1 Dec 2020

நானொரு கெட்ட பையன்!

நானொரு கெட்ட பையன்!

செய்யு - 642

            சமூக நீதி மையத்துலேந்து வந்த அழைப்புக ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு, ஆறு, ஏழு, எட்டு, ஒம்போதுன்னு அது பாட்டுக்குத் தொடந்துகிட்டெ போச்சுது. அஞ்சாறு அழைப்புக வரைக்கும் அண்ணங்காரனையும் அப்பங்காரரையும் அழைச்சுக்கிட்டுப் போயிட்டு வந்தவெ ஏழாவது அழைப்புக்கு அவ்வே மட்டும் தெகிரியமா ஒத்த ஆளா எட்டாம் நம்பரு பஸ்ல ஏறி ஒண்ணும் பெரமாதாம காரியம் ஆவாம பேசுனதெயே அந்த அம்மாகிட்டெ பேசிட்டுத் திரும்பி வந்தா செய்யு. ஒவ்வொரு மொறை போயிட்டு வர்றப்பவும் அடுத்த மொறை போவக் கூடாதுன்னுத்தாம் ஒரு நெனைப்பு வரும் அவளுக்கு. ஆன்னா கௌம்புற அந்த நாளு வந்ததும் கௌம்புற நேரம் நெருங்குனதும் எதாச்சும் ஒரு சின்னதா மாத்தம் வந்துப்புடாதான்னு தன்னெ அறியாம கௌம்பிடுவா. மனுஷ மனசு எடுக்குற முடிவுல எங்க நெலையா நிக்க முடியுது? அந்த அளவுக்கு வம்புல சுத்தி மாட்டி வுடுறவங்க மனசெப் போட்டு அலைக்கழிச்சி வுட்டுப்புடுறாங்க.

எட்டாவது அழைப்புக்குப் போவலாம்ன்னுத்தாம் செய்யுவுக்கும் ஒரு நெனைப்பு. ஆனா அவ்வெ அலையோ அலைன்னு அலையுறதப் பாத்துட்டு அந்த அம்மா பாலாமணி வந்தா போன் பண்றதா சொல்லிருக்கிறதெ நம்பி இந்த மொறைத்தாம் போகாம இருந்துட்டா. அதுக்குப் பாலாமணியும் வாரல. மறுநாளுத்தாம் அந்த வெவரத்த அந்த அம்மா செய்யுவுக்குப் போன அடிச்சிச் சொன்னாங்க. நல்ல வேளையா தண்டமா போயி மன உளைச்சலோட திரும்பலன்னு மனசுக்குள்ள கொஞ்சம் சந்தோஷப்பட்டுக்கிட்டா. சந்தோஷத்தெ சுத்தமா இழந்துடுறவங்களுக்கு இது போல சின்ன விசயங்கத்தாம் ஏதோ ஒரு வெதத்துல சந்தோஷத்தெ கொடுக்குது. போயிக்கிட்டெ இருந்த வரைக்கும் போவணும்ங்ற நெனைப்பு கடெசி நேரத்துலயாவது வந்ததெப் போல, போவாம ஒரு மொறை இருந்த பெறவு போகவே வேணாங்ற நெனைப்பு கடெசியில தானாவே வந்துச்சு. அடுத்த பாஞ்சு நாள்ல ஒம்பாதாவது அழைப்பையும் அந்த அம்மா போட்டாங்க. அதுக்குச் செய்யு போகாமலே இருந்துட்டா. ஆனா அதுக்குப் பாலாமணி வந்தாம். வந்தவேம் சாதாரணமா வாரல. மின்னாடி வந்தது போலவே ஒரு பட்டாளத்தோட வந்து அந்த அம்மாகிட்டெ பெரிசா சத்தம் போட்டிருக்காம். அந்த அம்மாவாலத்தாம் எல்லாம் தாமசம் ஆவுறதா எரிஞ்சி விழுந்திருக்காம். அவனெ சமாளிக்கிறதுக்குள்ளார அந்த அம்மா படாத பட்டிருக்காங்க. அவுங்களுக்கு மனசுல என்னா பயம்ன்னா உணர்ச்சிவயப்படுறாப்புல பேச வெச்சி அதெ செல்லுல ரிகார்ட் பண்ணி, மகளிர் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர்ர சிக்க வெச்சாப்புல சிக்க வெச்சிப்புடுவானோங்ற பயந்தாம். அதுக்கு ஏத்தாப்புல செல்போனையெல்லாம் ஆளெ வுட்டு மின்கூட்டியே வாங்கி வெச்சிடச் சொல்லித்தாம் ரூமுக்குள்ள கூப்புட்டுப் பேசிருக்காங்க. ரூமுக்குள்ள வேற யாரையும் கூப்புட்டுப் பேசாம பாலாமணிய மட்டுந்தாம் கூப்புட்டு பேசிருக்காங்க அந்த அம்மா.

