2 Dec 2020

நல்ல வேளை பொம்பளையா பொறக்கல!

நல்ல வேளை பொம்பளையா பொறக்கல!

செய்யு - 643

            சமூக நீதி மைய வெசாரணை அதிகாரியான அந்த அம்மா பாலாமணியால உண்டான சங்கடங்கள் எல்லாத்தையும் அவ்வேம் வந்துட்டுப் போன அன்னிக்கு ராத்திரியே ஒரு வார்த்தெ வுடா போனப் போட்டு செய்யுவுக்குச் சொன்னாங்க. அத்தோட திடீர்ன்னு ஒரு நாளு செய்யுவுக்குப் போன போட்டு நேர்லயும் வரச் சொன்னாங்க. அப்படி அவுங்க திடுதிப்புன்னு வாரச் சொன்னதுக்கு ஒரு காரணமும் இருந்துச்சு. பாலாமணியால சில பல பிரச்சனைகள அவுங்க சந்திக்கிறாப்புல ஆயிடுச்சு. அவுங்க மேல பாலாமணி வுடாம ஏகப்பட்ட புகார்கள அனுப்பி நிலைகொழைய வெச்சிருந்தாம். எல்லாத்துக்கும் மேலா கணவனையும், மனைவியையும் பிரிக்க முயல்றதா வக்கீல வெச்சி அவுங்களுக்கு நோட்டீஸையும் அனுப்பியிருந்தாம். தகவல் அறியும் உரிமெ சட்டத்துல காயிதத்தெ போட்டதோட அவுங்க மேல ஏகப்பட்ட மொட்ட பெட்டிஷன்களையும் போட்டு வுட்டுருந்தாம்.

            செய்யுவும் சுப்பு வாத்தியாருந்தாம் அவுங்களப் பாக்கப் போயிருந்தப்போ, அவுங்க ரண்டு பேத்தையும் தன்னோட அறைக்குள்ளார கூப்புட்டு அவனால உண்டான அத்தனெ அசௌகரியங்களையும் எந்த ஒளிவு மறைவும் இல்லாம அந்த அம்மா சொன்னாங்க. அதெ சொல்லி முடிக்கிறதுக்குள்ளாரயே அந்த அம்மா ஒடைஞ்சி அழுத்துட்டாங்க. மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அம்மா சொன்னதெ கொஞ்சம் கொறைச்சி எடைப் போட்டுட்டதா அடிக்கடி சொல்லி ரொம்பவே வருத்தப்பட்டுக்கிட்டாங்க.

