19 Feb 2020

ஒரு பிராதின் பின்னணி

செய்யு - 363

            எந்த மொதலாளிக்கும் ஒரு பிராஞ்சை இழுத்து மூடுறதுன்னா அதுக்கு மனசு சம்மதிக்காது. இருந்தப் பிரச்சனையில, ஸ்டேஷன்ல ஆயிருந்த கம்ப்ளெய்ண்டுல தொண்டாமுத்தூரு கேப்பிட்டலோட கூத்தாநல்லூரு பிராஞ்ச இழுத்து மூடுறதுதாம் ஒரே வழிங்ற மாதிரி ஆகிப் போச்சு. இழுத்து மூடுனாலும் பிரச்சனை முடியாதுங்ற அளவுக்கு ஏகப்பட்ட கம்ப்ளய்ணடுங்க வேற இருந்துச்சா. பாத்தாரு குஞ்சு கவுண்டரு, ரித்தேஸையும் கூட்டிக்கிட்டு கையோட ஒரு வக்கீலையும் கொண்டுகிட்டு கூத்தாநல்லூரு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துட்டாரு. எப்படியாவது பிராஞ்சை இழுத்து மூடாம தக்க வைக்கணுங்றதுக்காகப் அவரு சில காரியங்கள எறங்கிப் பண்ணாரு.
            கெழக்குக் கோட்டையாரு கம்ப்ளெய்ண்டு கொடுத்திருந்தாலும் அதெல்லாம் கேஸாயி கோர்ட்டுக்குப் போனாக்கா நிக்காது. அது குஞ்சு கவுண்டருக்கு நல்லாவே தெரியும். அதனால அது பத்தி அவரு பயப்படல.  அவரோட பயம் பிராஞ்சு ஒண்ணு கொறைஞ்சிடக் கூடாதுங்றதுதாம். ஒரே நேரத்துல கூத்தாநல்லூரு பிராஞ்சுக்கும், திருவாரூ பிராஞ்சுக்கும் அப்பிடி ஒரு சிக்கலு வந்துப் போச்சு மூடுற நெலமைக்கு. திருவாரூ பிராஞ்சுல கூத்தாநல்லூரு பிராஞ்சு அளவுக்குப் பிரச்சனை இல்லன்னாலும் நெறைய வாடிக்கையாளருங்க கணக்க முடிக்கச் சொல்லி வெளியேறிகிட்டே இருந்தாங்க. அது ஒரு பிரச்சனையில்ல குஞ்சு கவுண்டருக்கு. அவருக்கு நல்லாவே தெரியும் இன்னிக்கு கணக்கு முடிச்சிட்டு வெளியில போறவங்கள்ல எப்பிடியும் நூத்துக்கு அறுவது பேரு திரும்ப வருவாங்கங்றது. ஆனா கூத்தாநல்லூரு பிரச்சனை அப்பிடியில்ல. ஏரியாவுலயே அப்பிடி ஒரு ஆபீஸ் இருக்கக் கூடாதுங்ற அளவுக்குக் கெழக்குக் கோட்டையாரு நெருக்கடி கொடுத்து வெச்சிருந்தாரு. அதெ எப்பிடிச் சமாளிக்கிறதுன்னுத்தாம் குஞ்சு கவுண்டரு கொழம்பிக் கெடந்தாரு.