            பாலாமணி உள்ளாரப் போறப்பவே பழைய பரமசிவமும், ராசாமணி தாத்தாவும் பாலாமணியோட காதுக்குள்ள குசுகுசுன்னு, "சூதானமா என்ன பேசணுங்றதெ ஒண்ணு நீயிப் பேசு. யில்ல நம்மள வுடு. நாம்ம பேசிட்டு வர்றோம்!"ன்னு சொல்ல, "நாமளே பேசிடுறேம்! நாம்ம ஏம் கெட்டப் பேரு வாங்கணும்ன்னு நெனைச்சேம்? ஒஞ்ஞள வுட்டா ஒஞ்ஞளுக்கு ஒரு பங்குக்கு வர்ற போற காசிக்கும் நகைக்கும் ஒத்துக்கிட்டுத்தானே மிச்சத்துக்குப் பேசுதீயே! அதுக்கு நாமளே எப்பிடி ஆரம்பிச்சி எப்பிடிக் கொண்டு போயி முடிச்சிட்டு வெளியில வர்றேம் பாருங்க!"ன்னு சொல்லிட்டுத்தாம் உள்ளாரப் போயிருக்காம்.

            பாலாமணி உள்ள போனதுமே அவ்வேம் பாட்டுக்கு சத்தம் வெச்சிருக்காம். "நீஞ்ஞ இப்பிடித்தாம் ஒஞ்ஞ புருஷனப் பிரிஞ்சி சந்தோஷமா இருக்கீயளா? நீஞ்ஞல்லாம் ஒஞ்ஞ குடும்பத்தோட இருக்கணும். நாம்ம மட்டும் பொண்ட்டியப் பிரிஞ்சிக் கஷ்டப்படணும்? இதெ வெசாரணைய ஆம்பளப் பண்ணிருக்கணும். இந்நேரம் எம் பொண்டாட்டி வூட்டுல இருப்பா!"ன்னுருக்காம் எண்ணெய் சட்டியில் பட்டுன்னு பட்ட தண்ணி சட்டுன்னு தெறிக்கிறாப்புல.

            "இதுக்குல்லாம் வெசாரணை அதிகாரியா பொம்பளைங்களத்தாம் போடுவாங்க. குடும்ப வன்முறையில பாதிக்கப்படுறது பொம்பளைங்கத்தாம். ஆம்பளைங்க கெடையாது. அப்பிடிப் பொண்டாட்டியப் பிரிஞ்சி இருக்க முடியாத ஆளுன்னு அதுக்கேத்தாப்புல பொண்டாட்டிய வெச்சிருக்கணும். அதெ வுட்டுப்புட்டு? அந்தப் பொண்ணு எப்போ சார் ஒஞ்ஞ கூட வாழ வர்றேன்னு சொல்லுது? சேந்து வாழ்றதப் பத்திப் பேசுனாவே பயந்து நடுங்குது. இப்பிடியா ஒரு பொண்ண தாலி கட்டி வெச்சிக்கிறது?"ன்னு அந்த அம்மாவும் வுடாம கேட்டிருக்காங்க பொறிக்குற எண்ணெய்ல கடுகெப் போட்டு தாளிக்குறாப்புல தாளிச்சிருக்காங்க.

            "போன சிட்டிங்கல! எம் மச்சானே என்னத்தெ சொல்றாம், ஒஞ்ஞ முடிவுதான்னுத்தாம் சொல்றாம். அப்பிடியே நைசா அனுப்பி வுட்டுப்புட்டு மறுவேல பாக்காம அடுத்தடுத்த கூட்டத்துல பேசிக்கிறதா சொல்லிட்டு யிப்போ நம்மள தனி மனுஷனா ஆக்கி வுட்டு இருக்கீயே? திட்டம் போட்டு அஞ்ஞ காசிய வாங்கிட்டு சதியெ பண்ணுதீயே!"ன்னிருக்காம் பாலாமணி அந்த அம்மாவ பேச்சாலயே எரிச்சு புடுறாப்புல.

            "மறு சிட்டிங்க வர்றப்போ ஏம் சார் நீஞ்ஞ வாரல? அந்தப் பொண்ணு அதுக்குப் பெறவு தொடர்ச்சியா மூணு சிட்டிங்குக்கு வந்து ஒஞ்ஞள எதிர்பாத்துக் காத்துக் கெடந்துட்டுத்தாம் போனுச்சு. பொண்டாட்டி மேல நெசமான அக்கறை இருந்தா வந்து கூப்புட்டுப் போயிருக்கணும்!"ன்னுருக்காங்க அந்த அம்மாவும் பதிலுக்குப் பதிலு பாலாமணிய வார்த்தையால பொசுக்கிப்புடுறாப்புல.

