செய்யு - 379
சம்பிரதாயத்துக்குத் தாய்மாமன் வந்துதாம்
எல்லாத்தையும் பேசணும், முறை செய்யணும்னு ஒரு வழக்கம் இருக்கு. ஒருவேளை தாய்மாமன் இல்லாட்டியும்
உறவுமுறையில மாமனா இருக்குறவரு வந்து செய்யுறதுன்னு அதுலயும் ஒரு கணக்கு இருக்கு. சமய
சந்தர்ப்பங்கள்ல ஒரு தாய்மாமன் முறுக்கிக்கிட்டாலும், இன்னொரு தாய்மாமன் வந்து நிக்கணும்னுதாம்
விகடுவுக்கு ரெண்டு தாய்மாமானுங்களா அமைஞ்சாங்களோ என்னவோ! மூத்தவரு குமரு மாமா முறுக்கிக்கிட்டதால
இதுல இளையவரு வீயெம் மாமாத்தாம் தாய்மாமான நின்னு பேசி ஆவணும், முறைதலைகளைப் பத்தி
ஒரு முடிவ பண்ணி விட்டாகணும். இனி கல்யாணத்துக்குப் பேசி அதெ முடிச்சி விட்டு ஆவுற
வரைக்கும் அவருதாம் எல்லாத்துக்கும் நாட்டாமெ மாதிரிக்கி.
முருகுதாம் விகடுவுக்கு இப்போ தோழன்
மாதிரிக்கி. பத்தாப்பு பள்ளியோடம் வரைக்கும் ஒண்ணா படிச்சவங்க ரெண்டு பேரும். அத்தோட
முருகுக்குக் கல்யாணம் வேற ஆயிருந்தது ஒரு வசதியாப் போச்சுது. அனுபவத்துல சில விசயங்கள
சொல்றதுக்கு ஒரு வசதியா இருக்குமுல்லா அது.
வேன் ஆர்குடியை நெருங்குறப்போ, சுப்பு
வாத்தியாரு சொல்றாரு, "இஞ்ஞயே சாப்பாட்டெ முடிச்சிக்கிடலாமா? வாங்க வேண்டிய சாமானுங்கள
வாங்கிப்புடலாமா?"ன்னு. வீயெம் மாமா சொல்லுது, "வேன எஞ்ஞயும் நிப்பாட்ட
வாணாம். நேர்ரா ஒரத்தநாட்டுல போயி நிப்பாட்டி எதெ வேணாலும் பாத்துக்கிடலாம். நேரத்தோட
போயி நேரத்தோட திரும்பணும்த்தாம்! இஞ்ஞ டவுன்ல நெரிசல் சாஸ்தி. வண்டிய டவுனுக்குள்ள
வுட்டு திருப்புனா அத்து ஒரு மணி நேரத்துக்கு ஆயிடும். அந்நேரத்துக்கு ஒரத்தநாடு போயிடலாம்!"ன்னு.
இதுமாதிரியான விஷேசங்கள்ல தாய்மாமனோட வார்த்தைதாம் வேதவாக்கு மாதிரி ஆயிடுது. அவுக
சொல்றபடித்தாம் எல்லாம் நடந்தாவணும். கொஞ்சம் மாத்தணும்னு நெனைச்சா மூக்கு மேல கோவம்
வந்துப்புடும் அவுங்களுக்கு. ரெட்டைப் படையில ரெட்டையா இருந்த தாய்மாமனுங்க இப்போ
ஒத்தப் படையில ஒத்தையா ஆனதுல வீயெம் மாமா பேச்சுக்கு கெத்து ரொம்பவே ஏறிப் போவுது.
வேனுக்கு இப்போ வீயெம் மாமாத்தாம் கேப்டன் மாதிரிக்கி. அது சொல்ற மாதிரிக்கித்தாம்
இனி அது போயாவணும்.