            அரசியல், செல்வாக்கு, அதிகாரம்னு குஞ்சுக் கவுண்டரும் அவருக்கு தெரிஞ்ச வகையில பணத்தெ அடிச்சி முயற்சி பண்றாரு. காரியம் ஆவுறாப்புல தெரியல. கெழக்குக் கோட்டையாரு பணத்தெ மட்டும் வெச்சிருக்குற கோடீஸ்வரரா இருந்தா குஞ்சுக் கவுண்டரு இந்த விசயத்துல ஜெயிச்சிருப்பாரு. அவருக்கு ஆளு பலமும் அதிகெம். அரசியல் பலமும் அதிகெம். அதிகார மட்டத்துலயும் பல பேரு பழக்கம். அவரால ஆளாயி வளந்து நிக்குறவங்க எல்லா மட்டத்துலயும் இருக்காங்க. அவர்ர சாய்க்குறங்றது ஆல மரத்தெ சாய்க்குறது போல, மரமே விழணும்னு நெனைச்சாலும் விழுதுங்க விடாதே. அவரு மேல கைய வைக்குறதுங்றது கதண்டு கூட்டுல கைய வைக்குறது மாதிரி, ஒட்டு மொத்த கதண்டு கூட்டமே கைய வெச்சவனெ கொட்டிக் காலி பண்ணிடுமே. எல்லாத்துக்கும் மேல அவரு ஒரு சங்கதியில எறங்கிட்டாருன்னு தெரிஞ்சா மின்னாடி வெச்ச கால பின்னாடி வைக்க மாட்டாரு. அதுக்காக சொத்தெ அழிஞ்சாலும் காரியத்தெ முடிக்கிறதுலதாம் முன்னத்தியா நிப்பாரு. தப்பான காரியத்துல எறங்கிட மாட்டாரு. அவர்ர சமாளிக்கிறதுதாம் குஞ்சுக் கவுண்டருக்குப் பெரும்பாடா இருந்திச்சு.
            ஸ்டேஷன்லயும் நல்லா கவனிப்பா கவனிச்சு குஞ்சு கவுண்டரு சொல்லிருக்காரு, "எப்படியாச்சிம், நல்ல வெதமா பஞ்சாயத்துப் பண்ணி வுட்டுப்புடுங்கோ!"ன்னு. கெழக்குக் கோட்டையாருகிட்ட பதிலு பேசுற அளவுக்கு ஆள தயாரு பண்ணாத்தாம் காரியத்தெ பண்ணலாம்னு ஸ்டேஷன்ல சொல்லிருக்காங்க. அவருகிட்ட பேசணும்னா அதுக்கு ஒரே ஆளு மாலிக்தாம். அவர்ர வெச்சி இனுமே பேச முடியாதுங்ற நிலைக்கு அவரு பொண்டாட்டிய இழந்து, அவரும் உசுருக்குல்லா போராடிட்டு இருக்காரு அப்போ. அப்பத்தாம் குஞ்சு கவுண்டருக்கு அந்த யோசனெ வந்திருக்கு. விகடுவெச் சொல்லி அவனெ வெச்சிப் பேச வைக்கலாம்னு சொல்லிருக்காரு. ஆளெ கொண்டாரச் சொல்லிடுவேம்னுத்தாம் கூத்தாநல்லூரு ஸ்டேஷன்லேந்து வடவாதி ஸ்டேஷனுக்குப் போன் அடிச்சி வூட்டுல வுட்டு அவனெ பாத்துட்டு வரச் சொன்னாக்கா, அவ்வேம் ஆளு வூட்டுல இல்ல, பள்ளியோடத்துல இருந்தாம். சுப்பு வாத்தியாருகிட்ட விகடுவெ பத்தி போலீஸ வந்து விசாரிச்சது, அதெ கேட்டு அவரு அரண்டு மெரண்டுப் போயி, விநாயகம் வாத்தியாரோட கலந்துகிட்டு விகடுவெ களிமங்கலத்துப் பாலத்தாண்ட வெச்சுப் பாத்து பேசிட்டு இருக்குறது இந்த எடத்துலத்தாம். அதுக்குள்ள அவனுக்கு ஏகப்பட்ட‍ போனுங்க குஞ்சு கவுண்டர்கிட்டேயிருந்து, ரித்தேஸ்கிட்டேயிருந்து, லெனின்கிட்டேயிருந்துன்னு வந்ததுல, போனோட காதுல வெச்ச கைய எடுத்தா கையி போசுங்கிப் போயிடும் போலருக்கு. போனுலேந்து அம்மாஞ் சூடு காதுக்கும், கைக்கும் பரவிப் போச்சு.
