3 Dec 2020

ஜீவனாம்ச வழக்கு

ஜீவனாம்ச வழக்கு

செய்யு - 644

            திருவாரூரு முதன்மை குற்றவியில் நீதிமன்றத்துல திருநீலகண்டன் வக்கீல் ஜீவனாம்ச வழக்கப் போட்டாரு. வழக்குப் போட்டு ஆஜராகணுங்றதுக்கான வாய்தா நோட்டீஸையும் பாலாமணிக்கு அனுப்பி வெச்சாரு. அதெ அவ்வேம் வாங்கிகிட்டதற்கான ஒப்புகைச் சீட்டும் தபால் மூலமா திருநீலகண்டன் வக்கீலுக்கு வந்துச் சேந்துச்சு.

            பாலாமணிக்கு மாச வருமானம் ஒரு லட்சத்துக்கு மேல வர்றதாவும், அவ்வேம் அரசாங்க டாக்கடர்ரா இருந்துகிட்டு அரசு விதிகளுக்கு முரணா தனியா கிளினிக்கு நடத்துறதுலேந்து மாசத்துக்கு அறுபதினாயிரத்துக்கு மேல வர்றதாவும், அரசாங்க விதிகளுக்கு வுட்படாம சட்டத்துக்கு விரோதமா மருந்து தயாரிச்சி விக்குறதுலேந்து மாசத்துக்கு நாப்பதினாயிரத்துக்கு மேல வர்றதாவும் ஆக மொத்தம் அவனோட மாச வருமானம் இரண்டு லட்சத்தெ நெருங்குறதால அதுலேந்து அறுபதினாயிரத்தெ ஜீவனாம்சமா கொடுக்கணும்ன்னும் மித்தபடி வக்கீல் நோட்டீஸ்ல அனுப்பியிருந்த அத்தனை சமாச்சாரங்களையும் சேர்த்து வழக்கச் சோடிச்சிருந்தாரு திருநீலகண்டன் வக்கீலு.

            "அம்மாம் பணத்தையா ஜீவனாம்சமா கொடுக்க ஆர்டர் போடுவாங்க?"ன்னு அந்த வழக்கோட காயிதத்தெப் படிச்சிப் பாத்துக் கையெழுத்துப் போடுறப்ப சந்தேகமா வாயைப் பொளந்துகிட்டுக் கேட்டே புட்டா செய்யு.

            "நாலாயிரம் அய்யாயிரத்தெ தாண்டிப் போட மாட்டாங்கம்மா! அறுபதினாயிரம்ன்னு போடலன்னா ரண்டாயிரம், மூவாயிரத்தோட நிப்பாட்டிப்புடுவாங்க. அதுக்காகத்தாம் இப்பிடி ஏத்திப் போடுறது. இதெ ஜட்ஜ் பாத்தாவே என்னா திருநீலகண்டன் இவ்ளோ கம்மியாப் போட்டிருக்கீங்கன்னுத்தாம் கேப்பாரு. கோர்ட்ல எதுவும் உண்மையா தாக்கல் பண்ணுறதுல்ல. தாக்கல் பண்ணவும் முடியாது. இத்து நீதிபதிக்கும் தெரியும். எங்களுக்கும் தெரியும். அங்க எல்லாம் வாத பிரதிவாதம், சாட்சிகள எப்பிடி எடுத்து வைக்கிறோம், கையாள்றோம், தடயங்கள எவ்வளவு லாஜிக்கா கொடுக்குறோங்றதுதாம் விசயம். அதொட அடிப்படையிலத்தாம் நீதிபதியும் தீர்ப்ப வழங்க முடியும். ஒருத்தன் கொலைகாரன் இல்லைன்னு தெரிஞ்சாலும் சாட்சியங்களும், தடயங்களும் எதிரா போவுதுன்னு வெச்சிக்கோங்களாம், அவன நீதிபதி கொலைகாரன்னுத்தாம் தீர்ப்ப எழுதி ஆவணும்! வக்கீல் நெனைச்சா கேஸையே தலைகீழா புரட்டலாம்! ஒங்க மாப்புள்ள எப்பிடிப்பட்ட வக்கீல கொண்டு வர்றார்ன்னு பார்ப்போம்! அதே ஹைகோர்ட் வக்கீலா? இல்ல வேற வக்கீலான்னு பொறுத்திருந்துதாம் பார்க்கணும்! அதெ வெச்சித்தாம் அவ்வேம் இந்த வழக்குல இருக்குறதும் காலியாவுறதும்!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன் ரொம்ப வெலா வாரியா.