ஆர்குடியைத் தாண்டி தஞ்சாவூர் ரோட்டுல
கொஞ்ச தூரம் வந்து ஒரத்தநாடு ரோட்டப் பிடிச்சிப் போவுது வேனு. வேனு போகப் போக
வயல் வெளிக எல்லாம் பச்சைப் பச்சையா பாக்க அம்புட்டு அழாக இருக்கு. இப்பிடி ஒரு பச்சைய
ஆத்துல தண்ணி வர்ற காலத்துலத்தாம் ஆர்குடிக்குக் கெழக்கால பாக்க முடியும். ஆத்துல தண்ணி
வராத காலத்திலயும் பச்சைய பாக்கணும்னா ஆர்குடிக்கு மேற்கே வந்தாத்தாம் முடியும். ஆழப்
போர்களாப் போட்டு எந்நேரத்துக்கும் பாசனம் இங்க உள்ள வயலுகளுக்குக் கெடைக்குது. ஆர்குடிக்
கிழக்கால அப்படி ஆழப் போர்கள போட்டுப் பாத்தாக்கா வர்ற தண்ணியெல்லாம் உப்புத் தண்ணியா
வருது. அம்பது அடியிலேந்து நூறுடி வரைக்கும் போட்ட போர்ல வர்ற தண்ணித்தாம் நல்ல தண்ணியா
இருக்குது. ஆனா அது வெள்ளாம பண்ண பத்த மாட்டேங்குது. அதால ரொம்ப ஆபூர்வமாத்தாம் ஆர்குடிக்குக்
கெழக்கால போர்ப் பாசனத்தெ பண்ணிக்கிட்டு முப்போகமும் சாகுபடி பண்ணுற சம்சாரிங்களப்
பாக்க முடியும். ஆர்குடிக்கு மேற்கேன்னா முப்போகமும் சாகுபடி பண்ற சம்சாரிங்களாப்
பாக்க முடியும்.
ஒரத்தநாடு டவுன நெருங்குறதுக்குள்ள பியெட்டு
காலேஜூ வருது. அதுதாங் குமரு மாமா மரவேலைப் பார்த்த காலேஜ். அப்போ அதோட வந்து வேல
பாத்த ஞாபவத்தச் சொல்லுது வீயெம் மாமா. "ஒரத்தநாட்டுல சாப்பாட்டு வெலையெல்லாம்
ரொம்ப கம்மியாத்தாம் இருக்கும். ஒரத்தநாட்டுல வூடுகள்ல மெஸ் சாப்பாடு மாதிரிக்கி அங்கங்க
சாப்புடலாம். அதுலயும் மீன் கொழம்பு சாப்புடணும்னு ஒரத்தநாடுதாம். காசும் கம்மி, சாப்பாடும்
நெறையா, ருசியும் அதிகம்"ன்னு அந்தச் சாப்பாட்டை அம்புட்டுப் புகழ்ந்து பேசிட்டு
வருது வீயெம் மாமா. "மீன் குழம்புல மீனோட மண்டெ எனக்கு வேணும், ஒனக்கு வேணும்னு
மீன் கொழம்பு சாப்புடப் போற ஆட்கள்ட்ட அப்பிடி ஒரு வம்படி வேற நடக்கும். நாலு பெரிய
மீனுகள வெட்டிப் போட்டு சமைச்சா நாலு மண்டைகத்தானே தேறும். அந்த நாலு மண்டைக்கும்
சாப்புடப் போற பத்து பேரும் அடிச்சிக்கிட்டா எப்பிடிக் கொடுக்குறது? அதாங் அங்க பிரச்சைனையாவும்.
இந்தப் பிரச்சனைக்காகவே மொத நாளே மறுநாளைக்கிச் சாப்புட வர்றப்ப மீனு மண்டெ எனக்கு
ஒனக்குன்னு பேசி வெச்சிப்போம்"ன்னு சொல்லிட்டு வீயெம் மாமா ரொம்ப பெருமிதமா
நிமுந்து பாக்குறப்போ, வேனுல போயிட்டு இருக்குற ஆளுகளுக்கு நாக்குல ஊறுற எச்சில்ல
பேசாம வண்டிய நிறுத்திப்புட்டு நாமளும் ஒரு வெட்டு மீனு கொழம்பு ஒரு பிடி பிடிச்சிட்டுப்
போவோம்னு தோணுது.
