்க்கு வந்து எல்லாத்துக்கும் சாப்பாட்ட முடிச்சப்போ மணி ஒம்போதரை ஆனுச்சு. சந்தானம் அத்தானோட கார்லயே ஏறி கோர்ட்டுக்குள்ள எறங்குனப்போ கோர்ட்டு வளாகம் வெறிச்சோடித்தாம் கெடந்துச்சு. பத்து மணி வாக்குலத்தாம் எங்க இருந்து வந்துச்சோங்றது தெரியாத அளவுக்குத் திபுதிபுன்னு கூட்டம் வந்து அலைமோதும். ஆர்குடி கோர்ட்டுல தெற்கால வழக்குல சிக்குன வண்டிங்க எல்லாம் துரு பிடிச்சிப் போயி டயரு போயி நின்னுட்டு இருந்துச்சுங்க. அதுக்குப் பக்கத்துல பெரிய தூங்குமூஞ்சு மரம் நின்னுச்சு. அதுக்குக் கீழே சந்தானம் அத்தான் காரை நிப்பாட்டுன்னுச்சு.

            இன்னிக்கு நடக்கப் போற வழக்கப் பத்தினப் பேச்சு எழும்புனுச்சு.

            "எப்பிடி கோர்ட்டுல நடந்துக்கணும், எப்பிடிச் சொல்லணுங்றதெ யிப்போ சொல்லிட்டீங்கன்னா, அதெ அப்பிடியே வாங்கிட்டு கோர்ட்டுல கூப்புடறப்போ வந்துச் சொல்லிப்புடுவாங்கய்யா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு விசயத்தெ ஆரம்பிச்சு வைக்குறாப்புல.

            வக்கீல் திருநீலகண்டன் ஒரு நிமிஷம் நெத்தியச் சுருக்கி யோசிச்சாரு. திடீர்ன்னு என்ன நெனைச்சாரோ வக்கீலு இன்னிக்கு சாட்சிகளோட வாக்குமூலத்தெ தாக்கல் பண்ண வேணாம்ன்னுட்டாரு. சென்னையிலேந்து இதுக்குன்னே மெனக்கெட்டு வந்த சந்தானம் அத்தானுக்கு அதெ கேட்டதுமே, என்னடா இத்து கெளம்பி வர்றச் சொல்லிட்டு இப்பிடி வந்திருக்கிறதெ வேணாங்றதெ போல சொல்றாரேன்னு ஏமாத்தமாப் போச்சு. அதெ கேட்டதும் சுப்பு வாத்தியாருக்குத் தூக்கி வாரிப் போட்டாப்புல ஆயிடுச்சு. நாம்ம சொன்னேம்ன்னு மெனக்கெட்டு வந்தவங்க, நம்மளப் பத்தி என்ன நெனைக்கப் போறாங்களோங்ற நடுக்கம் அவரு மனசுக்குள்ள வந்துடுச்சு. இருந்தாலும் அதெ டக்குன்னு வெளிக்காட்டிக்கிடாம வக்கீல்கிட்ட பேசுனாரு.

            "சென்னைப் பட்டணத்துலேந்து மெனக்கெட்டு வந்திருக்காங்க. முடிச்சி அனுப்பிப்பிடுங்கய்யா! ஊர்லேந்து பரமுவோட அப்பாவும் வந்திருக்காங்க. பலசோலிக்கார ஆளு அவரு. அவரும் பல வேலைகளப் போட்டுட்டு நமக்காக ஓடியாந்திருக்காரு. நமக்காக வந்தவங்கள ஒண்ணும் இன்னிக்கு சோலியில்லன்னு திருப்பி அனுப்புறது நல்லா யிருக்காது. வந்ததுக்கு ஆன வரைக்கும் முடிச்சி அனுப்பிட்டுருங்க"ன்னாரு சுப்பு வாத்தியாரு எப்பிடியோ காரியத்தெ முடிச்சிப்புடுங்கன்னு கால்ல பிடிக்குறாப்புல.