            அவ்வளவு சங்கதியையும் அவனுக்குத் தெரிஞ்ச வரைக்கும் விகடு இப்போ அப்பங்காரரான சுப்பு வாத்தியார்கிட்டேயும், விநாயகம் வாத்தியார்கிட்டயும் சுருக்கமா சொல்றாம். அதெ கேட்டுப்புட்டு சுப்பு வாத்தியாரு தலையில அடிச்சிக்கிறாரு. "நாம்மத்தாம் தல தலயா சொன்னேம்ல அந்த வேல வாணாம்னு. கேட்டாம்னா? புள்ளைங்கன்னா சொன்னதெ கேக்கணும். தும்ப வுட்டுப்புட்டு வால பிடிக்கிறாப்புல எதுலயும் சொன்னத்தெயே கேக்குறதில்லே. பாருங்க இவ்வேம் சொல்றதுல எத்தெனெ குடும்பம் என்ன பாடுல்ல கெடக்குன்னு? இவ்வேம் சொல்றதெ பாக்கறப்ப பூரா குடும்பமும் கெட்டுப் போயிக் கெடக்குல்லா. இவ்வேம் அந்த வேலைக்கே போயிருக்க வேண்டியதில்ல. சரி போனதுத்தாம் போனாம். போனதோட விட்டிருக்கலாம். ஆபீஸப் போடுவேம்னு நின்னு கூத்தாநல்லூர்ல ஒரு ஆபீஸப் போட்டிருக்க வேண்டியதில்ல. பாருங்க சாவுச் சங்கதி வரைக்கும் வந்து நிக்குது!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.

            "அதில்லீங்க வாத்தியார்ரே! இப்பிடி குதர்க்கமா யோஜிக்க வாணாம்! அவ்வேம் ன்னா பண்ணுவாம்? சின்னப் பயதானே! இப்பிடில்லாம் ஆவும்னு அவனுக்கு ன்னா தெரியும்? அவ்வேம் இருந்த வரைக்கும் நல்லாத்தானே பண்ணிக் கொடுத்திருக்காம். மனுஷப் பயலுகளுக்குக் காசியோட ஆசெ பெருத்துப் போச்சி. ன்னா பண்றதுன்னு தெர்யாமா அதெ சம்பாதிக்கிறதுக்குன்னா என்ன பண்றோம்னு தெரியாம எதையாச்சிம் பண்ணிச் சிக்கிக்கிறாம். லாட்டரி சீட்டுலேந்து, சாராயக் கடை நடத்துறதுலேந்து, சூதாட்ட கிளப்பு வரைக்கும் எல்லாம் ஒரு தொழிலுன்னு ஆயிப் போச்சு. அதுல எதுலாச்சியும் வேல செஞ்சிப் பொழைக்குற நெலைக்கு ஆளாவுறவனோட நெலைமய ன்னாத்தா சொல்றது? ஏத்தோ நமக்கு வாத்தியார்ரு வேல கெடைச்சதால அதெ பாத்திட்டுக் கெடக்குறேம். பயலுக்கும் வாத்தியாரு வேல கெடைச்சாதால ஆச்சு. இல்லேன்னா ன்னா பண்றது? கெடைச்ச வேலய செய்ய முடியான்னுச் சொல்லி பட்டினியா கெடந்து சாவுறதா? அதெ வுடுங்க வாத்தியார்ரே! மேக்கொண்டு ஆவுறதெ பேசுறதாங் செரி. நீயி மேக்கொண்டு ன்னா பண்ணலாம்னு நெனைச்சிருக்கேங்றதெ சொல்லு!"ங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            "கவுண்டரு சித்தெ நேரத்துக்கு மின்னாடித்தாம் போனு அடிச்சாரு ரண்டு வருஷத்துக்குப் பெறவு. அவருதாம் ஸ்டேஷனுக்கு வாரச் சொல்லி ஆளெ அனுப்பிச்சி விட்டதாவும் சொன்னாரு. நம்ம பேர்ல எந்தப் பெரச்சனையும் இல்லைங்கய்யா. நாம்ம விருப்பப்பட்டாக்கா போவலாம். இல்லன்னா பேயாம வூட்டுலயே இருந்துக்கலாம்கய்யா!"ங்றாம் விகடு.