            வழக்கு தாக்கல் ஆயிட்டதால மொத மொதலா வெசாரிக்குற மொத ஹியரிங்குக்கு எப்பிடி வரணுங்றதெ வக்கீல் தெளிவா சொல்லியிருந்தாரு. நகெ நட்டுன்னு எதுவும் போட்டிருக்கக் கூடாதுன்னும் சாதாரணமாக பழையப் பொடவையத்தாம் கட்டிக்கிட்டு வரணும்ன்னும், அந்த ஒரு பொடவையத்தாம் எப்போ ‍கோர்ட்டுக்கு ஜீவனாம்ச வழக்குக்கு வந்தாலும் கட்டிக்கிட்டு வாரணும்ன்னாரு. அது ஏம்ன்னு கேட்டப்போ நீதிபதிங்க உடுத்தியிருக்கிற உடுப்புகள்லேந்து நடந்துக்கிற மொறை வரைக்கும் எல்லாத்தையும் கவனிப்பாங்கன்னும், அப்பிடி கவனிக்கிறப்போ நெறைய நகெ நட்டோ, வெலை உயர்ந்த பொடவைகங்ள கட்டியிருந்தாலோ இந்தப் பொண்ணுக்கு எதுக்கு ஜீவனாம்சத்தெ நெறையக் கொடுக்கணுங்ற எண்ணம் அவுங்களுக்கு வந்துப்புடலாம்ன்னும் சொன்னாரு வக்கீலு. ஏன்னா நீதிபதியும் மனசுள்ள மனஷங்கத்தானே. அவுங்களோட மனசு சொல்றதெ அவுங்களால கேக்காம இருக்க முடியாது. நம்ம மேல பரிதாப்படுற ஒரு மனசெ அவுங்க மனசுல உருவாக்குறது நாம்ம நடதுக்கிடற மொறையிலத்தாம் இருக்கு. அதெ உருவாக்கிப்புட்டாவே இந்த வழக்குல ஜெயிச்ச மாதிரின்னாரு வக்கீலு. ஒவ்வொரு வெசாரணைப்பயும் ஒரே பொடவையக் கட்டிட்டு வர்றப்போ அதெ பாக்கற ஜட்ஜூக்கு பாவம் இந்தப் பொண்ணுக்கு உடுத்திக்கக் கூட வேற நல்ல பொடவை இல்ல போலிருக்குன்னு மனசுல ஒரு நெனைப்பு வரும்ன்னும் அப்பிடி ஒரு நெனைப்பு வந்தாத்தாம் ஜீவனாம்சம் சட்டுன்னு ஆர்டராவும்ன்னும் சொன்னாரு. அத்தோட ஜட்ஜூ எதெ கேட்டுப் பேசுனாலும் மெதுவாவும், பணிவாவும், பயந்தாப்புயலும் பேசச் சொன்னாரு வக்கீலு. அதெ கேட்ட செய்யு, "நம்ம பேச்சே நெசமாலுமே அப்பிடித்தானே இருக்கு!"ன்னா.

            "அப்பிடித்தாம் இருக்கு. ஒருவேள கோர்ட்ல ஏதோ உணர்ச்சிவசப்பட்டு கொரல உசத்திட்டீன்னா சிக்கலா போயிடும். அதாங் முன்கூட்டியே சொல்லிடுறேம்!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன். அத்தோட கோர்ட்டுக்குள்ள பேர்ர கூப்புட்ட ஒடனே எப்படி நொழையுறது, நிக்குறது, பாக்குறது, பதிலச் சொல்றதுங்ற வரைக்கும் அவரு நடிச்சே காம்பிச்சாரு. இந்த நடிப்புல அம்பது பர்செண்டெ பண்ணாவே போதும் ஆறே மாசத்துல ஜீவனாம்சத்தெ போட்டு வாங்கிக் கொடுத்துப்புடுறேன்னும் சத்தியம் பண்ணாத கொறையாச் சொன்னாரு.