பொண்ணு பாக்கப் போற எடத்துக்கு வெறுங்கையி
வீசுன கையாவோ போவ முடியும்? கொஞ்சம் இனிப்பு வகைக, பூவு, பழங்க, வெத்தல பாக்கு இதையெல்லாம்
வாங்கிட்டுத்தாம் போவணும் இல்லியா. அதெ பத்திப் பேச்சு வந்தப்போ வீயெம் மாமா முன்கூட்டியே
"அதெல்லாம் ஆர்குடியில வாங்க வாணாம். ஒரத்தநாட்டுல பாத்துப்போம். மன்னார்குடிய
விட ஒரத்தநாட்டுல வெல கம்மியா இருக்கும்"ன்னு சொன்னதால அதெல்லாத்தியும் ஒரத்தநாட்டுல
வாங்குறதா முடிவாயிடுச்சி. அதெ வாங்கிப் போறத பத்தி பேச்சு வர்றப்பா வீயெம் மாமா சொல்லுது,
"இஞ்ஞ அண்ணாச்சிக் கடையில அல்வா சாப்புடணும்த்தாம்! அல்வான்னா அண்ணாச்சிக் கடெ
அல்வாத்தாம். இதுக்காகவே பியெட்டு காலேஜூ வேல முடிஞ்சதும் அஞ்ஞயிருந்து நடந்து கடைத்தெரு
பக்கம் வர்றது. தொண்டையில எறங்குறப்பவே வழுக்கிக்கிட்டு, நழுவிக்கிட்டு எறங்கும் பாருங்கத்தாம்!
அடெங்கப்பா அதெ அனுபவிச்சத்தாம் புரியும். அத்து மாதிரியான ஒரு அல்வாவ ஆயுசுள எஞ்ஞயும்
சாப்பிட்டதில்லத்தாம். அதெ சாப்புடுறதுக்காகவே இன்னிக்கு ஒரத்தநாடு வர்ற வெச்சிருக்கிறாம்
ஆண்டவேம். அப்பிடின்னு நெனைச்சிக்கிறேம்!"ங்குது வீயெம் மாமா.
வீயெம் மாமா இப்பிடிச் சொன்னதும் வேனை
ஒரத்தநாட்டு கடைத்தெருவுல அண்ணாச்சிக் கடைக்குப் பக்கத்தால ஓரமா நிறுத்தி, "இஞ்ஞயே
பசியா இருந்தா சாப்பாட்டெ கூட முடிச்சிக்கிடலாம்."ங்றாரு சுப்பு வாத்தியாரு.
"அதெல்லாம் ஒண்ணு வாணாம். யம்பீ வேற இஞ்ஞ அல்வாவப் பத்தி சொல்லிடுச்சி. அதெ கேட்டதுக்குப்
பெறவு சாப்பாட்டச் சாப்பிட்டு அல்வாவச் சாப்பிட்டா எடுக்காது. அல்வாத்தாம் சாப்பாடு.
எல்லாத்துக்கும் அல்வாவ வாங்கிக் கொடுங்கம்பீ!" அப்பிடிங்கிறாரு வேலங்குடி சின்னவரு.
அதால எல்லாருக்கும் அல்வாவ வாங்கித் தந்துட்டாரு சுப்பு வாத்தியாரு. இப்படியா மவனுக்குப்
பொண்ணுப் பாக்கப் போயி எல்லாத்துக்கும் அல்வா கொடுக்குறாப்புல ஆயிடுச்சி சுப்பு
வாத்தியாருக்கு. அல்வாவ சாப்புட சாப்புடத்தாம் வீயெம் மாமா சென்னது எம்புட்டு நெசம்ங்குது
புரியுது.