            "மறுபடி வூட்டுக்குப் போலீஸூ வந்தாக்கா ன்னா பண்றதாங்?"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "நாம்ம குஞ்சு கவுண்டருக்குப் போனெ அடிச்சிட்டேம். வார முடியாதுன்னு. மறுக்கா வர மாட்டாங்க யாரும்!"ங்றாம் விகடு.
            "இதெல்லாம் தேவையாடாம்பீ! வூட்டுக்கு இந்த மாதிரிக்கி போலீஸூ வந்தா தெருவுல நாலு பேத்து ன்னத்தாடா பேசுவாங்க? ஒருத்தரும் ஒண்ணுஞ் சொல்லாட்டாலும் மனசுக்குள்ள எதாச்சிம் நெனைச்சிப்பாங்களா மாட்டாங்களா? ரொம்ப பணம் பொழங்குற எடமே நமக்கு ஆகாதுடாம்பீ! திங்குறதுக்கு, உடுத்துறதுக்கு, நாலு பேத்துக்கு ஒரு தேவ திங்கச் செய்யுறதுக்குச் சம்பாதிக்கிறதுக்கு ஒரு வேலயப் பாத்துட்டு அத்தோட விட்டுக்கோணும்டாம்பீ! ரொம்பச் சம்பாதிக்கணும்னு ஆசெபடுறப்போ அத்தோட சங்கடத்தெயும் சம்பாதிக்க வேண்டிருக்கும். அதெல்லாம் குடும்பத்துக்கு ஆகாதுடாம்பீ! நெறைய வாசாப்ப சம்பாதிச்சிக்க வேணும் பாத்துக்கோ! தூண்டில்ல பெரிய  புழுவா இருக்குன்னு ஆசெபட்டு மீனு முழுங்குனா ன்னா ஆவுமோ அதுதாங் ஆவும். இத்தோட எல்லாத்தையும் தொலைச்சி தலைய முழுவிடுடாம்பீ!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "யப்பா! நாம்ம அதெ மறந்து ரண்டு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சி. நமக்கு அதோட ஞாபவமே கெடையாதுங்றேம். இப்போ போனு வர்றப்பத்தாம் ஒவ்வொண்ணா ஞாபவத்துக்கே வருது நாம்ம அப்பிடி ஒரு வேலை பாத்தேங்ற வரைக்கிம். அவுங்களோட ஆதாயத்துக்குக் கூப்புடுறாங்கப்பா! மித்தபடி நமக்கும் அதுக்கும் எந்தச் சம்பந்தமுமில்ல. நாம்மப் போயிப் பேசுனா கெழக்குக் கோட்டையாரு அசமடங்குவாருன்னு தப்பா கணக்குப் போடுறாங்க. அவரு அதுக்குல்லாம் அச மடங்குற ஆளு கெடையாது. ஆளெ பாத்த ஒடனேயே எடை போட்டுருவாரு. அவருகிட்ட பேசில்லாம் நேர் பண்ண முடியாது. அதெ தாண்டி ஞாயத்தெ அவரு பேசுவாரு. கவுண்டருக்கு இத்துப் புரியாது. கவுண்டருக்குப் பிராஞ்சு போவுற கவலைன்னா, கெழக்குக் கோட்டையாருக்குப் பிராணம் போற கவலெ. அப்போ பேச்சு எப்பிடி இருக்கும்னு பாருங்க. நாம்ம நூத்து வார்த்தையில பேசுறதெ அவரு கெழக்குக் கோட்டையாரு ஒத்த வார்த்தையில அடிச்சிட்டுப் போயிட்டே இருப்பாரு."ங்றாம் விகடு.