            வக்கீல் திருநீலகண்டனப் பாக்குறதுக்காக கோர்ட்டுக்குப் போயிருந்தாலும் அதெல்லாம் கோர்ட்டுக்கு வெளியில இருந்துப் பாத்ததுதாம். உள்ளாரப் போயிப் பாத்ததில்ல. போன் அடிச்சிச் சொன்னா வெளியில வர்ற வக்கீலு கோர்ட் கேண்டீனுக்கு அழைச்சிட்டுப் போனதுல கோர்ட் வளாகத்துக்குள்ள வந்து அதிகம் பாத்ததுன்னா அந்த கேண்டீன் மட்டுந்தாம். மொத மொறையா வழக்குப் போட்டு அதெ பதிவு பண்ணுறதுக்காகச் செய்யுவ அழைச்சிட்டுப் போறப்போ சுப்பு வாத்தியாரு, கைப்புள்ள, விகடுன்னு எல்லாரும் போனாங்க.

            சினிமாவுலப் பாக்குற கோர்ட்டுக்கும், நிஜத்துல பாக்குற கோர்ட்டுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கு. நிக்குறதுக்கே எடமில்லாத அளவுக்கு கோர்ட் முழுக்க கூட்டம்தான். கோர்ட்டு பத்தே கால் வாக்குல ஆரம்பமாவுதுன்னா ஆஜராக வேண்டியவங்க ஒம்போதெ முக்கால்லேந்து வர ஆரம்பிச்சிடுவாங்க. பத்து மணிய நெருங்க கூட்டம் எங்கேயிருந்து அப்பிடி திபுதிபுன்னு வருதுங்றது தெரியாம நெரிசலா ஆவ ஆரம்பிச்சிடும் கோர்ட்டு. அங்கப் போயி எடத்தெ பிடிச்சி நின்னுக்கிடணும். வழக்கோட நம்பர்ரச் சொல்லி பேர்ர கூப்புடுறப்போ போயி நின்னு ஆஜர் போடணும். பதினொன்னரை வரைக்கும் வாய்தா தேதி கொடுக்குற கேஸ்களா இருக்கும். விசாரணைக்கு வர்ற கேஸ்கள பதினொண்ணரைக்கு மேலத்தாம் எடுத்துப்பாங்க. பதினொண்ணரை மணி முடியுற வரைக்கும் ஜேஜேன்னு கூட்டமாத்தாம் இருக்கும் கோர்ட்டு. வாய்தா தேதி வாங்குனவங்க கொஞ்சம் கொஞ்சமா கலைஞ்சிப் போன பிற்பாடுதாம் நின்னு சுவாசிக்க காத்துக் கெடைக்கும் கோர்ட்டுல.

            சில நேரங்கள்ல ஏம் பல நேரங்கள்ல வக்கீல்கள் உக்காரத்துக்கே எடம் இருக்காது. பல பேரு நின்னுட்டு இருப்பாங்க. அவுங்களுக்கு என்னா ஒரு செளகரியம்ன்னா கோர்ட்டுக்கு உள்ளார நிக்கலாம். மித்தவங்க எல்லாம் கோர்ட்டுக்கு வெளியில வரண்டாலத்தாம் நிக்க முடியும். கோர்ட்டு வராண்டா முழுக்க அப்பிடி நிக்குறங்க கூட்டத்தால நெரம்பி வழியும். பேர்ர கூப்புட்டாத்தாம் வராண்டாவுலேந்து நெலையத் தாண்டி உள்ளாரப் போவ முடியும். பேரு கூப்புட்டு முடிய முடிய மக்களோட மக்களா வக்கீல்களும், போலீஸ்காரவுங்களும் கெளம்பிக்கிட்டே இருப்பாங்க. இப்பிடியா மக்களும் வக்கீல்களும் உள்ளார வரதும், போறதுமாத்தாம் பதினொண்ணரை மணி வரைக்கும் இருக்கும். பதினொண்ணரையக் கடந்து குறுக்கு விசாரணை ஆரம்பிக்கிற நேரத்துலத்தாம் கோர்ட்ல கூட்டம் கொறைவா இருக்கும். சினிமா படத்துல பாக்குறாப்புல குறுக்கு விசாரணையப் பாக்குறதுக்குக் கூட்டமும் ரொம்ப இருக்காது. வழக்கோட சம்பந்தப்பட்டவங்க, ரண்டு தரப்பு வக்கீல்களோட ஒரு சில வக்கீல்கள்தாம் இருப்பாங்க. மித்தபடி அதெ வெசாரிக்கிற நீதிபதி, கோர்ட்டுல வேல செய்யுறவங்க மட்டுந்தாம் இருப்பாங்க. ஒரு சில பேரு குறுக்கு விசாரணையப் பாக்குறதுக்குன்னு நிக்குறதும் உண்டு. அவுங்களத் தவிர அதுக்குப் பெறவு கோர்ட்டுல கூட்டத்தெ பெரிசா பாக்க முடியாது.