            "நாம்ம நேத்திப் பூரா இந்த வழக்கப் பத்தி யோசிச்சிட்டு இருந்தேம். அவ்வேம் பக்கத்துல திடீர்ன்னு இந்த வழக்குல அவ்சரம் காட்டுறான்னா இதுல ஏதோ ஒரு விசயம் இருக்குன்னு தோணுச்சு. அதுக்கு நாம்ம எடம் கொடுக்கக் கூடாது. அவ்வேம் எந்தெந்த திசையில போறானோ அதுக்கு எதிர் திசையிலத்தாம் நாம்ம இந்த வழக்குலப் போவணும். அந்தப் படிக்குப் பாத்தா இதெ தாக்கல பண்ணி முடிச்சா குறுக்கு விசாரணை ஆரம்பிச்சிடும். அது ஆரம்பிச்சா வழக்கெ முடிஞ்சாப்புலத்தாம். அதாம் வேணாம்ன்னு பாக்குறேம்!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் எகனைக்கு மொகனையாப் போறதெ நல்லதுங்றாப்புல.

            "வழக்கு சீக்கிரமா முடிஞ்சா நல்லதுதானேங்கய்யா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு அலைஞ்சு அலைஞ்சு உண்டான சலிப்புல.

            "அங்கத்தான் ஒங்க மருமவனோட மாஸ்டர் ப்ளான்ன நீங்க புரிஞ்சிக்கல. நாம்ம புரிஞ்சிக்கிறேம். இந்தப் பாருங்க இந்த வழக்கு சீக்கிரமா முடிஞ்சா என்னாவும்? என்னாவுங்றேம்? சொல்லுங்கோ?"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் சத்தமா.

            "ஏம்ங்க்ய்யா கோர்ட்டு ஆரம்பிக்கிற நேரத்துல இம்மாம் சத்தமா?"ன்னா செய்யு அவரோட சத்தம் பிடிக்காம.

            "ஒங்களுக்கு இதோட தீவிர நெல தெரியல. அதெப் புரிய வைக்கத்தாம் கொஞ்சம் சத்தமா கேக்குறேம்? வேறொண்ணுமில்ல. இதுல தீர்ப்பு வந்தா என்னாவும் தெரியுமா?"ன்னாரு வக்கீல் என்னவோ கோர்ட்டுல ஆக்ரோஷமா வாதாடுறாப்புல.

            "தீர்ப்பு வந்தா அந்தக் கோஷ்டிங்க ஜெயில்ல கெடக்க வேண்டித்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு பரீட்சையில கேக்குற கேள்விக்கு ஒரு வரியில நறுக்குன்னு பதில் அளிக்குறாப்புல.

            "அதெல்லாம் அவ்ளோ சீக்கிரமா பண்ணிட முடியாது. அதுக்குள்ள அவனுங்க ஆளுங்க எஸ்கேப்பு ஆயிடுவானுங்க. நாம்ம ‍கோர்ட்டோட தீர்ப்ப வாங்கிட்டுப் போயி ஸ்டேசன்ல தேவுடு காத்துக் கெடக்கணும். அதுக்குள்ள ஹை கோர்ட்லயோ எங்கயோ ஸ்டே ஆர்டர்ர வாங்கிக்கிட்டு மேல் அப்பீலுக்குப் போயிடுனுவாவோ. அங்கயும் அப்பீல்ல திருவாரூரு கோர்ட்டுல முடிக்கிறானுவோன்னு வெச்சுக்குங்க. அடுத்த என்ன நடக்கும்றீங்க? கோர்ட்டு நேரா ஹை கோர்ட்டுல போயி நிக்கும். இங்க கேஸூக்காக அலைஞ்சிட்டு நிக்குற நீங்க அடுத்ததா அங்க ‍அலைய வேண்டியதா இருக்கும். முடியுமோ ஒங்களால சொல்லுங்கோ? இதுதாம் அவனோட ஸ்கெட்ச். இப்போ நடக்குறுது என்னா? கோர்ட்டு கேஸ்ஸூன்னு ஒங்க மருமவன் அங்கயிருந்து இங்க அலைஞ்சிட்டு இருக்கிறாம். அவனோட ஸ்கெட்ச் சரியா ஒர்க் அவுட்டாயிடுச்சுன்னா அவன் அங்கயிருந்து இங்க அலைஞ்சிக்கிட்டு அலைச்சல நீங்க இங்கயிருந்து அங்க அலையுறாப்புல இருக்கும். நம்ம ஊரு கோர்ட்டுக்கு வர்றப்பவே மெரட்டு மெரட்டுன்னு மெரட்டிட்டு நம்மள போட்டு வாங்குறவேம், சென்னை ஹை கோர்ட்டுன்னா நெனைச்சிப் பாருங்க. ஒங்கள அப்பிடியே போட்டுத் தாளிச்சி எடுத்துடுவாம்! அதெயெல்லாம் யோசனெப் பண்ணிப் பாக்கிறேம்!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் மொகத்தெ கூர்மையா கொண்டாந்து சொல்றாப்புல.