இப்பிடி ஒரு அல்வாவ எதுல செய்யுறாங்களோ
தெரியலையேன்னு சாப்புட்ட ஆளுங்க ஒவ்வொண்ணும் உச் கொட்டுதுங்க. "இதெ சர்க்கரையில
செய்யுறாவுளோ? சீமையிலேந்து வர்ற சீனியில செய்யுறாவுளோ? சீனாவுல வர்ற கற்கண்டுல செய்யுறாவுளோ?
வானத்துலேந்து கொண்டாந்த அமுதத்துல செய்யுறாவுளோ? தெரியலீயே!" அப்பிடின்னு அசந்துப்
போவுது ரசா அத்தை. ஆளாளுக்கு ரெண்டு மூணு தடவே, நாலஞ்சு தடவென்னு கணக்கு வழக்கு இல்லாம
இட்டில, தோசயெ வாங்கிச் சாப்புடுறாப்புல வாங்கிச் சாப்புடுதுங்க. அந்த இனிப்புக்கு
டீத்தண்ணியோ, காப்பித் தண்ணியோ நாக்குல தண்டுபட்டா வெண்ணித் தண்ணிய விட மோசமாத்தாம்
தெரியும். அதெ யாரு பாத்தா, அப்பிடியே பக்கத்துல இருக்குற கடையில எல்லாருக்கும் டீத்தண்ணிய
வாங்கிச் சுப்பு வாத்தியாரு கொடுத்ததுல அதுலயும் ஒரு வாயி வாங்கி உள்ளார ஊத்திக்குதுங்க.
இப்பத்தாம் ஒரு தெம்பு வந்தாப்புல இருக்கு எல்லாருக்கும்.
அல்வா சாப்புடுறதுன்னா விகடுவுக்கு நெசமாவே
அல்வா சாப்புடுறாப்புலத்தாம். அரைக்கிலோ அல்வாவே சாப்புட்டாலும் அலுக்காது, ஒரு கிலோ
அல்வாவே தின்னாலும் தெகட்டாது அவனுக்கு. அவனும் அவ்வேம் பாட்டுக்கு அல்வாவே வாங்கிச்
சாப்புடறாம். அவ்வேம் இப்பிடிச் சாப்புடுறதப் பாத்துப்புட்டு, "இப்டில்லாம் ஒனக்குப்
பிடிச்ச மாதிரிக்கி அல்வா கடை இஞ்ஞ இருக்கிறதாலத்தாம் ஒஞ்ஞ அப்பங்காரரு ஒனக்கு இந்தப்
பக்கத்துல பொண்ண பாத்திருக்காரு போலருக்கு!"ங்றாம் முருகு விகடுவோட காதோரமா
வந்து. அல்வாவே தின்னுகிட்டு இருக்குற விகடுவுக்கு இதெ கேக்கறப்பவே பொறையேறிக்கிது.
ஒண்ணுஞ் சொல்ல முடியாம தெகைச்சிப் போறாம்.
அப்படியே அண்ணாச்சிக் கடையில பொண்ணு வூட்டுக்குன்னு
வாங்க வேண்டிய இனிப்பு, காரங்கள வாங்கிக்கிட்டு, பூவு, பழங்க, வெத்திலைப் பாக்கு, மஞ்சள்,
குங்குமத்தையும் வாங்கிக்கிட்டு வேனைக் கெளப்புனா, அங்கேயிருந்து வெசாரிச்சி வெசாரிச்சிக்கிட்டு
புதுக்கோட்டைப் போவுற ரோட்ட பிடிச்சி கொல்லம்பட்டிக்குப் போவுது வேனு. அங்கங்கயும்
ரோடு பிரியுறதப் பாத்தாக்கா எங்க வழி தவறி எங்கேயோ போயிடுவோமோன்னு ஒரு பயமும்
வரத்தாம் செய்யுது. பம்பல் விட்டுப் படந்திருக்குற மரத்துக்குக் கூட அம்மாம் கெளைகப்
பிரியாது போல, அம்புட்டு கெளைகளா ரோடு பிரியுது. அதெயெல்லாம் சமாளிச்சி, வெசாரிச்சிக்
கொல்லம்பட்டிக்கு பொண்ணு வூட்டுல போயி எறங்குனா, "அட ஏம்டாம்பீ! இம்மாம் தூரத்துல
எப்பிடிடாம்பீ தேடி பொண்ணெ தேடிக் கண்டுபிடிச்சே?"ங்குது ரசா அத்தை.