            திருவாரூரு கோர்ட்டுங்றது மூணு மாடிக் கட்டடம். அதுல தரைத் தளத்துல எடது பக்கமா இருக்குறதுதாம் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம். அதுலத்தாம் செய்யுவோட ஜீவனாம்ச வழக்கு நடந்துச்சு. கொலை வழக்குக, விபத்து வழக்குக கூட அங்கத்தாம் நடந்துச்சு. 

            வழக்கு ஆரம்பிச்ச பிற்பாடு மொத அழைப்புன்னு சொல்லப்படுற பர்ஸ்ட் ஹியரிங்குக்கு போறப்ப இருக்குற ஆர்வம் போவப் போவ கொறைஞ்சிப் போயிடும். அதுக்கு மேல வாய்தா மேல வாய்தாவத் தேதி மாறிட்டே இருக்கும். அடுத்த வாய்தா தேதியத் தெரிஞ்சிக்கிறதுக்காவும், நேர்ல ஆஜராகுறதுக்கு மட்டுமே போயிட்டு இருக்கணும். ஆனா மொத ஹியரிங்குக்குப் போறப்ப வழக்குல ஜெயிச்சு எல்லாமே சீக்கிரமே நல்ல வெதமா நடந்துடுங்ற ஆவலாதி வானத்தெ வுட பெரிசா இருக்கும்.

            ஜீவனாம்ச வழக்கோட மொத ஹியரிங்குக்கு மொத மொதலா கோர்ட்டுக்குப் போற யாரும் மறக்க முடியாது. மனசு பூரா ஒரு படபடப்பா இருக்கும். மொத காதல், மொத கல்யாணம், மொத இரவுங்ற மாதிரி அதுவும் ஒரு படபடப்பான ஒண்ணுத்தாம். செய்யுவ அழைச்சிக்கிட்டு சுப்பு வாத்தியாரு, கைப்புள்ள, விகடுன்னு எல்லாரும் மொத ஹியரிங்குக்குப் போனப்போ கோர்ட்டு அறைக்கு மின்னாடி இருக்குற எடத்துலயும், வராண்டாவுலயும் சனங்க அதுகப் பாட்டுக்கு உக்காந்துகிட்டும் நின்னுகிட்டும் இருந்துச்சுங்க. சில சனங்க கொண்டாந்த சாப்பாட்ட சாப்பிட்டுக்கிட்டும், ஒரு சில சனங்க பேப்பர்ர வெச்சுப் படிச்சிக்கிட்டும். ஒரு சிலதுங்க கோர்ட்டுக்கு வந்து நிக்குற கதெயெ சொல்லிக்கிட்டும், மித்தவங்களோட வழக்குகளப் பத்தி வெசாரிச்சிக்கிட்டும் இருந்துச்சுங்க. ஆளாளுக்குப் பேசிக்கிட்டும், சிரிச்சிக்கிட்டும் இருக்குறப் பல பேத்தப் பாக்குறப்போ அவுங்களுக்குக் கோர்ட்டுக்கு வந்து பழகிப் போயிடுச்சுங்றது புரிஞ்சிடும். நாமளும் அப்பிடித்தாம் நாலு மொறை கோர்ட்டுக்கு வந்தா அதுக்குப் பெறவு நம்ம வழக்க நெனைச்சா சிரிப்புச் சிரிப்பாத்தாம் வரும். இங்க நடக்குற நம்ம வழக்குத்தாம் கொடூரமான வழக்குன்ன நாம்ம நெனைச்சா அதெ வுட கொடூரமான இன்னொரு வழக்கு அடுத்தாப்புல நடந்துக்கிட்டு இருக்கும். எந்த ஒரு வழக்கையும் மோசமான வழக்குன்னு சொல்றதுக்குள்ள, அதெ வுட மோசமான வழக்கு ஒண்ணும் வந்துக்கிட்டேதாம் இருக்கும்.