            "ஏம்யா இதெ கொஞ்சம் மின்னாடியே யோஜனெ பண்ணிச் சொல்லிருந்தாலாவது அக்கா மவ்வேனயும், ஊருக்காரரெயும் வர்றாம இருந்திருக்க செஞ்சிருக்கலாம். பாவம் அவுங்கள வேற வர வெச்சி இப்பிடி அலைக்கலிச்சிக்கிட்டு?"ன்னாரு சுப்பு வாத்தியாரு அலுத்துப் போனாப்புல.

            "நமக்கே நேத்தி ராத்திரித்தாம் இந்தப் பாய்ண்ட் புரிஞ்சதுன்னா பாத்துக்கோங்க!"ன்னாரு வக்கீல் அதெ ரொம்ப லாவகமா சமாளிக்குறாப்புல.

            "செரி பரவாயில்ல! நம்ம ஊர்காரரோட சாட்சியத்தெ கூட பின்னாடிப் பண்ணிக்கிடலாம். கொஞ்சம் இழுத்துப் போட்டுப்பேம். சென்னைப் பட்டணத்துலேந்து வந்திருக்கிற யக்கா மவ்வேம் சந்தானத்தோடதெ மட்டுமாச்சு இன்னிக்குப் பண்ணி வுட்டுப்புடுங்களேம்!"ன்னு ஒரு யோசனையக் கொடுத்துப் பாத்தாரு சுப்பு வாத்தியாரு.

            "நமக்கு நேத்தி இந்த யோசனை வந்ததுலேந்து அவுங்களுக்குன்னு தயார் பண்ண வேண்டிய வாக்குமூலங்கள வேற தயார் பண்ணாம வந்துட்டேமே! பெறவு எப்படித் தாக்கீது பண்ண முடியும் சொல்லுங்கோ?"ன்னாரு வக்கீல் என்னவோ பொழுது போகாம கோர்ட்டுக்குக் கௌம்பி வந்தாப்புல.

            "இஞ்ஞ எஞ்ஞயாச்சும் ஒரு கம்ப்யூட்டரு கடையில உக்காந்த தம்பிக்கு மட்டுமாவது தயாரு பண்ணிட முடியாதா ன்னா? அத்து ஒண்ணு தயாரு பண்ணி அனுப்பிச்சாலும் போதும்ங்கய்யா!"ன்னு கெஞ்சாத கொறையா கேட்டுப் பாத்தாரு சுப்பு வாத்தியாரு.

            "அவரசப்படாதீங்க சார்! எங்கப் போயிடப் போறாங்க? இன்னொரு நாள் நாம்ம வர்ற சொல்றப்போ வந்தா மட்டும் போதும். அன்னிக்கு இந்த மாதிரில்லாம் இருக்காது. கண்டிப்பா தாக்கல் பண்ணிட்டுத்தாம் மறுவேல பாப்பேம்!"ன்னாரு வக்கீல் இன்னிக்கு எந்தக் கதெயும் ஆவாதுங்றாப்புல.