            "நீஞ்ஞ என்னவோ நம்மள ஒஞ்ஞ நெலத்துக்கு வேல செய்யுற வயக்காட்டுப் பயலப் போலல்ல நெனைச்சிட்டுப் பேசுதீயா? நாம்ம ன்னா ஒஞ்ஞ பண்ணையாளா மசுரு? நெனைச்ச நேரத்துக்குல்லாம் வாரதுக்கு? நாம்ம ஒரு டாக்டர்ரு மேடம்! கெடைக்கிற நேரத்துலத்தாம் வார முடியும்!"ன்னிருக்காம் பாலாமணி அந்த அம்மாவ பொளந்து கட்டுறாப்புல.

            "வார முடியலங்றத ஒரு போன் பண்ணி சொல்றதுக்கு ன்னா? நாஞ்ஞ போன் பண்ணுறப்ப அதெ எடுக்குறதுக்கென்ன? தகவல் சொல்லணுமா இல்லியா? நெனைச்சப்ப வந்து நின்னுகிட்டு தான் நெனைக்குறதெ ஏம் செய்யலன்னா கேட்டா? நாமளும் திருப்பிக் கேக்குறேம்! கவர்மெண்ட்டு ஆபீஸ்ங்றது ஒஞ்ஞ பண்ணைன்னு நெனைச்சிக்கிட்டீயா? நெனைச்சப்போ வாரது, நெனைச்சபடி ஏம் செய்யலங்றது? ரொம்ப தப்பான தெசையில பேசிட்டுப் போறீயே?"ன்னுருக்காங்க அந்த அம்மா பாலாமணிய எச்சரிக்கிறாப்புல.

            "நம்மளோட வேலப்பாடு, வெல மெனக்கெடு ஒஞ்ஙளுக்குப் புரியாது. ஆஸ்பிட்டல் வேல மட்டும் யில்ல. பிரைவேட்டா ஒரு கிளினிக் வெச்சிருக்கேம். மருந்தெ தயாரிக்கிறேம். ஒஞ்ஞளுக்கு எதாச்சும் சுகரு, பிரஸ்ஸரு, கொலஸ்ட்ரால எது இருந்தாலும் சொல்லுங்க. மருந்தெ நாமளே தயாரிச்சித் தருவேம். ரொம்ப எபெக்டிவ்வா இருக்கும். அத்தோட ரைட்டரா வேற இருக்கேம். நேரம் கெடைக்கிறது ரொம்ப கம்மி. ஒஞ்ஞள மாதிரியா வந்தா உக்காந்தோம், வெசாரிச்சா போனேம், அதெ எழுதுறதுக்கு நாலு கிளார்க்குன்னு வேல நமக்கு? செரியா தூங்குறதுக்குக் கூட நேரம் கெடைக்காது மேடம்! ரண்டு நாளா தூக்கம் கெடையாது. சென்னையிலேந்து வந்த வண்டியிலத்தாம் தூங்கிட்டே வந்தேம்! நம்மளோட ஒரு நாளு இருந்து பாத்தீங்கன்னா தெரியும் எம்மாம் கஷ்டம்ன்னு?"ன்னு தன்னெ ஒசத்திக் காட்டிப் பேசியிருக்காம் பாலாமணி.

            "இந்தாருங்க மிஸ்டர்! குடும்பப் பெரச்சனைய எல்லாம் நெனைச்ச நேரத்துல நெனைச்சபடியெல்லாம் தீக்க முடியாது. ஒரு குடும்பமா புருஷனும் பொண்டாட்டியுமா இருந்தா பரவாயில்ல. இஞ்ஞ வந்துப்புட்டா பெறவு புருஷன் வேற, பொண்டாட்டி வேற. பொண்டாட்டி வேணும்ன்னா நாங்க அழைக்குறப்போ வந்துதாம் ஆவணும். பேசித் தணிச்சுத்தாம் கூப்புட்டுப் போவணும்! மாமன் மச்சான் பெரச்சனைன்னா வேணும்ன்னா வெச்சிக்கிடலாம், வேண்டாம்ன்னா விட்டுக்கிடலாம். இத்து ன்னா மாமான் மச்சான் யேவாரமா? குடும்பம் நடத்துற புருஷன் பொண்டாட்டி யேவாரம்! அதெ தெரிஞ்சிக்கோங்க மொதல்ல!"ன்னு அவனெ கொஞ்சம் தாட்டி வுடுறாப்புல சொல்லிருக்காங்க அந்த அம்மா.