            நீதிபதி வந்து உட்கார்ற வரைக்கும் கோர்ட்ல நிசப்தத்தைப் பாக்க முடியாது. அவரு வர்றாங்றதுக்கு முன்னறிவிப்பா டவாலி வந்து சைலன்ஸ்ங்ற சத்தத்தெ கொடுப்பாரு. அந்தச் சத்தத்தெ கேட்டப் பெறவுதாம் கோர்ட்டுல ஒரு அமைதி வரும். வக்கீலுங்க எல்லாம் ஒடனே எழுந்து நிப்பாங்க. நீதிபதி வந்து மேலே சொவத்துல மாட்டியிருக்குற காந்திக்கும், வள்ளுவருக்கும் ஒரு கும்புடுப் போட்டுட்டு, எல்லாரையும் பாத்தாப்புல ஒரு கும்புடுப் போட்டுட்டு உக்காருவாரு. அப்பத்தாம் வக்கீல்களும் உக்காருவாங்க. நீதிபதி வர்றதுக்கு மின்னாடியே எந்த வரிசையில கேஸ்ஸ வெசாரிக்கப் போறாங்றதெயல்லாம் கோர்ட் கிளார்க் வரிசையா அடுக்கி வெச்சிருப்பாரு. அதெப் பாத்து அவரு கேஸ் நம்பரையும், பேரையும் படிச்சார்ன்னா அதெ வாங்கி டவாலி சத்தமா சொல்லுவாரு. சில பேர்ர மொத தடவெ சொல்றப்பயே ஆளுங்க வந்து நின்னுடுவாங்க. ஒரு சில தடவெத்தாம் ரண்டு மூணு தடவெ பேர்ரச் சொல்றாப்புல ஆயிடும் டவாலிக்கு.

            ஒரு பத்து இருவது நிமிஷம் வரைக்கும் அமைதியாப் போயிட்டு இருக்குற கோர்ட்ல திடீர்ன்னு சத்தம் வரும். டவாலி வெளியில வராண்டாவுக்கு வந்து சைலன்ஸ் ஒரு சத்தத்தெ கொடுத்துட்டு, செல்ல ஆப் பண்ணுங்க ல்லன்னா அவ்ராதம் ஆயிடும்ன்னு ஒரு சத்தத்தெ கொடுத்தா, பக்கத்துல நிக்குற போலீஸ்காரவுங்க, "கேஸூ முடிஞ்சவங்க வெளியில கெளம்புங்க. நிக்காதீங்க. செல்ல ஆப் பண்ணுங்க!"ன்னு சத்தத்தெ கொடுத்துக்கிட்டு தேவையில்லாம நிக்குற ஆளுங்கள வெளியில கெளப்பிக்கிட்டெ இருப்பாங்க.

            மொத மொறையா எம்.சி.நம்பர்ரச் சொல்லி செய்யு பாலாமணின்னு அழைச்சப்போ செய்யு உள்ளாரப் போயி நின்னா. எதிர்தரப்புலேந்து யாரும் வந்து நிக்கல. ஆன்னா வேக வேகமா ஒரு வக்கீலு கருப்புக் கோர்ட்ட மாட்டிக்கிட்டே எல்லாரையும் வெலக்கி விட்டுக்கிட்டு ஓடி வந்தாரு. இந்த வக்கீலு மகளிர் போலீஸ் ஸ்டேசனுக்கோ, சமூக நீதி மையத்துக்கோ வந்த ஹைகோர்ட்டு வக்கீலுன்னு பழைய பரமசிவம் சொன்ன ஆளு இல்ல. இவரு வேற ஒருத்தரு. அவரோட கறுப்பு அங்கி கூட வெளுத்துப் போயிருந்துச்சு. பின்னாடி பழைய பரமசிவமும் கையில வேட்டியப் பிடிச்சிக்கிட்டு ஓடியாந்தாரு. பின்னாடி பாலாமணி வருவானோன்னு எதிர்பாத்தா காங்கல. அந்த வக்கீலும் பழைய பரமசிவம் மட்டுந்தாம் வந்தாங்க.