            சந்தானம் அத்தான் இதெயெல்லாம் கேட்டுக்கிட்டு இருந்தது இப்போ பேசுனுச்சு, "சென்னைக்கு மாமாவும், மாமா பொண்ணும் வந்துட்டுப் போறதெப் பத்தியல்லாம் நீஞ்ஞ பயப்பட வாணாம். அஞ்ஞ பக்காவான வக்கீலாப் பாத்து நாமளே மாமாவையும், மாமா பொண்ணையும் அழைச்சாந்துக் கொண்டு போறது வாரதெ பாத்துக்கிடுவேம்! சென்னைப் பட்டணத்துல நாம்ம இருக்குற வரைக்கும் அவ்வேம் எதையும் புடுங்க முடியாது. நம்மாள இஞ்ஞ ஆர்குடியிலத்தாம் எதுவும் பண்ண முடியாது. சென்னை பட்டணம்ன்னா நெனைச்சதெ செய்வேம். ஏன்னா அத்து நம்மட எடம். அந்த அளவுக்கு அஞ்ஞ ஆளு இருக்கு. அதெப் பத்தி ஒண்ணும் பயப்பட வாணாம்! நீஞ்ஞ வழக்க வேகமா நடத்தி முடிச்சி தீர்ப்ப வாங்குங்க. அவனெ நாம்ம அஞ்ஞ வெச்சுப் பாத்துக்கிறேம்!"ன்னுச்சு இதுவரைக்கும் பேசாம எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டு இருந்த சந்தானம் அத்தான்.

            "ஹை கோர்ட்லயும் நாமளே வந்து வாதாடலாம். நீஞ்ஞ வேற வக்கீல்லாம் வைக்க வாணாம்!"ன்னாரு வக்கீல் தன்னெ வுட்டுக் கொடுத்துக்கிடாம.

            "அப்பிடின்னா சென்னை வர்றப்ப நீஞ்ஞ நம்ம வூட்டுலயே தங்கிக்கிடலாம். அதுக்கான வசதிகளெ, கோர்ட்டுக்குப் போயிட்டு வார்ற வசதிகளெ நாம்ம பக்காவா பண்ணிடுவேம். நீஞ்ஞ வழக்க வேகமா முடிச்சி விடுறதெப் பாருங்க. அப்பத்தாம் அவனுங்க ஒரு வழிக்கு வருவானுவோ! எஞ்ஞ மாமா பாவம் ஒண்ணும் புரியாத அப்பாவி!"ன்னுச்சு சந்தானம் அத்தான் தன்னெ சங்கடம் பண்றதோட நிறுத்திக்கோ, எம் மாமங்காரனெயும் சங்கடப்படுத்தாதெங்றதெ சொல்றாப்புல.

            "அதுல பாருங்க தலைவா! கேஸூக்குன்னு சில ரூட் மேப்புகளப் போட்டுத்தாம் நாம்ம வழக்குல எறங்குவேம். இந்த வழக்குல இப்போ நாம்ம சொல்றதுதாம் ரூட் மேப். வழக்குன்னா அப்பிடியே நூலப் பிடிச்சாப்புல நடத்திட்டுப் போறது மட்டுமில்ல. எதிர்தரப்ப டார்ச்சர் பண்ணணும். அந்த டார்ச்சர்லேய இந்த வழக்கே வேணாம்ன்னு ஓடிப் போயிடணும். இப்பப் பாத்தீங்கன்னா அந்த டாக்டர் இருக்கான்னே அவ்வேம் ஒவ்வொரு தேதியிலயும் ஆஜராயிட்டு இருக்காம். அதாவது ஒவ்வொரு தேதிக்கும் அவ்வேம் சென்னைப் பட்டணத்துலேந்து இஞ்ஞ வந்துட்டு இருக்காம். வாரட்டும். அப்பிடி வந்து வந்து அலைஞ்சி அலுத்துப் போவட்டும், சலிச்சிப் போவட்டும். அவ்வேம் அப்பிடி அலுத்துச் சலிச்சிப போற எடுத்துலத்தாம் நாம்ம இப்போ பண்ணப் போறதா சொல்லியிருந்தேம் பாருங்க அந்த வேலைகள ஆரம்பிப்பேம். அப்பத்தாம் அவனுக்கு அடி பலமா இருக்கும். சமாதானத்துக்கு வர்றப்போயும் நாம்ம கேக்குறதெ அத்தனையையும் கொடுக்கவும் வருவாம். இவ்வளோ காலம் காத்திருந்தாச்சி. கொஞ்சம் ஆக்கப் பொறுத்த நாம்ம ஆறப் பொறுக்கக் கூடாதா என்னா?"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் சால் சாஜ்ஜப்ப சங்கடமில்லாம எடுத்து விடுறாப்புல.