            "நீஞ்ஞப் பாட்டுக்குச் சம்பந்தம் இல்லாம பேசிட்டெ போவாதீயே! எம் பொண்டாட்டிய அனுப்பிச்சி வுட ஒஞ்ஞளுக்கு முடியுமா? முடியாதா? அதெ மட்டும் பேசுங்க. முடியாதுன்னு நாம்ம வேற வழியப் பாத்துட்டுப் போறேம்!"ன்னிருக்காம் பாலாமணி முடிவா ஒரு மெரட்டல வுடுறாப்புல.

            "அப்பிடி நெனைக்குற ஆளுன்னா எதுக்குங்க மிஸ்டர் எமக்கு இன்பர்மேஷன் ஆக்ட்ல அம்மாம் பெட்டிஷனெப் போட்டீய?"ன்னுருக்காங்க அந்த அம்மா அவனெ தொளைச்சி எடுக்குறாப்புல.

            "நாம்ம எல்லாம் கலக்டருக்குத்தாம் போட்டேம்!"ன்னுருக்காம் பாலாமணி தெனாவெட்ட கொறைச்சிக்கிடாம.

            "கலக்டருக்குப் போட்டா, அவரு இன்பர்மேஷன் கேதரிங்குக்காக எஞ்ஞகிட்டெத்தாம் அனுப்புவாரு. கலக்டர்ரே எல்லாத்துலயும் பூந்து வெவரத்த எழுதித் தர்ற முடியுமா? எதுக்கு சார் எம் மேல வேற புகார்ரா கொடுத்து வெச்சிருக்கீயே? ஒஞ்ஞளுக்கும் நமக்கும் ன்னா சார்? இந்த வெசாரணைக்கு வரலன்னா ஒஞ்ஙள யாருன்னே நமக்குத் தெரியப் போறது இல்ல. அதெ போலத்தாம் நீஞ்ஞ குடும்பத்தெ நடத்தி ஒரு புள்ளையப் பெத்து ஒஞ்ஞ அப்பன் ஆயி மடியில போட்டிருந்தீங்கன்னா இந்த பெரச்சனைக்கே வேல யில்ல. நீஞ்ஞ பண்ணுறதெ எல்லாம் பண்ணிட்டுப் சாமர்த்தியமா பழியத் தூக்கி அடுத்தவங்க மேல போட்டிப்புடுவீங்கப் போலருக்கே? செரியான வெஷமம் பிடிச்ச ஆளு!"ன்னுருக்காங்க அந்த அம்மா.

            "அத்து என் உரிமெ, இன்பர்மேஷன் கேக்கலாங்றது. பதிலச் சொல்ல வேண்டியது ஒஞ்ஞளோட கடமெ. நான் கேட்டாக்கா அதெ கொடுத்துதாம் ஆவணும். ஒரு இந்தியக் குடிமனுக்கு நாட்டுல நடக்குற எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட உரிமெ இருக்கு!"ன்னுருக்காம் பாலாமணி கைய கைய ஆட்டிக்கிட்டும் நீட்டிக்கிட்டும்.

            "நாஞ்ஞ ன்னா சார் தப்புப் பண்ணேம்? என்னவோ தப்பு பண்ணாப்புலல்ல இன்பர்மேஷன் ஆக்ட்ல கேள்விய வளைச்சி வளைச்சிக் கேட்டிருக்கீயே? ஒஞ்ஞ பெட்டிஷன் சம்பந்தமாவே இருவது தடவெக்கு மேல கலக்டர்ர சந்திரிச்சிக்கேம். இதுவரைக்கும் இருந்த எந்த கலக்டரையும் நாம்ம அந்த அளவுக்குச் சந்திச்சதில்ல. சத்தியமா சொல்றேம், நீஞ்ஞ என்ன மனநெலையில இருக்கீயேன்னே நம்மாள புரிஞ்சிக்கிட முடியல! போட்டு படுத்துதீயே சார்!"ன்னுருக்காங்க அந்த அம்மா தன்னோட ஆத்தாமையெல்லாம் கொட்டித் தீக்குறாப்புல.

            "ஒஞ்ஞ மேல சந்தேகமாத்தாம் இருக்கு. நாம்ம பணம் கொடுக்குறதெ வேணாம்ன்னா அங்க வாங்கிட்டதானே அர்த்தம். அஞ்ஞ பணம் வாங்கிட்டா நாம்ம கொடுக்குறதெ வாங்க முடியாதுன்னுத்தானே அர்த்தம். அப்பவே நெனைச்சேம் ஒஞ்ஞளப் பத்தி. அன்னிக்கு முடிய வேண்டியதெ சொதப்பி வேற வுட்டியளா? அதுல உண்டான கோவம்தாம். அதெ வுடுங்க. பேசி வுட்டுக் குடும்பம் நடத்த அனுப்பி வுடப் போறீயளா? அதெ சொல்லுங்க! அதெ வுட்டுட்டுத் தேவையில்லாம பேசிக்கிட்டு?"ன்னுருக்காம் பாலாமணி கொதிப்பு அடங்காம.