            "என்னத்தெ இருந்தாலும் கவுண்டரு ஒம்மட மொதலாளிய இருந்தவரு. மருவாதிக்கு ஒரு தபா பாத்துட்டு வந்திடலாம்னாலும் பாத்துட்டு வந்துடலாம். அப்பாரு கூட வாணாம். நாம்ம அழைச்சிட்டுப் போறேம்னாலும் போறேம்!"ங்றாரு விநாயகம் வாத்தியாரு விகடுவெப் பாத்து.
            "யே யப்பாடி! இனுமே அந்தப் பக்கம் போவ மாட்டேன்னு தலையில அடிச்சி சத்தியம் பண்ணுடா மவனே!"ங்றாரு இப்போ சுப்பு வாத்தியாரு.
            "எத்தனெ வாட்டி சத்தியத்துக்கு மேல சத்தியம் பண்றதாங்? போறதுன்னு நெனைச்சா நீஞ்ஞ சொல்றதெ மீறிட்டும் நமக்குப் போவத் தெரியும். போறதில்லன்னா நெனைச்சா யாரு ன்னா சொன்னாலும் போறதில்லத்தாம். நாம்ம அன்னிக்கே முடிவு பண்ணிட்டேம். ச்சும்மா ச்சும்மா மாத்தில்லாம் முடிவு பண்ணிட்டு இருக்க மாட்டேம். அத்துச் சம்பந்தமா அத்துப் பக்கம் போறதில்ல. அதுல எந்த வித மாத்தமுமில்ல. ச்சும்மா ச்சும்மால்லாம் சத்தியம் பண்ணிட்டுல்லாம் இருக்க முடியா!"ங்றாம் விகடு.
            "வுடுங்க வாத்தியார்ரே! அவனெப் போட்டுகிட்டுச் ச்சும்மா ச்சும்மா நோண்டிகிட்டு. புரியுதுடாப்பா வெகடு. இப்போ மேக்கோண்டு பண்றதெ ன்னான்னு சொன்னாக்கா ஆவ வேண்டியதெ பாக்கலாம்!"ங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            "அதாங்கய்யா சொல்லிட்டேம்ல. நாம்ம நம்ம வேலயப் பாத்துட்டுப் போவ வேண்டியதுதாங். மேக்கொண்டுல்லாம் ஒண்ணுமில்ல. நீஞ்ஞ ஒஞ்ஞ வேலயப் பாக்கலாம். நாம்ம நம்ம வேலய பாக்கலாம். யப்பா அவுங்க அவலயப் பாக்கலாம். அவ்வளவுதாங்க. மேக்கொண்டு ஒண்ணுமில்லே! ஒண்ணுமில்லே! ஒண்ணுமேயில்ல!"ங்றாம் விகடு.
            "சரிதாம் போ! ஏம் வாத்தியார்ரே இதுக்குப் போயா இம்மாம் அலமலந்தீங்க?"ங்கன்னு சொல்லிட்டு விநாயகம் வாத்தியாரு வண்டியத் திருப்பிக்கிட்டு்ச் சுப்பு வாத்தியாரோட வூட்டுப்பக்கம் வந்தா, வூட்டுக்கு மின்னாடி இன்னோவா காரு ஒண்ணு நிக்குது. இதென்னடா அடுத்தப் புகைச்சல்னு பாத்தா வூட்டுக்கு உள்ளார குஞ்சு கவுண்டரும், ரித்தேஸூம் உக்காந்திருக்காங்க. அவுங்க ரண்டு நிமிஷம் யோசிச்சு உள்ளார நொழையுறதுக்குள்ள மாங்கு மாங்குன்னு சைக்கிள மிதிச்சிக்கிட்டு விகடுவும் வந்து சேருறாம். 
*****


No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...