            "அப்பிடின்னா மாமா! வக்கீலோட போக்குக்கே கேஸ்ஸூ போவட்டும். மறுக்கா நாம்ம எப்போ வாரணும்ன்னு சொல்றாரோ அப்போ போனப் போடு. நாம்ம வந்து நிக்குறேம்!"ன்னுச்சு சந்தானம் அத்தான் மாமங்காரரோட மனசு சங்கடப்படாத அளவுக்கு எறங்கி வர்றாப்புல.

            பரமுவோட அப்பாவும், "வாத்தியார்ரே! வக்கீலப் போட்டு மல்லுகட்டாதீயே! அவுங்களுக்குன்ன ஒரு டெக்னிக் வெச்சிருப்பாவோ. அதுலப் போயி நாம்ம மூக்கெ நொழைக்கக் கூடாது. நமக்கென்ன இன்னொரு நாளு என்னிக்குன்னு சொல்லுங்க வந்துட்டுப் போறேம்? இந்தா இன்னிக்கு வந்தது ஒண்ணும் தண்டமில்ல. வூட்டுக்கு மளிகெ சாமாஞ் செட்டுக வாங்க வேண்டிருக்கு. நம்ம ஊர்ல வாங்குறதெ வுட டவுன்ல இஞ்ஞ வாங்குறது தரமா, மலுவா இருக்கும். அதெ வாங்க வந்ததா நெனைச்சிக்கிறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரோட சங்கடத்தெ சட்டுன்னு தொடைச்சி வுடுறாப்புல.

            "அதாம் சார்! ஒங்க மருமவன் வழக்குகாக இங்க வந்து அலைஞ்சிட்டுக் கெடக்கட்டும். அவனோட நோக்கத்தெ நிறைவேற விட்டு நாம்ம அங்க அலைஞ்சிட்டுக் கெடக்கக் கூடாது!"ன்னாரு வக்கீலும் இப்போ ரொம்ப தீர்க்கமா சொல்றாப்புல. வக்கீலுக்கு சந்தானம் அத்தானும் பரமுவோட அப்பாவும் சொன்னது ரொம்ப தோதாப் போயிடுச்சு.

            "இந்தாருங்கய்யா! நம்மாள இனுமேல்லாம் ரொம்ப அலைஞ்சிட்டுக் கெடக்க முடியாது. இதுக்கு அலைஞ்சியலைஞ்சி நம்ம படிப்புப் பாழாப் போனதுதாம் மிச்சம். தயவு பண்ணி இத்தோட நம்மளோட அலைச்சல ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துப்புடுங்க!"ன்னா செய்யு திடீர்ன்னு எதிர் தெசையில பேசுறாப்புல.

            "என்னவோ அன்னிக்கு வழக்க முடிச்சிகலாம்ன்னு சொன்னத்துக்கு அஞ்சு வருஷம் ஆனாலும் பரவாயில்ல, ஆறு வருஷம் ஆனாலும் பரவாயில்லன்னு தெனாவெட்டா சொன்னீயேம்மா! இன்னிக்கு வந்து இப்படிச் சொன்னா என்னா அர்த்தம்ன்னு நேக்கு புரியலையே?"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் காது மடல கை வெரலால இழுத்து விட்டுக்கிட்டு.