            பழைய பரமசிவம் கோர்ட்டு நெலைப்படிக்கு மின்னாடியே நின்னுகிட்டாரு. வக்கீல் மட்டும் நீதிபதிக்கு தலையத் தாழ்த்தி ஒரு கும்புட போட்டுட்டு உள்ளாரப் போனாரு. பாலாமணி ஆஜராகாதத்துக்கான வாய்தாவ நீட்டுனாரு. அதெ கிளார்க் வாங்கி நீதிபதிக்கிட்டெ கொடுத்ததும், "பர்ஸ்ட் ஹியரிங்குக்கே ஆஜராகலையா?"ன்னு சொல்லிகிட்டெ, செய்யுவப் பாத்து பேரு, அப்பா பேரு, ஊரு எல்லாத்தையும் கேட்டுக்கிட்டாரு. அவ்வே கிளார்க் மூலமா கொடுத்த ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை எல்லாத்தையும் பாத்துட்டுத் திரும்பவும் கிளார்க் மூலமாவே அதெ செய்யுகிட்டு கொடுக்கச் சொல்லி மறுதேதி சொல்லி அன்னிக்கு ஆஜராகச் சொன்னாரு. பாலாமணி சார்பா ஆஜரான வக்கீலப் பாத்து அடுத்த ஹியரிங்குக்குக் கட்டாயமா பார்ட்டி ஆஜராவணும்ன்னாரு. அந்த வக்கீலு தலைய ஆட்டுனாரு. அவ்வளவுதாம் அடுத்த கேஸ் நம்பர்ரச் சொல்லிப் பேரைக் கூப்புட்டதும் இவுங்க எல்லாரும் வெளியில வந்துட்டாங்க.

            செய்யு வெளியில வந்ததும் இதுக்குப் போயி ஏம் இவ்வளவு பரபரப்பா இருந்தோம்ங்ற மாதிரிக்கித்தாம் இருந்துச்சு அவளோட மனநெல. வெளியில வந்தப்போ ஒரு சில பேரு என்னா கேஸூன்னு கேட்டாங்க. ஜீவனாம்ச கேஸூன்னு சொன்னதும், "அத்து முடிய ரண்டு வருஷம் ஆவும். உத்தரவு ஆனாலும் பணத்தெ வாங்குறதுக்குள்ளப் போதும் போதும்ன்னு ஆயிடும்!"ன்னு சொல்லிட்டு வேதவாக்க உதுத்தாப்புல ஒருத்தருப் போனாரு.

            பழைய பரமசிவம் சுப்பு வாத்தியாரும், விகடுவும் நின்ன எடத்துக்குப் பக்கத்துல வந்தாரு. "தப்புப் பண்ணிட்டீங்க. பெரிய தப்புப் பண்ணிட்டீங்க. வர்ற சீதேவிய வேணாம்ன்னு சொல்லிட்டீங்க. கோர்ட்டுன்னு போன வரைக்கும் எஞ்ஞளுக்கும் செளரியந்தாம். வாய்தா பாட்டுக்கு வாய்தா போயிட்டே இருக்கும். ஒண்ணும் கதெ நடக்கப் போறதில்ல. எந்த கேஸூ கோர்ட்டுக்கு வந்து முடிவுக்கு வந்திருக்குன்னு நெனைக்குறீங்க? என்னவோ பண்ணிட்டீங்க. இப்பவும் ஒண்ணும் ஆயிட. கொடுக்குறதெ வாங்கிக்கிறதா சொல்லி கேஸ வாபஸ் வாங்கிட்டா எல்லாத்தையும் முடிச்சிக்கிடலாம். என்னத்தெ சொல்றீங்க?"ன்னாரு பழைய பரமசிவம் நைச்சியமா.

            "எம்மாம் கொடுப்பீயே?"ன்னாம் விகடு பழைய பரமசிவத்தப் பாத்து நேரடியா விசயத்துக்கு வர்றாப்புல.

            "அதாங் சொன்னதுதாம். முப்பது சவரனு நகெ, மூணு லட்சம் பணம், நீஞ்ஞ செஞ்சிக் கொடுத்த கட்டிலு, பீரோ, மிக்சி, கிரைண்டரு, டிவிப்பொட்டி சாமாஞ் செட்டுக எல்லாம்!"ன்னாரு பழைய பரமசிவம் அதெ பழைய பல்லவியப் பாடுறாப்புல.

            "அது போவ மிச்சப் பவுனு, மிச்ச நகெல்லாம்?"ன்னாம் விகடு கிடுக்கிப்பிடி போட்டாப்புல.

            "அவ்வளவுதாங். இதுக்குச் சம்மதம்ன்னாத்தாம்!"ன்னாரு பழைய பரமசிவம் அடிச்சிப் பேசுறாப்புல.

