3 Nov 2019

11.3




            குத்துமதிப்பாக ஒரு கணக்கிட்டால் நகரத்தில் எல்லாம் அதிகம். கடைகள், மக்கள், வாகனங்கள், புகைக்காற்று, சாக்கடை இப்படி. கவிஞர்களும் அதிகம். மக்கள் வேலைவாய்ப்புக்காக நகரத்தை நோக்கி படையெடுப்பத போல, கிராமத்துக் கவிஞர்கள் அடையாளத்திற்காக படையெடுப்பது நகரத்தை நோக்கி. அதாவது நகரத்தில் நடைபெறும் இலக்கியக் கூட்டங்கள் மற்றும் இலக்கிய விழாக்களை நோக்கி.
            கடலில் கரைத்த பெருங்காயத்தின் வாசத்தைத் தேடுவது போல நகரத்தில் கவிஞர் ஒருவர் தனக்கான தனித்த அடையாளத்தைத் ‍தேடுவது என்பது. பெருங்காயமாகி விடும் கவிஞரின் மனது. வாசத்தைத் தேடிச் சோர்ந்து போவார். இந்த அரதப் பழசான மோசமான உவமைக்காக நீங்கள் இதை எழுதுபவரை மன்னிக்கத்தான் வேண்டும்.
            அடையாளம் தராத நகரத்தைச் சற்றே தள்ளி வைப்போம். அடையாளம் தரப் ‍போகும் கிராமங்களைத் திரும்பிப் பார்ப்போம். காந்தியின் கொள்கையும் இப்படித்தான், கிராமத்தை நோக்கிய பொருளாதாரம். கவிஞர் தீக்காபியின் கொள்கையும் அப்படியே கிராமத்தை நோக்கிய ‍அடையாளம். க
            விஞர் தீக்காபி சொன்னார் நமது கிராமத்தில் தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு நகரத்தை நோக்கி நகர்வோம் என்று. இதே போன்ற கூட்டங்களைக் கிராமங்களில் நடத்தினால் என்ன? என்பது அவரது கேள்வி. நடத்தலாம்! கவிஞர் ஒருவர் அடையாளம் பெற வேண்டும் என்பதற்காக அந்த அளவுக்குச் செலவழித்து கூட்டம் நடத்துவது கவிஞர்களின் பொருளாதார நிலைக்கு ஒத்து வருமா? உலக, நகர, கிராம பொருளாதார மந்த நிலையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் கவிஞர்கள். உலகப் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் போதே கவிஞர்களின் பொருளாதாரம் சறுக்கியபடி காணப்படும். உலகப் பொருளாதாரம் சீர்குலைந்தால் கவிஞர்களின் பொருளாதாரம் அதள பாதாளத்துக்குச் சென்று விடும். கவிஞர்கள் வறுமையைப் பற்றி, பொருளாதார சீர்குழைவைப் பற்றி அதிகம் எழுதுவதற்கு அது ஒரு காரணம்.
            மக்களில் ஹை கிளாஸ், மிடில் கிளாஸ், லோ கிளாஸ் இருப்பது போல கவிஞர்களிலும் கிளாஸ்கள் இருக்கின்றன. பொதுவாக ஹை கிளாஸ் கவிஞர்கள் ஊர் உலகத்துக்குத் தெரிந்தவர்கள். மிடில் கிளாஸ் கவிஞர்கள் சுமாரான அறிமுகத்தோடு கவிஞர் என்ற பெயரோடு பரிதவித்துக் கொண்டிருப்பார்கள். லோ கிளாஸ் கவிஞர்களின் நிலை சொல்லிக் கொள்ளும்படி இருக்க வாய்ப்பில்லை. எழுதுவதிலும் இதே கிளாஸ் சங்கதிகள் இருக்கின்றன. அதற்காக லோ கிளாஸ் கவிஞர் தன்னை கவிஞர் இல்லையென்று உலகிற்குப் பொய் சாட்சிக் கூறி விட முடியுமா? அவரது மனமே அவரைக் கொன்று விடும். தான் கவிஞராக உருவாகி விட்டதை அவர் உலகுக்கு அறிவித்தாக வேண்டும், எப்படி ஒரு பெண் பருமடைந்ததை மைக் செட் கட்டி, ப்ளக்ஸ்கள் வைத்து ஊர் உலகத்திற்கு அறிவிக்கிறோமோ அப்படி.
            இப்படித்தான் அவர்களின் கிராமமான வடவாதியையும், மணமங்கலத்தையும் ஒருங்கிணைத்து இலக்கிய மன்றம் தொடங்குவது என்ற அபாயகரமான முடிவுக்கு வந்தார்கள் கவிஞர் தீக்காபியும், விகடுவும்.
            இந்த யோசனை உதித்தவுடன் அவர்கள் மணமங்கலம் வில்சனைச் சந்திப்பது என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவுக்கு வந்தார்கள்.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...