            "சொன்னேம்தாம்ங்கய்யா! யில்லேன்னு சொல்லல. தீர்ப்பு வந்தா எல்லாம் மாறிடும்ன்னு நெனைச்சிக்கிட்டு சொன்னதுதாம். ஜீவனாம்சம் வழக்குல தீர்ப்பு வந்து ஒண்ணும் ஆவலங்றப்போ, எல்லாத்திலயும் அப்பிடித்தாம் தீர்ப்பு வந்து ஒண்ணும் ஆவப் போறதில்லங்றது நல்லாவே நமக்குத் தெரியுது. இதுல ஜெயிச்சும் ஒண்ணும் ஆவப் போறதில்ல. தோத்தும் ஒண்ணும் ஆவப் போறதில்லங்றது நமக்குப் புரிஞ்சிப் போயிடுச்சுங்கய்யா! அவனெ மாறு கையி, மாறு காலு வாங்குனா ஒழிய அவனெல்லாம் திருந்த மாட்டாம். அதெ நாம்ம செய்ய முடியாது. சட்டத்தாலயும் செய்ய வைக்க முடியாது."ன்னா செய்யு தன்னோட கடெசீச் சொட்டும் நம்பிக்கெயும் காய்ஞ்சுப் போனதெ காட்டுறாப்புல.

            "இப்போ நீ என்ன நெனைக்கிறேங்றதெ தெளிவா சொல்லு. போட்டுக் கொழப்பாதம்மா!"ன்னாரு வக்கீலு செய்யுவெ நிமுண்டி வுடுறாப்புல.

            "நம்மள ரொம்ப அலைய வுடாதீயே!"ன்னா செய்யு கையி ரண்டையும் எடுத்துக் கும்புடு போடுறாப்புல.

            "அதானே பிரச்சனை. திருவாரூரு கோர்ட்டுப் பக்கமே எட்டிப் பாக்க வேணாம். இங்க யாராச்சும் பாத்து விடறேம். அவருகிட்டெ ஒரு தடவெ ஆஜராவாம இருக்க எரநூறு ரூவாயக் கொடுத்துடு. அவரு வாய்தாவ வாங்கிப்பாரு. இப்பிடி ரண்டு தடவெ ஆஜராவமா இருந்துக்கிட்டு, மூணாவது தடவெ வந்து ஆஜராயிடணும். புரியுதா? அங்க திருவாரூரு கோர்ட்டுக்கு ஆஜராவாம இருக்க ஒரு தடவெக்கு நூறு ரூவாய்ன்னு கணக்கு வெச்சி மாசத்துக்கொரு தடவெ கொண்டாந்து ஆபீஸ்ல கொடுத்துடு. போதுமா?"ன்னாரு வக்கீல் அவரும் செய்யுவப் பாத்துப் பதிலுக்கு ஒரு கும்புட்டப் போடுறாப்புல.

            "அதெ செஞ்சாத்தாம் நாம்ம எம்பில்ல கவனத்தெ செலுத்தி முடிக்க முடியும் போல. நம்மளோட படிச்சி எல்லாரும் அதெ முடிச்சி தீசிஸ் சப்மிஷன் முடிச்சிட்டாங்க. நாம்ம ஒரு ஆளுத்தாம் பாக்கி இருக்கேம்!"ன்னா செய்யு தனக்குத் தானே மொணகிக்குறாப்புல.

            "அதுக்குத்தாம்மா! மின்னாடியே இவனெ வெட்டிக் கழிச்சி விட்டுப்புட்டு சமரசம்ன்னு வந்தவங்கிட்டு வாங்குறதெ வாங்கி அனுப்பிச்சிடுன்னேம். கேக்கல நீ? சரி பரவாயில்ல. இன்னொரு சமரசத்துக்கு வந்துதாம் ஆவணும் ஒம் ஆம்பயைடான்! அப்ப வெச்சிக்கலாம்!"ன்னாரு வக்கீலு செய்யு எடுத்த முடிவுல உண்டான தப்பெ காட்டி இனிமேலாவது சொல்றதெ கேளுங்றதெ மறைமுகமாக சுட்டுறாப்புல. பத்தரைக்கு மேல கோர்ட்டு ஆரம்பமாவ தொடங்குனதும் இந்தப் பேச்செல்லாம் முடிவுக்கு வந்துச்சு. வழக்கம் போல வாய்தா வாங்குற புராணத்தோட அன்னிய கோர்ட்டு முடிஞ்சது. ஒண்ணும் கதெ ஆவல. ஆவாத கதெக்கு ஆத்தெ கட்டி எறைச்சதுதாம் மிச்சம்ன்னு ஆயிடுச்சு.