            "யாரும் ஒஞ்ஞ ரண்டு பேத்துக்கும் குறுக்கா நிக்கல. குறுக்கா நின்னுகிட்டது நீஞ்ஞ. பிரிஞ்சிப் போனது நீஞ்ஞ. இப்போ நாஞ்ஞ என்னவோ திட்டம் பண்ணிப் பிரிச்சி வுட்டாப்புலல்லா பேசுதீயே? யாரு சார் ஒஞ்ஞ ரண்டும் பேத்துக்கும் இடையில சண்டெய வெச்சிக்கிட சொன்னது? வெச்சதுதாங் வெச்சிக்கிட்டீங்க! அதெ யாரு சார் வெளியில கொண்டுப் போயிக்கிட்டு பெரிசு பண்ணிக்கிட்டது? நாட்டுல யாரும் புருஷன் பொண்டாட்டி சண்டெ இல்லாம இருக்குறாங்களா ன்னா? இருக்கு! வெளியில தெரியாம எவ்ளோ சாமர்த்தியமா குடும்பம் நடத்துறாங்க! குடிச்சிட்டு அடி அடின்னு அடிக்கிற ஆளுக கூடல்லாம் பொம்பளைக வெளியில சொல்லாமத்தாம் குடும்பம் நடத்துறாங்க சார்! கொலகாரனோட கூடல்லாம் கூடி குடும்பம் நடத்துற பொம்பளைங்கள நமக்குத் தெரியும்! எதுவும் நாலு சொவத்துக்குள்ள இருக்கணும். நாலு பேருக்குத் தெரியுறாப்புல இருக்கக் கூடாது. தெரிஞ்சா இப்பிடித்தாம்!"ன்னுருக்காங்க அந்த அம்மா எளக்காரமா பாலாமணியப் பாத்து.

            "நாமல்லாம் ஒண்ணும் குடிக்கிற ஆளு கெடையாது!"ன்னுருக்காம் பாலாமணி ஒடனே விடாப்புடியா.

            "குடிக்கிறது கெடையாதுன்னு தெரியும்! வேறென்ன பண்ணுவீயேன்னு நல்லாவே தெரியும்! பெறவே ஏம் சார் ஒஞ்ஞ பொண்டாட்டி ஒஞ்ஞ கூட குடும்பத்தெ நடத்த யோஜிக்கிறாங்க? ஒரு பொண்ணுக்கு ஒரு புருஷங்றவேம் நம்மள பாதுகாப்பா வெச்சிப்பாம்ன்னுங்ற நம்பிக்கெயத்தாம் மொதல்ல கொடுக்கணும். அதெ கொடுத்தா நீஞ்ஞ அடிச்சா ன்னா? ஒதைச்சா ன்னா? சம்பாதிச்சுப் போட்டா ன்னா? போடாட்டி ன்னா? ஒஞ்ஞள அவுங்கத் தாங்கிட்டுக் குடும்பத்தெ நடத்துவாங்க சார்! எந்த எடத்துலயும் பொண்டாட்டிங்றவள வுட்டுக் கொடுத்துப்புடக் கூடாது. பொண்ட்டி புருஷங்கிட்டெ எதிர்பாக்குறது அத்து ஒண்ணு மட்டுந்தாம் சார்! நீஞ்ஞ பல வெசயங்கள்ல பெயிலியரான ஆளு சார்! மேக்கொண்டு நாம்ம சொல்ல விரும்பல!"ன்னுருக்காங்க அந்த அம்மா பாலாமணியோட மூஞ்சுல அடிக்குறாப்புல.

            "பெயிலியர்ன்னா ன்னா ஏதுன்னு சொல்லணும்!"ன்னு ஆள அடிக்கிறாப்புல கேட்டிருக்காம் பாலாமணி.

            "எல்லாத்தையும் அந்தப் பொண்ணு சொல்லிடுச்சு. எஞ்ஞளோட மொத வேலையே அஞ்சு மணி நேரம் ஆன்னாலும் பரவாயில்லன்னு பேச்சக் கொடுத்து உண்மெயக் கறக்குறதுதாம். ஒறவு வெச்சிக்கிறதுல பொம்பளைங்கள வுட ஆம்பளைங்க மேலத்தாம் இஷ்டங்றதுல ஆரம்பிச்சி, ராத்திரி ஆன்னாக்கா எந்த மாதிரியான உடுப்புகள உடுத்துவீங்க வரைக்கும் சொன்னிச்சு. இந்தக் குறிப்புக போதுமா இன்னும் வேணுமா?"ன்னுருக்காங்க அந்த அம்மா பாலாமணிய வுட்டுக் கெழட்டுறாப்புல.