            "பணங்காசி, நகெ நட்டுன்னு எதுவும் வாணாம்ன்னு நீங்க சொன்னா, ஒடனே அந்தப் பயெ எல்லாத்துக்கும் தயாருதாம். அத்து வேணும்ன்னா அந்தப் பயெ சேந்து வாழணும்ன்னுத்தாம் அடம் பிடிச்சிட்டு நிப்பாம். காரணம் ஒங்களுக்குத் தெரியாததில்ல. அவனா டைவர்ஸ் வாங்குனாம்ன்னா எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு, ஜீவனாம்சமும் கொடுக்குறாப்புல இருக்கும். அவ்வேம் காசிலேந்து ஒத்த பைசாவே நீஞ்ஞ ஜீவனாம்சமா வாங்கினாலும் அவனோட உசுரு போயிடும்ன்னுத்தாம் நெனைக்கிறேம். யிப்போ நீங்க நமக்குச் சில ஒதவிகளப் பண்ணுங்கன்னு கேக்குறதெ தவுர நமக்கு இப்போ வேற வழியில்ல. ஏழெட்டு ஒம்போது சிட்டிங்குக்குப் பெறவும் மேல சில சிட்டிங்கப் போட்டதாவும் அதுக்கும் அவ்வேம் வர்றாம இருந்ததாவும் மேக்கொண்டு இதெ நீஞ்ஞ கோர்ட்ல பாத்துக்கிறதாவும் சொல்லிட்டதா இந்த பைல குளோஸ் பண்ணலாம்ன்னு இருக்கேம். ஏன்னா இதெ இன்னும் கொஞ்ச நாளைக்கு நாம்ம தொடந்தேம்ன்னா வெச்சுக்கோங்க சத்தியமா நாம்ம ஹார்ட் அட்டாக்ல போயிச் சேந்துடுவேம். கொஞ்ச நாளாவே என்னிக்கு எந்த பெட்டிஷன் கலக்டருக்குப் போவப் போகுதோ? நமக்கு இன்பர்மேஷன் ஆக்ட்ல என்னா காயிதம் வர்றப் போவுதுன்னோ நெஞ்சே ஒரு படபடப்பா இருக்கு. நம்மள தப்பா நெனைக்காதீயே! நம்மோட இத்தனெ வருஷ அனுபவத்துல இங்க வர்றவங்க நம்மள பெரச்சனைய தீத்து வுடற கடவுளெப் போலத்தாம் பாத்திருக்காங்க. வேகப்பட்டு பேசுறவங்களும் தணிஞ்சுப் போயி பேசுனதுக்கு மன்னிப்ப கேட்டு நாம்ம சொல்றதுக்கு ஒத்துல்லாம் வந்திருக்காங்க. நீங்க ஒங்க மவளுக்குக் கட்டி வெச்ச சைத்தானப் போல நாம்ம பாத்ததேயில்ல. வேற வழியில்லாம்ம ஒங்க வக்கீல் திருநீலகண்டனக் கூப்ட்டு வெச்சி முந்தா நேத்திக்கு சாயுங்காலமா ஒரு மணி நேரத்துக்கு மேல பேசிருக்கேம். அவரும் கேஸ்ஸப் போட ஒத்துக்கிட்டாரு. நாங்களும் கேஸ்ஸப் போடுவேம். நீஞ்ஞ தனியா வக்கீல வெச்சி கேஸ்ஸப் போடுறதுல இருக்குற வேகம் இருக்காது. ஒஞ்ஞளோட ஒரு வெல்விஷர்ரா இதெ நாம்ம சொல்றேம்!"ன்னாங்க அந்த அம்மா பாலாமணியால வெந்து நொந்துப் போனாப்புல.

            "நமக்கும் அவ்வேங்கிட்டெயிருந்து பணத்தெ, நகெ நட்டெ வாங்கிட முடியும்ன்னு பெரிசா அபிப்ராயம் யில்ல. இருந்தாலும் அவ்வேம் பண்ணுறது நாலு பேத்துக்காவது தெரியாம வுட்டுப்புடக் கூடாதுன்னுத்தாம் வந்து நிக்குறேம். யிப்போ எஞ்ஞளால ஒஞ்ஞளுக்கு எந்தப் பாதிப்பும் வர்ற வுட்டுட மாட்டேம்! கெட்டதும் பட்டதும் நாஞ்ஞளாவே இருக்கட்டும். எஞ்ஞளால யாரும் எதுவும் சங்கடப்பட்டுடக் கூடாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு மன சங்கடத்தோட.

            "இந்தப் பயெ ச்சும்மா பிஸ்கோத்துதாம். நமக்கு சர்வீஸ் மட்டும் இன்னும் ஒரு பத்து வருஷம் இருந்தா போதும். பத்து வருஷம் கூட வேண்டியதில்ல. அஞ்சு வருஷம் இருந்தா கூட போதும். இவ்வேம் கண்ணுல வெரல வுட்டு ஆட்டிடுவேம். சர்வீஸ் ரண்டு வருஷத்துல முடியப் போவுது. முடியப் போற நேரத்துல இவ்வேம் பண்ணுறதெப் பாக்குறப்போ ப்ளாக்மார்க் ஆயிட்டுன்னா பென்ஷன் வாங்குறதெல்லாம் செருமமாப் போயிடும். பொண்ணு ரண்டுக நிக்குதுங்க. கட்டிக்கொடுக்குற வயசுல. இந்த நேரத்துல வாணாம் வம்புன்னு நெனைக்கிறேம். அதெ நேரத்துல வன்கொடுமெ வழக்குப் போடுறப்போ எங்களோட சாட்சியத்தெ கேப்பாங்க. அப்போ கோர்ட்டுல அட்டெம்ட் ஆயி ஒங்க பக்கம் உள்ள உண்மெயெ சொல்லாம இருக்க மாட்டேம். கேஸ் பைல் ஆயிடுச்சுன்னா ஒண்ணு அவ்வேம் அதுலேந்து தப்பிக்கணும். அத்து அம்புட்டுச் சுலுவு யில்ல. அவ்வேம் ஜெயிலுக்குப் போறதுக்கான்ன அதிகபட்ச வாய்ப்புக இருக்கு! அதெ நாம்ம உறுதியாச் சொல்லுவேம்! இதெல்லாம் அவனுக்கும் தெரியும். தெரிஞ்சும் தெகிரியமா நிக்குறான்னா அதுக்குக் காரணம் அவனோட மண்டெ கனமும் சைக்கோ புத்தியுந்தாம்!"ன்னாங்க அந்த அம்மா பாலாமணிய ரொம்ப சரியா எடை போட்டாப்புல.