            பெரும்பாலும் ஆர்குடியில கோர்ட்டுல ஆஜராயிட்டு திரும்புறப்ப வழக்கமா பாலாமணியோ, வக்கீல் கங்காதரனோ வந்து எதாச்சும் ஒரு எகத்தாளத்தெ வெச்சிட்டுத்தாம் போவாங்க. அன்னிக்கு சந்தானம் அத்தானையும், பரமுவோட அப்பாவையும் பாத்த ரண்டு பேரும் வந்ததும் தெரியாம, போனதும் தெரியாம சொவடு தெரியாத அளவுக்கு மாயமா மறைஞ்சிப் போனாங்க. அத்து ஒண்ணுத்தாம் சந்தானம் அத்தானும் பரமுவோட அப்பாவும் வந்ததுல நடந்த நல்லது. அதெ ரொம்ப அபூர்வமான நிகழ்ச்சியா சொல்லி சுப்பு வாத்தியாரு சந்தோஷப்பட்டுக்கிட்டாரு. அலைஞ்சு அலைஞ்சு உண்டான அலுப்புக்கும் சலிப்புக்கும் மத்தியில அவருக்கு இதுல அல்ப சந்தோஷம். அந்தச் சந்தோஷம் கொறையாம மத்தியானம் எல்லாருக்கும் ஓட்டல் ஆரியாஸ்ல வெச்சி நல்ல வெதமா சாப்பாட்ட பண்ணி வுட்டு அனுப்பி வெச்சாரு. வக்கீலு திருநீலகண்டன் வவுறு பொடைக்கச் சாப்புட்டு திருவாரூரு பஸ்ல ஏறிக் கௌம்புனாரு. அவர்ர கார்ல அழைச்சாந்து கொண்டாந்தது போல பஸ் ஸ்டாண்டுல கொண்டுப் போயி வுட்டு வழியனுப்பி வுட்டு, “வழக்கெ சீக்கிரமா முடிச்சிப் பைசல் பண்ணி வுடுங்க!”ன்னுச்சு சந்தானம் அத்தான். 

            சந்தானம் அத்தானும் ஆர்குடியிலேந்து திட்டைக்கு வர்றாமலே சென்னைப் பட்டணத்தெ நோக்கிக் கௌம்புனா நடுராத்திரியில ஊருப் போயிச் சேந்துப்புடுவேம்ன்னுச்சு. செரித்தாம்ன்னு சுப்பு வாத்தியாரு அதுக்கு தலைய ஆட்டுனாரு. சந்தானம் அத்தான் கெளம்புறப்போ, "ச்சும்மா வந்து ச்சும்மா திரும்பிப் போறதெ நெனைச்சி அடுத்த மொறை வக்கீல் சொல்றப்போ கூப்புடமா விட்டுப்புடாதே மாமா! என்ன சோலி யிருந்தாலும் சரித்தாம் அதெ போட்டுப்புட்டு ஒம் மவளுக்காக இஞ்ஞ வந்து நிப்பேம் மாமா!"ன்னுச்சு. அதெ நெனைச்சு சுப்பு வாத்தியாருக்கு இன்னும் ரொம்ப சந்தோஷம் தாங்கல. மனசு அப்படியே மெழுகா உருகிட்டாரு.

            "இந்த வழக்க நெனைச்சி மனக்கஷ்டம்தான்னாலும் யிப்பிடி நீயி சொல்றதெ கேக்குறப்போ மனசுக்கு ஆயிரம் யானையோட பெலம் வந்தாப்புல இருக்கு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. அதெ வழியனுப்பி வெச்சிட்டு, அத்தோட பரமுவோட அப்பாவோட மளிகெ கடையில அவரு சாமாஞ் செட்டுகள வாங்குற வரைக்கும் கூட மாட நின்னுட்டு ஒண்ணா ஊர்ரப் பாக்க மவளோட திரும்புனாரு சுப்பு வாத்தியாரு. காரியம் ஆவலன்னாலும் நமக்குன்னு காரியத்துக்கு நிக்க ரண்டு பேராச்சும் இந்த ஒலகத்துல இருக்காங்றதெ நெனைச்சு நெனைச்சு பெருமெ பட்டுக்கிட்டாரு.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...