            "போம்பளைக்குப் பொம்பளைங்க உள்ள பலவீனம் இதுதாம். ஒரு பொம்பளை எதெ அழுத்துட்டுச் சொன்னாலும் இன்னொரு பொம்பளெ நம்பிடும். அவ்வே அழுதுகிட்டெ கதெய அடிச்சி வுட்டா அதெல்லாம் உண்மையா ஆயிடுமா?"ன்னுருக்காம் பாலாமணியும் தன்னெ வுட்டுக் கொடுத்துக்காம.

            "ஒருத்தரு சொல்றப்பவே அவுங்க கண்ணப் பாத்தாவே போதும் சார்! உண்மெய சொல்றாங்களா? பொய்யச் சொல்றாங்களான்னு தெரிஞ்சிக்க!"ன்னுருக்காங்க அந்த அம்மாவும் பாலாமணியக் காலி பண்ணுறாப்புல.

            "டாக்கடரு மாப்புளன்னு எவ்ளோ பெரிய எடத்துலல்லாம் கலியாணம் கட்டிக்க வந்தாங்க தெரியுமா? வெவரம் தெரியாமப் பேசக் கூடாது!"ன்னுருக்காம் பாலாமணி தன்னோட கிரிப்ப வுடாம.

            "இப்பவும் ன்னா கெட்டுப் போச்சு. அந்தப் பொண்ணுத்தாம் ஆளெ வுடுடா சாமிங்குது. பேயாம பணங்காசி, நகெ நட்ட செட்டில் பண்ணிட்டுப் போயிட்டே இருங்க. டாக்கடருதானே புடிச்ச ஆம்பளையோ பொம்பளையோ ஒஞ்ஞ இஷ்டம் போல எதாச்சும் பண்ணிகிட்டு என்னவோ தொலையுங்க. அதுக்கேதாப்புல அந்த பொண்ணுகிட்டெ சொல்லி டிவோர்ஸூக்குப் பேப்பர்ல கையெழுத்து வாங்கித் தர்றது நம்ம பொறுப்பு! அதெ செய்ய முடியுங்களா மிஸ்டர் ஒங்களால?"ன்னுருக்காங்க அந்த அம்மா சவால் வுடுறாப்புல.

            "பணங்காசி, நகெ நட்டு அதெ கொடுக்குறதா வாணாமாங்றதல்லாம் எஞ்ஞளுக்குள்ள நாஞ்ஞ முடிவு பண்ணிக்கிறது. நீஞ்ஞ ஒண்ணும் கலியாணத்தன்னிக்கு நின்னு அதெ நமக்கு வாங்கித் தாரல. நமக்கு அவுங்கப் பக்கமா இருக்குற ஒரே பிடிமானமே அதுதாங்! அதாலத்தாம் அவுங்க இஞ்ஞ அஞ்ஞன்னு அலைஞ்சிட்டு இருக்காங்க. அதெ பஞ்சாயத்துல கேட்டப்பவே கொடுத்திருந்தேன்னா இந்நேரத்துக்கு இன்னொரு கலியாணத்து முடிச்சி வெச்சிட்டு நம்மள வெரல சூப்ப வுட்டுருப்பாங்க மேடம்! ஒஞ்ஞளுக்கு அவுங்களப் பத்தித் தெரியாது!"ன்னுருக்காம் பாலாமணி எகிறிக் குதிச்சுக்கிட்டு.

            "அப்புறம் வேற என்னத்தெ மிஸ்டர் பண்ணுவாங்க? நீஞ்ஞ யில்லன்னு ஆயிட்டா அப்பிடியே பொண்ண வெச்சிக்கிட்டு அழுதுட்டு இருப்பாங்கன்னு நெனைச்சீங்களா? நீங்க மட்டும் அப்படி ஆயிட்டுன்னா இன்னொரு பொண்ணப் பாத்த கலியாணத்தக் கட்டிக்கிட்டுச் சந்தோஷமா இருப்பீயே? அதெச் சொல்லாம அந்தப் பொண்ண மட்டும் கொறைப்பாடா சொல்லுதீயே?"ன்னுருக்காங்க அந்த அம்மா.