            எல்லாத்தையும் நல்லா கேட்டுக்கிட்ட செய்யு வேறொண்ணும் சொல்ல, "நீஞ்ஞ ன்னா சொல்லுதீயளோ அதுப்படி செய்யுறோம்!"ன்னா.

            "ந்தா இந்தத் தேதியில எல்லாம் வெசாரணைக்கு வந்ததா கையெழுத்தப் போடு. அந்தப் பயெ வர்லன்னு போட்டு கதெய முடிக்கிறேம் நாம்ம. அத்தோட ஒங் கைப்பட இந்த வெசாரணைக்கு ஒம் புருஷன் முழு ஒத்துழைப்புக் கொடுத்து வர்றதா காரணத்தாலயும், கால அவகாசம் அதிகம் கொடுக்கப்பட்ட காரணத்தாலயும் மேக்கொண்டு இதெ கோர்ட்டுல வெச்சித் தீத்துக்கிறதாவும், சமூக நீதி மையம் வெசாரிச்ச வெசாரணையில வெசாரிச்ச வரைக்கும் திருப்தித்தாம்ன்னு எழுதி ஒரு காயிதத்தெ கொடு! இத்தெ நீயி நமக்குச் செய்யுற ஒதவியா நெனைச்சு செஞ்சித்தாம் ஆவணும். நாம்ம நம்மள முடிஞ்ச அளவுக்கு மனசாட்சியோட இருந்துட்டேம். இதுக்கு மேல இதுல எதுவும் முடியும்ன்னு தெரியல. அவ்வேம் பேசுன காசிப் பணத்துக்கு ஆசெப்பட்டு தப்பான ஒரு முடிவெ கூட ஒன்னய எடுக்க வெச்சிருக்கலாம். அதெ செய்ய நமக்கு மனசில்ல. காலத்துக்கும் மனசு உறுத்தும்ன்னுத்தாம் போன போட்டுச் சொன்னதோட ஒன்னய வரவழைச்சி நடந்ததெ ஒரு வார்த்தெ கூட வுடாம சொல்லிட்டேம்!"ன்னாங்க அந்த அம்மா ரொம்ப பரிதாபமா.

            "அந்த ஆளெ சமாளிக்கிறது கஷ்டந்தாம்மா! எந்த நேரத்துல எப்பிடிப் பேசுவாம்? எப்பிடி நடப்பாம்? என்ன மாதிரிப் பண்ணுவாம்? எதெயும் கணிக்க முடியாது. நாம்ம நூத்துக்கு மேற்பட்ட வழியில தற்காப்பப் பண்ணிக்கிட்டாலும் நூத்து ஓராவது ஒரு வழியக் கண்டுபிடிச்சித் தாக்குவாம். அவ்வேம் மூளெ அப்பிடியே வேல செஞ்சி பழக்கப்பட்டுப் போயிட்டு! இனுமே என்னத்தெ திருத்துறது? அவ்வேம் திருந்தி வர்றது? அவ்வேம்மையெல்லாம் திருத்த முடியாது!"ன்னா செய்யு அவனால பட்ட அனுபவத்தெ சொல்லி ஆத்திக்கிறாப்புல, அத்தோட அந்த அம்மாவையும் ஆத்துறாப்புல.