வூட்டுத் திண்ணையிலயும், உள்கூடத்துலயும்
வரிசையா பாயைப் போட்டு வெச்சிருக்காங்க வந்தவங்க குந்துறதுக்காக. எல்லாம் சனமும் அங்கங்க
உக்காருதுங்க. எல்லாருக்கும் கையில தண்ணிய டம்பளர்ல கொடுத்துத் தாகசாந்தி பண்ணிக்கச்
சொல்றாங்க. தின்ன அல்வாவுக்கு நாக்கு வறண்டு போனதுல போல இருந்ததுல தண்ணி சொகமா
உள்ளார எறங்குது. தண்ணி நல்லாத்தாம் இருக்கு குடிக்க. ஒடனே ஒரு பேப்பர் தட்டுல இனிப்பும்,
காரமும் வெச்சி, டீத்தண்ணிய டம்பளர்ல கொடுக்குறாங்க. அதை வாங்கிச் சாப்புட மனசில்ல
யாருக்கும். ஒரத்தநாட்டுல தின்ன அல்வாவுலயே தெகைச்சித் தெவட்டிப் போயிக் கெடக்குது
நாக்கு. கொஞ்சம் சூடா ஒரைக்கட்டுமேன்னு டீத்தண்ணிய மட்டும் வாயில ஊத்திக்குதுங்க சனங்க.
விகடு பக்கத்துல முருகு உக்காந்திருக்காம்.
மொத மொதல்லா ஒரு பொண்ண பாக்கப் போறோங்ற படபடப்பு இருக்கு. ஒண்ணுக்கு ரெண்டா இது
போல போண்ண பாத்த அனுபவம் இருந்திருந்தா கொஞ்சம் உடம்பும், மனசும் படக்படக்னு அடிச்சிக்காம
இருக்கும். இதயம் கொஞ்சம் அதிகமாத்தாம் எகிறிக் குதிக்குது. விகடுவோட நெலமையைப் புரிஞ்சாப்புல
முருகு அவனோட கைகள அழுத்திப் பிடிச்சிக்கிறாம். இந்நேரத்துக்குக் கையில எதாச்சியும்
பிடிச்சிக்கிட்டாப்புல தேவலாம் போலருக்கு, அதாச்சி வலிப்பு வந்தவன் கையில சாவிக் கொத்தைக்
கொடுத்தா தேவலாம் போல இருக்குமே அப்பிடி. அந்நேரத்துக்கு அதுக்குத் தோதா சாமிமலெ
ஆச்சாரி, "இந்தாருங்க! இதல்லாம் நாம்ம செஞ்ச வேலைப்பாடுக. நெல, சன்னலு, பீரோ,
கட்டில்ன்னு அத்தனையையும் படமா எடுத்து வெச்சிருக்கேம்!"ன்னு அவரு செஞ்ச வேலைக
அத்தனையையும் போட்டோ பிடிச்சி ஆல்பமா போட்டு வெச்சிருக்கிறதெ கொண்டாந்து விகடுவோட
கையில திணிக்கிறாரு. இப்போ இது ஒரு வழக்கமாவும் பழக்கமாவும் போயிடுச்சி. அவுங்கவங்க
செய்யுற வேலைகள ஒடனடியா படத்தெ புடிச்சி அதெ ஒரு ஆல்பமா போட்டு வெச்சிக்கிறது. ஒரு
வெதத்துல வேலைகளப் பிடிச்சிப் போட்டு வெச்சிக்கிறதுக்கு இந்த ஆல்பம் தோதா இருக்குறதோட,
செஞ்சு வெச்ச வேலைகளுக்கு வரலாறு முக்கியங்கிற மாதிரிக்கி ஒரு பதிவாவும் அமைஞ்சிப்
போயிடுது. அத்தோட பீரோ, கட்டிலு, நெலை, சன்னலுன்னு செஞ்சிக் கேக்குறவங்களுக்கு எந்த
மாதிரிக்கிச் செஞ்சு கொடுக்கணும்னு கேட்டு முடிவு பண்ணிக்கிறதுக்கும் வசதியாத்தாம்
இருக்குது.