            "இதாலத்தாம் மேடம் சொல்றேம். இப்போ பேசுனீயே பாருங்க. இந்த எடத்த வெச்சித்தாம் சொல்றேம். அவுங்ககிட்டெ அய்யாயிரமோ, பத்தாயிரமோ கறந்துட்டீங்க. நாம்ம குத்தம் ஒண்ணும் சொல்லல. நாம்ம அதெ விட ரண்டு பங்காவே தர்றேம். எங் காசா? அதுவும் அவுங்கக் காசித்தாம்! நாம்ம சொல்றபடிக்குப் பேசி வுடுங்க. அவுங்களுக்குப் பணங்காசியில நாலு லட்சம் தர்றேம். நகெ நட்டுல ஒரு நாப்பத தர்றேம். யில்ல இதெ வுட கொறைச்சிப் பேசி வுட்டா மிச்சத்தெ நீஞ்ஞளே எடுத்துக்குங்க. ரண்டு லட்சத்தெ பேசி வுட்டுப்புட்டு ரண்டு லட்சத்தெ எடுத்துக்குங்களேம். நாப்பது சவரன்ல முப்பதெ பேசி வுட்டுப்புட்டு பத்தெ எடுத்துக்குங்களேம். இப்பிடித்தாம் நாம்ம ஆளெ வெச்சி பேசச் சொன்னோம். அவுனுங்க என்னான்னா அஞ்சு லட்சத்தெ தர்றேம், அம்பது சவரன்னு தர்றேம்ன்னு பேசிட்டு வர்றச் சொன்னா அதுக்குக் கம்மியாப் பேசிட்டு, மிச்சத்தெ இவனுங்க லவட்டிக்கிடலாம்ன்னு அவுங்கள டென்ஷன் அடிச்சிட்டு வந்து நிக்குறானுவோ!"ன்னுருக்காம் பாலாமணி அடுத்த கட்டமா வேற வழியில் பேசிக் காரியத்தெ சாதிக்க் முடியுமான்னு.

            "அந்தப் பாவத்தையல்லாம் நாம்ம பண்ண விரும்பல மிஸ்டர்! நமக்கும் ரண்டு பொண்ணுக இருக்கு. நாளைக்கி அதுகளுக்கு இத்து மாதிரி ஒரு நெலமென்னா அதக்குக் காரணம் நாம்ம இன்னிக்குப் பண்ணுற இந்தப் பாவமாத்தாம் இருக்கும். தயவுபண்ணி புண்ணியமாப் போவும், அந்தப் பொண்ணோட வவுத்தெரிச்சல கொட்டிக்கிடாம செட்டில்மெண்ட் பண்ணிட்டு போற வழியப் பாருங்க. பாவம் மிஸ்டர் அந்தப் பொண்ணு. இந்தக் கலியாணத்தால அவுங்க யப்பா, யண்ணனுக்கு உண்டான கடங்கப்பிய நெனைச்சித்தாம் கலங்குது. அத்தோட சம்பாத்தியம்ன்னா இந்த அத்தனையையும் ஒஞ்ஞகிட்டெ ஒப்படைச்சிட்டுப் போவவும் சம்மதம்ன்னு சொல்லுது!"ன்னு அந்த அம்மா பாலாமணியப் பாத்துச் சொல்லியிருக்காங்க.

            "ஒடைச்சிப் பேச வேண்டியதெ பேசிட்டேம். நம்மளப் பத்தி இதுவரைக்கும் ஒஞ்ஞளுக்குப் புரியலன்னாலும் இப்போ புரிஞ்சிருக்கும். இதெ நீஞ்ஞ பண்ணி வுட்டா அந்தப் பொண்ணுக்கு நல்ல கதிய செஞ்சு வுடறதா அர்த்தம். யில்லன்னா கோர்ட்டுக்கு இழுத்து நாறடிப்பேம்! பொம்பளதானே மேடம்! சில கேள்விகள தாங்க முடியாது! மொதல்ல சரியா தூக்குப் போட்டுத் தொலைக்காமத்தாம் நமக்கு இவ்ளோ டார்ச்சரு. அன்னிக்கே ஒழுங்கா போட்டிருந்தா மூதேவி இந்நேரம் எல்லாம் முடிஞ்சி எல்லாம் மறைஞ்சு மறந்தேப் போயிருக்கும். அதால ன்னா கோர்ட்டுல கூண்டுல நிப்பாட்டி கேள்வியக் கேட்டா மறுமொறை சரியா சுருக்கப் போட்டுப்பா! அநாவசியமா ஒரு பொண்ணோட உசுர எடுக்குறதுக்கு நீஞ்ஞ காரணமா இருந்துடாதீயே மேடம்!"ன்னுருக்காம் பாலாமணி உசுர எடுக்குற எமனெப் போல வெவகாரமா.

            "ன்னா மெரட்டலா? அந்தப் பொண்ண எவ்ளோ தெளிவு பண்ணணுமோ அவ்ளோ தெளிவு பண்ணியாச்சு! குடும்பமே அவ்வே பின்னாடி நிக்குது. ஒன்னால ஒரு துரும்ப கூட அசைக்க முடியாது! போயிட்டு வாப்பா! டாக்கடர்ன்னா உசுர்ர காப்பாத்துவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேம். உசுர்ர எடுக்குற டாக்கடர்ர இப்பத்தாம் பாக்குறேம். இன்னொரு சாவப் பத்தி கற்பனெ பண்ணிப் பாக்குற நீயெல்லாம் போறப்பவே கார்ல அடிப்பட்டு செத்தாலும் செத்துடுவே!"ன்னுருக்காங்க அந்த அம்மா பாலாமணிக்குச் சாபத்தெ வுடுறாப்புல.