            "நீயி எதுக்கும் கவலெப்படாதே! ஒம்மட லாயர்கிட்டெ எல்லா விசயத்தையும் சொல்லிட்டேம். மொதல்ல ஜீவானம்ச கேஸப் போட்டு வுடச் சொல்லிருக்கேம். கூடிய சீக்கிரமே அத்து தீர்ப்பாயிட்டுன்னா மாசா மாசம் ஒனக்குப் பணத்தெ கொடுக்கணுங்றதுக்காகப் பேச்சு வார்த்தைக்கு வருவாம். அப்பிடியும் வாரலன்னா டொமஸ்டிக் வயலன்ஸ் கேஸையும் கையோட போடச் சொல்லிருக்கேம். அதுக்கு அவ்வேம் கண்டிப்பா பேச்சு வார்த்தைக்கு வந்துதாம் ஆவணும். அவ்வேம் குடும்பத்தையே வளைச்சிக் கட்டித்தாம் அந்தக் கேஸ எப்பிடிப் போடணுங்றதெயும் லாயர்கிட்டெ சொல்லிருக்கேம். அவரு பாத்துச் செஞ்சி வுடுவாரு. இந்த லாயரு பணமும் ரொம்ப கேக்க மாட்டாரு. ஒமக்கு அந்தப் பயெ செட்டில்மெண்ட் பண்றப்போ அதுலேந்து கமிஷன் பேஸிஸ்லத்தாம் எடுத்துப்பாரு. அந்தப் பெய பேச்சு வார்த்தைன்னு வந்து முக்காவாசிக்கு மேல கொடுக்குறதா இருந்தாலும் வாங்கிகிட்டு மூட்டையக் கட்டிடு. பாதிக்குப் பாதி கொடுக்குறதுன்னாலும் பரவாயில்ல. அதுக்கு மேல அவ்வேங்கிட்டெ எதிர்பார்க்காதே. அவ்வளவுதாம் அவ்வேங்கிட்ட வாங்க முடியும். அவ்வேங்கிட்ட பேசுன வகையில இதெ சொல்றேம்! மித்தபடி ஒமக்கு எந்த ஒதவின்னாலும் நீயி எப்ப வாணாலும் வந்து கேளு! நம்மாள முடிஞ்சதெ பண்ணி வுடுறேம்!"ன்னாங்க அந்த அம்மா ரொம்ப ஆதரவா பேசுறாப்புல.

            இதுக்கு மேல என்னத்தெ பண்ண முடியும்? இதாங் தலையெழுத்துன்னா இதுக்கு மேல என்னத்தெ செய்யுறதுன்னு செய்யு அந்த அம்மா சொன்னடிபயே கையெழுத்தப் போட்டுக் கொடுத்துட்டு, அவுங்க சொன்னபடியே அவுங்க சொல்ல சொல்ல காயிதத்தையும் எழுதிக் கொடுத்தா. அதெ கையில வாங்குன அந்த அம்மா சொன்னாங்க, "இனுமே அந்தப் பயெ இன்பர்மேஷன் ஆக்ட்ல எதாச்சும் காயிதத்தெப் போடட்டும். எம் மேல எதாச்சம் பெட்டிஷனப் போடட்டும் வெச்சிக்கிறேம்! இந்தப் பக்கம் வாரட்டும்! அதாங் அந்தப் பொண்ணு கோர்ட்டுக்குப் போயிடுச்சே! அஞ்ஞப் போயி பாத்துக்கடா நாயேன்னு சொல்றேன்னா இல்லியான்னு பார்றேம். வெக்கம் யில்லாம அந்தப் பயலும் பேண்டையும் சட்டையையும் மாட்டிட்டுக் கெளம்பி வர்றாம் பாரு! பொடவயெ சுத்திட்டுப் போவ வேண்டிய பொட்டப் பயெ!"ன்னாங்க அந்த அம்மா பாலாமணி மேல உள்ள ஆத்திரம் தாளாம.