"என்னடா இந்த ஆளு! பெத்தப் பொண்ணெ
கொண்டாந்து காட்டுவாம்னா? இப்பிடிக்கி அவ்வேம் செஞ்ச பீரோவையும், நெலகளையும் படம்
பிடிச்சிக் கொண்டாந்து காட்டுறாம்னே!"ன்னு முருகு விகடுவோட காதுல முணுமுணுக்குறாம்.
இப்பிடி எதையோ ஒண்ண கொண்டாந்து கையில திணிச்சது கொஞ்சம் சவுரியமாத்தாம் இருக்கு.
ஆனா அதுல ஒரு அசெளகரியம் ஒண்ணு வந்துப் போகுது பாருங்க. அந்த நேரத்துல பொண்ண கொண்டாந்துப்
பாயில உக்கார வெச்சிட்டு எழும்பிப் போகச் சொல்லிடுறாங்க. ஆல்பத்தெ பாத்துக்கிட்டு
இருந்த விகடு, அதுலயே கவனம் நட்டுப் போயி, பொண்ணப் பாக்குறதுக்குள்ள அத்தெ கெளப்பிக்கிட்டு
உள்ளார போயிடுறாங்க.
அத்து கெளம்பிப் போன பிற்பாடு,
"ன்னடா மாப்ளே பைய்யா! பொண்ணெ நல்லா பாத்திக்கிட்டீயா? பிடிச்சிருக்கா? ன்னா
வாயெ தொறந்து சொல்லு!"ங்குது வீயெம் மாமா.
பொண்ணெ சரியாப் பாத்தாத்தானே பிடிச்சிருக்கா,
பிடிக்கலையாங்றதெ சொல்லலாம். பொண்ணு வாரதுக்கு மின்னாடி ஒரு அறிகுறி தெரிஞ்சிருந்தாலவது
கருமத்தெ இந்த ஆல்பத்தெ பாக்காம கவனத்தெ அங்க வெச்சிப் பாத்திருந்திருக்கலாம். அந்த
நேரத்த சரியா கணக்குப் பண்ணுன மாதிரிக்கில்ல சாமிமலெ ஆச்சாரி ஆல்பத்தெ கொண்டாந்து
கொடுத்து அதுல அமுக்கிப்புட்டாரு. இவ்வேம் என்னா பதிலெ சொல்லப் போறாம்ன்னு எல்லாரும்
எதிர்பாத்துட்டு இருக்காங்க. விகடுவுக்கு என்ன பதிலெ சொல்றதுன்னே புரியல.
"யப்பாடி பிடிச்சிருந்தா பிடிச்சிருக்குன்னு
சொல்லு! இல்லாட்டி இல்லன்னு சொல்லு. ஒண்ணும் தப்பில்ல. கட்டிக்கிட்டு குடித்தனம்
பண்ணப் போறவேம் நீந்தானே?" அப்பிடிங்கிது பக பகன்னு சிரிச்சிக்கிட்டே அந்த ஊருக்கார
பெரிசு ஒண்ணு.
*****
No comments:
Post a Comment