            அதுக்குப் பாலாமணி பெரிசா சிரிச்சிருக்காம். சிரிச்சிட்டு சொல்லிருக்காம், "கெட்டவங்களுக்கு அவ்வளவு சீக்கிரமா சாவு வர்றதில்ல. நல்லவங்கத்தாம் அப்பிடி பொட்டுன்னு போறதெல்லாம். அப்பிடில்லாம் தப்புக் கணக்கெ போட வாணாம்! நானொரு கெட்ட பையன் மேடம்! அடுத்த சிட்டிங் எப்பன்னு சொல்லுங்க. மேக்கொண்டு பேச வேண்டிய மொறையில பேசுறேம்! முடிஞ்சா ஒஞ்ஞளயும் மினிஸ்டர்ரப் பாத்து டிரான்ஸ்பர்ர பண்ணுறேம்! நம்மளப் பத்தின உண்மெ தெரிஞ்சி பிற்பாடு நீஞ்ஞ நமக்கு இனுமே ஞாயம் பண்ண மாட்டீயே! நமக்கு நல்லது செய்யாதவங்க நாட்டுலயும் இருக்கக் கூடாது, நாற்காலியில உக்காரவும் கூடாது!"ன்னுருக்காம் பாலாமணி.

            "நீஞ்ஞ கெளம்பலாம்! ஒஞ்ஞள கொஞ்சமாச்சும் நல்லவர்ன்னு நெனைச்சிட்டு இருந்தேம்!"ன்னுருக்காங்க அந்த அம்மா கட்டெ கடைசீயா.

            "அடுத்த சிட்டிங் எப்பன்ன சொன்னா கெளம்பிட்டு இருக்கேம்!"ன்னுருக்காம் பாலாமணியும் கட்டெ கடெசீயா அறுத்துக் கட்டுறாப்புல.

            "அவுங்ககிட்டெயும் கலந்துக்கிட்டுக் காயிதம் போடுறேம். வந்துச் சேருங்க! ஒருத்தர் வந்து ஒருத்தர் வாராம வம்பு வெச்சிக்கிட்டு, இவ்ளோ வெஷத்தோட மொத மொதலா ஒரு ஆம்பளையே இப்பத்தாம் பாக்கறேம். பொண்டாட்டி வேணும்ன்னு இஞ்ஞ அழுத ஆம்பிளைகளக் கூட நாம்ம பாத்திருக்கேம்!"ன்னுருக்காங்க அந்த அம்மா பாலாமணிய அற்பமா பாக்குறாப்புல.

            "வேணும்ன்னா நாமளும் அழுது காட்டுறேம் மேடம்!"ன்னுருக்காம் பாலாமணி நக்கல் பண்ணுறாப்புல.

            "வாணாம்! இந்த எடத்தோட புனிதத்தெ ஒஞ்ஞ கண்ணுத் தண்ணி வுழுந்து கெடுத்துட வாணாம்! கெளம்புங்க!"ன்னுருக்காங்க அந்த அம்மா பாலாமணிய பதிலுக்கு நக்கல் பண்ணுறாப்புல.

            "நம்மளப் பத்தின உண்மெ தெரிஞ்சதால இதெச் சொல்லி பொண்ண உஷார் பண்ணிடாதீங்க மேடம்!"ன்னுருக்காம் பாலாமணியும் வெஷத்த கக்கி வேஷத்த காட்டுறாப்புல.

            "இதெ இப்பத்தானே நீயி சொல்றே? நீயி இந்த நெனைப்புலத்தாம் இருக்கேங்றதெ அந்தப் பொண்ணோட யப்பாவும், யண்ணனும் வந்த அன்னிக்கெ சொல்லிட்டாங்க! நீயி இப்படித்தாம் சிந்திப்பேன்னு அந்தப் பொண்ணும் சொல்லிட்டு. நாம்மத்தாம் அவுங்க அப்பிடிச் சொன்னப்போ நம்பாம ஒம் பக்கமே பேசிட்டேம். ஒன்னயச் சரியாத்தாம்டா கணக்குப் பண்ணி வெச்சிருக்காங்க!"ன்னு அந்த அம்மா பேசுனதும், பாலாமணி அவுங்கள மொறைச்சுப் பாத்தாப்புல வெளியில கெளம்பிருக்காம். போடா ஒன்னய மாதிரி எத்தனையோ ஆளுகளப் பாத்திருக்கேங்ற மாதிரி அந்த அம்மாவும் அவ்வேம் வெளியில கெளம்புறதெ பாத்துட்டு நின்னுருக்காங்க.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...