            சுப்பு வாத்தியாரும், செய்யுவும் கெளம்புறப்போ, "குடும்பத்துல ஒருத்தர்றப் போல இருந்து ஆறுதல் சொன்னதுக்கும், உபகாரம் பண்ணதுக்கும் ரொம்ப நன்றிங்க!"ன்னாங்க. அதெ கேட்டதும் அந்த அம்மாவுக்குக் கண்ணு கலங்கிடுச்சு. "ஒங்களுக்கு எந்த ஒதவியையும் பண்ண வுடாம, எம்மட வேலையக் காப்பாத்திக்கிறதுக்காக அனுப்பி வுடுறதா மனசுல உறுத்தலாத்தாம் இருக்கு. நம்மள தப்பா நெனைச்சுக்க வாணாம்!"ன்னு சொல்லி ஹேண்ட் பேக்குல கைய வுட்டு அதுல இருந்த பர்ஸ்ஸ எடுத்து அதுலேந்து ஆயிரத்து ரூவாயச் செய்யு கையில திணிச்சாங்க அந்த அம்மா. செய்யு அதெ வாங்க மறுத்தா. "எதாச்சும் ஒரு சிலவுக்கு வெச்சிக்கோடா கண்ணு!"ன்னாங்க அந்த அம்மா. செய்யு அந்த அம்மா கொடுத்தப் பணத்தெ மல்லுகட்டி திரும்பவும் அவங்க கையில திணிச்சா. அவளால அந்தம்மா கொடுத்த பணத்தெ ஏத்துக்கிட முடியல. “வேற ஒனக்கு என்னத்தெ செய்யுறதுன்னு புரியல!”ன்னாங்க அந்த அம்மா பரிதாபமா.

            "காசில்லாம் வாணாம்ங்க. இருக்குறதெல்லாம் போதும். கோர்ட்ல கேஸூன்னு வந்தா எஞ்ஞளுக்கு ஒத்தாசயா வந்து உண்மெயச் சொல்றதா சொன்னீயளே அதெ மட்டும் செஞ்சி வுடுங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு கொரலு ஒடைங்சாப்புல.

            "கண்டிப்பா அதெ செய்யாம இருக்க மாட்டேம். அந்தப் பயெ ஒஞ்ஞளுக்கு மட்மில்ல, எஞ்ஞளுக்குந்தாம் எதிரி. ஒருவேள நாம்ம டிரான்ஸ்பர் ஆயிருந்தாலும் அடுத்ததா வர்ற வெசாரணை அதிகாரிக்கு இதெ சொல்லிட்டு ஒத்தாசப் பண்ண சொல்லிட்டுத்தாம் டிரான்ஸ்பர் ஆவேம். அந்தப் பெய அப்பிடித்தாம் சபதம் பண்ணிட்டு போயிருக்காம், மினிஸ்டர்ட்ட சொல்லி நம்மள டிரான்ஸ்பர் அடிக்கிறதா! அடிச்சா அடிச்சிட்டுப் போறாம். எங்கப் போனாலும் கவர்மெண்ட்டு காசி உண்டு. அத்துப் போதும் போங்க. யம்மாடி படிச்சி நீயும் நம்மளப் போல எதாச்சும் ஒரு கவர்மெண்ட்டு உத்தியோகத்துக்கு மட்டும் போயிடும்மா. அந்தப் பெய அதெ நெனைச்சி நெனைச்சியே வவுறு எரிஞ்சிச் சாவுவாம். அதுக்குப் பெறவு ஒரு கலியாணத்தெ கட்டிக்கிட்டு நல்லா இருந்தீன்னா அதெப் பாத்துப் பாத்தே அந்தப் பயெ செத்துச் சுண்ணாம்பப் போயிடுவாம். ஒங்கிட்டெ வழக்கு வெச்சிக்கிட்டு இருக்குற நாளு வரைக்கும்தாம் அவ்வேம் நல்லாத்தாம் இருப்பாம். என்னிக்கு நீயி அவனெ வெட்டி வுடுறீயோ அன்னிக்கே அந்தப் பயெ நாசமா போயிடுவாம். இதெ ஒரு சாபமாவே வுடுறேம். பொம்பளச் சாபம் பலிக்காம இருக்காது. அந்தப் பயெ நம்மள ஏமாத்தலாம். கோர்ட்டையும் ஏமாத்தலாம். தன்னைத் தானே ஏமாத்திக்க முடியாது. அவ்வேம் தன்னைத் தானேத்தாம் யிப்ப ஏமாத்திட்டு இருக்காம். கட்டுனப் பொண்டாட்டிய வுட்டுப்புட்டு பணங்காசியையும், நகெ நட்டையும் வெச்சிக்கிட்டு எதெ சாதிக்கப் போறாம்ன்னு தெரியல! அவ்வேம் எதெச் சாதிச்சாலும் செரித்தாம் நடுரோட்டுல நிக்கப் போறது மட்டும் நிச்சயம். போயிட்டு வாம்மா! நீயி நல்லா இருப்பே ராசாத்தி! எப்போ இந்தப் பக்கம் வந்தாலும் பாத்துட்டுப் போ!"ன்னு சொல்லிட்டு அந்த அம்மாவே செய்யுவையும், சுப்பு வாத்தியாரையும் மகளிர் சுய உதவிக் குழு சார்பா நடத்துற கேண்டீனுக்கு அழைச்சாந்து பட்சணமும், டீத்தண்ணியும் தங் காசியில வாங்கிக் கொடுத்து சாப்புட வெச்சி அனுப்பி வெச்சாங்க.