            "அப்பிடின்னா வழக்கத் தொடரலாம்! பெறவு முடிவெ பண்ணிக்கிடலாம்!"ன்னாம் விகடுவும் அடிச்சிப் பேசுறாப்புல.

            "அதாங் முடிவா?"ன்னாரு பழைய பரமசிவம் கொரல கனைச்சிக்கிட்டு ஒரு மெரட்டுற தொனியில.

            "பணம், நகெநட்ட முழுசா தர்ற வரைக்கும் நாஞ்ஞளும் வழக்க வுடுறாப்புல யில்ல!"ன்னாம் விகடுவும் அழுத்தம் திருத்தமா.

            "ரொம்ப தப்பான முடிவெ பண்ணிருக்கீங்க யம்பீ!"ன்னாரு பழைய பரமசிவம் தலைய ரண்டு பக்கமும் ஆட்டிகிட்டு.

            "எஞ்ஞளது தப்பான முடிவாவே இருக்கட்டும். ஒஞ்ஞளதே சரியானதா இருக்கட்டும்! அதெ பத்திப் பெரச்சனெயில்ல. ஆன்னா இதாங் முடிவு!"ன்னாம் விகடு கரவு செரவா அறுத்துக் கட்டுனாப்புல. பழைய பரமசிவம் அதுக்கு மேல விகடுகிட்டெப் பேசல. மொறைச்சிப் பாத்துபடிக்கே பேச விருப்பம் இல்லாதவரப் போல நகரப் போனாரு. பக்கத்துல நின்னுட்டு இருந்த தன்னோட வக்கீல்கிட்டெ சொற்தெப் போல நின்னுகிட்டு இருந்த சுப்பு வாத்தியாரு, கைப்புள்ள, செய்யு விகடுன்னு எல்லாரு காதுலயும் கேக்குறாப்புல, "கூண்டுல ஏத்தி நாறடிச்சாத்தாம் புத்தி வரும்!"ன்னாரு பழைய பரமசிவம் பட்டுன்னு ஒரு சவுட்டு மெரட்டல வுடறாப்புல. அத்தோட அவரும் கூட நின்ன வக்கீலும் கௌம்பிட்டாங்க.

            கொஞ்ச நேரத்துல வக்கீல் திருநீலகண்டனும் வந்தாரு. "நாம்ம என்னவோ பெரமாதமான வக்கீலோட ஒங்க மாப்புள்ள ஆஜராவாம்ன்னு பாத்தேம். ஆளும் ஆஜராவுல. வக்கீலும் கோர்ட்டப் பாத்து ரொம்ப நாளா இருக்கும் போலருக்கு. வக்கீல் கோட்டை மடிச்சிப் பொட்டியில வெச்சி மறந்துட்டு இன்னிக்குத்தாம் அவசர அவரசமா எடுத்து மாட்டிக்கிட்டு வர்றாப்புலல்ல ஓடியார்றாம். இந்த மாதிரி வக்கீல்ன்னா அடிச்சி தூள் பண்ணிடலாம். பயப்படாமப் போங்க. பையில பணம் இருந்தா மட்டும் ஒரு நூறு ரூவாயக் கொடுத்துட்டுப் போங்க!"ன்னாரு வக்கீல் திருநீலகண்டன். சுப்பு வாத்தியாரு, "நல்ல சேதியாச் சொல்லிருக்கீயே! சந்தோஷம்!"ன்னு சொல்லி பையில கைய வுட்டு எரநூத்து ரூவாய எடுத்துக் கொடுத்தாரு. அதெ ரொம்ப திருப்தியா வாங்கிக்கிட்ட வக்கீலு, "நமக்கு அடுத்தடுத்த கேஸூங்க உள்ளார இருக்கு. நாம்ம உள்ளாரப் போறேம். கோர்ட்டுல சொன்ன மறுதேதி ஞாபவம் இருக்குல்லா. அன்னிக்கு ஞாபவமா வந்து ஆஜராயிடுங்க. மொத நாளு நாமளும் போன் அடிச்சி ஞாபகம் பண்ணுவேம்!"ன்னாரு. அவ்வளவுதாம் பேசுனாரு. அடுத்த வர்றப் போற தன்னோட கேசுக்காக கோர்ட்டுக்குள்ளாரப் போயிட்டாரு.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...