            இப்போ அடுத்ததா வக்கீலப் பாக்குறதுதாம் கதின்னு சுப்பு வாத்தியாரும் செய்யுவும் வக்கீல் திருநீலகண்டனப் பாக்கப் போனாங்க. அவருக்குப் போன அடிச்சிக் கேட்டப்போ, ஆபீஸ்லத்தாம் இருக்கேம்ன்னு சொல்லி வாரச் சொன்னாரு. ஆபீஸ்க்குள்ள நொழைஞ்சதுமே செய்யுவப் பாத்து,"ஒம்மட ஆம்படையான் நாட்டுல ஒரு பொம்பளைய வுட மாட்டாம் போலிருக்கே. எல்லாருக்கும் வளைச்சிக் கட்டி கட்டத்தெ கட்டி வெச்சிருக்காம். புகார் மேல புகார்ர அள்ளிப் போட்டிருக்காம். நல்ல வேளையா நாம்ம லேடி லாயர்ரா இல்லாமப் போயி, ஜென்ட்ஸ் லாயரா இருக்கப் போனேம். இல்லன்னா நம்மளப் போட்டு என்னா பாடு படுத்தியிருப்பானோ? அப்பிடி என்னம்மா அவனுக்கு பெண் இனத்து மேல அவ்ளோ கோவம், குரோதம், விரோதம்? நாமளும் யோஜனெ பண்ணிப் பண்ணிப் பாக்கறேம் புரியவே மாட்டேங்குதே! நாட்டுல பொம்முனாட்டியாப் பொறந்தவங்க ஒம் ஆம்படையனோட வன்கொடுமைய அனுபவிக்கமா இருக்க முடியாது போலருக்கு. கடவுளோட அனுக்கிரகம் பாரு நானு ஆம்பளையா பொறந்தேம். இல்லன்னா கன்பார்ம் ஒம் ஆம்படையனோட வயலன்ஸ் டார்கெட்டுக்கு நானும் பலியாகியிருக்க வேண்டியதுதாம்!"ன்னாரு சொல்லிட்டு வெடிச்சிரிப்பா வெடிச்சுச் சிரிச்சாரு வக்கீல் திருநீலகண்டன்.

            "அமாங் கருமதெ. நம்மட பெரச்சனைய வெசாரிச்சி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்லேந்து, சமூக நீதி மையத்து அம்மா வரைக்கும் நொந்துப் போயிட்டாங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரும் ஒரு வறட்டுச் சிரிப்போட.

            "நொந்துப் போயிட்டாங்களா? முந்தா நேத்தி அந்த அம்மா நம்மள வாரச் சொல்லிப் பொலம்பித் தள்ளிடுச்சு. அதுக்கு மேல அந்த இன்ஸ்பெக்டர் அம்மா பொலம்பித் தள்ளுது. அது பேசுன பேச்ச ரிகார்ட் பண்ணி அதெ வெச்சி மெரட்டிட்டு இருக்காம் ஒங்க மாப்புள்ளப் பையேம். நான் வேற வந்து பேசி முடிச்சிட்டுப் போடான்னு எடையில பேசியிருக்கேம். அதெ வேற ரிகார்ட் பண்ணி வெச்சிருக்கான்னா என்னான்ன தெரியல. அதெ வெச்சி என்னா வாணாலும் பண்ணட்டும். கேஸூக்காகப் பேசுனேம்ன்னு சமாளிச்சிக்கிறேம். யில்ல அத்து நம்ம குரலே ல்லன்னு சொல்லிக்கிறேம். இப்போ ஒங்க மாப்புள்ளைக்கு ஒங்க பொண்ணு மேல வெறுப்பா? எங்கள மாதிரி இன்ஸ்பெக்டர், விசாரணை பண்ற அதிகாரி, லாயர் மேல வெறுப்பான்னு ஒண்ணும் புரியலையே? சரியான பிக்கார்ப் பயலா இருப்பாம் போலருக்கு! எப்பிடிங்கய்யா இவனையெல்லாம் மாப்புள்ளையா பிடிச்சீங்க?"ன்னாரு வக்கீலு பாலமணியப் பத்தி.

            "இந்தக் கேஸ்ஸ எடுக்குறதால ஒஞ்ஙளுக்கு எதுவும் பாதிப்பு வந்துடாதுல?"ன்னாரு சுப்பு வாத்தியாரு பதற்றமானாப்புல.

            "யாருகிட்டெ? மந்திரிய எதுத்தே கேஸ் நடத்துன ஆளுங்கய்யா நாம்ம. எவ்ளோ மெரட்டல், இதெ ஸ்டார் சிட்டி வண்டியில போயிட்டு இருக்கேம். முப்பது கிலோ மீட்டர் ஸ்பீட தாண்டிப் போக மாட்டேம். பின்னால கார்ர வெச்சு மோதுனானுவோளா இல்லையான்னு இந்த டவுன்ல யார வாணும்னாலும் கேளுங்க. ச்சும்மா வுட்டுட்டுத் தேடலையே. மோதுன கார்ர வெச்சி ஒரு கேஸ்ஸப் போட்டு வுட்டேம். எல்லாத்துக்கும் சேத்து வெச்சி கடையில சமாதானம் பேசுனானுங்க. முழுசா அஞ்சு லட்சத்தெ கறந்துட்டுத்தாம் அனுப்பி விட்டேம். நம்மகிட்டெ மோதுனா ஒண்ணு கூண்டுல நிப்பாட்டி மானத்தெ வாங்குவேம், யில்ல கையில இருக்குற காசியப் பிடுங்கிட்டு கட்டுன கோவணத்தோட அடிச்சி வுடுவேம். ஒங்க மாப்புள்ளைக்கு எப்பிடி வசதின்னு கேட்டுச் சொல்லுங்க?"ன்னாரு வக்கீலு கண்ணு விழிகள உருட்டி தெரட்டிக்கிட்டு.

            "அதெ கேக்கறாப்புல இருந்தா நாஞ்ஞ ஏம் ஒஞ்ஞகிட்டெ வந்து வழக்க வெச்சிக்கிட்டு நிக்குறேம்? நாஞ்ஞளே பேசி முடிச்சி பணத்தெ நகெநட்டெ வாங்கி வுட்டுப்புட்டு அனுப்பிச்சிருக்க மாட்டமா? அத்து முடியாமத்தாம்தானே இஞ்ஞ வந்து நிக்குறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு தளர்ந்து போனாப்புல.

            "ஒங்க மாப்புள்ள சாதாரணப்பட்ட ஆளு கிடையாதுங்கய்யா! நம்மகிட்டெ வர்றாம வேற வக்கீல்கிட்ட போயிருந்தீங்கன்னா வெச்சுக்குங்க இந்நேரத்துக்கு அந்த வக்கீல வெலைக்கு வாங்கிட்டு ரண்டு லட்சமோ, மூணு லட்சமோ பணத்தெ கொடுத்து, இருவது பவுனோ, முப்பது பவுனோ நகெய கொடுத்துட்டுக் கதெய முடிச்சி வுட்டு அனுப்பிருப்பாம்! நாம்ம அப்பிடிக் கெடையாது. ஒங்க மாப்புள்ள என்ன கொடுக்குறானோ அதெ அப்பிடியே வாங்கி ஒங்கக் கையில கொடுப்பேம். அதுலேந்து என்ன வேணுமோ அதெ ஒங்கள கேக்க மாட்டேம். நாம்மளே எடுத்துப்பேம்! அதாம் நம்மளோட பாலிஸி! எடுக்குறப்போ நல்லா திருப்தியாவே எடுத்துப்பேம். அதாவது ஒங்களுக்குத் திருப்தியா வாங்கிக் கொடுத்துப்புட்டு நாமளும் திருப்தியா எடுத்துப்பேம்!"ன்னாரு வக்கீல் சுப்பு வாத்தியார்ர மனசெ மாத்தித் தெடம் பண்ணுறாப்புல.

            "ஒஞ்ஞப் பீஸக் கொறைச்சிக்கிடாம நீஞ்ஞ எடுத்துக்கிடலாம். நாம்ம ஒண்ணும் சொல்ல மாட்டேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வக்கீலப் பாத்து பெருந்தன்மையா.

            "அந்த அம்மாட்டேயிருந்து பேசுனதிலேந்து சொல்றேம். எடுத்த எடுப்புலயே வன்கொடுமெ வழக்கு வேண்டாம். டொமஸ்டிக் வயலன்ஸ் கேஸ் வேண்டாம். எம்.சி. கேஸ்ஸ அதாவது ஜீவனாம்ச கேஸ்ஸ மொதல்ல போடுவேம். அதுக்கே வழிக்கு வந்துடுவாம். அப்படி வந்தாம்ன்னா இதெ ஆபீஸ்ல வெச்சித்தாம் பஞ்சாயத்து. அப்படி வராதபட்சத்துலத்தாம் சிவியரா டி.வி.ங்ற வன்கொடுமைக் கேஸ்ஸப் போடுறேம். கவர்மெண்ட் வேலையில இருக்குறதால அதுக்கு ஒங்க மாப்புள்ள பணிஞ்சி வந்துத்தாம் ஆவணும். ஏன் டி.வி. கேஸ் கடைசின்னா அது பிரம்மாஸ்திரம் மாதிரி. பிரம்மாஸ்திரத்த எடுத்த எடுப்பிலயே பயன்படுத்திடக் கூடாது பாருங்கோ! இதெயெல்லாம் ஒங்ககிட்டெ எதுக்குச் சொல்றேம்ன்னா கேஸூப் போவப் போற பாதைய நீங்க தெளிவா புரிஞ்சிக்கணும். ஏற்கனவே சொல்லிருக்கேம் நம்மகிட்டெ கேஸூக்காக வர்றவங்க ஒரு வக்கீலாப் போயிடுவாங்க! கேஸ்ல உள்ள அத்தனெ சூட்சமத்தையும் கிளையண்டுகிட்ட சொல்லிடுவேம். அதால அவுங்களுக்கு எல்லாம் தெரிஞ்சி அவுங்கள வக்கீலா ஆயிடுவாங்கன்னுல்லாம் நெனைக்க மாட்டேம். தொழில்ல ரொம்ப வெளிப்படையாவும் நேர்மையாவும் இருப்பேம். அதே நேரத்துல ஆப்போசிட் சைடுக்கு வில்லங்கமாவும் கிராதகமாவும் எமனாவும் இருப்பேம்!"ன்னு செய்யு சுப்பு வாத்தியருன்னு ரெண்டு பேத்தையும் பாத்துச் சொல்லிச் சிரிச்சாரு வக்கீல் நீலகண்டன்.

            "சட்ட விசயங்க எல்லாம் நமக்கு அவ்வளவா புரியாது. அத்துப் புரிஞ்சிம் ஒண்ணும் ஆவப் போறதில்ல! நாஞ்ஞ அடுத்ததா செய்ய வேண்டியதெ மட்டும் சொல்லுங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு சட்டுன்னு விசயத்துக்கு வர்றாப்புல.

            "கேஸ் பைல் பண்றதுக்கு காகிதம் தயார் பண்ணியாகணும். டைப் பண்ணணும். செராக்ஸ் பண்ணணும். அதுக்கு ஒரு எரநூறு மட்டும் எடுத்து வையுங்கோ. காகிதத்த தயார் பண்ணிட்டுப் போன அடிக்கிறப்போ கலியாணப் பத்திரிகை, தாலி கட்டுறப்போ எடுத்த போட்டோ, ஆதார் கார்டு, குடும்ப கார்டு, வாக்காளர் அடையாள அட்டை எல்லாத்தையும் ஒரிஜினலோட நாலு காப்பி செராக்ஸ் பண்ணிக் கொண்டாந்துடுங்கோ! பாத்துப்போம்! ஒங்க மாப்புள்ளைய உண்டு இல்லன்னு அடிச்சிடுவோம்!"ன்னு சொல்லி ரொம்ப நம்பிக்கைய உண்டு பண்ணி அனுப்பி வெச்சாரு திருநீலகண்டன் வக்கீல்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...